இன்றைய கல்வி முறையில் பாடத்திட்டங்கள் சார்ந்து நிலவும் முரண்களையும், அதை கற்பிப்பதில் ஆசிரியர்களும், கற்பதில் மாணவர்களும் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், சமூகம் சார்ந்த நடைமுறை நிகழ்வுகளிலிருந்து வரலாறு, அறிவியல் பாடங்கள் விலகி நிற்பதையும், ஆங்கிலவழிக் கல்வி மூலம் தனியார் பள்ளிகளின் எழுச்சியையும், அரசுப்பள்ளிகளின் வீழ்ச்சியையும் பற்றி இந்நூல் பேசுகிறது. ”லேனிங் ப்ஃரம் கான்பிளிக்ட்” என்ற தலைப்பில் கிருஷ்ணகுமார் எழுதியதை ஜே.ஷாஜஹான் தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.
”முரண்பாட்டை முன்வைத்தல்” என்ற முதல் தலைப்பில் பிரதமர் இந்திரா படுகொலையின் தொடர்ச்சியாக சீக்கியர்கள் மீது நிகழ்ந்த வன்முறை சார்ந்த அரசின் செயல்பாடுகள், காந்தி படுகொலைக்கான காரணத்திற்கு அந்தந்த மாநில அரசுகள் பாடநூல்களில் பூசும் மதச் சாயங்கள் குறித்தான முரண்களை முன் வைக்கிறார். பொய்யான அல்லது நிலவும் சூழல், அரசியல் நிலைப்பாடு, சமூக நலன் கருதி மறைத்தோ, மேம்போக்காகவோ எழுதப்பட்ட பாடநூல்கள் மூலமாக மாணவர்களின் மனதில் நிஜத்திற்கு எதிரான கருத்துகளே வந்து அமர்வதாய் எச்சரிக்கிறார். வரலாற்றில் மிகையான தகவல்களை மட்டும் தந்து முரண்பாடுகளைத் தவிர்க்கும் பழைய கல்விமுறை மாணவர்களுக்கு எத்தகைய அறிவைத் தருகிறது? மாணவர்களுக்கு இந்த தேசத்தின் நிர்மானத்தை அது எப்படி புரிந்து கொள்ள வைக்கிறது? என்பதன் வழியாக இளம் தலைமுறையினரின் அறிவுத் தேவையை நிறைவு செய்ய பழைய பாடத்திட்ட முறைகள் தடையாக நிற்கும் அவலத்தை முன் வைக்கிறார். நம்மால் இவைகளைத் துளியும் மறுக்க இயலவில்லை.
”குழந்தைகளும் வரலாறும்” என்ற இரண்டாவது தலைப்பில் அரசாங்கம் குழந்தைகள் விசயத்தில் தேச வரலாறை எப்படி முன்னெடுக்கிறது? அரசின் அந்த நோக்கம் குழந்தைகளிடம் முழுமையாக வெளிப்படுகிறதா? என்ற கேள்விகளை முன் வைக்கிறார். ”பண்டைய இந்தியா”, ”இடைக்கால இந்தியா”, ”நவீன இந்தியா” என நம் தேச காலவரிசையை மூன்றாக்கி அதன் மூலம் முழுமையாக நம்முடைய தேசத்தின் வரலாறை அறிய வைக்கும் பாடத்திட்ட முறையும், நீண்ட நெடிய வரலாறை குறிப்பிட்ட பக்க வரையறைக்குள் அடக்க வேண்டும் என்ற நெருக்கடியும் மாணவர்களிடம் புரிதலை சிக்கலாக்கி குழப்பத்தையே உருவாக்கும் என்கிறார். சுயமாக சிந்திக்க முடியாமல் மனனம் மூலமே எதையும் மாணவர்கள் அறியும் தன்மையைக் கொண்டிருக்கும் நம் பாடத்திட்ட முறை அந்த நிலையில் இருந்து புரிதல் நிலைக்கு மாறுவது இன்றைய தேவை என வாதிடும் நூலாசிரியரின் யோசனைகளை பாடத்திட்டக் குழுவினரும், அரசும் கவனத்தில் கொண்டால் குழந்தைகளுக்கு வரலாறை போதிப்பதன் நோக்கம் முழுமையடையும் என நினைக்கத் தோன்றுகிறது.
”அறிவியலும், சமூகமயமாக்கலும்” என்ற மூன்றாவது தலைப்பில் இயற்கைச் சூழல் பிரச்சனையை எதிர்கொள்வது குறித்தும், நம்பாடத்திட்ட முறைகளில் சுற்றுச்சூழல் அடிப்படை அறிவு அறிவியல் பாடத்தில் ஒரு பகுதியாக இருந்த போதும் அது கொண்டிருக்கும் முரண்பாடுகள் குறித்தும் பேசுகிறார். மேம்போக்கான தகவல்களைக் கொண்ட பாடத்திட்ட முறைகளால் புதிய அணைக்கட்டு திட்டங்கள், உரங்கள், பூச்சிக் கொல்லிகள், ஆலைக்கழிவுகள் சார்ந்து நீர் நிலைகளில் உருவாகும் மாற்றங்கள் பற்றி ஒரு தெளிவான பதிலை மாணவர்களுக்கு ஆசிரியர்களால் சொல்ல இயலா சிக்கல்களைச் சுட்டிக் காட்டுகிறார். உதாரண்மாக, பூமியின் வளத்தைப் பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சி பெறுதலை ஒரு வகுப்பிலும், அப்படிச் செய்வதில் ஏற்படும் சமூக, சூழலியல் சிக்கல்களை அதற்கடுத்த வகுப்பிலும் படிக்கும் மாணவனால் எப்படி முரண்பாடு கொள்ளாமல் இருக்க முடியும் என்றும், இளம் பருவத்தில் மாணவர்கள் சமூகத்தில் பங்கேற்கும் நிலை இல்லாத போது பள்ளிகள் மட்டும் அவர்களை எப்படி சமூகமாக்க முடியும்? என்றும் ஆசிரியர் நம் முன் நகர்த்தி வைக்கும் கேள்விகள் விவாதத்திற்கு மட்டுமல்ல உற்று நோக்கி கவனம் செலுத்தவும் வேண்டியவைகளாக இருக்கின்றன.
நம் பாடத்திட்ட முறைகளில் ஒரு விஞ்ஞானியின் (ஜெகதீச சந்திரபோஸ்) அறிவியல் கண்டுபிடிப்பைச் சொல்ல மறந்து அவரை தேசியப் பெருமையாக அடையாளம் காட்ட மெனக்கெட்டிருப்பதையும், இயற்கைச் சூழலுக்கும், மனிதருக்குமான சிக்கல்களை உணர்ந்த பின்னரும் அதைத் தீர்க்கும் தீர்வைச் சொல்வதில் பாடத்திட்டத்தை வடிவமைப்பவர்கள் கவனம் கொள்ளாதிருப்பதையும் நூலாசிரியர் கோடிட்டுக் காட்டுவதில் இருந்து நம் பாடத்திட்ட முறை சூழலுக்குத் தக்கவும், மேம்போக்கான அம்சங்களுடனும் மட்டுமே கட்டமைக்கப்படுவதை உணர முடிகிறது.
”இரண்டு உலைகள்” என்ற தலைப்பில் காலம் காலமாக விவாதிக்கப்பட்டு வரும் தமிழ்வழிக் கல்வி – ஆங்கில வழிக்கல்வி, அரசுப்பள்ளி – தனியார் பள்ளி குறித்து விவாதிக்கிறார். தனியார் பள்ளிகள் ”ஆங்கிலம்” என்ற மொழியின் மோகத்தை முகமாக்கி எப்படி அரசுப்பள்ளிகளை வீழ்த்தின என்பதையும், மக்கள் தனியார் பள்ளிகளை நோக்கி நகர்ந்ததற்கான காரணங்களையும் கூறுகிறார். அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை ஒழுங்கமைத்து அதன் திறனை முன்னேற்றுவதற்குப் பதிலாக ”நவோதயா” பள்ளிகளை அரசாங்கம் திறந்தது, அரசுப் பள்ளிகளுக்கென தனிப்பட்ட பெயர்கள் இல்லாமல் அவைகள் அமைந்திருக்கும் ஊரின் பெயரே அப்பள்ளிகளின் அடையாளமாக இருப்பது, அரசுப்பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்படுதலில் ஏற்பட்ட தேக்க நிலையால் மாணவர்கள் சமூகத்தில் பொறுப்பான பணிகளுக்கும், பதவிகளுக்கும் வர இயலாமல் போனது ஆகிய அவலங்கள் அரசுப் பள்ளிகளின் வெளிச்சத்தை எவ்வாறெல்லாம் மங்கச் செய்தது என்பதையும் தோல் உரிக்கிறார்.
முரண்பாட்டை முன்வைத்தல் மூலம் குழந்தைகளின் கல்வி முறையில், அவர்கள் கற்றுக் கொள்ளும் முறையில், சமூகமும், அரசும், ஆசிரியர்களும் மட்டுமல்ல ஒவ்வொரு பெற்றோரும் பங்கு கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஆசிரியர் வலியுறுத்துகிறார். வருங்கால சமுதாயத்திற்கான வடத்தை இழுப்பதில் பெற்றோர்களாகிய நாமும் பங்களிப்பதன் அவசியத்தை உணர்த்துகிறார்.
நன்றி – புக் டே.காம்
No comments:
Post a Comment