துரோகத்திற்கும், நம்பிக்கைக்குமான இடைவெளியில் நிற்கும் ஒருவன் எதன் பக்கம் சாய்கிறான் என்பதே அவனுடைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அந்த தீர்மானித்தல் துரோகம் என்ற நிலைப்பாட்டைக் கொள்ளும் போது அது எதிரில் இருப்பவர், பாதிக்கப்பட இருப்பவர் உள்ளிட்ட எவர் பற்றியும், எது குறித்தும் கவலை கொள்வதில்லை. துரோக எண்ணத்தில் தீவிரம் கொண்டு இயங்கும் ஒருவரின் செயலானது பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல வரலாற்றிலும் சுவடுகளாகப் பதிந்து விடுகிறது என்பதை விளக்கும் நூல் ”துரோகச் சுவடுகள்”. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வழியாக வந்திருக்கும் இந்நூலின் ஆசிரியர் வெ. இறையன்பு.
துரோகங்களின் வகைகள், அது எங்கிருந்து, யாரால், எப்பொழுது கட்டவிழ்க்கப்படுகிறது என்பதையெல்லாம் வாசிக்கும் போதே மெய்சிலிர்க்கிறது. குறிஞ்சி மலரைத் தேட வேண்டுமானால் பல நூறு நெறிஞ்சி மலர்களை நாம் கடக்க வேண்டியிருக்கிறது. வாழ்தலை அத்தனை ஐயப்பாடுகளால் நகர்த்த வேண்டிய காலத்தில் தான் கி.பி. தொடங்கி இன்று வரை இருந்து வருகிறோம் என்பதற்கு துரோகச் சுவடுகளே சாட்சியாய் இருக்கிறது.