நேற்றைய வழக்கமான உரையாடலின் போது, “நம்ம வீடு பற்றி ஏதேனும் நினைவுகள் இருக்கா?” என்று மகள் கேட்டாள்.
“அந்த மாதிரியெல்லாம் ஏதும் இல்லையே” என்றேன்.
“எப்படி இல்லாமல் இருக்கும்? நம்ம குடியிருக்குற வீட்டைப் பற்றி ஏதாவது நினைவுகள் இருக்கனும் டாடி. யோசிச்சுப் பாருங்க”என்றாள்.
நேற்றிரவு முழுக்க அது சார்ந்த நினைவோடைகளை புரட்டிக் கொண்டே இருந்தேன்.
ஒரு ஆசிரியராய் பணியாற்றிக் கொண்டு போதிய வருமானம் கொண்டிருந்த போதும் சொந்த வீடு குறித்து என் பெற்றோருக்கு எந்த விருப்பமும் எனக்கு நினைவு தெரிந்த வரையில் இருக்கவில்லை. குடியிருந்த வாடகை வீடுகள் பெரும்பாலும் வசதியாகவே இருந்தன. காலம் மெல்ல தன் தோலுரிக்க ஆரம்பித்தது. ஒரு பெரும் இழ(ற)ப்பு நிகழ்ந்த பின் உறவுகள் சார்ந்து வாழ்தல் மன நெருக்கடியைத் தவிர்க்கும் என நினைத்தாலும் அந்த உறவுகளை எங்களால் நெருங்க இயல வில்லை.
உறவுகளின் சுயநலம் சார்ந்த அணுகுமுறைகளால் அவர்களை விட்டு விலகி நிற்பதே உத்தமம் என பெற்றோர் முடிவெடுத்தனர். அந்த முடிவெடுத்தலில் சொந்த வீடற்று வாழ்வின் துயரம் ஆரம்பமானது. வீட்டில் இருந்த பொருட்களை வைப்பதற்கு ஏற்ப வீடுகள் வாடகைக்கு கிடைக்கவில்லை. கிடைத்த வீடுகள் அடிப்படைத் தேவைக்கு கூட போதவில்லை. தேவைகளுடன் கூடிய வீடு வாடகைக்கு கிடைப்பது சிரமமாக இருந்தது. பொறுமையாய் தேடி அலைந்து வீடு தேடி மீண்டும் ஒரு முறை பொருட்களை அள்ளிக் கொண்டு அலைவதில் வீட்டில் எவருக்கும் விருப்பம் இருக்க வில்லை. இந்த வாடகை வீடு போதும். இனி ஒரு முறை வீடு மாறுதல் என்பது சொந்த வீடாக இருக்க வேண்டும் என பெற்றோர் முடிவெடுத்தனர். அந்த முடிவை எடுத்த நேரத்தில் இடம் வாங்கி வீடும் கட்ட போதுமான பொருளாதார வசதி இருக்கவில்லை. ஆயினும் என் பெற்றோர் விடவில்லை. குறிப்பாக, என் தந்தை வெளியில் சொல்லா உறுதியோடு இருந்தார். அந்த உறுதி கடனோடு சேர்ந்த வீடாய் உருமாற ஆரம்பித்தது. திட்டமிட்ட படி சிறிய சொந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.
”கட்டிய வீட்டிற்கு ஒன்பது வக்கனை” என்பதைப் போல, ”வீடு தீப்பெட்டி மாதிரி இருக்கு?” என வந்திருந்த உறவினர்களில் சிலர் நக்கலடித்தனர். நான்கு தீக்குச்சி உறங்கி எந்திரிக்க இந்த தீப்பெட்டி போதும் என என் அம்மா அவர்களிடம் சொன்னது நினைவில் வருகிறது. பின்னொரு நாளில் அந்த நக்கலை என் அப்பாவிடம் அம்மா சொல்லி இருக்கக்கூடும் என நினைக்கிறேன்.
நிகழ்வது தெரியாது ஆரவாரமின்றி அவ்வப்போது முன், பின், பக்கவாடு என வீட்டை அகலப்படுத்தும் பணியை என் தந்தை செய்ய ஆரம்பித்தார். தீப்பெட்டி மெல்ல விரிந்து இரண்டு படுக்கையறை, ஒரு வாசிப்பறை, சாமி அறை, புழக்கத்திற்கென போதுமான வெளி இடம் என வீடு விரிய ஆரம்பித்து. எங்களை பராமரிப்பதைப் போலவே எங்களுக்கென கட்டித் தந்த வீட்டையும் என் தந்தை பராமரித்து வந்ததில் அதன் தன்மை குலையாது இன்றும் கம்பீரமாய் நிற்கிறது.
வீடற்ற துயரத்தில் இருந்து மீண்ட இந்த நினைவை காலையில் மகளிடம் சொல்லும் வரை வேறு ஏதும் நினைவிருக்கவில்லை. அவளோ, “மனிதர்களுக்கு மட்டும் தான் பிறந்த நாள் இருக்கனுமா? வீட்டிற்கெல்லாம் பிறந்தநாள் இருக்கக் கூடாதா?” என்ற கேள்வியைக் கேட்டாள்.
”இருக்கலாமே” என்றேன்.
இன்னைக்கு நாம இருக்குற இந்த வீட்டிற்கு 30 ஆவது பிறந்தநாள். அதனால, “30 ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள் வீடே” என்று சொல்லுங்கள் என்றாள். கூடவே, அப்பொழுது வீடு குடிபுகும் நிகழ்விற்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழையும், வீட்டையும் புகைப்படம் எடுத்து மெயிலில் அனுப்பித் தந்தாள். முப்பது ஆண்டுகளில் நான் வீட்டை நினைவுகளின் சுவடுகளுக்காக புகைப்படம் எடுத்ததில்லை. மகள் அனுப்பித் இருந்த புகைப்படங்களை பார்த்த போது வீடு மெல்ல தன்னை விரித்துக் கொண்டதைப் போல இந்த 30 ஆவது பிறந்தநாளில் இன்னொரு தளமாய் உயர்ந்தும் நிற்க ஆரம்பித்திருக்கிறது.
பிறந்தநாள் வாழ்த்துகள் வீடே........
No comments:
Post a Comment