Saturday, 8 January 2022

”படைப்பாளியின் கையெழுத்து” எனும் வடிவ பொக்கிஷம்!

சமீபத்தில் வாங்கிய புத்தகங்களில் அதன் படைப்பாளர் கையெழுத்திட்டு அனுப்பி இருந்தார். அதைப் பார்த்த என் மனைவி இவர் உங்க நண்பரா? அதான் கையெழுத்திட்டு கொடுத்திருக்காரா? இலவசமா கொடுத்ததா? என கேட்டாள். இலவசமா கொடுத்தா தான் கையெழுத்து போட்டு தரனுமா? என்றேன். அது தானே வழக்கம் என்றாள். யோசித்து பார்க்கையில் அந்த வழக்கம் பழக்கமாக இல்லாது வழக்கொழிந்து போய் விட்டது என்பதை அவளுக்கு சொன்னபோதும் ஒரு படைப்பாளியின் கையெழுத்துஇனாம்” - க்கு உரித்தானது மட்டும் தானா? என்ற கேள்வி என்னைக் கிளறிய படியே இருந்தது.

படைப்பாளிக்கு தான் நெருக்கமானவர் அல்லது தனக்கு படைப்பாளி நெருக்கமானவர் என்பதைக் காட்டிக் கொள்வதற்காகவோ, “மாஸ்காட்டுவதற்கோ படைப்பாளிகளிடமிருந்து பெறும் கையெழுத்தை நம்மில் பலரும் பயன்படுத்துகிறோம். அதனாலயே அதை வெறும் கையெழுத்தாக மட்டுமே பார்க்கிறோம். உண்மையில் அது வெறும் கையெழுத்தல்ல. அது ஒரு வடிவம். ”கையெழுத்து வடிவம்”. கையெழுத்திட்டு தரும் படைப்பாளி சமகாலத்தவராய் இருப்பது, குழுமனப்பான்மையோடு அவர்கள் சார்ந்து செய்யப்படும் எதிர்வினைகள் ஆகியவைகளால் அந்த வடிவ சேமிப்பை நாம் புறந்தள்ளி விடுகிறோம்.

தன் கையெழுத்தை தன்னைச் சாராத எந்த ஒன்றிற்கும் படைப்பாளி அத்தனை எளிதாய் தரமாட்டான். அதைத் தருவதற்கு அவன் தகுதியான நபர்களைத் தேடுகிறான். அந்தத் தகுதி என்பது சில நேரங்களில் அன்பின் பொருட்டு, நட்பின் பொருட்டு என இருக்கும். அதைத் தவிர்த்து பார்த்தால் அவன் தன் படைப்பின் பொருட்டு மட்டுமே தர நினைப்பான். அதனால் தான் தாஜ்மகாலைக் கட்டிய கட்டிடக் கலைஞன்அமானாத்கான்தன் கையெழுத்தும் தாஜ்மகாலில் பொறிக்கப்பட வேண்டும் என்றான். அன்று அந்தக் கோரிக்கை அபத்தமாய் கூட இருந்திருக்கலாம். இன்று அது ஒரு கலைஞனின் நினைவுக் குறியீடாய் மாறியிருக்கிறது என்பது கண்கூடான நிஜம். இப்படித்தான் எந்த ஒரு படைப்பாளியின் கையெழுத்து வடிவமும் பின்னாளில் அவனை, அவன் படைப்புகளை பிரதிபலிக்கும் குறியீடாக மாறி பொக்கிஷங்களாய் மாறுகிறது. அதை உணராததால் அத்தகைய பொக்கிஷங்களை நாம் சரியாக கையாள்வதோ, பாதுகாப்பதோ இல்லாமல் படைப்பாளியின் கையெழுத்திட்ட பிரதிகளை பல நேரங்களில் பழைய பேப்பர் கடைகளுக்கு கடத்தி விடுகிறோம். இந்த உணர்வின்மை தான் கையெழுத்திட்டு நண்பருக்கு கொடுத்த புத்தக பிரதியை பழைய புத்தகக் கடையில் இருந்து எடுத்து மீண்டும் அதே நண்பருக்கு பெர்னாட்ஷா அனுப்பினார் என்ற செய்தியை வாசிக்கும் போது உலகம் முழுக்கவுமே இருப்பதை அறிய முடிகிறது. படைப்பாளியின் கையெழுத்து காலம் கடந்து பொக்கிஷமாய் மாறும் என்பதை உணர்ந்தவர்களால் மட்டுமே நாணயம், தபால்தலை சேமிப்பவர்கள் போல சுய கர்வம் கொள்ள முடியும்.

யோசித்துப் பார்க்கையில், சென்றிருந்த புத்தகக் கண்காட்சிகளில், தனிப்பட்ட நிகழ்வுகளில் படைப்பாளிகளை மிக அருகில் சந்தித்திருக்கிறேன். அரங்குகளில் அவர்களுடைய நூல்களை வாங்கி இருக்கிறேன். ஆனால், அந்த நூல்களில் சம்பந்தப்பட்ட படைப்பாளியின் கையெழுத்தை வாங்குவதில் விருப்பம் இருந்ததில்லை.

எங்கள் மண்ணின் மைந்தரும், சேது, சிவகங்கைச் சீமைகளின் வரலாற்றாய்வாளருமான டாக்டர் எஸ். எம். கமால் அவர்களின் அருகில் அமர்ந்து உரையாடி இருக்கிறேன். அவருடைய சில புத்தகப் பிரதிகளை அன்பளிப்பாக பெற்றிருக்கிறேன். ஆனால், அவரின் கையெழுத்தை நான் வாங்கி இருக்க வில்லை. வயது மூப்பு காரணமாக இறந்து விட்ட அவருடைய நூல்களை இன்று வாசிக்கும் போதும், அவரை மற்றவர்கள் நினைவு கூறும் போதும் அவரின் கையெழுத்து வடிவம் இருந்திருந்தால் அவரின் சித்திரம் இன்னும் நெருக்கமாய் நினைவில் வந்திருக்குமே என்ற எண்ணம் எனக்கு ஏற்படுவதுண்டு.

டாக்டர் எஸ். எம். கமாலிடம் அறியாது தவறவிட்ட சந்தர்ப்பத்தை போல தயக்கத்தால் நான் இழந்த தருணங்களில் ஒன்றாய் கவிஞர் மனுஷ்யபுத்திரனிடம் கையெழுத்து வாங்க தவறிய தருணம் இன்னும் நினைவில் நிற்கிறது. அச்சமயத்தில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். புத்தகங்களை வாங்கி விட்டு வெளியில் வந்த போது அரங்கிற்கு வெளியே தன்னுடைய சேரில் அமர்ந்து ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். தமிழ் கவிதையின் முகமாய், அதன் முக்கியமான அடையாளங்களுள் ஒருவராய் இருக்கும் படைப்பாளி இத்தனை தனிமையில் இருக்கும் போது சந்தித்து பேசும் வாய்ப்பு எந்த ஒரு வாசகனுக்கும் கிடைப்பது அரிது. கிடைத்தால் அதிர்ஷ்டம். ஆனால், அந்த அரிய அதிர்ஷ்டமே என்னை கொஞ்சம் தயங்கி நிற்க வைத்தது. அமர்ந்திருப்பது கவிஞர் மனுஷ் தானா? என்ற அபத்த சந்தேகத்தை கிளப்பியது. சற்று தள்ளி நின்று அவரையே உற்று நோக்கிய படி இருந்தேன்.

வெயிலும், கவிதையும் கிடைக்கும் போதே அனுபவித்து விட வேண்டும்என அண்ணன் சித்துராஜ் முகநூலில் பதிவிட்டிருந்ததைப் போல் அனுபவிக்காமல் அந்த வாய்ப்பை தவற விட்டுக் கொண்டிருந்தேன். எனக்கு அது அப்போது தெரியவில்லை. சட்டென வந்த கூட்டம் அவரை அரங்கிற்குள் நகர்த்தி வந்து விட்டது. மதுரை மண்ணின் படைப்பாளிகள் கூட்டம் அவரைச் சூழ்ந்து கொண்டது. மனத் தயக்கத்தினால் கைவசம் இருந்த போதும் கையெழுத்திற்காகவே வாங்கியநீராலானதுதொகுப்பை கையெழுத்து இல்லாமலே வீட்டிற்கு எடுத்து வரும்படியானது.

நண்பர்கள் சிலரின் நூலக அடுக்குகளில், முகநூல் நண்பர்கள் படைப்பாளியின் கையொப்பமிட்ட பிரதிகளை பதிவிடுவதைப் பார்க்கும் போது படைப்பாளிகளிடமிருந்து கையெழுத்திட்ட பிரதியை பெறுவதன் மீதான ஈர்ப்பு வந்தது. அச்சாரமாய் நூலக அடுக்குகளை உருட்டிய போது சேலத்தில் நண்பர் கவிஞர். ஏகலைவன் அவர்களின் வாசகன் பதிப்பகம் நடத்திய நூல் வெளியிட்டு விழாவில் நான் கலந்து கொண்டபோது லேனா தமிழ்வாணன் அவர்கள் தன் கையெழுத்திட்டு அன்பளிப்பாய் எனக்குக் கொடுத்த நூல் கிடைத்தது. எனக்குள் தோன்றிய ஈர்ப்பை இதிலிருந்து ஆரம்பிக்கலாம் என நினைத்திருந்த சமயத்தில் எழுத்தாளர் பா.ராகவன் அவர்களின் கையெழுத்துடன் கிடைக்கும் என்ற அறிவிப்போடு அவரின் நூல்களுக்கான முன்பதிவு திட்டம் வெளியிடப்பட்டது. அதற்கு சீட்டு போட்டதில் ஒன்றிற்கு மூன்றாய் கிடைத்தது.

படைப்பாளியின் கையெழுத்து எனும் வடிவ பொக்கிஷங்களை சேகரிக்கும் வேளையில் அவைகளை வாசித்தும், பதிந்தும் வைக்க வேண்டும் என்பதையும் இந்த ஆண்டுக்கான இலக்கில் இணைத்திருக்கிறேன். ”நினைத்தல் சுலபம். செயலாக்குதல் கம்ப சூத்திரம்என்னும் கூற்று தன்னம்பிக்கைக்கு மட்டுமல்ல், இலக்கியத்திற்குமானதாகவே எனக்குப் படுகிறது.

1 comment:

  1. அந்த மனஓட்டத்தை எழுத்தில் கொண்டுவருவது கடினம். அதில், உங்களுக்கு கொஞ்சம் வெற்றி தான். வாழ்த்துகள் !

    ReplyDelete