Saturday 1 January 2022

கிழித்த நாட்களின் நினைவோடை - 2021 லிருந்து 2022 க்கு

இந்த ஆண்டின் கடைசி தினத்தில் அதைக் கடந்து வந்த நிகழ்வுகளை அசை போடுதல் என்பது ஒரு சுவராசியம் என்றாலும் அது எல்லா வருடமும் அத்தனை உவப்பாய் இருப்பதில்லை. அப்படி அமையப் பெற்ற்றவர்கள் பாக்கியவான்கள். அந்த பாக்கியம் ”கும்பத்துக்கு” அத்தனை சுபமாய் இருக்காது என ஜோசிய சிகாமணிகள் கணித்தது எனக்கு ஏறக்குறைய ஒத்துப் போனது. ஏழரை சனி ஏகத்துக்கும் மல்லுக்கு நின்றது. இன்னும் நிற்கும் என்பது ஜோசியத்தின் கணிப்பு. போகட்டும். இந்த வருட என் நினைவோடையை பிந்தைய ஒப்பீட்டுக்காக பதிந்து வைக்கிறேன்.

மருத்துவமனையில் ICU பிரிவில் பணிபுரிந்திருக்கிறேன். ஆனால், அங்கு நோயாளியாய் ஒரு நாள் கூட இருந்ததில்லை. இந்த வருடம் ஒரு மாதம் வரை முடங்கிக் கிடந்தேன். மீண்டும் மீண்டு வந்தது புண்ணிய பலன் என்றே தோன்றியது. யார் புண்ணிய பலன்? என்பது அவசியமில்லை. இலட்சக்கணக்கில் பொருளாதர இழப்பையும், கிலோ கணக்கில் தேகத்தையும் பறி கொடுத்தேன். மருத்துவமனைக்குப் பிந்தைய பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீளவும், மருத்துவம் சார்ந்த  இன்னபிற அவசியத்தேவைக்காகவும் நண்பர்கள் கை கொடுத்தார்கள். பிரதிபலன் பாராது அவர்கள் நீட்டிய உதவிக்கரமே இன்னும் இயங்க முடியும் என்ற நம்பிக்கையை தந்து நகர்த்தியது. என் எஞ்சிய காலங்கள் முழுக்க நன்றி பெருக்கு கொள்ளும் அளவுக்கு குடும்பத்தினரும்,  தோழமைகளும் அக்காலகட்டத்தில் அருகில் இருந்து ஆறுதலும், அரவணைப்பும் தந்தார்கள்.

நடைபயிற்சியை ஒரு பழக்கமாக்கினேன். அது அனிச்சையாய் அன்றாட நிகழ்வில் ஒன்றானது. தப்படிகள் எல்லாம் கணக்கில்லை. தினமும் பொழுதின் தொடக்கத்தை ஐந்து கி.மீட்டருக்கு குறையாது பார்த்துக் கொண்டேன்.

ஆறுமாத காலம் படுக்கையில் கிடந்த ஓய்வில் அலமாரி அடுக்குகளில் இருந்த புத்தகங்களை மீள் வாசிப்பு செய்தேன். வாசித்த காலங்களில் அவைகள்  சார்ந்த என் எண்ணங்களை எங்கும் பதியவில்லை. இம்முறை அதை செய்ய ஒரு வாய்ப்பை ”வாசிப்பை நேசிப்போம்” குழு கொடுத்தது. அதில் இணைந்தேன். திட்டமிட்ட படி இலக்கை எட்ட இயலாது போனாலும் புதிய அனுபவமாக இருந்தது. தகுதிச்சுற்றுக்கு அவசியமான 25 புத்தகப் பதிவு என்ற இலக்கை எட்டினேன்.

அதே கால கட்டத்தில் பா.ராகவன் அவர்கள் எழுதிய ”கபடவேடதாரி” நாவல் விமர்சனப் போட்டியில் பங்கு பெற்றேன். 50 அத்தியாயம். 50 விமர்சனம் என்பது போட்டிக்கான விதி. எப்படியும் கடைசி ரவுண்ட் வரை வந்து விடவேண்டும் என்பதில் இருந்த உறுதி உடல் நிலை சங்கடத்தை கடக்க வைத்தது. ஒரு வழியாக இறுதி வரை களத்தில் நின்றதில் முதல் பரிசாய் கபடவேடதாரி நூல் கிடைத்தது. கூடவே, பா.ரா. அவர்கள் இரண்டாயிரம் ரூபாய் பெறுமானமுள்ள தன்னுடைய நூல்களை கொடுத்திருக்கிறார். புத்தாண்டு இப்படியான சந்தோசத்தோடு தொடங்கி இருக்கிறது.

நூறு பதிவுகளை ப்ளாக்கில் எழுதினேன். சில வருடங்களுக்கு பின் இந்த எண்ணிக்கையை எட்ட முடிந்தது.

2021 ம் வருட ஆரம்பத்தை ”தமிழகப் பாளையங்களின் வரலாறு” நூல் மூலம் பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்த கிழக்கு பதிப்பகம் இவ்வருட தொடக்கத்தை ”வீரபாண்டிய கட்டப்பொம்மன்” நூல் மூலம் தந்திருக்கிறது.

கிண்டிலில் ஐந்து நூல் வரை என திட்டமிட்டிருந்த போதும் ஒன்றை ( இஸ்லாம் கற்றுத் தரும் வாழ்வியல்) மட்டுமே கொண்டு வர முடிந்தது.

சில மாதங்களுக்கு முன் தொடங்கிய புதிய முயற்சி மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது. வரும் வருடத்தில் அது சார்ந்த இயக்கத்தையும் வேகப்படுத்த முயல வேண்டும்.

2022 ல் என்ன செய்ய வேண்டும்? என்ற இலக்கை கையேட்டில் குறித்து வைத்தாயிற்று. கடந்த கால தவறுகளில் இருந்து கிடைத்த அனுபவத்தை முதலீடாக்கி அதை நிறைவேற்ற வேண்டும். நிறைவேறுதல் யாவருக்கும் பொதுவாகட்டும்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

1 comment:

  1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா... தங்கள் லட்சியம் இலக்கு நிறைவேற வாழ்த்துக்கள்... நீண்ட ஆயுள் நல்ல ஆரோக்கியம் பெற்று வாழ்வாங்கு வாழ இறை வேண்டுகிறேன்... திகங்கள் எண்ண ஓட்டத்தின் பிரதிபலிப்பு நூட்களாக வெளிவர வாழ்த்துக்கள் அண்ணா..

    ReplyDelete