நாளிதழ்கள் வாசிக்கப் பழகிய காலந்தொட்டு அவைகளைத் திறக்கும் போதெல்லாம் சில வரிகளிலாவது பாகிஸ்தான் பற்றிய செய்தி இல்லாமல் இருக்காது. காலஓட்டத்தில் அந்த இடத்தை ஆப்கானிஸ்தான் பிடித்திருக்கிறது. நம் ஆதி பூமியின் அங்கமான இவ்விரு தேசங்களும், அங்கு தலைமையகம் அமைத்து இயங்கும் இன, தீவிரவாத குழுக்களும் எப்பொழுதுமே உலகிற்கு ஒரு புதிர் தான்! இந்த விசயத்தில் அறிதலுக்கும், புரிதலுக்கும் மூத்தவன் பாகிஸ்தான் என்பதால் அந்த தேசம் பற்றியும், அதன் அடிப்படை அரசியல் பற்றியும் தெரிந்து கொள்ள ஆவல் இருந்தது. நாடுகள் பற்றி எழுதப்பட்ட நூல்களின் வரிசையில் அதற்கு வழி இல்லாத நிலையில் அவைகளுக்கான தீனியாக நாளிதழ் செய்திகள் மட்டுமே அப்போதைய சூழலில் எனக்கு இருந்து வந்தது. அச்சமயத்தில் பாகிஸ்தான் பற்றிய வழமையான நூல் வகையில் இல்லாது முற்றிலும் அந்நாட்டு அரசியல் பற்றி மட்டுமே பேசும் இந்நூலை கிழக்கில் இருந்து வாங்கினேன்.
விரும்பி வாங்கி வாசித்த நூலை இரவல் வாங்கிய நண்பர் ஒருவழிப்பாதையாக்க மாட்டார் என்ற நம்பிக்கையோடு இருந்தேன். அப்படியே மாற்றினாலும் குடி முழுகிப் போய்விடாது என்றாலும் அப்போது இருந்த இந்நூலின் முகப்பு அட்டைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது (இப்போதைய பதிப்பில் முகப்பு அட்டை வேறு). சமீபத்திய பருவமழைக் காய்ச்சல் மீண்டும் படுக்கையறைக்கு என்னை ஒப்புக் கொடுக்க தயாரானபோது துணைக்கு நூல்களை வைத்துக் கொள்ள ஏதுவாக நூலகம் சென்றேன். எதிர்பாராதவிதமாக ஆன்மிகம் வரிசையில் இந்நூல் உட்கார்ந்திருந்தது. துணையிருப்புக்கு கொண்டு வந்து மறுவாசிப்பு செய்தேன். பாகிஸ்தான் போன்ற நாடுகள் என்றால் தேச அரசியல் சரித்திரம் என்பது எப்பொழுதும் சுவையாகத் தான் இருக்கும் என்பதை மீண்டும் உணர்ந்தேன்.
பா.ராகவனின் மொழி நடையில் பாரதப் பிரிவினையில் தொடங்கி சமீபத்தில் அதிகாரத்தை இழந்து நிற்கும் முஷாரப் வரை பாகிஸ்தானில் ஆட்சியாளர்களாக இருந்தவர்கள் பற்றிய சிறு அறிமுகம், அவர்களின் வளர்ச்சி, வீழ்ச்சி, ஆட்சிக்காலத்தின் அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு கிள்ளிக் கொடுத்தது என வாசித்து நகர்கையில் ஜனநாயகத்தின் பலம் நமக்கு மெல்ல புலப்பட ஆரம்பிக்கிறது. நம் தேசத்தின் வளர்ச்சிக்கான காரணமும் தெரிகிறது.
ஜின்னா என்கின்ற தலைசிறந்த தலைவனின் கனவாய் ஜனநாயகத்தின் மைய சக்கரத்தில் இயங்கும் பெருவிருப்போடு பிரிந்த தேசம் எங்கு தடம் மாறியது? அதன் தலையெழுத்தை மாற்றி எழுதிய பிரம்மன் யார்? அந்த தோஷம் இன்று வரை பாகிஸ்தானை எப்படி ஆட்டு விக்கிறது? என்பதை வேகத்தடையற்ற சாலை பயணமாய் வாசிக்கத் தருகிறார் பா.ரா. நூலின் இந்த மைய இழைக்கு அவர் சரடாக இழைத்திருக்கும் விசயங்கள் அநேகம்.
ஜின்னாவின் எண்ணம், அது இன்றளவும் நிறைவேறாத கவனானதற்கான காரணம், பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு காஷ்மீர் துருப்புச் சீட்டாக மாறிய விதம், அதை தூக்கிப் பிடித்து நிற்கும் அந்நாட்டின் உள்ளூர் அரசியல், உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. பிறந்த கதை, கிழக்கு பாகிஸ்தானுக்கும், மேற்கு பாகிஸ்தானுக்குமான கலாச்சார முரண், பங்காளதேஷ் பிரிவினைக்கு அடிப்படை, பிரிவினை யுத்தத்தில் இந்தியாவின் பங்களிப்பு, அந்தக் களத்திலும், அடுத்தடுத்த இந்தியப் போரிலும் பாகிஸ்தான் சந்தித்த பின்னடைவுக்குள் ஒளிந்திருந்த இரகசியம், சுயநோக்கோடு எல்லையோர பழங்குடி மக்களை பயன்படுத்தவும், தீவிரவாத குழுக்களுக்குத் தீனி போடவும் அந்நாட்டு இராணுவத்துக்கான அவசியம், கோடால் பிரிந்த தேசம் ரோடால் இணைய நிலத்திலும், மனதிலுமாக அன்மைய தலைவர்கள் செய்த முயற்சிகள், அதற்காக உருவாக்கப்பட்ட பாதைகள், பின் இணைப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத குழுக்கள் என ஒரு பெரும் பட்டியல் சரடு இந்நூலுக்குள் இருக்கிறது.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஆட்சி மாறுதல் என்பது சட்டென வந்து போகும் மலைச்சாரல் மாதிரியாகவே இன்று வரை இருக்கிறது. இது நிரந்தரமல்ல என்று சொல்வதற்கான சூழலோ, அதை தைரியமாய் அறிவிக்கும் ஆட்சியாளரோ அங்கு இன்னும் உருவாக வில்லை என்பதே நிஜம்! இரத்தத்தையும், இராணுவத்தையும் தன் இரு கண்களாக மாற்றிக் கொண்ட பாகிஸ்தான் ஒவ்வொரு முறையும் ஜனநாயகத்தைப் பலிகடாவாக்க தேர்ந்தெடுத்துக் கொண்ட நபர்கள் மட்டுமே வேறு வேறாக இருந்திருக்கிறார்கள். பலி என்பது ஒரே மாதிரியாகவே இருந்து வந்திருக்கிறது என்பதை வாசிக்கையில் ஆச்சர்யமே மேலிடுகிறது.
அரசியல் கட்டுரைக்கான சுவராசியம் குன்றாது தரவுகளுடன் ஒரு தேசத்தின் இன்னொரு முகத்தை காட்டி எழுதப்பட்டிருக்கும் இந்நூல் நம் பால்ய உறவுகளின் அவஸ்தை வாழ்வை அறிந்து கொள்ள உதவும் அரிச்சுவடி எனலாம்.
No comments:
Post a Comment