Monday, 6 December 2021

என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள் - விசிட்டிங்கார்டு!

சுமதிஸ்ரீ எழுதி விகடன் பிரசுர வெளியீடாக வந்திருக்கும் இத்தொகுப்பில் 13 கட்டுரைகள் உள்ளன. அவைகளை நிரப்பி நிற்கும் செய்திகள், தகவல்களில் இருந்து நூலாசிரியர் குறித்த பல்வேறு விசயங்களை வாசிக்க முடிகிறது.

இலக்கிய, ஆன்மிக, பட்டிமன்ற மேடைகளில் இன்று கோலோச்சிக் கொண்டிருக்கும் நூலாசிரியர் தான் கடந்து வந்த பாதையை எழுதப்படாத நாட்குறிப்பின் வாயிலாக திரும்பிப் பார்க்கிறார். தன் வாழ்வில் திருப்பம் தந்தவர்களை அசை போடுகிறார்.

பேட்டிகளாக வந்திருக்க வேண்டியவைகளையும், தனிப்பட்ட உரையாடல்களில் பகிர்ந்து கொள்ளக் கூடியவைகளையும் கட்டுரைகளாக்கி இருப்பதால் அவைகள் வெறும் செய்திகளாகவே இருக்கின்றன. கட்டுரைகளில் இடம்பெற்றிருக்கும் தகவல்களில் பல கதைகளுக்கான தன்மையைக் கொண்டிருக்கிறது. அவைகளை சிறுகதைகளாக நூலாசிரியர் எழுதி இருக்கலாம். அவைகள் செய்திகளாக இல்லாது போயிருந்திருக்கும். இந்நூலாசிரியர்கோடாரிக் காம்பில் பூக்கள்என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதி இருக்கிறார்.

ஆரம்பக் கட்டுரைகளில் வரிக்கு வரி இடம் பெற்றிருக்கும் உவமைகள் வாசிப்பில் ஒரு தடையை தருகிறது. சர்க்கரை இனிப்பிற்கான சுவையாக இருந்தாலும் அது அதிகமாகும் போது திகட்டி விடும் தானே! பின்னர் வரும் கட்டுரைகள் இத்தன்மையில் இருந்து விலகி இயல்பாய் வாசிப்பிற்கு நெருடலற்ற தன்மையில் அமைந்து இருக்கிறது.

நூலாசிரியர் தன் பால்யத்தில் எதிர்கொண்ட சிக்கல்களை, இன்றைய அடையாளத்தை அடைவதற்கு முன் பட்ட சிரமங்களை, தடைகளை, அதை எதிர்கொள்ள மேற்கொண்ட முயற்சிகளை, தனக்கு பக்க பலமாக இருந்தவர்களை நினைவு கூர்ந்து தன் சுருக்கப்பட்ட வாழ்க்கை வரலாறை நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்களாக தந்திருக்கிறார். தந்ததில் இருந்து பெறுதல் என்பது வாசிப்பவர்களின் மனநிலையைச் சார்ந்தது.

No comments:

Post a Comment