Wednesday 1 December 2021

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் – செல்வந்தனாவதற்கான செயல் தூண்டல்!

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேறிய நேரத்தில், நிறைய சம்பாதியுங்கள். அதில் ஒரு பகுதியை உங்களுக்காக மட்டும் சேமியுங்கள். இளமை பிராயம் முழுக்க அதை மறந்தும் விடுங்கள் என்று எங்கள் பேராசிரியர் அறிவுரை சொன்னார். அந்த வயதில் அறிவுரை எல்லாம் அக்கப்போராக இருந்ததால் கடைபிடிப்பது பாகற்காயாகிப் போனது. காலம் சும்மா விடுமா? பாலபாடத்தை அது நடத்த ஆரம்பித்த போது அந்த அறிவுரையின் வீரியம் எனக்கு மட்டுமல்ல இன்று நான் சந்திக்கும் என் கல்லூரி கால நண்பர்களுக்கும் உரைக்க ஆரம்பித்தது. இது உலகம் முழுக்க இருக்கும் இளைய தலைமுறைக்கும் பொருந்தும் போலும்! அதனாலயே சேமிப்பு குறித்து எழுதப்படும் ஆங்கில நூல்கள் மில்லியன் கணக்கில் விற்பனையாகின்றன. அதன் மொழிபெயர்ப்புகள் நம் தாய்மொழியிலும் வாசிக்க கிடைக்கின்றன. அப்படி சமீபத்தில் வாசித்த நூல் ஜார்ஜ் எஸ். க்ளேசன் எழுதிய பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் (THE RICHEST MAN IN BABYLON).

நம் முன்னோர்கள் பள்ளிக் குழந்தைகள் சேமிக்க சஞ்சயிகா, வீட்டுப் பெண்கள் சேமிகக சிறுவாட்டு காசு என  சேமிப்பு முறைகளை சொல்லி தந்திருந்தார்கள். அரசாங்கம் கூட மாதம் நூறு ரூபாய் மட்டும் சேமிக்க ஏதுவான திட்டங்களை வைத்திருக்கிறது. ஆனால், உலகமயமாக்கல் வந்த பின் அத்தியாவசியத்திற்கு செய்து கொண்டிருந்த சேமிப்பை ஆடம்பரத்துகான செலவுகளுக்கு திருப்பினோம். முன் பணம் தேவையில்லை. பிடித்ததை வீட்டுக்கு எடுத்துப் போங்க. பிறகு பணம் கொடுங்க என்ற வாசகங்கள் வரவேற்பறைக்குள் ஆடம்பரத்தை நீரப்பி சேமிப்பை சூறையாடிப் போய்விட்டன. இப்படிப் பட்ட நிலையில் சேமிப்பு சார்ந்த ஆலோசனைகளும், விழிப்புணர்வுகளும் தேவையாகவே இருக்கிறது.

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் புதிய எதையும் சொல்லவில்லை. சேமிப்பு சார்ந்து முன்னர் சொல்லப்பட்ட அல்லது நாம் அறிந்திருந்த விசயங்களை வகைப்படுத்தி வழிகாட்டுகிறது. பணத்தை பெருக்க ஆரம்பி, செலவை கட்டுப்படுத்து, செல்வத்தைப் பெருக்கு, செல்வதை அழிவிலிருந்து காப்பாற்று, இருப்பிடத்தை முதலீடாக்குங்கள், வருங்குகால வருமானத்திற்கு காப்புரிமை செய், வருமானத்தை அதிகரிக்க ஆற்றல் காட்டு என்று நூலின் முகப்பில் வரிசைப்படுத்தியிருக்கும் இந்த ஏழின் சாரம்சத்தின் கீழ் அலோசனைகளையும், விளக்கங்களையும் ஆசிரியர் கொடுக்கிறார்.

வட்டிக்குக் கொடுத்து அசலோடு, வட்டியையும் சேர்த்து செல்வத்தைப் பெருக்கும் முறை பற்றிய யோசனைகளை முன் வைக்கும் அதேநேரம், அதை எப்படி செய்ய வேண்டும்? யாருக்கு வட்டிக்கு கடன் தர வேண்டும்? வட்டிக்கு வாங்குபவரை எப்படி அளவிட வேண்டும்? போன்ற ஆலோசனைகளையும் ஆசிரியர் தருகிறார்.  அதிர்ஷ்டத்தை நம்பி காத்திருப்பவர்களுக்கும், செயலை, வேலையை புறக்கணித்து கையிருப்பில் இருக்கும் செல்வத்தை வைத்து சுகபோக வாழ்வை வாழ நினைப்பவர்களுக்கும், முதலீடு செய்வது குறித்து யோசிப்பவர்களுக்கும் திறப்பைத் தரும் விசயங்களை பாபிலோனின் அறநெறிகள் வழியாக நூல் முழுக்க ஆசிரியர் சொல்லி இருக்கிறார்.

செல்வந்தராவதற்கான செயல்களை செய்ய வைக்கும் தூண்டலைத் தரும் நூலை புரிதலுக்கும், தடையற்ற வாசிப்பிற்கும் உரிய மொழிபெயர்ப்பில் கொண்டு வந்திருக்கிறார்கள். துலங்களுக்கு தூண்டல் அவசியமில்லையா? அந்த அவசியத்தை அலட்சியப்படுத்த வேண்டியதில்லை. அதன் பொருட்டேனும் இந்நூலை வாங்கி வாசிக்கலாம்.


 

No comments:

Post a Comment