அத்தியாயம் – 44
(அரோகரா)
”மங்கையினால் வரும் துக்கம் மதுவினில் கரையும்” என்ற எதார்த்தத்தைப் போல கோவிந்தசாமியும், அவன் நிழலும் மீண்டும் தன் துக்க சிந்தனைகளோடு சந்தித்துக் கொள்கிறார்கள். குடிக்க வந்திருக்கும் கோவிந்தசாமி தன் நிழலிடம், ”நீ குடிகாரன் ஆகிவிட்டாயா?” எனக் கேட்பது நகை முரண்! தேசியவாதியாய் தான் மது குடிப்பது சரியா? தவறா? என்ற தர்க்க வாதங்களுக்கிடையே தனக்கெதிராக கிளம்பும் பெண்கள், அவர்கள் எல்லோரும் தன்னை விரும்புவது குறித்து கோவிந்தசாமி பெருமிதமும், துக்கமும் அடைகிறான். மது விடுதியில் கூட கோவிந்தசாமி ஒரு பெண்னிடம், ”புல்வெளிக்கு இஸ்திரி போடுகிறவன்” என குட்டுப்படுகிறான்.
தன்னை ஏமாற்றியது குறித்து நிழல் வெண்பலகையில் எழுதிய பதிவை சாகரிகா வாசிக்கிறாள். தனக்கு வாய்த்த நிழல் அடிமை தன்னை விட்டு விலகவில்லை என சந்தோசம் கொள்பவள் போனசாக ஒரு முத்தமும் கொடுத்து அதை சமஸ்தானத்தில் உட்காரவைக்க நினைக்கிறாள். நம்மிடையே இருந்த திராவிடத்தாரகை கூட அடிமைகளைத் தானே பிரதானமாய் கொண்டிருந்தார்!
கோவிந்தசாமி தன்னுடைய நிழல் மூலம் உன்னோடு நெருங்க நினைக்கிறானோ? என சாகரிகாவிடம் ஷில்பா ஒரு சந்தேகத்தை எழுப்புகிறாள். நமக்குமே அந்த சந்தேகம் வருகிறது. கூடவே, கோவிந்தசாமியுடன் இப்போது இருப்பது அவனின் நிழலா? சூனியனின் பிம்பமா? என்ற சந்தேகமும் சேர்ந்து கொள்கிறது.
ஷில்பா கூறியதைக் கேட்டுக் கோபம் கொண்ட சாகரிகா சுய சேவக், கரசேவக் என தேசியவாதிகளாக வலம் வருபவர்களின் போலித்தனத்தை எச்சரிப்பவள் காமக்கொடூரர்களிடமிருந்து கலாச்சாரத்தைக் கட்டிக்காக்க பெண்களை வீறு கொண்டு எழ வெண்பலகையில் அறை கூவல் விடுக்கிறாள். திராவிடத்தாரகையாக அவள் பதிவிட்ட அதேநேரம் அவள் பக்திப்பழமாகி மஞ்சள் கோலமும், வேலுமாய் நிற்கும் புகைப்படத்துடன் போலி திராவிட நாத்திகத்தின் மாயபிடியில் இருந்து தான் விலகி விட்டதாக அவளே கையெழுத்திட்ட பதிவு ஒன்று வெண்பலகையில் வெளியாகிறது. இதை ஷில்பா சாகரிகாவிடம் காட்டுகிறாள். இந்த ஆப்பு அடிக்கும் வேலையை யார் செய்தது? சூனியனே சொன்னால் தான் உண்டு. காத்திருப்போம்.
No comments:
Post a Comment