ஊக்குவிப்பவன் இருந்தால்
ஊக்கு விற்பவனும்
தேக்கு விற்பான் – என்பது மறைந்த கவிஞர் வாலியின் வரி. இப்படியான ஊக்குவித்தல் எத்தனை பேருக்குக் கிடைக்கிறது. மற்றவர்களை விடுங்கள். பெற்றோரிடமிருந்து அவர்களின் குழந்தைகளுக்கு கிடைக்கிறதா? என்றால் இல்லை என்பது தான் பெரும்பாலான பிள்ளைகளின் பதிலாக இருக்கிறது. முதல் தேர்வில் நாற்பது மதிப்பெண்கள் வாங்கிய குழந்தை அடுத்த தேர்வில் அறுபது மதிப்பெண்கள் வாங்கி வந்து ஆர்வத்துடன் சொல்லும் போது, “அடடே…… இப்ப உன்னால் இவ்வளவு எடுக்க முடியுதுன்னா இன்னும் நல்லா படிச்சா உன்னால இதைவிடவும் கூடுதல் மதிப்பெண் வாங்க முடியும்னு நினைக்கிறேன்” என ஒரு பாராட்டை உற்சாகமாக எத்தனை பெற்றோர்கள் கொடுக்கிறார்கள். இப்படி கொடுப்பதற்கு பதிலாக ”அறுபதெல்லாம் ஒரு மார்க்கா? ஒழுங்கா படிச்சு இன்னும் நல்ல மார்க் வாங்கப் பாரு” என கடிந்து கொள்வதோடு பக்கத்து வீட்டில் அவனோடு படிக்கும் பையனையும் ஒப்பீட்டுக்காக துணைக்கு வைத்துக் கொள்வார்கள். அப்புறம் எப்படி அந்த குழந்தைக்கு அறுபதைக் கடந்து விட வேண்டும் என்ற வேகம் வரும்? வேதனை தான் வரும்!
பாராட்டு என்பது இன்று கல்லில் நார் உரிக்கும் கதையாகி விட்டது. சக பணியாளர்களை, தன் கீழ் பணிபுரிபவர்களை, மேலதிகாரிகளை, குடும்ப உறுப்பினர்களை, நெருக்கடியான காலகட்டங்களில் தனக்கு துணை நின்றவர்களை ஒருவர் பாராட்டிப் பேசுவதைக் கேட்பதென்பது இன்று அபூர்வமான விசயமாகி விட்டது.
நாம் கொடுக்கும் சின்ன, சின்ன பாராட்டுகள் சம்பந்தப்பட்டவரை இன்னும் கொஞ்சம் உற்சாகம் கொள்ள வைக்கும். தான் செய்கின்ற வேலையை இன்னும் சிறப்பாய் செய்வது எப்படி என சிந்திக்க வைக்கும். ஊரைக் கூட்டி பாராட்டு விழா நடத்தி தான் ஒருவரை பாராட்ட வேண்டுமென்பதில்லை. சிறு புன்னகை, தட்டிக் கொடுத்தல், நன்றி தெரிவித்தல், மற்றவர்கள் முன் சம்பந்தப்பட்டவரை பற்றி சின்னதாய் அடிக்கோடிட்டு காட்டல் மூலம் சாத்தியப்படுத்த முடியும். இன்னும் எளிமையாகச் சொன்னால் உங்களின் பார்வையில் சம்பந்தப்பட்டவரை முக்கியமானவராக காட்டிக் கொண்டாலே போதும்.
தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் இருந்தபோது ஒரூ ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார். சாப்பிட்டு முடிந்ததும் அவருக்கு உணவு பரிமாறிய சர்வரிடம் ”உங்களின் சேவைக்கு நன்றி” என்று காந்தியடிகள் கூறினர். அவருடைய அந்த வார்த்தையைக் கேட்ட அந்த சர்வர் என்னுடைய இருபத்தைந்து வருட பணியில் யாரும் என்னிடம் இப்படி சொன்னதில்லை என்றார். ”நன்றி” என்ற அந்த ஒற்றை பாராட்டு வார்த்தை அந்த சர்வரின் செயலை இன்னும் சிறப்பாக்கி தருமில்லையா?
விழா மேடையில் வெளியிட வேண்டிய அந்தநூல் விழா அமைப்பாளர்களின் கவனக்குறைவால் வெளியிடப்பட முடியாமல் போகவே வருத்தத்துடன் நின்று கொண்டிருந்தேன். அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்த லேனா தமிழ்வாணன் அவர்கள் என்னை தன் பக்கத்தில் அழைத்தார். விழாவில் கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்களை அருகில் வைத்துக் கொண்டு சொன்னார். ”கவலைபட வேண்டாம். உங்களுக்கு நன்றாக எழுத வருகிறது. இதுவரை வெளிவந்த நூல்கள் மூன்றை முப்பதாக்குங்கள். அதற்காக தொடர்ந்து எழுதுங்கள்” என்றார். அந்த பாராட்டு வார்த்தைகள் என்னை தொடர்ந்து இயங்க வைத்தது. அன்றைய ஏமாற்றத்தை கடந்து வரச் செய்தது. அந்த பாராட்டின் பலத்தால் இன்று முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை தாண்டிவிட்டேன். ”முக்கியமான நேரத்தில் என்னை ஒருவர் பாராட்டினார். அதை நினைவில் வைத்துக் கொண்டே இவ்வளவு தூரம் முன்னேறி வந்து விட்டேன். எப்போதாவது தடைகள் ஏற்பட்டால் அந்த பாராட்டை நினைவுபடுத்திக் கொண்டு உற்சாகமாக ஈடுபட்டு ஜெயிப்பேன்” என்ற லூயிஸ் பிரட்சரின் வார்த்தைகள் பொய்யல்ல என்பதை உணர்ந்தேன்.
உற்சாகமே வெற்றியின் ஆரம்பம் என்ற வெற்றியாளர்களின் வெற்றி சூத்திரத்தை அந்த வருடம் தேர்வெழுதப்போகும் மாணவ – மாணவிகளுக்கு ஆரம்பத்திலேயே கொடுப்பதற்காக தான் பொதுத்தேர்வுகளில் மாநிலத்தில், மாவட்டத்தில், பள்ளியில் வெற்றி பெற்றவர்களை பாராட்டி விழா நடத்துகின்றனர். அந்த பாராட்டு மற்ற மாணவ - மாணவிகளுக்கு அவர்களைப் போல நாமும் வெற்றி பெற வேண்டும் என்ற உற்சாகத்தை கொடுப்பதோடு அவர்களை முன்னிலும் சிறப்பாக செயல்பட தூண்டும். பாராட்டு விழாக்களின் நோக்கமே அதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களை பலப்படுத்துவதும், பக்குவப்படுத்துவதும் தான்!
மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தன் மனைவி செய்யும் சிறு, சிறு உதவிகளுக்கு கூட நன்றி என கூறுவாராம். இதற்கெல்லாம் எதற்கு நன்றி என அவர் மனைவி கேட்டபோது உனக்கு பதில் வேறு ஒருவர் இந்த உதவிகளை செய்தால் நன்றி சொல்லுவேனில்லையா? என்றாராம். கணவன் மனைவியை எதற்கு பாராட்ட வேண்டும்? மனைவி கணவனை எதற்கு பாராட்ட வேண்டும்? அப்பா பிள்ளைகளை பாராட்டி சொல்ல என்ன இருக்கு? என்பன போன்ற அசட்டுத்தனமான கேள்விகளை கேட்டுக்கொண்டு நமக்கு சம்பந்தமில்லாதவர்கள் தான் பாராட்டுக்கு உரியவர்கள் தகுதியானவர்கள் என நினைத்துக் கொள்கிறோம். இந்த நினைப்பு பாராட்டுகிறவருக்கு மட்டுமல்ல பாராட்டுக்குரியவருக்கும் அத்தகைய மனநிலையை தந்து விடுகிறது. எனவே எங்கெல்லாம் யாருக்கெல்லாம் உந்து சக்தி கொடுக்க வேண்டியிருக்கிறதோ அச்சமயங்களில் எல்லாம் கஞ்சத்தனமில்லாமல் உங்களின் பாராட்டை உற்சாக டானிக்காக கொடுத்துக் கொண்டே இருங்கள்.
பாராட்டைப் போலவே உற்சாகத்தை கொடுக்கக்கூடிய இன்னொன்று புகழ்ச்சி. ஒருவர் புகழ் போதைக்கு அடிமையாகி விடக்கூடாது என்ற குருட்டு வாதத்தை தவறான கோணத்தில் பார்த்து பார்த்து பழகியதன் விளைவு மிகச் சரியான புகழ்ச்சியைக் கூட காக்காய் பிடித்தல், ஐஸ் வைத்தல் என ஐயப்பாடுடையதாக நினைக்க ஆரம்பித்து விட்டோம். நாம் பாராட்ட போய், புகழ்ந்து பேசப் போய் காக்கா பிடிக்கிறான்னு எவனும் சொல்லிடுவானோ என்ற நினைப்பால் நமக்கு நாமே தடை போட்டுக் கொள்கின்றோம். இந்த எண்ணத்தை தவறு என்கிறார் பிரபல அமெரிக்க உளவியலாளர் காப்மேயர்.
’புகழ்ச்சி என்கின்ற மருந்தை எப்பொழுதும் கைவசம் வைத்திருங்கள். நீங்கள் போகுமிடமெல்லாம், சந்திக்கும்ம் மனிதர்களிடம் எல்லாம் அதை கொடுங்கள். எவ்வளவுக்கு எவ்வளவு கொடுக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு நீங்களும் பெறமுடியும்’ என்கிறார். இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா? உங்கள் குழுவில் பணிபுரியும் சக ஊழியர்களை கொஞ்சம் புகழ்ந்து பாருங்கள். அவர்கள் செயலில் காட்டும் வேகம் உங்களின் நிலையை தானே உயர்த்தி விடும். ”மனித இயல்பின் ஆழமான தத்துவமே பாராட்டைப் பெறுவதற்காக ஏங்குவது தான்” என்கிறார் வில்லியம் ஜேம்ஸ். இந்த உண்மையை உணர்ந்து செயல்படுங்கள். மற்றவர்களோடு உங்களின் வளர்ச்சியும் தானே ஆரம்பித்து விடும்.
நன்றி : பாக்யா வார இதழ்