Saturday, 31 October 2015

வலைப்பதிவர் திருவிழாவும், வியாக்கானங்களும்!

மழை விட்டும் தூவானம் விடாத கதையாய் வலைப்பதிவர் திருவிழா முடிந்து இருபது நாட்களுக்கு மேலாகியும் இன்னும் அது சார்ந்த பதிவுகள் வலைப்பக்கங்களை நிரப்பிக் கொண்டே இருக்கின்றன. இதுவே அந்நிகழ்வின் வெற்றியைச் சொல்வதற்கான சாட்சியாகிறது. இருந்த போதும் ஆதரவும், எதிர்ப்புமாய் எழுந்த குரல்கள் சில முன்னெடுப்புகளுக்கும், அடுத்த நிகழ்விற்கான தயாரிப்புகளுக்கும் வழி வகுத்திருக்கிறது. இந்த வழிமுறைகளை முன் நிறுத்தியவர்கள் அதை எவருக்கும் உறுத்தலின்றிச் செய்திருந்தால் எல்லோருக்கும் ஏற்புடையதாக இருந்திருக்கும். ”வலைப்பதிவர்களும் குழு மனப்பான்மையோடு செயல்படுகின்றவர்கள்” என்ற வாதத்தை வதங்கிப் போகச் செய்திருக்கும்.

தனிவிழா நடத்தினாலே தகர டப்பாக்களின் சப்தங்களுக்குப் பஞ்சமிருக்காது. இந்த நிலையில் இப்படியான பொதுவிழா என்றால் கேட்கவே வேண்டியதில்லை, தாரை தப்பட்டைகளின் முழக்கம் இருக்கத் தான் செய்யும். இருந்து விட்டுப் போகட்டும். அப்படியேனும் சிலர் தங்களின் இறுப்பைக் காட்டிக் கொள்ளும் ஆசைகள் பூர்த்தி பெறட்டும்.

Monday, 26 October 2015

புகைப்படம் - 19

மணிமேகலைப் பிரசுரம் நடத்திய  புத்தகக் கண்காட்சியில்

Saturday, 24 October 2015

வலைப்பதிவர் விழாவில்!

புதுக்கோட்டையில் நடந்த "வலைப்பதிவர் விழா 2015" ல் இடம் பெற்ற சுவரொட்டியில்


நன்றி : வலைப்பதிவர் விழாக் குழு & வளரும் கவிதை வலைப்பக்கம்

Thursday, 22 October 2015

ஆய்வுக் கட்டுரையில்!

சிங்கப்பூர் பொன் விழாக் கருத்தரங்கிற்காக “சிங்கப்பூர் புதுக்கவிதை -  நோக்கும், போக்கும்” குறித்து முனைவர் கோட்டி திருமுருகானந்தம் அவர்கள் ஆய்வு செய்த கட்டுரைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட பல கவிதைகளில் ஒன்றாய் இடம் பெற்றிருக்கும் என் கவிதை
---------------------------------------------------------------------------------------------------

புராணத்தில்
பந்தயப் பொருளாய்

போர்க்களத்தில்
காரணப் பொருளாய்

அரசவையில்
அந்தப்புர மினுக்கியாய்

பத்திரிக்கையில்
கவர்ச்சிப் பதுமையாய்

இலக்கியத்தில்
சுமை தாங்கியாய்

காதலில்
ஏமாற்றுக் காரியாய்

கவிதையில்
கருப் பொருளாய்

வாழ்க்கையில்
வாரிசு சுமப்பவளாய்

இவை எல்லாம்
அறிந்தும் தெரிந்தும்
தெரியாதது போல

எத்தனை யுகங்களுக்கு
இப்படியே இருப்பதாய்
உத்தேசம் பெண்னே!

உறைவாளாய் இருப்பதை விட
உருவிய போர்வாளாய்
எப்போது மாறப் போகிறாய்?

நன்றி : சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்

Sunday, 18 October 2015

தூண்டலைத் தரும் அகல் விளக்குகள்!

இரண்டு தினங்களுக்கு முன் பள்ளியிலிருந்து திரும்பிய மகன் இன்னும் இரண்டுவாரம் கழித்து வரும் பிரேயர் அசெம்பிளிக்கு (PRAYER ASSEMBLY) எங்கள் வகுப்பைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அன்றைய ஆங்கிலச் செய்தித்தாள்களிலிருந்து முக்கியச் செய்திகளை வாசிப்பதற்கு என் பெயரைச் சேர்த்திருக்கிறார்கள் என்றான். அடுத்த வாரம் அம்மா யுனிவர்சிட்டிக்குப் படிக்கப் போயிடுவா. உன்னால எப்படிப் பிரிப்பேர் பண்ண முடியும்? அதுனால மிஸ்கிட்ட முடியாதுன்னு சொல்லிடு என்றேன். அவனோ முழு பிரேயர் அசெம்பிளியும் நாங்க மட்டும் தான் டாடி செய்யப் போறோம். அதுனால நியூஸ் இல்லைன்னா வேற எதுக்காது பெயரை மாற்றிக் கொடுக்கலாம். மிஸ்கிட்ட நீங்க பேசுங்க. இல்லைன்னா இலக்கியா பிள்ளையப் பேசச் சொல்லுங்க என்றான். “அவனவன் பசிக்கு அவனவன் தான் சாப்பிடனும்உனக்கு மாற விருப்பம் இருந்தால் நீ தான் மிஸ் கிட்ட கேட்கனும் என அறிவாளித்தனமாய்(!) சொன்னேன். இரண்டொருமுறை தயங்கித் தயங்கிச் சொல்லிப் பார்த்தவன் இவன் கதைக்கு ஆகமாட்டான்னு நினைச்சானோ என்னவோ? சரி……பேசிப்பார்க்கிறேன் எனச் சொல்லிவிட்டு அலைபேசியை வைத்து விட்டான். ஆனால், அன்றிரவே தன் அம்மாவிடம் சொல்லி மிஸ்ஸிடம் பேசி தொகுப்பாளராகச் (COMPERE) செயல்பட ஒப்புதல் பெற்றிருந்திருக்கிறான்

மறுநாள் காலை பணிக்கு வந்ததும் முதல் அழைப்பு மகனிடமிருந்து வந்தது. டாடி……..நான் சொல்வதைக் கேட்டுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க என்றவன் பிரேயர் அசெம்பிளியில் COMPERE ஆகத் தான் பேச இருப்பவைகளை ஏற்ற, இறக்கங்களோடு சொல்லிக் காட்டினான். சிறு, சிறு வார்த்தைத் தடங்கள் தவிர சிறப்பாகத் தயார் செய்திருந்தான். ”நல்லா இருக்குஎன்று சொல்லி விட்டு இன்னும் இரண்டு வாரம் இருக்குல, அதுக்குள்ளயே தயார் ஆகணுமா? என்றேன். ஆமாம் டாடி. அசெம்பிளியில சரியாச் செய்யலைன்னா நல்லா இருக்காதுல. அதான் இப்ப இருந்தே பிராக்டிஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறேன் என்றான். அதைக் கேட்டதுமே, இன்னும் இரண்டு நாட்கள் கழித்து நண்பரின் நூலுக்கான விமர்சன உரை நிகழ்த்த வேண்டி இருக்கிறது, ஒரு வாரத்திற்கு முன் அமைப்பின் பொறுப்பாளரை சந்தித்த போது ஒருமுறை பேசிப் பார்த்துத் தயாராகி வாருங்கள் என அவர் கோடி காட்டிய பின்னும் அதற்கான அடிப்படை ஆயத்தங்களைக் கூடச் செய்து பார்க்காமல் இருப்பதும், குழந்தைகள் எப்பொழுதும் அகல் விளக்குகளாக இருந்து நம்மைத் தூண்டிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், பெரியவர்களாகிய நாமோ அந்தத் தூண்டலின் வழி துலங்காமலே இருக்கிறோம் என்று வாசித்திருந்ததும் தான் நினைவுக்கு வந்தது.

Thursday, 15 October 2015

ராகு காலம்

தன்னுடையக் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவைகளை விட்டு விட்டு வேறொரு கலாச்சாரத்துக்கு ஆட்பட்டு அதன் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகளைப் பின்பற்றும் ஒருவனின் வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்களைச் சொல்லும் கதை ராகுகாலம். மகாராஜாவின் ரயில் வண்டி தொகுப்பில் இடம் பெற்றுள்ள இக்கதையின் ஆசிரியர் அ. முத்துலிங்கம்.

நைரோபிக்குப் புதிதாகப் பணிபுரியவரும் தமிழ் குடும்பத்தில் கார் ஓட்டுனராக வேலைக்குச் சேரும் ஆப்பிரிக்கனான மாரியோ அவர்கள் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், விரதங்கள் ஆகியவைகளைப் பற்றி தனக்குத் தெரிந்த மேலாளரிடம் விசாரித்துத் தெரிந்து கொள்கிறான். அப்படி அவன் தெரிந்து கொண்ட விசயங்களுள் ஒன்று “ராகு காலம்”! காலப் போக்கில் அந்த நம்பிக்கைகளைப் பின்பற்றத் தொடங்கும் மாரியோவின் வாழ்வில் அவைகளால் நிகழும் மாற்றங்கள் தான் கதை,  

வெளி விசயங்களில் தங்களை மிகப்பெரிய கில்லாடியாகக் காட்டிக் கொள்பவர்கள் தன் வீட்டு விசயங்களில் கோட்டை விட்டு விடுவார்கள். இந்த நிஜத்தை ஒப்பந்தத்தில் இருக்கும் விசயங்களை நுணுக்கமாய் பார்க்க விரும்பும் டொன் தன் மகள் ஆப்பிரிக்கச் சிநேகிதிகளுடன் சேர்ந்து, அவர்களின் கலாச்சாரத்திற்கு மாறி வருவதை அறியாமல் இருப்பதை ”உலகத்தைப் பார்க்கும் கண்களால் இவருக்குப் பக்கத்தில் இருக்கும் காதைப் பார்க்க முடியவில்லை” என்ற இரண்டே வரிகளில் நமக்குச் சொல்லி விடுகிறார். இன்றும் பல வீடுகளில் இந்த நிலை தானே?

தான் வேலை செய்யும் குடும்பத்தைப் பார்த்து வேகமாகத் தமிழ் கலாச்சாரத்திற்கு மாரியோ மாறிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென அந்தக் குடும்பம் அங்கிருந்து சென்று விட ஆயத்தமாவதில் திருப்பம் பெறுகிறது கதை.

பல மாதங்கள் கழித்து அவனைச் சந்திக்கும் மேலாளரிடம் புரட்டாசி சனிக்கு கோவிலுக்குப் போய்விட்டு வருகிறேன் என மாரியோ சொல்லுவதில் இருந்து அவன் தன் கலாச்சாரத்தில் இருந்து முழுமையாக மாறி இருப்பது தெரிந்தாலும் அந்த  மாற்றத்தால் அவனின் வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்கள் கதையின் உச்சம்,.

ஆறு மாதமாய் வேலை தேடிக் கொண்டிருப்பதாய் சொல்லும் மாரியோவிடம் ”ஸ்வீடன் தூதரகத்திற்கு சென்றிருந்த ஓட்டுனர் வேலைக்கு என்னவாயிற்று?” என்று மேலாளர் கேட்கும் போது ”புதன்கிழமை பன்னிரெண்டு மணிக்கு ராகுகாலம். அப்போது நேர்முகத் தேர்வுக்கு கூப்பிட்டால் எப்படிப் போக முடியும்?" என அவன் சொல்லும் பதில்  எல்லோருக்கும் பாடம்.

பிற கலாச்சாரங்களையும், அது சார்ந்த நம்பிக்கைகளையும் அதன் அடிப்படை உணராமல் பின்பற்றும் போதும், சில நடைமுறைக் காரணங்களுக்காகச் சொல்லப்பட்ட விசயங்களை மூடத்தனமானது என்று தெரிந்திருந்தும் கண்மூடித்தனமாகப் பின்பற்ற ஆரம்பிக்கும் போதும் அது வாழ்வியலுக்குத் தேவையான நம்பிக்கையவே ஆட்டம் காண வைத்து விடும் என்பதை இந்தக் கதையின் மூலம் ஆசிரியர் இயல்பாய் உணர்த்தி விடுகிறார்.

ஆசிரியர்  : அ. முத்துலிங்கம்
    கதை     : ராகு காலம்
  வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்