Thursday, 26 May 2016

ஒப்பனை முகங்கள்

சவுக்குக் கழிகளால் கட்டப்பட்டிருந்த அந்தச் சார மேடையின் மீது நின்று கொண்டு ஒவ்வொரு செங்கலாய் கொத்தனார் வரிசைப்படுத்திக் கொண்டிருந்ததைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் இராமலிங்கம். அறுபது வயதைக் கடந்து விட்ட அவருக்கு அது ஒன்றும் அற்புதமான, வியக்கத்தக்க காட்சியல்ல. ஆனால், செங்கல்களாலும், சிமெண்ட் கலவையாலும் எழுந்து வரும் அந்தக் கட்டத்தின் ஒவ்வொரு நாள் வளர்ச்சியும் அவருக்குள் ஒரு ஆத்ம திருப்தியை அளித்துக் கொண்டே இருந்தது. மாலையில் வேலை முடிந்து பணியாளர்கள் கிளம்பிய பின் இரவு நேரக் காவலுக்காக கட்டிடத்திற்கு வரும் பெரியவரை எதிர்பார்த்து இருக்கையில் சாய்ந்த படி உட்கார்ந்திருந்தார்

ஒரு நடுநிலைப் பள்ளியின் ஆசிரியராய் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்த இராமலிங்கத்திற்கு மனைவியின் ஊரான இந்தக் கிராமமும், இங்கிருக்கும் உறவினர்களும் கற்றுக் கொடுத்த விசயங்கள் அவரின் வாழ்நாளில் மறக்க முடியாதவைகள்.

Monday, 23 May 2016

தேவதைகளின் அட்டகாசம் - 8

சும்மா, சும்மா காசு கேட்கக் கூடாதுன்னு நீங்க சொன்னதால ஒரு டிராயிங் (DRAWING) வரைஞ்சு அம்மாக்கிட்ட கொடுத்துட்டு காசு கேட்டேன். நல்லா இருக்குன்னு மட்டும் சொல்லி வாங்கி வச்சுக்கிட்டு காசு தர மாட்டேங்கிறாங்க டாடி.


உனக்காக தினமும் அம்மா எல்லாம் செய்றா. அவளுக்குச் சும்மா கொடுத்ததா நினைச்சுக்க.


டாடி... தாத்தாவுக்குக் கொடுத்த டிராயிங்கை விட அம்மாவுக்குக் கொடுத்த டிராயிங்ல நிறைய கலர் கொடுத்து அட்டையில ஒட்டி சுவத்துல தொங்கப் போடுறது மாதிரி ஓட்டை போட்டு நூல் கோர்த்து செமையா செஞ்சு கொடுத்திருக்கேன் டாடி. அதுக்காகவாது ஏதாவது தரலாம்ல.

சரி
. எவ்வளவு தரச் சொல்ல?

தாத்தா இருபது ரூபா கொடுத்தாங்க.

அவ்வளவு எல்லாம் உங்க அம்மா தரமாட்டா.

அப்ப...பத்து ரூபா?

அதுக்கும் முடியாதுன்னு சொல்லிடுவா. இன்னும் குறைச்சு சொல்லு.

அஞ்சு ரூபா?

இன்னும் கொஞ்சம் குறைச்சா நானே சொல்லி தரச் சொல்றேன். 

ஒரு ரூபா?

இப்பவே தரச் சொல்றேன்.

டாடி...ஒரு ரூபாய்க்கு டீ கூட குடிக்க முடியாது. டிராயிங் எப்படி இருந்துச்சுன்னு நீங்களே அம்மாக்கிட்ட கேட்டு்ட்டு அப்புறமா சொல்லுங்க.

சரி...இரண்டு பேருக்கும் பொதுவா அஞ்சு ரூபாய்னு வச்சுக்கலாம். அம்மாக்கிட்ட சொல்லி தரச் சொல்றேன்.


அம்மாவுக்காக தான் அஞ்சு ரூபாய்க்கு ஒத்துக்கிறேன்.

Saturday, 21 May 2016

தகுதி

தொண்டர்கள் சூழ 
சிலைகளுக்கு மாலையிட்டவனுக்குத் 
தோன்றாமலே போனது.
அடுத்த முறையேனும்
அதற்காகத் தன்னை
தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற 
எண்ணம் மட்டும்!

நன்றி : முத்துக்கமலம்.காம்

Thursday, 19 May 2016

உங்களுக்கு நீங்களே!

சிவப்பு விளக்கு எரியும் போது சாலையைக் கடப்பது தவறு என வகுப்பறையில் படித்து விட்டு வரும் குழந்தையை பள்ளியிலிருந்து அழைத்து வரும் தந்தை சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போதே சாலையை விருட்டென கடந்து போவதைக் கண்டு குழம்பிப் போன அந்த குழந்தை, “அப்பா………இது தப்பில்லையா? சிவப்பு லைட் எரியும் போது போனா தப்புன்னு மிஸ் சொன்னாங்களே” என்றாள். அதற்கு அந்த மகா புத்திசாலி தந்தை அவசரத்துக்கு இப்படி போகலாம் தப்பில்லை என்றான். இப்படியான ரோல்மாடல்களோடு தான் நாமும், நம் குழந்தைகளும் வளர வேண்டியிருக்கிறது. அதனால் தானோ என்னவோ குழந்தைகள் பின்னாளில் அவசரம், அவசியம், கொள்கை, விருப்பம், தேவைகள் என ஏதோ ஒன்றின் பொருட்டு தங்களுடைய தனித்தன்மைகளை இழந்து நிற்கின்றனர். கலங்கரை விளக்காய் ஒளி தர வேண்டியவர்கள் சிமினி விளக்காய் மண்ணெண்ணெய்க்கு ஏங்கி நிற்கிறார்கள். நீங்கள் வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி கொள்ள வேண்டுமானால், அர்த்தமுள்ள வாக்கையை நீங்கள் வாழ வேண்டுமானால் அதற்கு “தனித்தன்மை” என்பது அவசியம். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அது அவசியமான ஒன்று. அந்த அவசியத்தை உணர்ந்திருந்ததால் தான் தன் மகனோடு இருந்த தன் படைத்தளபதி தன்னைக் கண்டதும் எழுந்து நின்று மரியாதை செலுத்த போனபோது அதை நெப்போலியன் தடுத்தான். தனித்தன்மை என்று சொன்னதும் அது ஏதோ ஒரு பெரிய விசயமென நினைத்து விடாதீர்கள். உங்களுடைய பழக்கத்தால், நடவடிக்கையால் உங்களை மற்றவர்களுக்கும், உங்களுக்கும் விருப்பமானவராக மாற்றிக்கொள்ளுவது மட்டுமே!

Tuesday, 17 May 2016

Sunday, 15 May 2016

தேவதைகளின் அட்டகாசம் - 7

டாடி..

ம்……….நல்லா இருக்கியா?

நல்லாவே இல்ல.

ஏன்? அப்படி இல்லைன்னாலும் ஒரு ஃபார்மாலிட்டிக்காது நல்லா இருக்கேன்னு தான் சொல்லனும்.

அதெப்படி? நடக்கயில இடிச்சு கால் விரல்ல வீங்கி வலிக்குதுல.

அதுக்கு என்ன செய்றது?

எனக்கும் தெரியல.

உங்க அம்மாக்கிட்டச் சொல்லி மருந்து போடச் சொன்னியா?

அவங்க மருந்து போடுறேன்னு தேய்ச்சி விட்டதுல இன்னும் வீங்கிடுச்சு டாடி.

சரி விடு. நான் சொல்றேன்.

அதோட இன்னொன்னையும் சொல்லிடுங்க.

என்ன அது?

எனக்கு மொட்டை போட்ட சமயத்துல தாத்தா ஒரு கைச்செயின் கொடுத்தாங்களாம். அது என்னுட்டு தானே. அதை எடுத்துத் தரச் சொல்லுங்க.

இப்ப அதெல்லாம் நீ யூஸ் பண்ணக் கூடாது. உனக்கு எப்ப தரணுமோ அப்ப தருவோம்.

அத யூஸ் பண்ணுறதுக்குக் கேக்கல டாடி. பார்த்துட்டு தரத் தான் கேட்டேன்.

பார்க்கிறதுக்குன்னா உங்க அம்மா தந்திருப்பளே,

தரமுடியாதுன்னுட்டாங்க. அந்த சமயத்துல எடுத்த போட்டோவுல பார்த்து தெரிஞ்சுக்கன்னு சொல்லிட்டாங்க. போட்டோவுல பார்த்தா தெளிவா தெரியாதுல டாடி.

சரி. நீ என்ன கேட்டு வச்சிருக்கேன்னு எனக்குத் தெரியல. எதுக்கும் உங்க அம்மாக்கிட்ட சொல்லிப் பார்க்கிறேன்.

சொல்லிலாம் பார்க்காதீங்க. சொல்லிடுங்க.

Thursday, 12 May 2016

அன்பென்னும் ஆயுதம்!

இவ்வுலகில் இன்று பலருக்கும் கிடைக்காத விசயமாக பலரும் ஏங்கக்கூடிய விசயங்களில் ஒன்றாக இருப்பது அன்பு தான்! விலைகொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லாத நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்ற இந்த அன்பை நாம் பரிமாறிக் கொள்வதில்லை. ஏதோ ஒரு காரணம் சொல்லிக் கொண்டு பெற்றோர்கள் பிள்ளைகளிடம், உயரதிகாரிகள் தன் சகஊழியர்களிடம், கணவன் மனைவியிடம், மனைவி கணவனிடம், அண்டைவீட்டார்களிடம், சகமனிதர்களிடம் அன்பை வெளிப்படுத்தாமல் முரண்பட்டு நிற்கின்றோம். ”அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்பதை மறந்து போனதன் விளைவாக நம் மனக்கதவுகளோடு நம்மைச் சுற்றியிருப்பவர்களின் மனக்கதவுகளையும் மூட வைத்து விட்டோம். இன்று வீடு தொடங்கி பணியிடங்கள் வரை விரிந்து கிடக்கும் விரிசல்கள் எல்லாமே இதன் வெளிப்பாடு தான்.

அன்பிற்கும், வெற்றிக்கும் என்னய்யா சம்பந்தம்? என கடிந்து கொள்ளாதீர்கள். சம்பந்தம் இருக்கிறது. நன்கு கூர்தீட்டப்பட்ட கத்தியைக் கொண்டு வீட்டில் சமையலுக்கு தேவையான காய்கறியும் வெட்டலாம். ஒரு உயிரைக் காக்கும் அறுவை சிகிச்சையும் செய்யலாம். ஏறக்குறைய அன்பும் கத்தி மாதிரியானது தான். அதை நீங்கள் எங்கு, எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தே அதன் பலன் கிடைக்கும்.

மனைவியிடம் அன்பை காட்டினால் அது அக்கறையாக மாறும். குழந்தைகளிடம் காட்டினால் பாசமாக மாறும். உறவுகளிடம் காட்டினால் உங்களின் வெற்றிக்கான ஒரு வாய்ப்பாக மாறும். ஒருவழிப்பாதையாக இல்லாமல் இருவழிப்பாதை போல் பலனுக்கு பலன் தரக்கூடிய அன்பை வெறும் வாய் வார்த்தைகளாக சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. அதை வெளிப்படுத்துவதிலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு கடத்துவதிலும் தான் அது ஆளுமையாக மாறி பலன்களைத் தரும். அப்படி அன்பை ஆளுமையாக மாற்றிக் காட்டியவர் புத்தர்.

ஒருநாள் காட்டில் அவர் தன் சீடர்களுடன் தங்க வேண்டிய சூழ்நிலையாகி விட்டது. அவரோடு அவருடைய சீடர்களும் தங்கினர். இரவில் அவர்கள் உறங்கிய சமயத்தில் அவ்வழியே வந்த ஒரு திருடன் அவர்களிடமிருந்த கிண்ணம் ஒன்றை திருடிக் கொண்டு ஓடினான். தற்செயலாக விழித்துக் கொண்ட ஒரு சீடன் திருடன் கிண்ணத்துடன் ஓடுவதைக் கண்டு புத்தரை எழுப்பினான். கிண்ணம் இருந்த இடத்தைப் பார்த்த புத்தர் அடடா….. அவன் ஓட்டைக்கிண்ணத்தை அல்லவா எடுத்துக் கொண்டு ஓடுகிறான். நீ உடனே அவனை துரத்திச் சென்று இந்த நல்ல கிண்ணத்தைக் கொடுத்து விட்டு வா என்றார். சீடனும் திருடனை விரட்டிச் சென்று பிடித்து புத்தர் கூறியதைச் சொல்லி நல்ல கிண்ணத்தை அவனிடம் கொடுத்த நொடி காலம் காலமாய் திருட்டுத் தொழிலை செய்து வந்த அந்த திருடன் தன் தொழிலையே விட்டுவிட்டு திருந்தினான். புத்தரின் அன்பு ஒரு திருடனை மடைமாற்றி நல்லவனாக்கியது.

காந்தியடிகள் பயணம் செய்து கொண்டிருந்தபோது வழியில் ஒரு தொழுநோயாளி வேதனையில் அவதியுறுவதைக் கண்டார். உடனே அவனருகில் சென்று அவனுடைய புண்ணுக்கு மருந்திட்டு தன் ஆடையிலேயே துடைத்தும் விட்டார். பலரும் தடுத்த போதும் காந்தியடிகள் அவனை சபர்மதி ஆசிரமத்திற்கு அழைத்து வந்து தன் படுக்கையிலேயே படுக்க வைத்து நாள்தோறும் மருந்திட்டு வந்தார். உங்களுக்கும் அவனுடைய நோய் ஒட்டிக்கொள்ளப்போகிறது என பலரும் கூறியதைக் கேட்ட காந்தி, “இந்த நோயால் இவனுடைய குடும்பம், மனைவி, பிள்ளைகள் எல்லோரும் வெறுத்து ஒதுக்கியதால் தான் வீதிக்கு வந்துவிட்டான். அவனை நாமும் அவர்களைப் போல் ஒதுக்கி விட்டால் எங்கு போவான்” என திருப்பி கேட்டார். இப்படியான அன்பின் வெளிப்பாடான நடவடிக்கைகள் காந்தியை மகாத்மாவாக போற்ற வைத்தது.

தன் இல்லத்து குழந்தைகளுக்காக ஏந்திய கையில் எச்சில் உமிழ்ந்தவனிடம் அன்னை தெரசா காட்டிய அன்பு கலந்த பேச்சு அவனின் அகங்காரத்தை உருவி எறிந்தது. ஆனி என்கின்ற ஆசிரியை காட்டிய அன்பு கண்பார்வையை இழந்து இருளில் மூழ்கிக் கிடந்த ஹெலன் என்ற சிறுமியை விஞ்ஞானியாக்கியது. திரெளபதி கண்ணனிடம் காட்டிய அக்கறை கலந்த அன்பு அவளுடைய மானத்தை காப்பாற்ற உதவியது.  இப்படியான மாற்றங்களை தரக்கூடிய அன்பு என்பதற்கு தனித்த வரையறை ஏதுமில்லை. அது ஒரு வெளிப்பாடு. வெளிப்படுத்தும் முறை. மற்றவர்களிடத்தில் நீ அன்பு செலுத்துகின்றாய் என்றால் அதை அவர்களை புகழ்வதினால் காட்ட வேண்டியதில்லை. அவர்களுக்கு தொண்டு செய்வதன் வழி காட்டு என்கிறார் விவேகானந்தர். அப்படி காட்ட நீங்கள் புத்தனாகவோ, காந்தியாகவோ, தெரசாவாகவோ மாறவேண்டியதில்லை. நீங்களாகவே இருந்து அன்பை அக்கறையுடன் வெளிப்படுத்தினாலே போதும்.

வீட்டில் ஓடித்திரியும் ஒரு குழந்தை ஏதாவது கதவு, கட்டில் தட்டி அழ ஆரம்பித்ததும், குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடி வரும் அம்மா அந்த குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு கால்களை நீவிவிட்டு வலிக்குதாடா செல்லம்….….அம்மா மருந்து போட்டு விடுறேன். வலி போயிடும் என சொன்னவுடன் குழந்தையின் கண்ணில் அருவியாய் ஓடிய கண்ணீர் சட்டென நின்றுவிடும். காரணம் அம்மாவின் அன்பு மட்டுமல்ல. அதை வெளிப்படுத்திய விதம்! இப்படி அன்பை வெளிப்படுத்தும் விதத்தை வளர்ந்து நிற்கும் அம்மாக்களிடம் மட்டுமல்ல வளர்ந்து வரும் குழந்தைகளிடமும் கூட கற்றுக் கொள்ள முடியும். தலைவலிக்குது என படுத்துக் கிடக்கும் மனைவியிடம் மாத்திரை எடுத்துக்க….…..கொஞ்சம் ரெஸ்ட் எடு…………சரியாயிடும் என அன்பை போதனையாக தரும்போது அது தப்பு என்பதைப் போல தலைவலியோடு படுத்துக் கிடக்கும் அம்மாவின் தலையை தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு தன் பிஞ்சுக்கரங்களில் தலைவலி தைலத்தை அள்ளி எடுத்து தடவத்தெரியாமல் தடவி அன்பை வெளிக்காட்டி நம்முடைய வெற்றுவார்த்தை போதனைகளை தூக்கி குப்பையில் போடச் சொல்லுகின்ற குழந்தைகள் நமக்கு அன்பை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்ற வித்தையை கற்றுத்தருகின்றனர். நாம் தான் கற்றுக்கொள்வதே இல்லையே!

பரஸ்பர அன்பு என்பது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல், துயரங்களின் போது தோள் கொடுத்தல், சந்தோசங்களின் போது அவர்களைக் கொண்டாடுதல் எனபதில் தான் அடங்கி இருக்கிறது. இப்படியான வெளிப்பாடு அமைய வேண்டுமானால் நீங்கள் மற்றவர்களை உங்களைப் போலவே மதிக்கவும், நேசிக்கவும் பழகுங்கள். அவனோ – அவளோ எனக்குரியவர் என்ற எண்ணம் கொள்ளுங்கள். இந்த மனப்பக்குவம் வந்து விட்டால் நீங்களும் புத்தனாக, காந்தியாக, தெராசாவாக மாறமுடியும். அந்த மாற்றத்தோடு அம்மாவைப் போல, குழந்தையைப் போல அன்பை வெளிப்படுத்தும் விதத்தையும் கற்றுக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு வெற்றி கிடைக்கும் போது உற்சாகம் தரவும், தோல்வி கிடைக்கும் போது தோள் கொடுக்கவும் உதவும்.

நன்றி : பாக்யா வார இதழ்

Monday, 9 May 2016

சுவை பொருட்டன்று – சுனை நீர்!

ஒரு விதையை விதையாகவும் பார்க்கலாம். ஒரு அடர் விருட்சத்தைத் தனக்குள் உறைய வைத்திருக்கும் உயிராகவும் பார்க்கலாம். இதில் ஷாநவாஸ் இரண்டாவது வகை. பரோட்டாவை ஒரு பதார்த்தமாக மட்டும் பார்ப்பவர்களுக்கு மத்தியில் அதில் ஊடேறிக் கிடக்கும் மனிதர்களின் வாழ்வியல் சார்ந்த உணர்வுகளைக் கவிதையாக்கித் தந்திருக்கிறார். இந்தத் தொகுப்பில் இருக்கும் பெரும்பாலான கவிதைகள் அதைத் தான் பேசுகின்றன.

ஒரு ஞாயிறன்று பெய்த மழை கலைத்துப் போட்டதில் அந்த முதலாளி(தவ்கே)க்கும், தொழிலாளிக்கும் ஏற்படுகின்ற மன ஓட்டத்தையும்,  சுகாதார அதிகாரியிடம் பகிர முடியாத சத்தியத்தினால் குறுகி நிற்கும் காதலையும் பேசி நகரும் இக்கவிதைத் தொகுப்பு சொற்ப வரிகளைத் தனக்குள் வைத்துக் கொண்டு வாசிப்பாளனின் பார்வையை விசாலமாக்கிய படியே செல்கிறது. அவைகளில் பலவும் வாசிப்பவரின் அனுபவத்திற்கேற்பப் பொருத்திப் பார்த்துக் கொள்ளும் நெகிழ் தன்மை கொண்டவைகள்.

மறந்து போன நினைவுகளை, மனித முகங்களை, அவர்களின் அடையாளங்களை மீட்டெடுக்கும் ஒரு கருவியாக, சந்திப்பும்-பிரிவும் நிகழும் தளமாக, லேண்ட் மார்க் மாதிரியான அடையாளமாக பரோட்டாவும், பரோட்டாக் கடைகளும்  நம்மை அறியாமலே இருந்து வருவதைத் தன் நுண்ணிய அவதானிப்புகளின் வழியாகக் கண்டடைந்து வரிகளின் மூலமாக நமக்குள்ளேயே திருப்பி விடுகிறார். மடிப்பு அதிகமில்லை எனச் சொல்ல நினைக்கும் வாடிக்கையாளர் ஏன் அதை இரகசியக் குரலில் சொல்கிறார்? இந்த ரொட்டி பரோட்டா அங்கிளுக்கு உன்னை மாதிரி இன்று லீவு இல்லையா அப்பா? என்று ஞாயிறன்று தன் தந்தையுடன் வந்த குழந்தை கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் என்னவாக இருக்கும்? என்று இரகசியங்களாய் நிகழும் மொழிகள் குறித்தும் நம்மிடம் கேள்வி எழுப்புகிறார். யோசித்துப் பார்த்தால் அதற்கான பதில்கள் நம்மிடமே இருப்பதாகவே நினைக்கிறேன்.

காற்றாய் கிளம்பிய பரப்புரை பரோட்டாவின் பாரம்பரியத்தில் நிகழ்த்திச் சென்ற தாக்கத்தை, பரோட்டாக் கடையில் பணி செய்பவர்களுக்கிடையே நிகழும் போட்டியின் வெக்கையை அவர்கள் வெளிப்படுத்திக் கொள்ளும் முறையை, சாப்பிட வருகின்றவர்களின் ருசியின் வழியாக நிகழும் செயல் முரண்களை அக்கறையோடு பதிவு செய்திருக்கும் ஷாநவாஸ் பரோட்டாக் கடை முதலாளியாய் இருப்பதன் மூலம் கிடைத்த ஒரு ”ஸ்மைலி” அனுபவத்தையும் பதிவு செய்திருக்கிறார். இன்னொரு அனுபவக் கவிதையில் தலைவர், மருத்துவர், எழுத்தாளர் என்று வரும் வரிசையில் தலைவரையும், மருத்துவரையும் அடையாளப்படுத்த ”சிறந்த” என்ற முன் சொல்லைக் கையாண்டவர்  எழுத்தாளரைச் சொல்லும் போது மட்டும் ”மிகச் சிறந்த” என்று சொல்கிறார். திடீர் கவிதைகள் மாதிரி திடீர் எழுத்தாளர்களுக்கு இப்போது பஞ்சமில்லை என்பதால் திட்டமிட்டே மிகச் சிறந்த என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருப்பாரோ? என்று நினைக்கத் தோன்றுகிறது.

சாப்பிட்டவர்களின் ருசிகளில் இருந்து உதிரும் ஒரு சொல்லில் தன் முகம் தேடும் சமையற்காரரின் தேடலை வாசித்து முடித்ததும் கடைகளில் மட்டுமல்ல தத்தம் வீடுகளிலும் இப்படியான தேடல்கள் இருப்பதை உணர்ந்தவர்கள் பாக்கியவான்கள்!  

நிகழ்வை அப்படியே காட்சிப் படுத்தாமல் அதன் வழியாக வாசிப்பவனுக்குத் தான் நினைத்ததைக் கடத்தும் வித்தை அறிந்தவனால் மட்டுமே படைப்பாளியாய் பரிணமிக்க முடியும், அப்படி ஷாநவாஸ் பரிணமிக்கும் இடமாய் இந்தத் தொகுப்பில் ஒரு உணவுப் பரிமாறலுக்கும் இன்னொரு உணவுப் பரிமாறலுக்கும் இடையேயான நேரத்தை உயிர்ப்பில் வைத்திருப்பதைச் சொல்லும் ”சத்து கோஸம் சத்து துளோர்” என்ற சொல்லில் (சொற்களில்) முடியும் கவிதையைச் சொல்வேன்.

தான் இயங்கும் துறையில் தன் இறுப்பை படைப்புகளின் பங்களிப்பாலும் நிரூபித்து வரும் ஷாநவாஸ் இம்முறையும் அதற்கான முயற்சியைக் கவிதை வழி ஆரம்பித்திருக்கிறார். அதில் கவிதைகளுக்கான கட்டமைவுகளை பொருத்திப் பார்த்துக் கொண்டு அங்கேயே நிலை குத்தி நிற்காமல் அவர் விரித்துச் செல்லும் கவிதைக் கடை வீதியின் வழியே நகர்ந்து செல்லுவதில் மட்டும் கவனம் செலுத்தினால் இத் தொகுப்பில் இன்னும் லயிக்க முடியும். 

நன்றி : திண்ணை.காம்

Saturday, 7 May 2016

பிரிவிலிருந்து!

விசாரிப்புகளோடும், கைகுலுக்களோடும்
துளிர்க்கத் துவங்கியிருந்த நட்பை
தகர்த்தெறிந்ததது முள்ளாய் நீண்ட முரண்.

முள்ளின் முனை முறிக்கச் செய்த முயற்சிகள்
காற்றுக் குமிழிகளாய்
தன்னைத் தானே மாய்த்துக் கொண்டன.

புன்னகைகளும் பார்வைகளும்
அரிதாரமிட்டுக் கொண்டதில்
உவப்பற்றுப் போயின பிந்தைய சந்திப்புகள்.

அயர்ந்த மனம் விட்டு விலகிட எத்தனிக்கையில்
இன்னொரு முனையின் நெகிழ்வை
கொண்டு வந்து சேர்த்தது அலைபேசி.

பரலோக தேவனாய் உயிர்தெழுந்த நட்பு
பிரிவிலிருந்து தொடங்கியிருந்தது
தனக்கான ஆரம்பப் பாதச்சுவட்டை!

நன்றி : பதாகை இணைய இதழ்

Wednesday, 4 May 2016

தேவதைகளின் அட்டகாசம் - 6

அம்மாவுக்கும், இலக்கியாவுக்கும் எதுவுமே தெரியல டாடி.
என்னடா தெரியல?
எல்லார் வீட்டுலயும் வாசல் (GATE) கதவைத் திறந்து உள்ளே போய் விசேசத்துக்கு வரச் சொல்லிட்டு வெளியில் வரும் போது திறந்த வாசல் கதவை மூடாமலே அம்மா வந்துடுறாங்க டாடி. அவங்க மூடாமல் வந்த வீட்டு வாசல் கதவை எல்லாம் நான் தான் மூடிட்டு வந்தேன். நாம திறந்த கதவை நாம தானே டாடி மூடனும்.
சரி விடு, உங்க அம்மாக்கிட்ட சொல்லி இந்த மாதிரி நல்ல விசயத்தை எல்லாம் கத்துக்கச் சொல்றேன். 
அம்மா மாதிரி தான் இலக்கியா பிள்ளையும்.
அது என்ன செஞ்சுச்சு?

இலக்கியாவுக்காக தானே டாடி தினமும் ஸ்கூல் விட்டு வந்ததும் விசேசத்துக்குக் கூப்பிட எல்லாச் சொந்தகாரங்க வீட்டுக்கும் அம்மாவுக்குத் துணையா போயிட்டு வாரேன். எனக்குக் கால் எல்லாம் வலிச்சாலும் இரண்டு நாளா நான் ஹெல்ப் செய்றேன். அதுக்காக இரண்டு பேருமே ஒரு தேங்ஸ் (THANKS) கூட சொல்லல டாடி.எக்ஸாம் அடுத்த மாதம் வருது. இரண்டு பேரும் பிரிப்பேரா இருக்கீங்களா?
அதெல்லாம் ஆகிக்கிட்டு இருக்கோம் டாடி. அப்புறம்?
ஏப்ரல் மாதம் எங்களுக்கு லீவு ஸ்டார்ட் ஆகுது.
அதுக்கென்ன?
மே மாசம் உங்களுக்கு எக்ஸாம் ஆரம்பமாகுது.


மகனுடனான உரையாடல் ஒரு குட்டிச் சண்டையாக மாறி விட கோபத்தில் எனக்கு அவன் எழுதிய கடிதம். டாடியிடம் இதைச் சொல்லிவிடுங்கள் என அவன் கேட்டுக் கொண்டதால் மனைவியும், மகளும் கர்ம சிரத்தையாய்(!) குறுஞ்செய்தியில் அனுப்பி வைத்திருந்தார்கள்.
Gopi saraboji daddy sorry....sorry...sorry... (31 times) daddy. But i don't talk with you. you also don't talk with me. so, do you want to talk with me that means you told to mummy give the phone to abilesh. but i don't talk with you. so, that you also tell to mummy to give the phone to me. please don't call to me. *mind it*. Today on wards i will don't bought snacks from the shop with got money from mummy. mummy please tell to dad.
by
G. Abilesh