Saturday 28 December 2013

அலமாரி அங்கீகாரங்கள்

விருதுகளாலும், வாழ்த்துக்களாலும்
வரவேற்பறையை 
நிரப்பி நிற்கும் அங்கீகாரங்கள்
படைப்பின் பிரசவத்திற்காய்
வாங்கிய லகரங்களை மீட்க
வருசம் கடந்தும் வாசல் வந்து நிற்கும்
தண்டலின் தவணை தேதிகளில்
அரூபமாய் உணர்த்திக் கொண்டே இருக்கிறது
என் முந்தைய தலைமுறை படைப்பாளிகளின்
பாலை நில வாழ்க்கையை.

Friday 27 December 2013

வெற்றியை சொந்தமாக்குவது எப்படி?





எந்த உயிரினத்தையும் இறைவன் வீணாகப் படைக்கவில்லை. இறைவன் எல்லாப் பறவைகளுக்கும் உணவளிக்கிறான். ஆனால், அதைக் கூட்டிற்கே கொண்டு வந்து கொடுப்பதில்லை. உங்களுக்கான புதையலை நீங்கள் தாம் தேட வேண்டும். தேடும் முயற்சியில் சோர்வு ஏற்படும் போதெல்லாம் இந்த நூலை படியுங்கள். உங்களுக்குள் மாற்றங்களை ஏற்படுத்த உதவும் தூண்டுகோல்களின் சாரம் இந்நூல்!

-
பதிப்பகத்தார்


Thursday 26 December 2013

மக்கள் மனசு - 3


முன்பெல்லாம் சபரிமலைக்கு மாலைபோடும் பக்தர்கள் 48  நாட்கள் கடுமையான விரதத்தை  பயபக்தியோடும்,  புனிதத்தன்மையோடும் கடைப்பிடித்து ஐயப்பன் கோயிலுக்கு செல்லுவார்கள். இப்போது  காலையில் மாலை போட்டு, இரவில் இருமுடிகட்டிக்கொண்டு கோயிலுக்கு செல்பவர்கள் அதிகமாகி  விட்டதால், முன்பு போல் இப்போது யாரும் அவ்வளவு பயபக்தியோடு கோயிலுக்கு செல்வது  இல்லை, பக்தர்களிடம் புனிதத்தன்மை குறைந்து கோயிலின் மகிமை கெட்டு விட்டது என்பது பற்றி.........

பக்தர்களின் புனிதம் போய்விட்டது. ஆலய மகிமை கெட்டுவிட்டது என்பதெல்லாம் சுத்த பேத்தல்!
நன்றி : பாக்யா வார இதழ்

Wednesday 11 December 2013

பிரசவ அரங்கேற்றம்


எங்களை பகலவனாக்க
பராசக்தியிடம் சக்தி கேட்டவனே

உன் இறுதிச்சடங்கில்
உன்னை மொய்த்த ஈக்களை விட
வந்தவர்கள் குறைவாம்

வாசித்த போது வருத்தம் மட்டுமல்ல
கோபமும் கூடவே
எங்கள் முந்தைய தலைமுறை மீது

ஒரு தலைமுறை மீதே
கொண்ட கோபம் தான்
எங்களை முந்நிலும் எழுச்சி பெற செய்தது

நீஏற்றி வைக்க ஆசைப்பட்ட விளக்குகளில்
ஆர்வம் கொள்ள வைத்து
துலங்கி தூண்டச்செய்தது

உன் கனவுகளை நனவாக்கி
கைமாறு செய்ய
நாங்கள் கை கோர்த்தோம்

தனித்து கிடந்த நாங்கள்
தரணி ஆள புறப்பட்டோம்

வீட்டுக்குள் முடக்கி வைத்த
மூடப்பழக்கங்களை உடைத்து
விண்ணுக்கு சென்று வந்தோம்

சாதியின் சாயத்தை
எங்களின் காதலில்
கரைத்து எடுத்தோம்

ஆணுக்கு பெண்ணிங்கு இளைப்பில்லை
என காட்ட
ஆளுமைக்கு வந்தோம்

உன் கனவுகள்
அள்ள அள்ள குறையா அட்சய பாத்திரம்

அதில் சிந்தியதைமட்டும்
செயலாக்க எங்களுக்கு
ஒரு தலைமுறை போதவில்லை

ஆகவே தான்
உன் கனவுகளில்
எஞ்சியதை அர்த்தப்படுத்த
எங்களையே பிரசவித்துக் கொள்கிறோம்
அடுத்த தலைமுறையாய்!

நன்றி : மகாகவி

Monday 9 December 2013

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள்

  (”வினவு”  இணையதளத்தில் என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள்              என்ற  தலைப்பில் வெளியான கட்டுரை)      


ப்பொழுது தான் ப்ரீ கேஜி, எல் கேஜி, யு கேஜி என்று வரிசை இருக்கிறது. அப்பொழுது அப்படி இல்லை. “காதைத் தொடு…..கை எட்டுச்சா பள்ளியில் சேர்ந்து கொள்.” அவ்வளவு தான்.

முதன் முதலில் வீட்டை விட்டு பள்ளி என்ற புதிய இடத்திற்கு வரும் குழந்தைக்கு பயம் என்பது  இல்லாமல் இருந்தால் மட்டுமே அந்த குழந்தை தொடர்ந்து வர விரும்பும் என்ற முக்கியத்துவத்தை அறிந்திருந்தவர் என் முதல் வகுப்பு ஆசிரியை செளந்தரவள்ளி அவர்கள். இத்தனை வயதிற்கு பின்னும் அந்த வயதின் சில நினைவுகளையும், சந்தோசங்களையும் சொல்ல முடிகிறதென்றால் அதற்கு காரணம் அவர்கள் தான். ’பேசாதேஎன்று ஒரு போதும் அவர்கள் வகுப்பறையில் சொன்னதாக எனக்கு நினைவில்லை. ஒரு கதையை சொல்லி விட்டு அதை மறுநாள் எங்களை அவர் பக்கத்தில் நிறுத்தி கையால் அணைத்துக் கொண்டு சொல்லச் சொல்வார். ஒரு டீச்சர் என்ற பயமே இல்லாமல் அவர் அருகில் உட்கார்ந்து கொண்டு கதை சொல்வோம், சில நாள் எங்களையே சொல்லச் சொல்வார். வகுப்பறைக்குள் ஒரு வட்டம் போட்டு ஐந்தைந்து பேராக பிரித்து உட்கார வைத்து விளையாடச் சொல்வார். மதிப்பெண்கள் தருவார். சின்ன பொம்மைகள் பரிசாக கிடைக்கும். வகுப்பறையே விளையாடும் இடமாக தான் எங்களுக்கு இருந்தது. நண்பர்களோடு விளையாடுவதற்காகவே பள்ளிக்கு வருவோம். விளையாடும் போது கீழே விழுந்து விட்டால் அவரே கிணற்றடிக்கு அழைத்து சென்று கழுவி விட்டு அன்று முழுவதும் தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்வார். அப்படி ஒரு நாள் விளையாடும் போது நான் கீழே விழுந்து சில்லு மூக்கை உடைத்துக் கொண்ட போது என் சட்டையை கழற்றி, அவரே அலசி பாடவேளை முழுவதும் கால் சட்டையோடு வகுப்பறையில் இருக்க அனுமதித்தவர். (அப்போது நான் போட்டிருந்த சட்டையின் நிறமும், டிஸைனும் கூட இன்றும் என் நினைவில் இருக்கிறது).   

Thursday 5 December 2013

வேட்கை தணித்த தருணம்

பேறுகாலத்தில் பால் கட்டிக் கனத்த மார்பை
மென்மையாய் உதடு கூட்டி
கனமிறக்கும் குழந்தையைப்போல்
உன்னருகாமை அணையும் தருணமெல்லாம்

சிறுநீரால் நிரம்பி வழியும்
முட்டுச்சந்தை மூக்கைப்பிடித்து
கடந்து செல்பவனைப் போல்
கரைபுரண்டு மிரட்டி போகிறாய்.
கழட்ட வேண்டிய கர்வத்தை
கழட்டமுடியா காமமாக்கி
உரிமையின் உடை தரித்து
கட்டிலறையெங்கும் கறைப்படுத்தி வெளியேறுகிறாய்.

பரவாயில்லை.
சிலமணித்திவலையேனும்
உன்னோடு சிறகை உலர்த்திய
உரிமையில் கேட்கிறேன்.

ஒன்றை மட்டும் சொல்
என் வேதனையில்
உன் வேட்கை தணித்த தருணங்களில்
நீ விரும்பியதாவது கிடைத்ததா என்னிடம்.

நன்றி : யாவரும்.காம்

Saturday 30 November 2013

அதிசயமே அதிசயமே

சுட்டி விகடன் 15 ம் ஆண்டு சிறப்பிதழில் வெளிவந்த கட்டுரை


Tuesday 26 November 2013

சூல் பிடிக்கும் சர்ப்பம்

அடங்கி இருப்பதால்
ஒடுக்கி விட்டதாய் நினைக்கிறாய்
அற்பந்தானே என அசைவுகள் தோறும்
சர்ப்பமாய் தீண்டி திரிகிறாய்.
சர்ப்பத்தின் நச்சு சுருங்கி
தீண்டலின் தீவிரம் தனிகையில்
அற்பமாய் வீழ்ந்த நான்
சர்ப்பமாய் சூல் பிடிக்க கூடும்.
அந்த அந்திப்பொழுதில்
என்னுடனான சயனத்தை தாட்சண்யமின்றி
எட்டா தூரத்தில் வைக்க இன்றே பழகி கொள்