Showing posts with label கபடவேடதாரி. Show all posts
Showing posts with label கபடவேடதாரி. Show all posts

Wednesday, 26 January 2022

கபடவேடதாரி – ஒரு வரி கதையும் ஒருநூறு மிகு புனைவும்!

Bynge ல் தொடராக வெளியாகி - எழுத்து பிரசுரம் வழியாக நூலாகி இருக்கும் கபடவேடதாரி யின் ஆசிரியர் பா.ராகவன்.

கபடவேடதாரியில் கதை என்று பார்த்தால்,தன்னைத் தண்டித்த கூட்டத்தைப் பலி வாங்கக் கிளம்புகிற ஒருவன் அதற்காக என்னவெல்லாம் செய்கிறான்? அவன் நினைத்தபடி நடந்ததா? என்ற ஒன்லைன் மட்டுமே! அந்த ஒன்லைனை ஐம்பது அத்தியாயங்களுக்கும் புனைவை துணைக்கு வைத்துக் கொண்டு சுவராசியமாக நகர்த்தி இருக்கிறார்.

காதல், அழுகை, ஏமாற்றம், காமம், கலாச்சாரம், சித்தாந்தம், அரசியல், நகைச்சுவை என எல்லா தளங்களையும் தொட்டு  நிற்கும் நாவலின் களத்திற்கும், கதாபாத்திரங்களுக்கும் உருவாக்கி இருக்கும் பிரமாண்ட பின்புலம் தரும் இரசனையும், காட்சிப்படுத்தலும் அடுத்தடுத்த அத்தியாயங்களை எட்டிப் பார்க்க வைக்கின்றன. படைப்புகளில் நாலும் இருக்க வேண்டும். அதுவும், நறுக்குன்னு இருக்க வேண்டும் என என் தமிழ் பேராசிரியர் சொன்னது நினவுக்கு வரும் விதமாக புனைவெழுத்தில் அடித்து ஆடி இருக்கிறார்.

Friday, 14 January 2022

கபடவேடதாரி - விமர்சனப் போட்டி - 50

அத்தியாயம் – 50 

(சம்ஹார மூர்த்தி)

வெளிப்பட்ட எல்லா அத்தியாயங்களிலும் வசவுகளுக்கும், நக்கலுக்கும், நையாண்டிக்கும், ஏமாற்றத்திற்கும் தன்னை ஒப்புக் கொடுத்து அழுது புலம்பிய கோவிந்தசாமி இந்த அத்தியாயத்தில் விஸ்வரூபம் எடுத்து சங்கி என்றால் சாணக்கியத்தனம் என சொல்லிக் கொண்டு திரிபவர்களுக்கு இன்னொரு சாட்சியாகி இருக்கிறான். கடவுளை விட, பிரமனை விட தானே உயர்ந்தவன். தன் படைப்புகள் அனைத்தும் தோன்றின் புகழோடு தோன்றுபவை என காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு திரிந்த சூனியனை அவன் உருவாக்கிய பாத்திரங்களே குழப்பியடிக்கின்றன. ஒரு கட்டத்தில் பைத்தியம் பிடிக்க வச்சுராதீங்கடா என வடிவேலுவைப் போல புலம்ப ஆரம்பிக்கிறான்.

தனக்கு கிடைக்க இருந்த பதவிக்கு வேட்டு வைத்த கோவிந்தசாமியின் உச்சகட்ட ஆக்‌ஷனில் சாகரிகாவும், தன் படைப்புகளின் அடாவடிகளால் சூனியனியும் திகைத்துப் போகின்றனர். சூனியனுக்கான கிரிடிட்டை சாகரிகா கேட்டதும் அந்த திகைப்பும் கரைந்து போய்விடுகிறது.  ஒருவழியாக எல்லா குழப்பங்களையும் மூட்டை கட்டி வைத்து விட்டு சாகரிகா கோவிந்தசாமி ரசிகர் வட்ட சமஸ்தானத்திற்குள் நுழைய வருபவர்களை கோவிந்தசாமியின் நிழல் வரவேற்கிறது. நிழலும், நிஜமும் இணைந்து அனைவருக்கும் வேட்டு வைக்கப் போகிறார்கள் என நினைத்துக் கொண்டு வாசித்தால் கோவிந்தசாமி நம் நினைப்பை பொய்யாக்கி விடுகிறான். அடியோடு அழிப்பது என முடிவெடுத்தபின் நிழலுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன?

Monday, 10 January 2022

கபடவேடதாரி - விமர்சனப் போட்டி - 49

அத்தியாயம் – 49

 (நூறாயிரம் நான்கள்)

வழக்கம் போல சூனியன் தன் புகழை நீட்டி முழங்குவதில் அத்தியாயம் நகர்கிறது. இதுவரையிலும் வெண்பலகையில் போரிட்டுக் கொண்டிருந்தவர்கள் நேரடியாக சந்தித்துக் கொண்டு களமாடினால் அது இன்னொரு சுவராசியம் என நினைத்தால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. கோவிந்தசாமியின் செயல்பாடுகள் குறித்து தன் கதாபாத்திரம் வழி அறியும் சூனியன் குழம்பிப் போகிறான். அவனின் படைப்புகள் தன்னிச்சையாக இயங்க ஆரம்பிக்கின்றன. தான் திட்டமிட்ட படி எதுவும் நடக்காததால் கோபத்தின் உச்சத்துக்கு செல்கிறான்.

சித்தாந்தங்களின் அடையாளத்தில் தன் படைப்புகள் பிரசவித்திருந்ததால் குழப்பம் விளைவிப்பவர்களை ஒழித்துக் கட்ட எல்லா சித்தாந்தவாதிகளும் கட்சிக்குள் குழப்பம் விளைப்போரை போட்டுத் தள்ள சொல்லும் யோசனையை சூனியனும் ஏற்கிறான். பூகம்பச்சங்கைத் தொட்டுப் பார்த்துக் கொள்கிறான். அழிவுக்கான ஆயுதங்களாக அவனுடைய கதாபத்திரங்கள் இல்லாத்து ஏமாற்றம் என்ற போதும் பூகம்பச்சங்கு எதற்கு? என்ற விடை கிடைத்திருக்கிறது. சூனியன் எங்கு, எப்போது, எப்படி காவு வாங்கப் போகிறான்? அவனுடைய கணக்கில் கோவிந்தசாமியோடு வேறு யாரெல்லாம் இருப்பார்கள்? என்பதை அறிய கடைசி அத்தியாயத்திற்காக காத்திருப்போம்.

Thursday, 6 January 2022

கபடவேடதாரி - விமர்சனப் போட்டி - 48

அத்தியாயம் – 48

(சாதாகவியும், மகாகவியும்)

தன்னை கதாபாத்திரம் என்று சூனியன் கூறியதால் விசனமடைந்து கோபமடைந்திருந்த கோவிந்தசாமி அது காதல் மனதுக்கு சரிபடாது என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொள்வதோடு காதலுக்கும், காமத்திற்கும் பெண்களின் விருப்பத்திற்குரியவனாக, கவிதையில் பாரதிக்குப் பிந்தைய மகத்தான கவிஞனாக தான் இருப்பதாக தனக்குத் தானே நினைவுபடுத்திக் கொள்கிறான்.

ஷில்பா சாகரிகாவிடம் கோவிந்தசாமியைச் சந்தித்த விபரத்தைக் கூறுகிறாள். நிழலை வைத்து நிஜத்தை போட்டுத் தள்ள தான் செய்திருக்கும் ஏற்பாட்டை சாகரிகா கூறுகிறாள். சூனியன் கோவிந்தசாமியிடம் சொன்னதைப் போல ஷில்பாவும் நீயும், பா.ரா.வும் என்னுடைய கதாபாத்திரங்கள் என்று கூறியதைக் சாகரிகா கோபம் கொள்கிறாள். புதிய சமஸ்தானத்துக்கான வேலைகளை ஆரம்பித்து வைத்த கையோடு இரவுராணி மலரை ஏந்தி சாகரிகாவை சந்திக்கும் கோவிந்தசாமி கெஞ்சி, உருகி அவளிடம் மலரைக் கொடுத்ததோடு அதை நுகர்ந்து பார்க்கவும் வைத்து விடுகிறான்.

Wednesday, 5 January 2022

கபடவேடதாரி - விமர்சனப்போட்டி - 47

அத்தியாயம் – 47

 ( கொலையாளி)

என்ட்ரி கொடுக்கும் போதெல்லாம் தன் திறன் பற்றி நமக்கு நினைவூட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் சூனியன் இந்த அத்தியாயத்தையும் அப்படியே ஆரம்பித்து வைக்கிறான். இரவு ராணி மலரோடு வரும் கோவிந்தசாமியை மடக்கி திசைதிருப்ப பார்க்கிறான். ஆனால், இருவருக்குமிடையே குற்றச்சாட்டுகளாகவும், சமாதானமாகவும் நிகழும் உரையாடல் கோவிந்தசாமிக்கு நிறைவைத் தரவில்லை. சூனியனைச் சபித்து விட்டு ஓடத் தொடங்குகிறான். அந்த ஓட்டம் எங்கு, எப்படி முடியும்? என்பதையும் சூனியனே நமக்குச் சொல்கிறான்.

கையோடு எடுத்து வந்த இரவுராணிமலரை சாகரிகாவிடம் கொடுக்க உதவும்படி ஷில்பாவிடம் கோவிந்தசாமி கேட்பான். அவளோ, மலருக்கெல்லாம் சாகரிகா மயங்கமாட்டாள். அவள் பெயரில் ஒரு சமஸ்தானத்தை ஆரம்பித்து அவள் புகழ் பாடத் தொடங்கு. அதைக் கண்டு ஒருவேளை அவள் உன்னை மன்னிக்கக்கூடும் என யோசனை சொல்வாள். கோவிந்தசாமிக்கு இது போதாதா? புதிய சமஸ்தானத்துக்கான அனுமதியைப் பெற்று அதை வெண்பலகையிலும் பதிவேற்றுவான்.

Monday, 3 January 2022

கபடவேடதாரி - விமர்சனப்போட்டி - 46

அத்தியாயம் - 46 

( மகாகவி )

அழுது தீர்த்திருந்த கோவிந்தசாமி ஒரு காஃபி கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறான். அந்த நினைப்பின் நீட்சி ஒற்றை காஃபிக்காக தன் சித்தாந்தத்தை கொத்தி கூறு போட்ட சாகரிகாவுடனான ஒரு சச்சரவை நினைவு கொள்ள வைத்து விடுகிறது. சிறிது நேரத்திற்கு முன்பு வரை காஃபியை நினைத்த கோவிந்தசாமியின் மனது சாகரிகாவை நினைத்துக் கொள்கிறது.

புதிய இரவு ராணிமலரை பறித்து அதில் தன் எண்ணத்தைக் கவிதை வடிவில் உச்சரித்து உருவேற்றிக் கொண்டு நடக்க ஆரம்பிக்கிறான். அந்த நடை அவனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது? மலர் சாகரிகா வீட்டிற்குப் போனதா? கோவிந்தசாமி நினைத்தது நடந்ததா?. அடுத்த சில அத்தியாயங்கள் வரையேனும் காத்திருக்க வேண்டியிருக்கும் என நினைக்கிறேன்.

Thursday, 30 December 2021

கபடவேடதாரி - விமர்சனப்போட்டி - 45

அத்தியாயம் - 45 

(ஜோடி)

எதிர்பாராத வகையில் இரவுராணி மலர் இருக்கும் தடாகத்தின் கரைக்கு கோவிந்தசாமி வந்து சேர்கிறான். நினைவிலும், இலட்சியத்திலும் இருந்த உறுதியில் நீலநகர வனத்துக்கு வந்த நோக்கத்தையே மறந்தும் போகிறான்.

தன் தோற்றம், ஆளுமை சார்ந்து தனக்கிருந்த நம்பிக்கை சாகரிகாவைக் கவர பயன்படும் என நினைக்கிறான். நினைப்பா? தப்புக் கணக்கா? என்பது போகப் போகத் தெரியும்! அந்த நினைப்பு தாய் மசாஜ் குறித்து ஆரம்பத்தில் அவன் கொண்டிருந்த குற்ற உணர்வை நற்செயலாக நினைக்க வைக்கிறது.

மாயத்தடாகத்தில் குளித்து எழுந்த கையோடு கண்ணில் பட்ட இரவுராணி மலரைப் பறித்து தன் எண்ணத்தை அதன் இதழ்களுக்குள் புதைக்கிறான். அதேநேரம், உடலோடும், இதழோடும் இதழ் பதித்து காதல் செய்து கொண்டிருக்கும் ஒரு ஜோடியையும் பார்க்கிறான். முத்தத்திற்கு தங்களை குத்தகைக்குக் கொடுத்திருந்த அந்த ஜோடியின் முத்த பரிமாறலில் தன்னை மறந்த நிலையில் அவர்களை நெருங்கிப் பார்த்த கோவிந்தசாமிக்கு அதிர்ச்சி.