Monday 30 June 2014

மனநிலையை மாற்றிப்போட்ட முதல் அனுபவம்

என்னுடைய நான்கு நூல்கள் வெளிவந்திருந்த நிலையில் புதிய புத்தகத்தின் பதிப்பு விசயமாக கேட்க ஒரு பதிப்பகத்தை தொடர்பு கொண்டேன். அங்கு தொலைபேசியை எடுத்தவர் ஒரு பிரபல எழுத்தாளர். அவருடைய நூல்கள் பல வாசித்தவன். என் எழுத்து ஆவலுக்கு அவருடைய நூல்களும் காரணம். அப்படிப்பட்டவர் எதிர்பாராமல் லைனில் வந்ததும் மனதில் ஏகப்பட்ட மகிழ்ச்சி. பரஸ்பர முதல் பேச்சுக்கு பின் சம்பந்தப்பட்ட பதிப்பகத்தில் தற்சமயம் புதிய நூல்கள் தயாரிப்புக்கு எடுக்கவில்லை எனவும், வேறு பதிப்பகத்தை அடையாளம் காட்டுவதாகவும் அவரே சொன்னதோடு அவரின் முகவரியை செல் நம்பரோடு கொடுத்து எழுத்துப் பிரதியை அனுப்பி வைக்கச் சொன்னார். நானும் அனுப்பி வைத்தேன். அதன்பின் சில மாதங்கள் கழித்து வெளிநாட்டிலிருந்த நான் ஊருக்கு செல்ல வேண்டியிருந்ததால் சென்னையில் சந்திக்க ஏதுவாக இருக்குமே என்ற நினைப்பிலும், முன்கூட்டியே திட்டமிட வசதியாகவும் அவரைத் தொடர்பு கொண்டேன். எழுத்துப் பிரதியை அனுப்பிய பின் அதுதான் அவரை நான் அழைக்கும் முதல் அழைப்பு.

Wednesday 25 June 2014

”திக்”கை தரும் பெண்ணியம்!

என் பல்கலைக்கழக தேர்விற்காக பெண்ணீயம் சார்ந்து சில விசயங்களை, படைப்புகளை தேடிய போது விரைகள், ஆண் குறிகள், விறைத்த நிலை, யோனி, விரிந்த யோனி இதழ், மயிரு, தேவடியா, வேக புணர்ச்சி, அகற்றி வைத்த தொடை, அக்குள் மயிரு, முலை……..இப்படியான வார்த்தைகளால் அடுக்கப்பட்டு சற்றே நேர்த்தியாய் தரப்பட்டிருக்கும் பத்து, பதினைந்து வரிகள் பெண்ணீயத்தை அடையாளப்படுத்துவதாய் காட்டி நின்றது. இணையத்தில் இப்படியான கவிதைகளையும் அதற்கு எதிரான பின்னூட்டம் சார்ந்த விமர்சனங்களையும் வாசித்தபோது கருத்துச் சுதந்திரம் சார்ந்த ஒரு கலகக் குரல் அத்தகைய படைப்பாளிகளால் முன் வைக்கப்பட்டுள்ளது. கூடவே, வலிகளை, அனுபவித்த தடங்களை பதிகிறோம் என சப்பை கட்டு வேறு?!. உண்மையில் இவர்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே!. இவர்கள் சொல்லும் வலி, அனுபவ தடங்களை அனுபவிப்பவர்கள், அப்படி அனுபவித்தவர்களுடன் வாழ்ந்தவர்களாக இருக்கும் பெண் படைப்பாளிகள் கூட இப்படியான வார்த்தைகளில் பதியவில்லை அவர்களின் வலிகளை, வேதனைகளை! .அப்படியான ஒரு சில பதிவுகளில் கூட அவர்களால் வக்கிரமற்ற வலியை வாசிப்பாளனிடம் உணர வைக்க முடிந்தது. ஆனால் பார்வையாளர் மாடத்தில் உட்கார்ந்து கொண்டு பாட்டு இயற்றும் இந்த பெண்ணிய புதுமையாளர்களின் கவிதைகளில் வெறும் அதிர்ச்சிகள் மட்டுமே நிரம்பி இருக்கிறது. அதற்கேற்ற மாதிரியே சில பெண்ணிய கவிஞர்களை அறிமுகப்படுத்தும் போது மேற்கூறியுள்ள வார்த்தைகள் ஒன்றினால் கவிதை உலகில் வாசிப்பாளனிடையே அதிர்ச்சி தந்தவர் என்ற குறிப்பு வேறு!. 

பல்கலைக்கழக பாட நூல் குறிப்பினடிப்படையில் சில உதாரணங்களை வெளியிலிருந்து எடுத்து காட்டி தேர்வை எழுதலாம் என நினைத்து தேடினேன். அனால், எங்கே இதை எல்லாம் பெண்ணியத்தின் கீழ் கேட்கப்பட்ட மூன்று பக்க விடைகளுக்கு எழுதி  அது திருத்துபவருக்குதிக்கை தந்து விடுமோ என்ற நினைப்பில் வந்து நிற்க வைத்து விட்டது