Tuesday, 19 June 2018

எழுத நினைத்த கட்டுரையை விட வடிவாய் ஒரு முயற்சி!

 


"நியூஸ் பேப்பர்ல பவுல் செய்யனும்னு அசைன்மெண்ட் தந்திருக்காங்க டாடி" என்றாள் மகள்.

அதுக்கென்ன செஞ்சிடுவோம் எனச் சொல்லி வைத்தேன்

சொன்னதை மறந்திருந்த தருணமெல்லாம் அவள் நினைவூட்டிக் கொண்டேயிருந்தாள்.

நேற்று பள்ளியில் இருந்து திரும்பியவள், "நாளை காலை பவுல் செய்து கொண்டு போக வேண்டும். இரவு உங்க வேலையைப் பார்க்காம எனக்கு ரெடி பண்ணித் தரப் பாருங்க" என்றாள்.

அந்த இரவை ஒரு கட்டுரை எழுதவதற்கு பயன்படுத்த  நினைத்திருந்தேன்.

மகள் சொல்லி மறுப்பதா? என்பதை விட அவளுக்குக் கொடுத்த உறுதி மொழியைக் காப்பாற்ற வேண்டும் என்பதால் அவளோடு விழித்திருந்து சின்ன, சின்ன உதவிகளைச் செய்தேன்.

ஒரு உதவியாளனிடம் சொல்வதைப் போல சில விசயங்களைச் செய்யச் சொன்னாள்

இரவில் கொஞ்சம், அதிகாலை கொஞ்சம் என நேரத்தை ஒதுக்கி அவளுக்கு வழிகாட்டியதில் பவுலை வடிவமைத்து முடித்திருந்தாள்.

நேற்றிரவு எழுத நினைத்திருந்த கட்டுரையை விடவும் வடிவாய் இருந்தது அவளின் முயற்சி!

Wednesday, 18 April 2018

புயல் தொடாத புண்ணிய தலம்!


உயர்ந்த மதில் சுவர்களைக் கொண்டு கிழமேல் 865 அடி நீளமும், தென் வடல் 657 அடி அகலமும் கொண்ட இராமேஸ்வரம் கோயில் ஆரம்பகாலத்தில் ஆலயமாக கட்டப்படவில்லை. 16  ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இவ்வாலயத்தை ஆரம்ப காலத்தில் தீர்த்தப் பெருமைகளுக்குரியதாக மட்டுமே மக்கள் போற்றி வந்துள்ளனர். ஆலயமாக உருமாற்றும் போது தீர்த்தமாடலுக்கு அது தடையாகலாம் என்று கருதி  மன்னர்களும், அரசர்களும் கோயில் எழுப்பவில்லை. பின்னர் ஆட்சி உரிமைக்கு வந்த சேதுபதிகள் தீர்த்தங்களை மறைக்காமலும், தீர்த்தமாடல்களுக்கு சிக்கல் வராத வகையிலும் ஆலயத்தை வடிவமைத்து கோபுரங்களைக் கட்டினர்.

ஆலயத்தின் முகப்பில் இருக்கும் அனுமனின் திருமேனி வித்தியாசமானது. இடுப்பு வரை மட்டுமே வெளியில் இருக்கும் படியாக அமைந்திருக்கும் திருமேனியில் முகம் பெரியதாய் வீங்கி, குழிந்து சிவந்தும் – சினந்தும், கண்களும், வாயும் சிறுத்தும் அமைந்திருக்கும். கால்களை உயரத் தூக்கி, வால் உயர்த்திய  பாவனையில் சாதிலிங்க குழம்பால் பூசப்பட்டிருக்கும். அனுமனின் இத் திருமேனி வடிவத்தை விஸ்வரூபத்தின் அடையாளமாக குறிப்பிடுகின்றனர். இக்கருவறையின் உள்புறம் மழைக்காலத்தில் நீர் உயர்ந்தும், மற்ற காலங்களில் நீர் இன்றியும் இருப்பது கூடுதல் சிறப்பு.

Saturday, 14 April 2018

ஆலயம் தொழுதலை விடவும் சுகமான அதிகாலை


சில தினங்களாகவே தன்னுடைய ஸ்நாக்ஸ் காசை சேகரித்து வருவதாக மகன் சொல்லிக் கொண்டிருந்தான்.

ஏன்? என்றேன்.

தமிழ் புத்தாண்டு வரை காத்திருங்கள் என்றான்.

இன்று காலையில் என்னோடு மகளையும், மனைவியையும்  ஓரிடத்தில் நிற்க வைத்தான். அழகாக பேக் செய்யப்பட்ட கிஃப்டைக் கொடுத்தான்.

பிரித்து பார்த்த போது மூன்று ரோஜாக்களை ஒரு பொம்மை தன் தலையில் தாங்கிய படி இருந்தது.

இதுக்கு என்ன அர்த்தம் என எதார்த்தமாய் கேட்டேன்

அதற்கு அவன் சொன்ன பதில்தான் இன்றைய காலையை இன்னும் சுகமாக்கித் தந்தது.

"நீங்கள், அம்மா, இலக்கியா மூவரும் தான் மூனு ரோஜா. அந்த பொம்மை தான் நான். நீங்கள் மூனு பேரும் உங்க கஷ்டத்தை எனக்கிட்ட ஷேர் பண்ணிக்கலாம். அதை சொல்லத் தான் இந்த கிஃப்ட்" என்றான்.

இதற்குப் பிறகு எதுக்கு கோயிலுக்கு போகனும்?