Thursday 31 October 2013

புறம் பாய்ந்த நகல்

இப்போது அது நிகழச் சாத்தியமற்ற நினைவு
ஒரு காலத்தில் அதுவே
நிஜத்தின் நகலாய் நடமாடிக் கொண்டிருந்தது

ஒரு மழைக்கால இரவில்
மையல் கொண்டிருந்த அமைதியை
சூழ் கொண்ட அந்த நினைவு
சர்ப்பத்தின் புனைவாய் மேல்நோக்கி
எழும்பி ஆட ஆரம்பித்தது

வரிசைக்கிரகமாய்
தேர்வு செய்து தேர்வு செய்து
தேர்வெழுதும் மாணவனாய்
எல்லாவற்றையும் செருகிக் கொண்டே வந்தேன்

பனிக்கட்டிகளோடு உள்ளிறங்கும் மதுவாய்
மனதையும் உடலையும் நனைத்துப் போன நினைவு
உள்ளிறங்கி லயிக்க ஆரம்பித்த கணம்
திடீரென முகத்தில் அறைந்த காற்றாய்
பால் கூப்பனுக்கு காசு என்று
அறைக்கதவை தட தடக்க வைத்தாள் மனைவி

அம்மாவுக்கு தெரியலையாம்
நீ சொல்லிக்கொடு என
கணக்கு நோட்டோடு பாய்ந்தாள் மகள்

புணர்நிலையில் நின்ற நினைவு
கழட்டி எறியப்பட்ட ஆடையாய்
மருண்டு உருண்டோடியது

அடுத்த முறையாவது
அந்த நினைவு ரசத்தை பருக
முழுதாய் ஓரிரவை
ஒதுக்க வேண்டும் என்ற சங்கல்பத்தோடு
மூடியிருந்த போர்வையை அகற்ற
விடியலின் புறம் பாய்ந்த நிஜ கதிர்கள்
வெளிச்சம் பாய்ச்சி போனது என் முகம் நோக்கி.

நன்றி : மலைகள்

Sunday 27 October 2013

துளிப்பாக்கள்


புற்றீசல்களாய் கிளம்பிவிட்டன
பொய் மூட்டைகள்
தேர்தல்.
---------------------------------------------
கடனுமில்லை; தள்ளுபடியுமில்லை
கோடிகளில் வியாபாரம்
டாஸ்மார்க்.
----------------------------------------------
வீதிகளை இரசித்தபடி
இரவெல்லாம் உலா
நிலவு.
-----------------------------------------------
காளைகளுமில்லை
கழனிப்பானையுமில்லை
நவீன விவசாயம்
-----------------------------------------------
சிலைகளில் பார்த்தவர்கள்
உயிர்தெழுந்து வந்தார்கள்
மாறுவேடப்போட்டி.
-----------------------------------------------

நன்றி : திண்ணை

Thursday 24 October 2013

சங்கே முழங்கு - நல்லாசிரியருக்கான டிப்ஸ்




         மாதா, பிதாவிற்கு அடுத்து குரு என்ற உயர்நிலையில் வைத்து நம் சமூகம் ஆசிரியரைப் போற்றுகிறது. அந்த ஆசிரியர் நல்லாசிரியராக, சிறந்த ஆசிரியராக,     மாணவன் விரும்பும் ஆசிரியராக திகழ்வதற்கும், ஆசிரியர் - மாணவரின் கூட்டு வெற்றிக்கும் ஆலோசனைகளை வழங்குகிறது இந்நூல்.

                                                                                                                      - தினத்தந்தி 
   

Tuesday 22 October 2013

மக்கள் மனசு - 1

அமெரிக்க அரசு முடங்கிப்போய் உள்ளதால் ரூ 450 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள செவ்வாய்  கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பும் இஸ்ரோவின் திட்டம் பாதிக்கப்படுமா? பாதிக்கப்படாதா? என்பது பற்றி...

உலக நாடுகளின் முன் நம்மை நிறுத்திக்கொள்ள இந்த திட்டச் செயலாக்கம் அவசியம் என்பதால்  பிரச்சனைகள்  இருந்தாலும்  கண்டிப்பாக    அதைக் கடந்து  இஸ்ரோவும்,  இந்திய அரசும்  இதை  செயல்படுத்தும்.

நன்றி : பாக்யா வார இதழ்

Thursday 17 October 2013

தீராக் காதல்


தாயின் தாலாட்டுக்குப் பின்
எங்களின் துயிலுக்கு
இறவாப் பாடல்களால்
தாலாட்டு பாடியவனே.

உடல்கூடும் காமத்தோடு
மனம் கூடும் காதலையும்
கடலளவு கற்றுத் தந்தவனே.

பிறர் மதத்தை இடித்துரைக்காமல்
தன் மதம் குறித்து
அர்த்தமுள்ள இந்து மதம்தந்தவனே.

மாற்றான் தோட்டத்து
மல்லிகைக்கும் மணமுண்டு என
இயேசு காவியம்படைத்தவனே.

எங்கள் வாழ்வியல் தரிசனங்களுக்கு
உந்தன் வாழ்நாளிலேயே
தத்துவங்கள் தந்தவனே.

உண்மை சொல்ல அஞ்சாமல்
நாங்கள் ஆளாக உன் சுயசரிதையால்
அனுபவங்களை அளித்தவனே.

கவிகளுக்கெல்லாம் அரசனே
எங்கள் கண்ணதாசனே.

நீ வளர்ந்தும்
உன் நிழலில் வளரவைத்தும்
கவி உலகையும்
காப்பிய பரப்பையும் பலரால் நிரப்பினாய்.

உன்னால் உயர்ந்து
முகவரி பெற்றவர்கள்
உன்னை மறக்கலாம்.

நாங்களோ
சூனில் மட்டுமல்ல - ஒவ்வொரு
சூரிய உதயத்திலும் நினைக்கிறோம்.

உன்னையும் - உன்
கை” “ மைபட்டு
கன்னி கழிந்த
கவிதைகளையும்
காப்பியங்களையும்
தீராக் காதலோடு திசை எங்கும்!


நன்றி : தமிழ்முரசு நாளிதழ்

Wednesday 2 October 2013

மலடியாகவே

அணிந்தும் அணியாத ஆடை
வலிந்துத் திணித்த உதட்டுச்சாயம்
சிணுங்கி அழைக்கும்
ஒய்யாரச் சிரிப்பு
உந்தித் தள்ளும்
உயிரற்ற காமம்என
கடைவிரித்துக் காத்திருப்பவளிடம்
புதைந்து கிடக்கிறது
பல புணர்தலுக்குப் பின்னும்
மலடியாகவே மலரும் தந்திரம்.

நன்றி : உயிரோசை