Wednesday 29 April 2020

கடலெனும் வசீகர மீன்தொட்டி

யாவரும் பப்ளிஷர்ஸ் மூலம் வெளிவந்திருக்கும்கடலெனும் வசீகர மீன் தொட்டிசுபா செந்தில்குமாரின் முதல் கவிதைத் தொகுப்பு. முற்றிலும் மாறுபட்ட பார்வையை நமக்குள் விரித்து விரவும் இத்தொகுப்பின் அநேகக் கவிதைகள் காதல், காமம், தனித்திருத்தல், எதார்த்தம் என நான்கு அடுக்குகளில் துளிர்த்தும்,  தனித்த அவலத்தின் சாயல் தரித்தும் நிற்கின்றன.

வாசிப்பவனின் தடம் பற்றி நிமிரும் கவிதைகள் அவனைத் தன் நிழலில் நிறுத்தும் போது அந்தக் கவிதைக்குள் தழும்பி நிற்கும் துயரம், சந்தோசம், தனிமை, கோபம், எள்ளல், காதல், காமக், கழிவிரக்கம் என எதுவொன்றையும் தனக்கானதாய் மாற்றிக் கொண்டு அடிக்கும், நுனிக்குமாய் ஊடு பாய்கின்றான். அதன் குளிர்ச்சியில் எப்பொழுதும் தன்னைப் பதப்படுத்திக் கொள்கின்றான். இத்தொகுப்பின் தலைப்புக் கவிதையானகடலெனும் வசீகர மீன்தொட்டிஅப்படியான ஊடுபாய்தலையும், தன் பதப்படுத்தலையும் தந்தபடியே இருக்கிறது. மீனின் வழியே பிரிந்திருப்பவனின் மீந்து வழியும் காமத்தை நமக்குள் கொண்டு செலுத்த கவிஞர் சுபா கட்டமைத்திருக்கும் / பளபளப்பானதொரு தூண்டில் முள்ளில் / ஆண் வாசனையைச் சுமந்து வரும் இரை / ரகசியமாய் உதடுகள் குவித்து நீந்துகின்றன / ஈரமில்லாமல் வந்து சேர்ந்த முத்தங்கள் / வலதும் இடதுமாய் அலைந்து திரும்புகிறது / பகிர்ந்து கொள்ளப்படாத காமம் / இப்படியான ஒற்றை வரிகள் அந்தத் துயரின் அளவிடமுடியாத அடர்த்தியை உணரச் செய்து விடுகிறது.

Wednesday 22 April 2020

நான்கு இலக்கம் நோக்கிய நம்பிக்கை!

முகநூலில் என் நண்பர்கள் சிக்சர்களாக விளாசிக் கொண்டிருந்த சமயத்தில் தான் அது எனக்கு அறிமுகம். நண்பர் பிரகாஷ் முகநூல் கணக்கைத் தொடங்கி அதில் எப்படி பதிவுகள் செய்ய வேண்டும் என்று பாடம் நடத்தி கட்டாயப்படுத்திய பின்பே முகநூலுக்குள் வந்தேன். அதில் பொழுதுகளைப் போக்கிக் கொண்டிருந்த நேரத்தில் சிலர் தங்களது பக்கங்களில் பகிர்ந்திருந்த அவர்களுடைய வலைப்பக்க லிங்க் வழியாக நுழைந்து திரிந்ததில் வலைப் பக்கம் பற்றிய அறிமுகம் கிடைத்ததுஅதன் வடிவமைப்பு தந்த கவர்ச்சியால் பல பேரின் வலைப்பக்கங்களுக்குச் சென்று பார்த்த பின் ஒரு ஆர்வத்தில் நண்பர்களிடம் வலைப்பக்கம் குறித்து விசாரித்தேன்.

வலைப்பக்கத்திற்கு காசெல்லாம் கட்டத் தேவையில்லை. எல்லாம் இனாம் தான். உன்னைப் போல எழுதத் தெரிந்த (!) நபர்களுக்கு வலைப்பக்கம் ஒரு விசிட்டிங் கார்டு மாதிரி. உன்னைப் பற்றிய விளக்கமெல்லாம் யாருக்கும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. உன் வலைப்பக்க முகவரி கொடுத்தால் அதைப் பார்த்து அவர்களே உன்னைப் பற்றித் தெரிந்து கொள்வார்கள் என அவர்கள் எரிகிற தீயில் எண்ணெய் வார்த்து விட மனம் இன்னும் கொஞ்சம் ஆசை கொள்ள ஆரம்பித்தது.

ஆசை தானே துன்பங்களுக்கு காரணம். இந்த விசயத்தைப் பொருத்தவரை என் ஆசை என் நண்பர்களுக்குத் துன்பமாகி விட்டது! வலைப்பக்கம் தொடங்க வேண்டும் என்ற என் நமுப்பு தாங்காமல் அவர்கள் சில லிங்க் அனுப்பி இதைப் படித்து நீயே வலைப்பக்கத்தை வடிவமைத்துக் கொள்ள முடியும். முயற்சி செய்ஏதாவது சிக்கல் என்றால் நாங்கள் சரி செய்து தருகிறோம் என்றார்கள்வேலையைவும், நேரத்தையும் விரட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் துறையில் இருக்கும் அவர்களால் அதை மட்டும் தான் எனக்குச் செய்ய முடிந்தது.

Tuesday 21 April 2020

பெற்றோர்கள் செய்ய வேண்டியது

கொண்டாட்டமாய் போக வேண்டிய விடுமுறையைசெம போர்எனச் சொல்ல வைத்து விட்டது கொரோனா. வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்ற கண்டிஷனோடு கிடைத்திருக்கும் விடுப்பு பெரியவர்களுக்கே சுமையாக இருக்கும் நிலையில் குழந்தைகளுக்குச் சொல்லவே வேண்டியதில்லை. கொஞ்சம் மெனக்கெட்டால் நமக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் கூட இந்த வீடு அடங்கி இருத்தலை சுகமான நினைவுகளாக மாற்றிக் கொடுக்க முடியும். வீட்டிற்குள் இருக்க மறுக்கும் குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே அடங்கி இருக்கச் செய்திருக்கும் இந்நாட்களில் அவர்களோடு சேர்ந்து நீங்காத நினைவுகளை உருவாக்கிக் கொள்ள பெற்றோர்கள் செய்ய வேண்டிய சில விசயங்களைச் சொல்ல விரும்புகிறேன்.

பிடித்ததைச் செய்ய அனுமதியுங்கள் :

பள்ளி நாட்களில் படி, படி என ஆசிரியர்கள் ஒரு பக்கம், நாம் ஒரு பக்கம் என குழந்தைகளை விரட்டிக் கொண்டே இருந்திருப்போம். வீட்டுப் பாடங்கள் செய்யவே அவர்களுக்கு நேரம் போதுமானதாய் இருந்திருக்கும். இப்போது கிடைத்திருக்கும் இந்த விடுப்பை அவர்களுக்கானதாக மாற்றுங்கள். அவர்களுக்குப் பிடித்த விசயங்களைச் செய்ய ஊக்குவியுங்கள். அவர்கள் பள்ளி நாட்களில் செய்ய விரும்பி நீங்கள் மறுத்த விசயங்களை நினைவூட்டி இப்போது செய்ய அறிவுறுத்துங்கள். செஸ், கேரம் போர்டு, அலைபேசி விளையாட்டுகள் என அவர்கள் அறிந்த விளையாட்டுகளோடு அவர்கள் தலைமுறையில் காணாமல் போன பல்லாங்குழி, தாயம், தட்டாங்கல் போன்ற விளையாட்டுகளை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். உங்களிடமிருந்து அவர்களும், அவர்களிடமிருந்து நீங்களும் கற்றுக் கொள்வதாக அத்தகைய விளையாட்டுகள் இருக்கட்டும்.