Friday, 27 November 2015

கீழே போட்டு விடாமல் எழுதுங்கள்!

கடந்த வாரம் புத்தக வெளியீட்டு விழா ஒன்றிற்குச் சென்றிருந்தேன். புத்தகத்திற்கான அன்பளிப்புத் தொகையை வைத்துக் கொடுக்கும் கவரின் மேல் வாழ்த்துகள் என எழுதி பெயரிட்டுத் தர என் வசம் பேனா இல்லாததால் அருகில் இருந்த ஒரு அன்பரிடம் இரவல் கேட்டேன். அவரை அந்த நிகழ்வில் தான் முதன் முதலில் பார்க்கிறேன். கடந்த காலங்களில் இரவல் கொடுத்து பறிகொடுத்த அனுபவமோ என்னவோ பேனாவின் மூடியைக் கழற்றி கையில் வைத்துக் கொண்டு பேனாவை மட்டும் என்னிடம் தந்தார், பேனா என் கைக்கு மாறியதும் புது விதமான முன்னெச்சரிக்கை குறிப்பாய்கீழே போட்டு விடாமல் எழுதுங்கள்என்றார். எழுதும் போது எப்படிக் கீழே போட முடியும்? என்ற எண்ணம் தம்பி இராமையாவின் மாடுலேஷன் வாய்சில் மனதில் தோன்ற அவரிடமிருந்து என் கைக்குத் தாவி இருந்த பேனாவால் கவரின் மேல் "வாழ்த்துக்கள்" என எழுதினால் முதல் எழுத்தைக் கூட பேனா எழுத மறுத்து நின்றது. எழுதாத எழுதுகோலுக்கு இத்தனை முன்னெச்சரிக்கையும், முன்னெடுப்புமா? என நினைத்துக் கொண்டே பேனா எழுதவில்லையே எனச் சொல்லியபடி அவரிடம் திருப்பிக் கொடுத்த நொடி தன் பேனா தன்னிடமே வந்து விட்ட சந்தோசத்தில் அவரின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்! சந்தோசங்கள் முகிழ்வதற்கான காரணங்கள் எல்லோருக்கும் ஒன்று போல் இருப்பதில்லை போலும்!!

Tuesday, 24 November 2015

தனக்கான வாழ்விடம்


இழைவதற்குள் அதன் இருப்பிடத்தை
இடம் மாற்ற வேண்டுமென
அங்கலாய்த்தார் அப்பா.

கொஞ்ச நாளில்
அதுவே இடம் பெயருமென
அன்பு காட்டினாள் அம்மா.

எத்தனைக் குஞ்சுகள் வருமென
கணக்குப் போட்டு
காத்திருந்தாள் தங்கை.

பகல் நேரக் கீச்சுகளால்
தொந்தரவாய் போயிற்றென
எரிச்சலடைந்தான் அண்ணன்.

எதிர்ப்புகளுக்கும்
எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில்
தனக்கான வாழ்விடத்தை
உறுதி செய்யத் துவங்கியிருந்தது அந்தக்குருவி!

நன்றி : நந்தலாலா.காம்

Saturday, 21 November 2015

உந்துதல் தந்த உபதேசங்கள் - 3

கணவன் மனைவிக்கிடையேயான வாய்சண்டைகளில் ஒருவர் மட்டுமே இயங்க வேண்டும். கட்டில் சண்டைகளில் இருவரும் இயங்க வேண்டும்இந்த இங்கீதம் தெரிந்தால் வாழ்க்கை சங்கீதமாகும்.

தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவாத தேடல்களால் ஒரு பயனுமில்லை, ”தேடல்கள் வழி தேவைகள் கிடைக்கலாம்என்பது ஆறுதலுக்கான வார்த்தைகள்!

உன் கையில் வைத்திருப்பது அஸ்திரம் என்றும், அது செலுத்தப்படுவதற்கானவை என்றும் முதலில் நம்பு. எதை நோக்கிச் செலுத்துவது? என்பதை அதன் பின் முடிவு செய்து கொள்ளலாம்.

உன் வாழ்வில் எதையும் நிலை நிறுத்த வேண்டியதில்லை. நியதிகளாய் நிலை நிறுத்தப் பட்டிருப்பவைகளின் வழி இந்த வாழ்வை வாழ்ந்து முடி. அதுவே போதுமானது. உத்தமமானது.

உன் கோப்பைகளைக் காலியாக வைத்திருப்பதில் இருக்கும் அக்கறை அதை மற்றவர்கள் தங்களின் தேவைகளுக்காக நிரப்பி விடாமல் காப்பாற்றிக் கொள்வதிலும் இருக்க வேண்டும்.

சொற்ப விலையில் கிடைக்கிறது என்பதற்காக கடைசிப் பக்கம் இல்லாத நாவலை வாங்காதே! அந்தச் செயல் விற்றவனுக்கு மகிழ்ச்சியைத் தரலாம். வாங்கியவனுக்கு வாதனையை மட்டுமே தரும்.

காலைக் கடித்த செருப்பைக் கழற்றி எறி, கையில் தூக்கி முத்தமிடாதே!

தூண்டில் போடுபவன் ஒரு போதும் தக்கைகளை எதிர்பார்ப்பதில்லைஆனால் அவைகள் தூண்டிலில் அகப்படுமேயானால் அதற்காக தூண்டிலை மறுமுறை போடாமலும் இருப்பதில்லை. மீன்கள் இலக்கு, மற்றவை எல்லாம் மிச்சம்! அப்படி மிச்சமாகக் கிடைத்தவைகளை அனுபவமாக மாற்றிக் கொள்.

அறிவுரைகளை விட அதன் மூலம் கிடைக்கும் விளைவுகளே அதை வழங்கியவரைச் சிறப்புக்குரியவராக்குகிறது.

எதிர்கால இலக்கு நோக்கி நிகழ்காலத்தில் எய்யப்படும் அஸ்திரங்கள் மிகச் சரியாகச் சென்றடையும் என நினைப்பது முட்டாள்தனம். மாற்று வழிகள் கொண்டிராத அஸ்திரங்கள் வெறும் காகித அம்புகளாக மட்டுமே இருக்கும்