Saturday, 30 April 2016

பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு

பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வழி வந்திருக்கும் கவிஞர் இரா.பூபாலனின் இரண்டாவது கவிதைத்தொகுப்பு “பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு”. இத்தொகுப்பில் விரவி நிற்கும் தன் கவிதைகள் பற்றித் தன்னுரையில் ”எனது எல்லாத் தப்பித்தலுக்கும், மறு மொழிகளுக்கும், வலிகளுக்குமான என் யுக்தி” என்று குறிப்பிடுகிறார். படைப்புத்தளத்தில் நிற்கும் பெரும்பாலான படைப்பாளிகள் தன் வடிகாலாகத் தன்னுடைய படைப்புகளை வைத்திருப்பதைப் போல இல்லாமல் பூபாலன் தன் வடிகால்கள் வழி வாசிப்பாளனின் அக, புற வயங்களைத் திறந்து விடுகிறார். இத்தொகுப்பின் ஒவ்வொரு பக்கமும் ஒரு இறகாய் மாறி நமக்குள் பறக்கத் துவங்குகிறது. நம்மை மையமாகக் கொண்டு சக்கர ஆரங்களாய் விரிந்து செல்கிறது.

பூபாலன் பார்க்கும் ஒரு காட்சியில் அசைவற்ற குளத்தில் கொக்கும் அசைவற்றே நிற்கிறது. கொக்கின் அசைவற்ற நிலை அதன் உணவின் வருக்கைக்கான காத்திருப்பாக இருந்தபோதும் குளத்தின் அசைவற்ற நிலை அதற்குச் சாதகமாக இல்லையோ? என அவரை நினைக்க வைக்கிறது. உடனே தன் கையிலிருக்கும் பந்தால் குளத்தில் ஒரு அசைவை உருவாக்க முனைகிறார். ஆனால், அது  எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்பதை
குளத்தில் மோதி
என் மீதே எம்பியடித்தது என்கிறார். தொடர்ந்து நகரும் அந்தக் கவிதையை
அறையின் சுவற்றில்
மாட்டியிருந்த அந்தக் குளத்தில்
கொக்கை வரைந்தவன்
ஒரு மீனைக் கூட
நீந்தவிடவில்லை - என்று ஒரு வரைபடமாக மட்டுமே நிறுத்தி விடாமல்
என்னையே பார்க்கும்
கொக்கின் அலகில்
மீனாகிறேன்
நான் இப்போது – எனச் சொல்லி அந்த வரைபடத்திற்குத் தன்னையே ஒப்புக் கொடுக்கிறார். முதல் கவிதையில் அவரின் இந்த ஒப்புக் கொடுத்தலைப் போலவே நாமும் நம்மை இத் தொகுப்பில் உள்ள கவிதைகளுக்கு ஒப்புக் கொடுப்பதை வாசிக்கும் போதே பல இடங்களில் உணர முடிகிறது.

தந்திரமாய் ஒரு வியத்தலை நிகழ்த்திக் காட்ட செய்ய வேண்டிய எத்தனங்களின் உச்சத்தைப் பேசும் கவிதையை
மனசாட்சியை ஒரு
கந்தல்துணியைப் போல கழற்றி
சாக்கடையில் வீசியெறிய
சம்மதிக்க வேண்டும் – என்று முடிக்கிறார். வெறுமனே மனசாட்சியை வீசி எறிந்தால் போதும் என்று மட்டும் சொல்லி இருந்தால் ஒருவேளை அது மீண்டு வந்து நிகழ்த்தும் சமரில் வியத்தலில் லயித்தல் நிகழாது போய்விட்டால்? அதற்காகக் கையாண்ட நுட்பம் சிதைவடைந்து விட்டால்? என்ற கேள்வி தொக்கி நிற்கக் கூடும். அதையே நெருங்க அருவெறுப்பூட்டும் துர்நாற்றச் சாக்கடையில் வீசி விட்டால் மனசாட்சியின் மீள இயலா நிலை வியத்தலையும், நுட்பத்தையும் சிதைவின்றி வைத்திருக்கும் என்பதாலயே அப்படிச் சொல்கிறாரோ? என நினைக்கத் தோன்றுகிறது.

கடவுளிடம் அருள் வாங்க சாதியின் சாயம் துறக்கும் உயர் சாதி மனம் அதே கடவுள் அருள் தருவதற்காக வந்திறங்கிய மனிதனை மட்டும் ஏற்க மறுக்கும் முரணை  ”அய்யனார்(எ)மாரப்பன்” கவிதையில் பகடி செய்கிறார்.

கடனட்டைக்கு அழைத்த சகோதரியின் அழைப்பால் நிகழ்ந்த கவிதை கருக்கலைப்பைச் சொல்லும் கவிதை நம் கவனத்தின் கூர்களைச் சட்டெனக் கிளர்ந்து எழும் எவரும், எதுவும் முனை மழுங்கச் செய்து விடும் அபாயத்தை நேர்த்தியாய் நம் முன் விரிக்கிறது.

தன்னை விடப் பிறர் மீது அக்கறை கொள்ளும் தனிநபர்களால் சூழ்ந்தது தான் சமூகம். அந்தச் சமூக அமைப்பில் தனிமனிதன் வழி நமக்குள் இழையோடும் சந்தோசம் போலவே துயரங்களும் அளப்பறியது. தேன் தடவிய கோப்பையில் விசம் தரும் மனித சமூகத்தின் புற வெளிப்பாடுகள் ஒருவனைக் கண் கொத்திப் பாம்பாய் பார்த்து எக்காளமிடுகின்றன. அக்கறை என்ற பெயரில் நிகழும் இப்படியான வன்மங்கள் அவனின் சுய தேடலை புதைகுழிகளுக்கு அஞ்சல் செய்கின்றன. இது தலைமுறைக் கடத்தல் நிகழ்வாகி விட்டதாலோ என்னவோ
எப்போதாவது அவன்
உங்களைச் சந்திக்க வருவான்
அப்போதாவது அவனிடம்
கேட்காதிருங்கள்
அவன் என்ன செய்கிறான் என -  கோரிக்கையாக நம் முன் நீட்டுகிறார்.

”அடுத்த வீட்டில் நடந்தால் அது செய்தி. அதுவே நம் வீட்டில் என்றால் துக்கம்” என்ற பொது விதிக்குப் பொருந்தாத பத்திரிக்கையாளர்களின் பணி பற்றிப் பேசும் கவிதையில் வரும்
உங்கள் தந்தை
கொல்லப்பட்டதை
நீங்களே செய்தியாக்கும்
படியும் அமையலாம் - என்ற வரிகளை வாசித்து முடித்ததும் அதற்கிடப்பட்டிருக்கும் “அத்தனை சுலபமில்லை” என்ற தலைப்பை உதடுகள் தாமாகவே முணுமுணுத்து விடுகின்றன.

”கடன் அன்பை முறிக்கும்” என்ற வணிகத்துக்கான வரி இன்று சற்றே பிறழ்ந்து நட்புக்கான உத்திரவாத வரியாகவும் புழக்கத்திற்கு வந்து விட்டது. உதவிகளைச் செய்கின்ற நட்பு உதவிகளைக் கோரும் போது குறிப்பாக அந்தக் கோரல் பணம் சார்ந்ததாக அமைந்து விட்டால் அங்கு நட்பு விரிசல் விட வரிந்து கட்டுகிறது. உங்களுக்கு நண்பனாக இருப்பது எனக்கு மிகச் சிரமமாயிருக்கிறது என்ற வரி அச்சரம் பிசகாது நம் நண்பனுக்கும் பொருந்திப் போவதால் விதிவிலக்குகள் எடுத்துக்காட்டாகாது என்ற சொல்லாடலை நட்பில் நிலை கொள்ளச் செய்தல் அவசியமாகிறது.

மரங்கள் குறித்து அக்கறையும், ஆதங்கமுமாய் நிற்கும் கவிதைகளை வாசிக்க, வாசிக்க நம் மீதே நமக்கு ஒரு சுய பகடித்தனம் உருவாகிறது. சுற்றுச்சூழல் மாசுபடலில் தொடங்கி, ஓசோன் பொத்தல் வரை நிகழும் மாற்றங்கள் குறித்துத் கற்றுத்தரும், கற்றுக் கொள்ளும் நாம் அதைப் போதனைகளாக மட்டும் சேமித்துத் திரிகிறோம். ஒரு பக்கம் கதறிக்கொண்டே மறுபக்கம்  கழுத்தறுப்பு வேலைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம். இந்த விழிப்புணர்வின்மையை தன் கவிதைகள் வழி சாடும் பூபாலனின் கோபத்திற்கு தெய்வமும் தப்பவில்லை.
கோடாரிகளே இல்லாத
மனிதனாக அவனை
மாற்றி விடும்
மதிக்கூர்மை கூட இல்லாத நீ
என்ன தேவதையென -  மரம் வெட்டிக்குக் கோடாரி கொடுத்த தெய்வத்தை விளாசி எடுக்கிறார்.

ஒவ்வொரு இறகாக/ வெட்டி எறியப்பட்ட பறவை/ வெலவெலத்த படி/ நிற்பதாக இருந்தது / அந்தக் கவிதை இறுதியில் –
நீங்கள் புரிந்து கொண்டதாக / ஒரு விளக்கவுரை/ கொடுக்கும் போது தான்/ அழத் தொடங்கும்/ கவிதை – போன்ற வரிகளில் அடர்த்தி குறைந்த தன் மேதாவித்தனங்கள் காட்டும் தேர்ச்சியற்ற விமர்சிப்பால் ஒரு படைப்பை அதன் நிலையிலிருந்து கீழிறக்கி, உருச்சிதைத்துப் பார்க்கும் மனநிலையைச் சாடும் அதே சமயம் மறைமுகமாகச் சில கேள்விகளையும்  விமர்சகர்களிடம் வைக்கிறார்.

வெற்றுப் பார்வையாளன் படைப்பாளியாக ஆக முடியாது என்பதைப் போல ஒரு காட்சியை எதிர் நிலையில் மாற்றிப் பார்க்காமல் அப்படியே உள் வாங்குபவன் கலைஞனாக - கவிஞனாக மாற முடியாது என்பதற்கு
அறையெங்கும் நிறைந்திருக்கிறது
மெழுகுவர்த்தி வெளிச்சம்
ஒளிக்குப் பயந்து விட்ட இருள்
ஒளிந்து கொண்டுள்ளது.
அறையிலுள்ள பொருட்கள்
ஒவ்வொன்றின் பின்னால்
அதனதன் நிழலாக -  என்ற கவிதை இன்னும் ஒரு சாட்சியாகிறது

நம்மை நோக்கி நீட்டப்படும் எதுவும் நமக்கு உவப்பானவைகளாக இல்லாத போது செய்கின்ற முதல் காரியம் அந்த இடத்தை விட்டு கடந்து போய் விடுவோம். இது நேரில் சாத்தியம். அதுவே ஒரு படைப்பாய் நம் மடியில் அமர்ந்து கொண்டு நம்மோடு யுத்தப் பிரகடனம் நிகழ்த்தினால் என்ன செய்ய முடியும்? மடியில் இருந்து அதை இறக்கி விடலாம். அப்படிச் செய்யும் போது அடுத்து வரும் பக்கங்கள் நமக்கு உவப்பனவையாக இருக்குமோ? என்ற சந்தேகம் அக்குள் அரிப்பாய் இருந்து கொண்டே இருக்கும். அப்படியான சமயங்களில்
வெடுக்கென்று புரட்டி விடுங்கள்
இந்தப் பக்கத்தை – என்கிறார். நம் வாழ்வியல் பக்கங்களில் துயரங்களைக் கடந்து தொடர்ந்து செல்ல இந்தக் கடைசி இரண்டு வரிகள் தரும் புரட்டல் – தாவல் அவசியம். அப்போது தான் வாழ்வை அதன் நீள் வட்டப் பாதையில் அறுபடாமல் நகர்த்திச் செல்ல முடியும்.

அன்பைப் போதிக்கும் அம்மாக்களின் வாஞ்சைகளுக்கு அப்பாக்கள் எக்காலத்திலும் இணையாக முடியாததைப் போல அப்பாக்கள் பிள்ளைகள் சார்ந்து முனையும் சேகரிப்புகளுக்கும், தேடல்களுக்கும் அவர்கள் மட்டுமே அவர்களுக்கு இணையாவார்கள். அவர்களின் எல்லா இயங்கு தளங்களிலும் பிள்ளைகளின் எதிர்காலம் மட்டுமே அச்சாணியாய் சுழலும். அதனால் தான் காலத்தை புகைப்படமாய் உறையவைக்கும் போது கூட அப்பாவை அவராக மட்டுமே அதில் பதிய முடிகிறது பூபாலனுக்கு.
உறைவித்த புகைப்படத்திலும் அவர்
உதடுகள் முணுமுணுத்தபடி இருந்தன
பிள்ளைகளைப் படிக்க வைக்கணும்
வீடு கட்டணும்
என்று நீளமாய் – என்ற வரிகளை வாசித்து முடிக்கையில் நம் அப்பாக்களும் நம் மனதில் அப்படியாகவே உறைகிறார்கள்,

கடவுளுக்கு நிகர் இல்லை என்பதால் அந்தக் கடவுளாகவே குழந்தைகளைத்  தன் கவிதைகளில் கொண்டாடித்திரியும் கவிஞர் பூபாலன் அந்தக் கடவுள்கள் இழி மனிதர்கள் சூழ்ந்த தேசத்தில் எப்படியெல்லாம் வதைபடுகிறார்கள். சிறகொடிக்கப் படுகிறார்கள் என்பதையும், சக மனிதர்களிடம் நாம் கவனிக்க மறந்தவைகளையும் அவர்களிடம் நாம் அறிந்திருக்க வேண்டிய விசயங்களையும் உன்னிப்பாய் அவதானித்துச்  சொல்கிறார். நம் கை பற்றிக் கவிதை மொழியில் பேசுகிறார்.

ஒருமுகமாய் ஓடும் நதியாய் இல்லாமல் மலையிலிருந்து விழும் அருவி சிதறி நாலா பக்கமும் பாய்ந்து சங்கமத்திற்காகக் கடலை நோக்கி நகருவதைப் போல பூபாலனின் கவிதைகள் ஒற்றையாய் இல்லாமல் பல்வேறு சமூகம் சார்ந்த நிகழ்வுகளையும் பேசுகிறது. ஒருவித அக்கறையோடும், சில இடங்களில் ஆற்றாமையோடும் அவைகள் தொகுப்பிலிருந்து நமக்குள் மடை மாறுகின்றன.

சில கவிதைகளில் ஒரு வரியில் இடைவெளி விட்டு நிற்க வேண்டிய சில வார்த்தைகள் தன்னை முறித்துக் கொண்டு அடுத்தடுத்த வரிகளுக்குத் தாவி நிற்கிறது. இதில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். தனக்கான மொழி அறிவைக் காட்டி வாசகனிடம் மொழிச்சிக்கலை உருவாக்கும் தந்திரங்கள் ஏதுமின்றி தேர்ந்தெடுத்த எளிய சொற்களில் தன் கவிதைகளை பூபாலன் கட்டமைத்திருக்கிறார். அதுதான் தொகுப்பை இன்னும் இளக்கமாய், இணக்கமாய் நம்மோடு இயைந்து நிற்கச் செய்கிறது. நேர்த்தியான வடிவமைப்பில், கண்ணை உறுத்தாத எழுத்தளவில் வந்திருக்கும் தொகுப்பை முழுமையாக வாசித்து முடிக்கையில் பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு -  ஒற்றைச் சாளரம் அல்ல என்பதை உறுதிப் படுத்தி விடுகிறது. 

நன்றி : மலைகள்.காம்

Wednesday, 27 April 2016

தேவதைகளின் அட்டகாசம் - 5

நான் பாத்ரூமில் குளிக்கனும். நீ வெளியே உள்ள பாத் டேப்பில் (BATH TAP) குளின்னு சொன்னேன். அவன் அதெல்லாம் முடியாது. பாத்ரூமில் தான் குளிப்பேன்னு சொன்னான்.

ம்.....

போடான்னு திட்டினேன். 

ம்....

அதுக்கு அவன் என்னவோ சொல்ல நான் ”ஒன் தல” ன்னேன்.

ம்.....

உடனே ”பன்னாடை”ன்னு ரொம்ப அசிங்கமா சொல்றான் டாடி.

ம்.....

என்ன......ம்...ம்...ன்னு. நான் என்ன கதையா சொல்றேன்?

அதுக்கு நான் என்ன செய்யனும்?

அவனைக் கூப்பிட்டு இப்படியெல்லாம் பேசக்கூடாது. அசிங்கமான வார்த்தையெல்லாம் சொல்லாதேன்னு சொல்லுங்க.
.
சரி...அவனைக் கூப்பிடு.

ஏன்டா...இலக்கியா பிள்ளையத் திட்டுறே?

அதை மட்டுந் தான் உங்கள்ட்டச் சொல்லுச்சா. அது சொன்னதை எல்லாம் சொல்லி இருக்காதே! என்னைய என்ன, என்ன சொன்னுச்சுன்னு தெரியுமா? 

சரி...சரி...உங்க பஞ்சாயத்தை அப்புறமா வச்சுக்கலாம். வேன் வந்துடும். ஸ்கூலுக்குக் கிளம்புங்க. சாயங்காலம் பேசி முடிவு செய்துக்கிடலாம்.

Saturday, 23 April 2016

நினைவுகளை ஏந்திச் செல்லும் மனது!

தன் வேரடியின் மீது
தடம் பதித்த பேருந்தின் கூரையில்
கிளை உதறிய மலராய்
இன்னொரு வேரடி தேடி நீள்கிறது பயணம்.

முன்பு நான் எழுதிய ஒரு கவிதையின் அடுக்கக வரிகளுக்குப் பொருத்தமாய் பொருளாதாரத்திற்காக வேலை செய்ய வந்தடைந்த சிங்கப்பூரை விட்டு நாளை (24-04-2016) கிளம்புகிறேன். இப்படிக் கிளம்புவது இரண்டாவது முறை. புலம் பெயர் வாழ்வில் ஊர் எல்லைகள் தாண்டிய நட்பு வாய்க்கும். கொடுப்பினை இருந்தால் அது தொடரும். எனக்கு அப்படியான கொடுப்பினை அதிகம். அதனாலயே தேசம் கடந்து திரியும் நண்பர்களிடம் நேரடித் தொடர்புகள் இல்லாத போதும் நண்பர்கள் சூழ் உலகில் ஒரு ஒளிக்கற்றையாய் இன்றளவும் என்னால் பயணித்துக் கொண்டிருக்க முடிகிறது.

பொருளாதாரம் தேடி முதன் முதலில் அமீரகத்திற்குச் சென்றேன். தடுக்கி விழுந்தால் யாரோ ஒரு சொந்தக்காரரின் மீது விழ வேண்டியிருக்கும் என்று சொல்லும் படியாக உறவுகள் சூழ்ந்திருந்தாலும் நண்பர்கள் சூழவே அந்த வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொண்டேன். அங்கிருந்து தான் என் எழுத்து தன் கிளைகளை மெல்ல விரிக்கத் தொடங்கியது, முதல் நான்கு புத்தகங்களை அந்த மண்ணிலிருந்து கொடுத்தேன். வாழ்வியல் சிக்கல்கள் அங்கிருந்து வெளியேற வைத்த போது அது இன்னொரு புலம் பெயர்வுக்கான தொடக்கமாக இருக்கும் என நினைக்கவில்லை. ஆனால் விதி வலியது என்பதைப் போல அப்படித்தான் இருந்தது!

பிழைப்பிற்காகச் சிங்கப்பூரை நோக்கி நகர்ந்தவன் இங்கும் நண்பர்கள் சூழ் உலகையே எனக்காகக் கட்டமைத்தேன். இங்கு அமைந்த நண்பர்கள் எழுத்து சார்ந்து இயங்குபவர்களாக அமைந்ததும், தமிழ் ஒரு மொழியாக இருந்ததும், களமாட களங்கள் விரிந்து கிடந்ததும் உறங்கிக் கிடந்த எழுத்தாசைக்குத் தீனி போட ஆரம்பித்தது. வேலையிடத்தில் எனக்கு உயரதிகாரிகளாக இருந்தவர்கள், என்னோடு இணைந்து பணி செய்ய வேண்டியவர்கள், சக பணியாளர்களாய் இருந்த நண்பர்கள் அனைவருமே எனக்கான நேரத்தை என்னிடமே இருக்கும் படியாகப் பார்த்துக் கொண்டனர். நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் இருந்தவர்கள் எனக்குத் தந்த முழுச் சுதந்திரம் நேரம் வாய்க்கும் போதெல்லாம் எழுதிப் பார்க்க வைத்தது. அதன் விளைவு படைப்புகளின் எண்ணிக்கையும், நூல்களின் எண்ணிக்கையும் பெருகியது, இந்தக் காலகட்டத்தில் மட்டுமே ஏறக்குறைய இருபத்தைந்து நூல்களை எழுத முடிந்திருந்தது.

தமிழ் அமைப்புகளில் பங்கெடுப்பதைக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் துவங்கி இருந்தேன். ஒரு புதியவனாய் ஒவ்வொரு அமைப்பிற்குள்ளும் நுழையும் போதெல்லாம் அங்கு கிடைத்த நண்பர்கள் கொடுத்த உரிமையும், உற்சாகமும் தொடர்ந்து எழுத்தின் வழிச் செயல்பட உதவியது. பத்திரிக்கைகள், ஊடகங்கள் சார்ந்து இயங்கிய நண்பர்கள் என் படைப்புகளைப் பிரசுரித்து நான் அறியாத நண்பர்களுக்கும் என்னைக் கொண்டு சேர்த்தார்கள். சிங்கப்பூரில் தமிழ் சார்ந்து இயங்கும் எல்லா அமைப்புகளிலும், வெளிவரும் எல்லா அச்சு இதழ்களிலும் என் படைப்புகளால் பங்களித்திருக்கிறேன் என்றால் அதற்கு முழுக்க, முழுக்க நண்பர்கள் மட்டுமே காரணமாக இருந்தார்கள்.

அந்நிய மண்ணில் வேலை செய்பவர்கள் தங்களின் வேலை அனுமதியை நீட்டிக்காமல் தாயகம் செல்லும் போதெல்லாம் ”அடுத்து என்ன?” என்ற கேள்வியை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். அமீரகத்தை விட்டுத் தாய் மண்ணை நோக்கி நான்  கிளம்பிய போதும் இந்தக் கேள்வியை எதிர் கொண்டேன், அப்பொழுது இருந்த தெளிவின்மை இப்பொழுது இல்லை என்றாலும் நினைத்தது நடப்பதில்லை. நடப்பதற்காக நினைக்கவும் முடியாது!

”வாழ்க்கை அதன் போக்கில் மட்டுமே நம்மைத் தீர்மானிக்க வைக்கிறது” என்று என் கல்லூரிப் பேராசிரியர் சொன்னதை நினைவூட்டும் விதமாக இந்தப் புலம் பெயர் முடிவு இன்னொரு புலம் பெயரலுக்கான ஆரம்பமா? எனத் தெரியவில்லை. எழுத்து ஒன்றை மட்டுமே விசிட்டிங் கார்டாக வைத்துக் கொண்டு அறிமுகமாகி இன்று உரிமையோடு எதையும் விவாதிக்கும் நண்பர்களாக மாறிப் போனவர்களிடமிருந்து இப்போதைக்கு நினைவுகளை ஏந்திச் செல்லும் மனதோடு எனக்கான நிறுத்தத்தில் இறங்குகிறேன், 

Thursday, 21 April 2016

Tuesday, 19 April 2016

மாலனும் - நாங்களும்

புத்தகங்களில், வார இதழ்களில், நாளிதழ்களில், நேர்காணல்களில் அறிந்திருந்த மாலன் அவர்களின் பேச்சை நேரில் கேட்கும் வாய்ப்பு சனிக்கிழமை (16-04-2016) கிடைத்தது. அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மாலன் கலந்து கொள்ளச் சிங்கப்பூர் வந்திருந்தார். அவருக்குச் சிங்கப்பூர் வருகை முதன்முறை அல்ல, ஆனால் எனக்கோ அவரின் பேச்சை நேரில் கேட்கக் கிடைத்த முதல் வாய்ப்பு! அதனால் தவறவிடக்கூடாது என நினைத்துக் கொண்டேன். நிகழ்ச்சி நடந்த உமறுப்புலவர் அரங்கில் அரங்கமே அதிரும்படியாக காலி இருக்கைகள் சூழ பதினைந்து நூல்களின் வெளியீட்டு விழாவில் இதற்கு முன் கலந்து கொண்டிருந்தேன். இம்முறை அப்படியான துர்பாக்கியம் ஏதும் நிகழ்ந்து விடாமல் அரங்கம் பார்வையாளர்களால் நிறைந்திருந்தது, பலரும் இருக்கைகள் கிடைக்காமல் நின்று கொண்டிருந்தனர், நல்ல சுவரோர படித்துறையாகப் பார்த்து நான் உட்கார்ந்து கொண்டேன். மேடைப் பேச்சுக்கான எந்த அலங்காரமுமின்றி தனக்குத் தரப்பட்டிருந்த தலைப்பை ஒட்டிய பேச்சாக மட்டுமே அவரின் பேச்சு இருந்தது, உலக இலக்கியத்தில் சிங்கப்பூர் இலக்கியத்தின் இடம் குறித்த தன் பேச்சில் சிங்கப்பூரின் இலக்கிய நகர்வை மலேசியா, இந்தியா இலக்கிய வளர்ச்சியோடு ஒப்பிட்டு ஒரு தேர்ந்த கட்டுரையாகக் கொடுத்தார். அறுபதுகளில் தொடங்கி தற்போதைய சிங்கப்பூர் இளம் படைப்பாளிகள் வரைக்குமாக அவர் முன் வைத்த செய்திகளுக்கான தேடல்கள் பிரமிக்கத் தக்கவைகளாக இருந்தன. அவருடைய உரையில் சாரங்கபாணி தொடங்கி நவீன சிங்கப்பூரின் இளம் படைப்பாளி ஹரணி வரை தன் பேச்சில் அடையாளப்படுத்தினார், அருமையான உரையை கேட்ட சனிக்கிழமைப் பொழுதின் விடுப்பட்ட சந்தோசத்தை மறுநாள் தந்தது.

Saturday, 16 April 2016

புகைப்பட ஆல்பம் - 25


நண்பர்கள் சூழ நாவல் பயிலரங்கு ஒன்றில்


நன்றி : தங்கமீன் வாசகர் வட்டம்

Thursday, 14 April 2016

தேவதைகளின் அட்டகாசம் - 4

கட்டுரையைப் பேசி முடிச்சதும் எல்லோரும் கை தட்டிப் பாராட்டுனாங்க.

வேற எதுவும் சொல்லலையா? 

பாடி லாங்வேஜ் போதலைன்னு எங்க மிஸ் சொன்னாங்க. ஆனால், எல்லாக் கிளாசிலும் பிள்ளைகள் பேசி முடிச்சப் பிறகு தான் ரிசல்ட் சொல்லுவாங்களாம்.

அப்புறம்...

பெரிய மிஸ் நல்லா பேசினேன்னு சொன்னாங்க. உங்க அப்பா என்ன பன்றாங்கன்னு கேட்டாங்க?

நீ என்ன சொன்ன? 

”ரைட்டர்”னு சொன்னேன்.

மகன் இதைச் சொன்னதும் எஸ். ராமகிருஷ்ணன் ஒருமுறை தன்னை ரைட்டர் எனச் சொல்லி அறிமுகம் செய்து கொண்ட போது கேட்டவரோ எந்த ஸ்டேசனில் எனத் திருப்பிக் கேட்டதாய் எழுதியது நினைவில் வந்து போனது. உடனே அதுக்கு பெரிய மிஸ் என்ன சொன்னாங்க? என்றேன்.

நீங்க எழுதுன புத்தகத்தை அவங்க படிச்சிருக்கேன்னு சொன்னாங்கன்னு சொன்ன பதிலில் சத்தியத்துக்குச் சோதனை வராமல் போனதேன்னு ஒரு சந்தோசம்!Sunday, 10 April 2016

தவறு நடக்க வாய்ப்பே இருக்காது ஆபிசர்!

கிராமத்தில் இருந்த ஒரு இடத்திற்கான அடங்கல் சரிபார்ப்பிற்காக கிராம நிர்வாக அலுவலரைச் சந்தித்து ஆலோசனை கேட்டேன். அவர் எல்லாவற்றையும் கணினி மயமாக்கி விட்டதால் பட்டா சிட்டாவைக் கணினியில் சரி பார்த்து அதைப் பிரதி எடுத்து தாசில்தாரிடம் ஒப்புதல் பெற்றுத் தாருங்கள், அடங்கலில் இருக்கும் தவறைச் சரி செய்து விடலாம் என்றார். என் நண்பரிடமிருந்த கணினியில் பட்டா சிட்டாவைச் சரி பார்த்து பிரதி எடுத்துக் கொண்டு போய் தாசில்தாரிடம் விபரம் கூறி ஒப்புதல் கேட்டேன். இந்தப் பிரதியை எங்கு எடுத்தீர்கள்? என்றார். சொந்தமாக கணினி இருக்கிறது. அதில் இருந்து எடுத்து வருகிறேன் என்றேன். அப்படி எடுத்து வந்தால் கையொப்பம் இட்டுத் தர முடியாது. இந்த அலுவலகத்தில் இருக்கும் கணினி மையத்தில் பணம் கட்டிப் பிரதி எடுத்து வந்தால் மட்டுமே கையொப்பம் இட்டுத் தர முடியும் என்றார். எங்கு எடுத்தாலும் இதில் உள்ளது போல் தானே வரப்போகிறது? என்றேன். அவரோநான் பிடித்த கழுதை உதைக்காதுஎனச் சொன்னதை மட்டுமே சொல்லிக் கொண்டு இருந்தார்.

Friday, 8 April 2016

முகவரிகளின் முகவரி - 2

வலைப்பதிவர் நா.முத்துநிலவன் அவர்கள் தன்னுடைய வலைப்பக்கத்தில் ஆரம்பித்து வைத்த அகல்விளக்கின் கனல் இன்று பல வலைப்பதிவர்களின் பக்கங்கள் வழியாக ஒரு தீபமாய் சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது. அறிந்த பதிவர்களை மீள் நினைவு கொணரவும், புதிய பதிவர்களை ஒருவருக்கொருவர் அறிந்து கொள்ளவும் அந்தத் தீப ஒளி பயன்பட்டு வந்தது – வருகிறது. அந்த வகையில் வலைப்பக்க எழுத்திற்குக் கத்துக்குட்டி என்ற வகையில் நான் வாசிக்கும் நண்பர்களின் வலைப்பக்கங்கள் குறித்து எழுதியதன் தொடர்ச்சியாய் முகவரிகளின் முகவரியின் இரண்டாம் பகுதி –