Sunday 30 March 2014

நிஜத்தின் நிகழ்வை நெகிழ்வாய் பரிமாறிக் கொள்ள.....

பள்ளி ஆண்டு விழாவில் டான்ஸில் சேர்ந்திருக்கிறேன் என சில தினங்களாக மகன் சொல்லிக் கொண்டிருந்தான். பெயர் கொடுத்திருப்பான்னு நினைக்கிறேன். இன்னைக்கு அவன் மிஸ்ஸிடம் கேட்கிறேன் என்று சொன்ன மனைவி மறுநாள் வருத்தமாக அவன் பெயரை மிஸ்ஸிடம் கொடுக்கவே இல்லையாம். நம்ம கிட்ட தான் சொல்லிக்கிட்டு இருந்திருக்கான். செலக்சன் லிஸ்ட் எல்லாம் முடிந்து விட்டதால் இனி ஒன்றும் செய்ய முடியாது. யாராவது விலக நேர்ந்தால் அவன் பெயரை சேர்த்து விட்டு தகவல் சொல்கிறேன் என அவன் மிஸ் சொல்லிட்டாங்க என்றாள். கூடவே, இதை அவனிடம் சொன்னா எப்படி எடுத்துக்கிடுவான்னு தெரியல. அவனுக்கு ஏமாற்றமா இருக்கப்போகுது. தவிர, அக்காவுக்கு மட்டும் டான்ஸ்க்கு சேர பணம் கொடுத்திருக்கீங்க. என்னைய மட்டும் சேர்க்கலைன்னு சொல்றீங்கன்னு சொல்லி அழப்போறான்னு வருத்தமாய் சொல்லிக் கொண்டிருந்தாள்.  

அடுத்த வருடம் முன் கூட்டியே பெயர் கொடுத்து விடலாம் என சொல்லி சமாதானப்படுத்து என மனைவியிடம் சொன்னாலும் அதை அவனிடம் அவள் எப்படி சொல்லிப் புரிய வைப்பாள்? என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.

Wednesday 26 March 2014

அன்புள்ள மணிமொழிக்கு......


(வல்லமை இணைய இதழ் அன்புள்ள மணிமொழிக்கு என்ற தலைப்பில் நடத்திய கடிதப் போட்டிக்காக எழுதப்பட்ட கடிதம்)
  
அன்புள்ள மணிமொழிக்கு அப்பா எழுதுவது.

இங்கு நான், அம்மா, தம்பி மற்றும் வீட்டில் உள்ள அனைவரும் நலம். அங்கு உன் நலத்துடன் உன் தோழிகள், ஆசிரியர்களின் நலன்களையும் அறிய ஆவல். நிற்க:       

கடந்தவாரம் நீ விடுப்பில் வந்த போது உன்னுடன் இருக்க முடியாமல் போய்விட்டது செல்லம். கம்பெனி விசயமாக அவசரமாக சென்னை செல்ல வேண்டியதாகி விட்டது. நீ ரொம்ப கோபமும், வருத்தமும் பட்டதாய் அம்மா சொன்னாள். அப்பா வேலை தான் உனக்கு தெரியுமே? அடுத்த மாதத்திலிருந்து நீ எங்களோடு தானே இருக்கப்போகிறாய். இரண்டு நாட்களுக்கு முன் உன் தோழி கோபிகாவின் அப்பா வந்திருந்தார். கோபிகாவின் திருமண பத்திரிக்கையை கொண்டு வந்திருந்தார். அதை பார்த்ததும் உனக்கும் வயது இருபத்தி நான்காகிறது என்று சொல்லி அம்மாவும் உன் கல்யாண பேச்சை ஆரம்பித்து விட்டாள்