Sunday 24 February 2013

எதார்த்தம்

தன் எச்சத்திற்குள்
ஒரு விருட்சத்தின் உயிரை
அடைத்துத் திரியும்
பறவைகள் அறிந்திருக்குமா?
தானும் ஒரு விவசாயி
என்கிற எதார்த்த உண்மையை.

நன்றி : நந்தலாலா

Friday 15 February 2013

உருமாற்றம்

கல்லை
வடிவமாக்கினான்
 
சிலையாய்

சிலையை
உருமாற்றினான்
 
தெய்வமாய்
தெய்வத்தை
குளிர்வித்தான் 
வழிபாடாய்
வழிபாட்டை
காசாக்கினான் 
வயிற்றுப்பசிக்காய்.

நன்றி : முத்துக்கமலம்

Wednesday 13 February 2013

இயலாமைக்கோர் நன்றி

உன் வருங்கால கணவனிடம்
என்னை  உன் சினேகிதனாய்
அறிமுகப்படுத்திய
அந்த நொடியில்
நன்றி கூறிக்கொண்டேன்.

உன்னை காதலித்த
உண்மையை
உன்னிடம் சொல்ல விடாமல்
ஊனமாக்கிய என் இயலாமைக்கு!

Sunday 10 February 2013

மலர்ந்து நகர்தல்

நட்பில் நகரும்
நகர வாழ்க்கை

உறவில் மலரும்
கிராம வாழ்க்கை
உலர்ந்தும் உலராத
ஊன வாழ்க்கையில்

சிலருக்கு மட்டுமே
சாத்தியமாகிறது
மலர்ந்து நகர்தல்.

Saturday 2 February 2013

குறிப்பேட்டின் குறிப்புகள்

அதிர்வுதரும் கணம் அசாத்தியமாய்
தலையை உள்ளிழுக்கும் ஆமையாய்
உன் விருப்பத்தை
தன்னில் வலுவானதை தடம் மாறாது
இருப்பிடம் சேர்க்கும் எறும்பாய்
உன் சூதனத்தை
கடைசிப் புணர்வை பகலிடம் பகிர்ந்து
இரவை பிரசவிக்கும் அந்த நிமிடமாய்
உன் கோபத்தை
சாவுச்செய்தியோடு வாசல் தட்டி
தலை கவிழ்ந்து நிற்கும் வெட்டியானாய்
உன் மறுப்பை
நசிந்து கிடந்தேனும் பூரான்காலாய் விரவி
செடியை உயர்த்தி நிறுத்தும் வேர்களென
உன் ஆசையை
அடக்க முடியா வேட்கைக்குப் பின்
வீசியெறியப்பட்ட சதைத்துண்டாய்
உன் சந்தோசத்தை
பதிந்து வைத்திருக்கும் அதே குறிப்பேடு
தன் கடைசிப் பக்கத்தில்
குறித்து வைத்திருக்கிறது

நீயும்,நானும்
நிரந்தரமாய் விலகிச் செல்வதற்காய்
சந்திக்க வேண்டிய தினத்தையும்.

நன்றி : அதீதம்

Friday 1 February 2013

உபதேசம்

தன்னை இழந்தும்
தன்னையே எரித்தும்
விளக்கிற்கு ஒளி பாய்ச்சுகிறது
எண்ணெய்யும் திரியும்.
ஆனாலும் 
உபதேசிக்கின்றோம்
ஒளி தரும் விளக்காய் இரு என்று!

நன்றி : முத்துக்கமலம்