Friday, 11 November 2016

படிப்பில் இருந்து வாசிப்பிற்கு

ஆங்கிலத்தில் ரீடிங் (READING) என்ற ஒரு சொல்லைத் தமிழில் பயன்பாட்டு நோக்கில் ”படித்தல்”, ”வாசித்தல்” என்ற இரு சொற்களாகப் பயன்படுத்துகிறோம். இவ்விரு சொற்களும் மிக நுட்பமான வேறுபாடுகளைத் தனக்குள் பொதிந்து வைத்திருக்கின்றது. இதை உணராமலே பயன்படுத்திக் கொண்டிருக்கும் அதேநேரம் இவ்விரண்டிற்குமான  வித்தியாசத்தை அறிவது வாசிப்பு நிலையில் இருப்பவர்களுக்கு  மிகவும் அவசியம்.  

படிப்பதை எல்லோராலும் எந்த மெனக்கெடலுமின்றி செய்து விட முடியும். அதற்கு இருப்பதை அப்படியே ஏற்றுச் செல்வதற்குரிய அளவில் மொழி அறிவு இருந்தால் போதும். படிக்கும் போது அதில் முரண் கொள்ள, வாதிட எந்த வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் இல்லை, அப்படியே இருந்தாலும் அதைச் செய்ய முடியாது. பாடப்புத்தகங்கள், “எப்படி” என்ற வழிகாட்டல்களைத் தரும் புத்தகங்கள் உள்ளிட்டவைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், ஒரு படைப்பிலக்கியத்தை பாடப்புத்தகங்கள், பாட்டுப் புத்தகங்களை படிப்பதைப் போல அணுக முடியாது, காரணம் அது வாசகனுக்குக் கட்டற்ற சுதந்திரத்தைக் கொடுக்கிறது. தன் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கிறது. அதனால் தான்  ஒரு படைப்பை அப்படியே ஏற்று ஒரு வாசகன் கொண்டாடும் போது இன்னொரு வாசகனுக்கு அது முரணாக எழுந்து நிற்கிறது.
”ஒரு புத்தகத்தை இருவரால் ஒரே மாதிரி வாசிக்க முடியாது. அப்படி வாசித்து விட்டால் புதிய வரலாறே பிறக்கிறது” என்கிறார் ஜிப்ரில். இப்படியான மாறுப்பட்ட எழுச்சியை வாசகனுக்குள் கிளர்த்தக் கூடிய வலிமை இருப்பதாலயே படைப்பிலக்கியத்திற்குள் நுழையும் போதே ”படிப்பு” என்பது ”வாசிப்பு” என்ற நிலைக்கு வந்து விடுகிறது.  இந்த நுட்பத்தை வெளிப்படுத்தும் முகமாகவே படைப்பிலக்கியம் சாராத நாளிதழ் போன்றவைகளை வாசித்துக் கொண்டிருப்பவரைப் பார்க்கும் போது அனிச்சையாகவே பேப்பர் வாசிக்கிறீர்களா? எனக் கேட்காமால் பேப்பர் படிக்கிறீர்களா? எனக் கேட்கிறோம்.

படிப்பைப் போல வாசிப்பை வலிந்த மூர்க்கத்தனமான நிகழ்வின் வழி நிகழ்த்த முடியாது. அது தன்னிச்சையாக நிகழ வேண்டிய விசயம். இந்த இயல்பைக் கட்டுடைக்க எத்தனிக்கும் போது வாசிப்பின் மீது ஒருவித சலிப்பும், அயர்ச்சியுமே மிஞ்சும். புறக்கணித்து விட்டுப் பயணிக்கவே மனம் எத்தனிக்கும். இதன் காரணமாகவே வாசிப்பிற்குச் சூழலும், மனநிலையும் முக்கியம் என அறிவுறுத்துகின்றனர். ஒர் ஆரம்ப கட்ட வாசிப்பாளன் எத்தகைய நூல்களை தன் முதல் வாசிப்பிற்கு எடுத்துக் கொள்ளலாம் என ஆளுமைகள் ஆலோசனைகள் தருகின்றனர்.

மிகத் தீவிர, தேர்ந்த வாசிப்பனுவம் கொண்டவர்களுக்கு மட்டுமே சாத்தியமான ”ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன்” என்ற சொல்லை இன்று சர்வ சாதாரணமாகப் பலரும் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். இப்படிச் சொல்லிக் கொள்வது  ஒரு பேஷனாகி (FASHION) வருகிறது. உண்மையில் இப்படியான வாசிப்போடு பகிரப்படும் கருத்துகளும், எழுதப்படும் விமர்சனங்களும் சம்பந்தப்பட்ட படைப்பை இன்னும் சிலருக்கு அறிய வைக்க வேண்டுமானால் உதவுமே ஒழிய படைப்பின் மீது ஆக்கப்பூர்வமான விவாதத்தை உருவாக்க ஒருநாளும் உதவாது. நுனிப்புல் மேய்ந்து செல்வதை வாசிப்பாகக் கொள்ளாமல் படைப்பை உள்வாங்கி அது தனக்குள் கிளர்த்தியதின் வழி ஏற்றும், முரண்பட்டும் நின்று அதன் பிறகு அந்தப் படைப்பு குறித்துப் பேசுபவனே நல்ல வாசிப்பாளனாகவும், அவன் மூலம் வரும் விமர்சனமே ஏற்கத்தக்கதாகவும் இருக்கும். இருக்க முடியும். அப்படியான வாசிப்பே நல்ல வாசிப்பனுபவத்தையும் அதன் ஊடாகப் புதிய தேடல்களையும் தரும். இவை எதையும் தராத ஒன்றைச் செய்து விட்டு வாசிப்பதாக நினைத்துக் கொள்கிறோம். இப்படி நினைப்பதும் முகநூலில் எழுதப்படும் தூள், சூப்பர், அற்புதம், அருமை, டக்கர் என்ற பின்னூட்டங்களும் ஏறக்குறைய ஒன்றே எனலாம்.

அச்சிடப்பட்ட எழுத்துக்களை அப்படியே மனதளவில் கடந்து செல்வதற்குப் பெயர் வாசிப்பல்ல. துரதிருஷ்டவசமாக அப்படிக் கடந்து போவதையே வாசிப்பு என நினைத்துக் கொண்டு அதையே செய்து கொண்டும் இருக்கின்றோம். அதனால் தான் அவ்வப்போது படைப்பிலக்கியங்களை வாசிக்கின்ற ஒருவனின் மனநிலையையும், பார்வைக் கோணங்களையும் நாள்தவறாது நாளிதழ்கள் வாசிக்கும் ஒருவனால் பெற முடிவதில்லை, வாசிப்பு நம்மை நாமே சுத்திகரித்துக் கொள்ள உதவுகிறது. ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு இட்டுச் செல்கிறது. அப்படி இட்டுச் செல்வதன் வழி நம்மை உடைத்து மறுகட்டுமானம் செய்கிறது. அவநம்பிக்கையோடு  துவங்கும் நடையை நம்பிக்கையோடு கூடிய ஓட்டமாக மாற்றித் தருகிறது. அறுதியிட்ட கற்பனா சக்தியின் வழியாக இழந்த காலத்தை எதிர்காலத்தில் மீட்டெடுக்கச் செய்கிறது. இவையெல்லாம் வாசிப்பின் பலம். வாசிப்பால் மட்டுமே அதைச் செய்ய முடியும் என்பதாலயே வாசிப்பு இயக்கங்களை அரசாங்கங்கள் ஊக்குவிக்கின்றன.

எழுத்துக்களின் வழியாக பின்னப்பட்டிருக்கும் நாம் அறிந்த – அறிந்திராத உலகத்திற்குள், மாந்தர்களுக்குள், வாழ்வியலுக்குள் நம்மை நுழைத்துக் கொள்ளும் வாசலாக இருக்கும் வாசிப்பை படிப்பின் வழியாக ஒருநாளும் பெற முடியாது. உணர்ந்தும், கலந்தும், காட்சிப்படுத்தியும், முரண்பட்டும், சிலாகித்தும் பயணிக்க வேண்டிய ஒரு வாசிப்பனுபவத்தை எழுத்துக்களுடன் நிகழ்த்தும் வெறும் உரையாடல்கள் வழியாகப் பெற முடியாது. வாசிப்பை அத்தனை எளிதான விசயமாக நினைத்துக் கொண்டதன் விளைவு வாசிப்பவர்களை விட எழுதுபவர்களின் எண்ணிக்கை இன்று அதிகமாகி விட்டதைப் போல எழுத்தை விடவும் அதிக உழைப்பைக் கோருவது வாசிப்பு என்ற எதார்த்த நிலையால் வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து விட்டது.

வாசிப்பின் வழியாக மட்டுமே படைப்பாளியாக உருவாக முடியும் என்பதாலயே இளம் மற்றும் ஆரம்ப காலப் படைப்பாளிகளுக்குத் தரப்படும் பல அறிவுரைகளில் அச்சரம் பிசகாமல் ”நிறைய வாசியுங்கள்” என்ற அறிவுரை நிச்சயம் இருக்கும். சமீபத்தில் புதிய எழுத்தாளர்களுக்கென நடந்த பயிலரங்கில் நாவல் என்ற படைப்பிலக்கியத்தை வாசிப்பின் வழியாக அணுகக் கூடிய முறை குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினேன். ”வாசிப்பதற்கு என்ன வழிமுறை வேண்டியிருக்கு”? என்ற தொனியிலேயே பலரும் எதிர் கேள்வியைக் கேட்டனர். ”புத்தகத்தைப் பிரித்து வாசிக்க வேண்டியது தானே” என்பதாகவே அவர்களின் பதில்கள் இருந்தது. உண்மையில் இது ஆரோக்கியமற்ற வாசிப்பின் அறிகுறி எனலாம். வெறுமனே நிறைய வாசியுங்கள் என்று சொல்வதை விடவும் எப்படி வாசிப்பின் வழியாக ஒரு படைப்பை அணுக வேண்டும்? என்று சொல்லித் தருவது முக்கியம். வாசிப்பின் வழி நாம் எதை எல்லாம் கண்டடைய முடியும்? எதையெல்லாம் கண்டடையத் தவறுகிறோம்? என்பதைச் சுட்டிக்காட்டி அதை எப்படி கைக் கொள்ளலாம் என்பதைக் கற்றுத் தரும் வழிமுறைகளின்றி வெறுமனே வாசித்தால் போதுமென்பது சிறந்த வாசிப்பாளனாய் ஆக்கிக் கொள்ள ஒரு நாளும் உதவாது.

இப்படித் தான் படிக்க வேண்டும் என்று சொல்வதைப் போல இப்படித் தான் வாசிக்க வேண்டும் என்று எந்த வரைமுறைகளையும் யாரும் எவருக்கும் சொல்ல முடியாது. அதை வாசகனின் மனநிலையே முடிவு செய்கிறது. ஆனால், வாசிப்பின் போது சில விசயங்களைக் கவனத்தில் கொள்ளச் செய்வதன் மூலமாக நல்லதொரு வாசிப்பனுபவத்தைப் பெற வைக்க முடியும். அப்படிப் பெறுவது என்பது
  • வாசிப்பிற்கு முந்தைய முன் முடிபுகள் ஏதுமின்றியும் -
  • வாசகனுக்காகப் படைப்பில் இட்டு நிரப்பத் தரப்பட்ட இடங்களை கண்டறிந்து அதில் நிரப்பிக் கொண்டும் –
  • வாசிப்பிற்காகக் கூடுதல் உழைப்பைப் படைப்பு கோரும் பட்சத்தில் அதற்கான நேரத்தைக் கொடுத்தும் –
  • வாசிப்பின் வழியாக ஊடேறும் நிகழ்வுகளின், சம்பவங்களின் தாக்கங்கள் மீது அறுதியிட்ட வகையில் இல்லாமல் ஒட்டு மொத்த பார்வையைச் செலுத்தியும் -   
  • வாசித்துச் செல்லும் போதே முரண்பட்டு நிற்காமல் வாசிப்பிற்குப் பிந்தைய மனநிலையில் அந்த முரண்பாடுகளின் மீது உள்முகமாக மீள் உரையாடல்களை நிகழ்த்தியும் –
  • ஒப்பீட்டளவில் இல்லாமல் தனித்தன்மை உணர்ந்தும், ஈடுபாட்டோடும் - 

வாசிப்பை முன் நகர்த்திச் சென்றால் மட்டுமே சாத்தியமாகும். ஆரம்பக்கட்டத்தில் இது கொஞ்சம் சிக்கலான விசயமாகத் தெரியலாம். மனம் உடன்படாமல் முரண்டு பிடிக்கலாம். ஆனால் அதைக் கைவரப் பெற்று விட்டால் அதன் பின் வாசிப்பு உங்களை தனக்குள் இருத்தி வைத்துக் கொள்ள ஆரம்பித்து விடும். இந்த நிலையில் தான் தன்னுடைய கற்றலின் வழியாகவும், வாசிப்பனுபவத்தின் துணையோடும் வாசிப்பாளனாக இருப்பவன் எழுத்தாளன் என்ற புதியதொரு பரிணாமத்தை எடுக்க ஆரம்பிக்கிறான். அதன் தொடர்ச்சியாக வாசிப்பு – எழுத்து என்ற சக்கரம் அவனுக்குள் நிகழ்த்தும் சுழற்சியில் தனக்குரிய இடத்தைத் தானே கண்டடைந்தும் கொள்கிறான்.

வாசிப்பின் சுவை அறியாத, வாசிப்பனுபவம் இல்லாத ஒருவரால் ஒருநாளும் சுமாரான படைப்பாளியாகக் கூட உருவாக முடியாது என்ற எதார்த்த நிலையையும் –

கற்றுக் கொடுத்தலின் மூலம் படைப்பாளிகள் உருவாக்கப்படுவதில்லை மாறாக, அவர்கள் சரியான நிலைகளில் இருந்து பயணப்பட வைக்கப்படுகிறார்கள் என்ற நிஜத்தையும் - உணர்ந்து பயணிக்கும் போது மட்டுமே சராசரி வாசகன், தேர்ந்த வாசிப்பாளனாகவும், தேர்ந்த வாசிப்பாளன் ஒரு படைப்பாளியாகவும் பரிணாமம் செய்து கொள்வது இயல்பாக நடக்கும்.. இயல்புக்கு மீறிய எதுவுமே வளர்ச்சிக்குக் கேடு என்பது விதி. அந்த விதி படைப்பிலக்கியத்திற்கும் பொருந்தும் என்றே நம்புகிறேன். 

நன்றி : தி சிராங்கூன் டைம்ஸ்