Wednesday 30 January 2013

விதையின் குணம்

(”வல்லமை இணைய இதழில்வல்லமையாளர் விருதுக்கு தேர்வான கவிதை)


பெற்றோர்களே......
வயது போனதற்காய்
நீங்கள்
உதிரமும், உணவும் தந்து
கை தூக்கிவிட்ட பிள்ளைகள்
உங்களை
கைவிட்டு விட்டதை எண்ணி வருந்தாதீர்கள்.

நீங்கள் - விருட்சம்
அவர்கள் - விதை.

விழுந்து எழுவது தானே
விதையின் குணம்.

விட்டு விடுங்கள்
எழும் போதாவது
வீரியமாய் எழட்டும்

நன்றி : வல்லமை

Wednesday 23 January 2013

பொழுதின் மீதான உறவு

மொக்கொன்று
அப்பொழுது தான்
பூத்த தருணம் போல இரவு.

இரவுடனான
அந்த நெருக்கத்தை
எந்தவொரு பகலும்
எட்டவேயில்லை என்னிடம்.

துருத்தி தெரியும் படி
தன் இயலாமைகளையும்
இல்லாமைகளையும்
வார்த்தை கத்திகளாக்கி

என் நெஞ்சில் தேக்கி
நெருடலின்றிச் சன்னமாய்
கடந்து போகிறவர்கள்
பகலில் உலவித்திரிகையில்

வஞ்சத்தை விட
பரிதாபம் மட்டுமே மிஞ்சுகிறது
எனக்கான
எல்லா பகலிடமும்.

நன்றி வல்லமை

Monday 21 January 2013

பொம்மலாட்டம்

கவிஞன் என்ற
அடையாளத்திற்காக
வளர்த்த குறுந்தாடி

பக்கத்திற்கு பக்கம்
பதிய வைக்க
அழகிய புகைப்படம்

சுயமாய் அச்சடித்து
தொகுப்பாய் கொடுக்க
தேவையான பணம்

எல்லாவற்றையும்
வசப்படுத்திய பின்பும்
ஏனோ
வசப்பட மறுக்கிறது
கவிதை மட்டும்.

நன்றி : திண்ணை

Thursday 17 January 2013

தனி ஆவர்த்தனம்

காதலைச் சொல்ல
தைரியமற்றவனின்
கவிதையாய்

காமத்தை வடிக்க
தெரியாதவனின்
ஓவியமாய்

ஏமாற்றத்தை ஏற்க
திராணியற்றவனின்
ஒப்பாரியாய்

ஏமாறியதை மறைக்க
முடியாதவனின்
ஏக்கமாய்

தனக்குத்தானே
ரசிக்கத் தெரியாதவனின்
முழு நிர்வாணமாய்

கழிப்பறைகள் எங்கும்
தனி ஆவர்த்தனம் செய்கின்றன
கரிக்குச்சிகள்.

நன்றி : பதிவுகள்

Tuesday 15 January 2013

அறையை நிரப்பிய வெறுமை

இனியேனும்
சில நல்ல பழக்கங்களை
நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற
தீர்க்க தரிசனத்தோடு
மருத்துவமனை தப்பி
வீடு வந்த தருணம்

தாதியை போல
தடுத்து நிறுத்தும்
வித்தையறியா தாரத்தால்
கையெல்லாம் பொக்கேயும்
வாயெல்லாம் அறிவுரையுமாய்
ஆக்கிரமித்தனர் பலரும்

காதுகளை
கடன் கொடுத்தவனாய்
நான் கிடக்க
தன் வாய்களை விதைத்தவர்கள்
புறம் சென்ற பின்பும்
அறை நிரம்பிய
புழுக்கத்தின் வியர்வையில்
அமிழ்ந்து கிடந்தது
வெற்று அறிவுரைகளும்
உதிர்ந்த சில பொக்கே பூக்களும்.

நன்றி கலையருவி

Friday 11 January 2013

ஆன்மிக சாண்ட்விச்


நமது இதிகாச புராணங்களுக்குள் நுழைந்தால் சுவராஸ்யத்திற்கும், சுவைக்கும் பஞ்சமே இல்லாத அளவு ஏராளமான கதைகள் கிடைக்கும். ஆசிரியர் இவற்றிலிருந்து 20 கதைகளை தேர்வு செய்து இந்த நூலில் நமக்கு வழங்கி உள்ளார். எல்லா கதைகளுக்கும் அருமையான ஓவியங்களையும் இணைத்து மிக நன்றாக வெளிக்கொணர்ந்திருக்கிறது வானவில் பதிப்பகம்.
-தினமலர்
அட்சயதிரிதியை, மார்கழிக்கோலம், சிவனாரும் நந்திதேவரும், பிரமனுக்கு வந்த பயம், ஸ்ரீஅனுமன்......என சின்ன, சின்ன விசயங்களை சுவைபடத் தந்துள்ளார் ஆசிரியர்.
-சக்தி விகடன்


Wednesday 9 January 2013

பெய்யாகும் புலம்பல்கள்



எதுவும் சாதகமாக இல்லை.
எவரும் உதவிக்கரம் நீட்டவில்லை.
விதியோ
விடாது சதிராடுகிறது
தோல்வியோ
அதன்போக்கில் விரட்டுகிறது
இப்படியானப் புலம்பல்களின்
செவியேறும் தருணங்களை
தகர்த்தெறிந்து மாயையாக்குகிறது.

மண்ணும்
நீரும்
உரமும்
எவரும் இடாமலே
கொழுக்கொம்பின்றி
உயிர் பிடித்து
பாறையிடுக்கில்
எழுந்து நிற்கும் அந்த சின்ன செடி!

நன்றி : காற்றுவெளி 

Tuesday 1 January 2013

கவலையாக மாறும் சந்தோசம்


ஊருக்காய் ஒன்றுகூடி 
பிள்ளையாரை களவெடுத்து வந்து 
பிரதிருஷ்டை செய்த சந்தோசத்தை 
கவலையாக மாற்றிக் கொண்டிருக்கிறது…. 

அடுத்த ஊரில் 
பிள்ளையாருக்கு கோயில் கட்டும் சேதி

நன்றி : வார்ப்பு

தவறிப்போன இளமை

ஓரடுக்கில்
இரண்டு வீடுகள்
வாசலை வசீகரிக்கும்
வாகனங்கள்
கழுத்திலும் கையிலும் வருடும்
தங்கக் குழல்கள்
சேமிப்பில் உறங்கும்
காந்தித் தாள்கள்
திரைகடல் ஓடியதில்
மிச்சமாய் இவை நிற்க
எச்சம் தேடி அலைகிறது
தவறிப்போன இளமை.

நன்றி : முத்துக்கமலம்