Thursday, 31 March 2016

தேவதைகளின் அட்டகாசம் - 3

பள்ளியில் திருப்புதல் தேர்வு (MIDTERM EXAM) ஆரம்பமாகி இருந்தது. முதல் நாள் தேர்வு தமிழும், இந்தியும்! (என்னே ஒரு காம்பினேசன்). தேர்வு எழுதிவிட்டு வந்த மகளிடம் தமிழ் தேர்வு எப்படி இருந்தது? என்றேன். நல்லா எழுதி இருக்கேன். ஆனால் நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரும்னு நினைக்கிறேன் என்றவள், "டாடி..... தமிழ்ல அருஞ்சொற்பொருள் தானே ஈசி (EASE). கஷ்டமானதை எல்லாம் எழுதிட்டு ஈசியானதை எழுதாமல் விட்டுட்டு வந்திருக்கான் என மகன் தேர்வு எழுதிய விதத்தைப் பற்றிச் சொன்னாள். காரணம் தெரிந்து கொள்ளலாமே என மகனை அழைத்துக் கேட்டேன். அவனோ, ”டாடி..... இலக்கியா பிள்ளைக்கு ஈசின்னா எனக்கும் ஈசியா இருக்குமா? எல்லாமே ஈசின்னு அது சொல்லுது. எனக்குத் தெரியலைல. அதான் எழுதாமல் விட்டு விட்டேன்என்றான். அதானே...எல்லாருக்கும் அருஞ்சொற்பொருள் ஈசியா இருக்கனுமா என்ன?


நீயும்தம்பியும் செய்ற விசயங்களுக்கெல்லாம் நான் சப்போர்ட் பண்ணிக்கிட்டே இருக்கேன்ஒருநாள் இல்ல ஒருநாள் கடுப்பாகி உங்க அம்மா எனக்குச் சோறு போடாமல் போகப் போறா பாரேன்.

டோண்ட் ஒரி டாடி…..நான் சோறு போடுகிறேன்


”அட்வான்ஸ் ஹேப்பி வாலண்டைன்ஸ் டே” டாடி.
எனக்கு நீ என்ன வாங்கித் தரப் போற?
அம்மாவுக்கு நீங்க முதலில் ஏதாவது வாங்கிக் குடுங்க”!
குட்நைட்”.


அப்பாவை உங்களுக்குத் தந்துடுறேன்
எவ்வளவுக்கு?
ஃப்ரியாவே தாரேன்வச்சுக்கங்க.


பள்ளியில் இருந்து திரும்பிய மகள் சாப்பிட்டுக் கொண்டே அலைபேசியில் பேசினாள். ஒன்னு சாப்பிடு, இல்லை பேசு என்றேன். மனைவி சொன்னாள் அவ பேசி கதையடிச்சிட்டு அப்புறம் சாப்பிட ஆரம்பிச்சா டியூசனுக்கு எப்பப் போறது? பேசிக்கிட்டே சாப்பிடட்டும் அப்பத்தான் சீக்கிரமா கிளம்புவா.....குழந்தைகள் உலகத்துக்கு வந்த சாபக்கேடு இந்த வாழ்வியல் முறை!

Wednesday, 30 March 2016

சலனக்கிரீடம்


மாறுபட்ட சந்தர்ப்பங்களில், மனநிலைகளில், தாக்கங்களில், வாழ்வியல் நெருக்கடிகளில் என்னைச் சலனப்படுத்திய விசயங்களே கவிதைகளாக இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இக்கவிதைகள் எனக்கு மட்டுமேயான அனுபவங்களாக இல்லாமல் இருப்பதும்,  உங்களின் அனுபவங்களை இந்தக் கவிதைகளின் வழியாக நீங்களும் நீட்டிப் பார்க்க முடியும் என்பதும் இத்தொகுப்பின் பலம் என நினைக்கிறேன். 

இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கவிதைகள் அனைத்தும் பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் வெளியானவைகள். 


இங்கே சொடுக்கி நூலைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Monday, 28 March 2016

ஆட்டத்தை ஆரம்பியுங்கள்!

நாம் ஒவ்வொருவருமே மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என விரும்புகிறோம். வெற்றியாளராக வலம் வர ஆசைப்படுகிறோம். இவ்விரண்டுமோ அல்லது இவ்விரண்டில் ஒன்றோ நிகழ வேண்டுமானால் அதற்கு “இலக்கு” என்ற ஒன்று அவசியம் வேண்டும். அந்த ஒன்றை நோக்கி செயல் படுகின்ற போது தான் வெற்று வாழ்க்கை வெற்றி வாழ்க்கையாக மாறுகின்றது. “இலட்சியத்துக்காக பாடுபடாத வாழ்க்கை ஒரு வாழ்க்கை அல்ல” என்கிறார் மாஜினி.

இலக்கு குறித்து நம்மில் பலருக்கும் ஒரு தெளிவு இருப்பதில்லை. அது ஏதோ தனிப்பட்டவர்களுக்கும், ஆசீர்வதிக்கப்பட்டவர்களுக்கும் உரியதாய் எண்ணிக் கொள்கின்றனர். விண்ணில் ஏவுகணை ஏவுவதும், புதிய கண்டுபிடிப்புகளை செய்வதும், தன் ஆற்றலுக்கும், திறமைக்கும் மீறிய விசயங்களைச் செய்து காட்டுவதும் மட்டுமே இலக்கு என வரையறையற்ற இலக்குகளை குறிப்பிட்ட வரையறைகளுக்குள் வைக்கப் பழகி விட்டதன் விளைவாக நாம் வாழும் வாழ்க்கையை மிகச் சாதாரணமானதாகவும், மகிழ்ச்சியற்றதாகவும் ஆக்கிக் கொள்கின்றோம்.

Sunday, 27 March 2016

விரியும் வனம்

வாசிப்பு எதைத் தரும்? எனக் கேட்டால் அதற்கு அறுதியிட்ட பதிலைச் சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்குள்ளும் அது கிளர்த்தும் விசயங்கள் ஒவ்வொரு விதமாய் இருக்கும். அப்படி பல்வேறு காலகட்டங்களில் நான் வாசித்த நூல்கள் எனக்குள் கிளர்த்திய எண்ணங்களே இத்தொகுப்பில் கட்டுரைகளாக இடம் பெற்றுள்ளன. 

பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இக்கட்டுரைகள் வெளிவந்திருந்த போதும் சம்பந்தப்பட்ட நூல்களை இன்னும் சிலருக்குக் கொண்டு செலுத்த வேண்டும் என்பதே மின்னூலாக்கம் செய்வதற்கான தூண்டுதலாக அமைந்தது.


இங்கே சொடுக்கி நூலைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Friday, 25 March 2016

எப்பொழுதும்!

உன் மெளனத்தால்
என் சப்தங்களைத் தூண்டுகிறாய்.
என் சப்தங்களோ
உன் மெளனத்தை
துண்டாட முனைகின்றன.
தூண்டலுக்கும், துண்டாடலுக்குமான
முடிவற்ற முரண்களோடு
அச்ச உணர்வற்று நகரும்
உனக்கும், எனக்குமான
நம் பொழுதுகள்
எப்பொழுதும் ஒழித்து வைத்திருக்கிறது
நாம் சேர்ந்திருப்பதற்கான
ஏதோ ஒரு சூட்சுமத்தை!

நன்றி : கல்கி வார இதழ்

Monday, 21 March 2016

Please do something……. save me


Ur Abi teach Karate to me. Force to me to learn……Please do something….save me இப்படியான குறுஞ்செய்திகள் வழக்கமாக மகளிடமிருந்து வரும். நேற்று மனைவியிடமிருந்து வந்தது.

ஆரம்பிச்சுட்டானா? என நினைத்துக் கொண்டு மகனை அழைத்து ”டே….இப்ப இலக்கியா பிள்ளைய விட்டுட்டு உங்க அம்மாவ வம்புக்கு இழுத்துக்கிட்டு இருக்கியா? எனக்கு SMS அனுப்பி இருக்கா” என்றேன்.

வம்பெல்லாம் இழுக்கல டாடி…கராத்தேக்கு தான் வரச் சொன்னேன்.

இனிமே அவ கராத்தே கத்துக்கிட்டு என்னடா செய்யப் போறா? அவதான் வரலைன்னு சொல்றால.

நான் எனக்காக மட்டும் கூப்பிடல டாடி. அம்மாவுக்கும் சேர்த்து தான்

அம்மாவுக்கும் சேர்த்தா?

ஆமாம். நான் கராத்தே சொல்லிக் கொடுக்கும் போது எனக்கு ஸ்டெப்ஸ் எல்லாம் ஞாபகம் வந்துடும். அதேமாதிரி அம்மா கத்துக்கும் போது இப்ப குண்டா இருக்கிற மாதிரி இல்லாம ஒல்லியா ஆகிடுவாங்க. அதுனால தான் கராத்தே சொல்லித் தாரேன்னு கூப்பிட்டேன். நீங்க எனக்கிட்ட கராத்தேக்கு டெய்லி வரச் சொல்லி அம்மாக்கிட்ட சொல்லுங்க.

அவன் சொல்றதும் சரியா தானே இருக்கு என்று மனைவியிடம். சொன்னதற்கு அப்பாவுக்கும், மகனுக்கும் என்னைய ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கனும். உனக்கிட்ட சொன்னேன் பாரு என்றாள் கோபமாக. இப்படியெல்லாமா சிக்கல் வரணும்?

Friday, 18 March 2016

கவிதை பிறந்த கணம்

இணைய இதழ்களில் எழுதத் தொடங்கிய பின் புதிய, புதிய இணைய இதழ்களைத் தேடுவதும், வாசிப்பதும் வழக்கமாகிப் போனது. அப்படியான சந்தர்ப்பம் ஒன்றில் கவிஞர். ரியாஸ் குரானா அவர்களின் முகநூல் பக்கம் வழியாக “பதாகை” இதழ் பற்றி அறிந்தேன். இதழை வாசிக்க, வாசிக்க வாசிப்பின் வழி நான் அறிந்திடாத பக்கங்களை அறிந்து கொள்ள முடிந்தது. வாசிப்பின் வழியாகப் பயணிக்க வேண்டிய திசைகளையும் எனக்கு மெலிதாய் சுட்டியது. ஆளுமைகள் குறித்தான அதன் சிறப்பிதழ்கள் அவர்கள் குறித்து இன்னும் அறிந்து கொள்ள உதவின, ஒரு படைப்பாளியாய் நானும் அந்த இதழில் பங்கு கொள்ள முயன்றதில் வழக்கம் போல தோல்விகளே மிஞ்சியது. இந்த வருடம்  ஒரு கவிதை வழியே அந்த முயற்சி வெற்றி பெற்றது, ஒரு சிக்கலான மனநிலையில் எழுந்த மன உணர்வை கவிதையாக்கி அனுப்பிய பின் இதழில் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. இந்தக் கவிதை எழுந்த சூழலைத் தர முடியுமா? என்று கேட்டிருந்தார்கள். இதழுக்கு எழுதி அனுப்பினேன். அதுவும் கவிதையோடு பிரசுரமானது, கவிதையைப் புரிந்து கொள்ள பலருக்கும் உதவிய அந்தச் சூழல் -
புலம் பெயர்ந்து வேலைக்காகச் செல்லும் வாழ்க்கை  என்பது மாயக் கூண்டுக்குள் நுழைவது மாதிரி. ஒரு வருடமோ இரண்டு வருடமோ மட்டும் அந்த வாழ்க்கையை வாழ்ந்து கொஞ்சம் சம்பாதித்து வந்து ஊரில் குடும்பத்தோடு இருந்து விட வேண்டும் என்றும், தான் செய்ய நினைத்ததைச் செய்து விட வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டு விமானம் ஏறுபவர்கள் அதன் பின் தன் வாழ்நாளின் பாதியை அப்படியான வாழ்க்கை முறையிலேயே வாழ்ந்து தீர்க்க வேண்டியதாகிப் போவது மிகப் பெரிய துயரம்!

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நுனிப்புல்லாய் சில வசதிகளை அந்த வாழ்க்கை கொடுத்திருப்பதாய் தெரிந்தாலும் இளமையின் பெரும்பகுதியைத் தொலைத்து விட்ட சூழலில் வேலை இல்லை என தான் வேலை செய்யும் நிறுவனங்களால் திடுமென அவர்கள் ஊருக்குத் திருப்பி அனுப்பப்படும் சூழலில் அவர்கள் படும் மனவேதனையும், மனக்குழப்பங்களும் சொல்லி மாளாதவைகள்!

Tuesday, 15 March 2016

ஒரு சராசரி குடிமகனின் கவலை!

மல்லையா அரசாங்கத்திற்கும், வங்கிகளுக்கும் வைத்த ஆப்பை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் வங்கிகள் சார்ந்து ஏதாவது ஒரு அனுபவம் கட்டாயம் இருக்கும். அப்படியான ஒரு அனுபவம் எனக்கும் உண்டு.

நண்பன் ஆவின் பால் ஏஜெண்ட் எடுத்திருந்தான். அது சார்ந்த விரிவாக்கத்திற்காகவும், சுய தொழில் ஒன்றை ஆரம்பிக்கும் நோக்கத்துடனும் சில வருடங்களுக்கு முன் அவனும், நானும் எங்கள் ஊரில் இருந்த ஒரு அரசாங்க வங்கிக் கிளையை அணுகினோம். இதற்கு முன் அதே வங்கியில் சில சுயதொழில் திட்டங்களின் கீழ் அவன் கடன் (லோன்) வாங்கி முறையாகச் செலுத்தி இருந்தான். எங்கள் இருவருக்குமே அந்த வங்கியில் சேமிப்புக் கணக்கும் இருக்கிறது. இருவருக்கும் வேறு எந்த வங்கிகளிலும், கடன் நிறுவனங்களிடமும் லோன் நிலுவைகள் இல்லை. தவிர, இருவரும் பட்டதாரிகள் என்பதால் எங்களின் கல்லூரிச் சான்றிதழ்கள், எங்கள் இருவர் பெயரிலும் இருந்த L.I.C.பத்திரங்கள் ஆகியவைகளை ஈடாகத் தருகிறோம், (L.I.C.பத்திரங்களுக்கான பிரிமியத்தை தவணைத் தேதி தாண்டாமல் கட்டிவந்திருந்தோம். அதில் லோன் எடுக்குமளவுக்குப் பிரிமியம் செலுத்தி இருந்த போதும் லோன் எதுவும் எடுத்திருக்கவில்லை) என்று விரிவான எங்கள் தரப்புச்

Saturday, 12 March 2016

ஆயுதமற்ற ஆயுதம்!

ஒரு கருத்தை, செயலாக்கத்தை, படைப்பை, நபரை அல்லது அமைப்பை மதிப்பீடு செய்து முன் வைக்கும் கருத்துக்களுக்கு ”விமர்சனம்” என்று விக்கிப்பீடியா விளக்கம் தருகிறது.  இந்த மதிப்பீடுகளின் வழி வைக்கப்பட்ட, வைக்கப்படும் விமர்சனங்களில் பெரும்பாலானவை இன்று விமர்சனங்களுக்குரியதாகி விட்டது!

மனித குலம் தோன்றிய காலம் தொட்டே விமர்சனங்களும் தழைக்கத் துவங்கின. அதன் கட்டமைவிற்குள் தன்னுடைய வாழ்வியல் செயல்பாடுகளை உட்படுத்திச் சுய மதிப்பீடு, சுய பரிசோதனை என்று செய்து பார்த்த மனித மனம் அத்தகைய உட்படுத்தல்களைப் பொது வெளிக்குத் தந்த போது எழுந்த விமர்சனங்களின் வீரியம் மிதமாகத் தொடங்கி காலத்தின் சக்கர ஓட்டங்களுக்கேற்ப பல்வேறு கோர வடிவங்களாக  உருமாற ஆரம்பித்தன.

Friday, 11 March 2016

முகவரிகளின் முகவரி - 1


இணைய இதழ்கள், மின்னூல்கள் வாசிப்பிற்காக இணையப் பக்கங்களில் உலாவித் திரியும் சமயங்களில் எஸ். ராமகிருஷ்ணன், மாலன், ஜெயமோகன், சாரு நிவேதிதா, மாமல்லன், பா.ராகவன், சமஸ் ஆகியோரின் பக்கங்களிலும் பயணம் செய்வதுண்டு. நண்பர்கள் அவ்வப்போது பரிந்துரைக்கும் வலைப்பக்கங்களையும் வாசித்து வந்தேன்.  நான் எழுதியவைகளை எல்லாம் சேகரித்து வைப்பது குறித்துப் பேச்சு வந்த போது நண்பர் ஒருவர் உனக்கென்று வலைப்பக்கம் ஒன்றை  ஆரம்பித்து அதில் எல்லாவற்றையும் ஏற்றி விடு. சேமிப்பாகவும் இருக்கும். இன்னும் சிலருக்கு அதை வாசிக்கத் தந்த மாதிரியும் இருக்கும் என்றார். வலைப்பக்கங்களை முகநூல் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதாக கவிஞர்.மகுடேஸ்வரன் உள்ளிட்ட வலைப்பதிவர்கள் கருத்துகளைப் பதிவு செய்திருந்த சமயத்தில் என் எழுத்துக்களை சேமிக்கும் ஒரு தளமாகவும், ஒரு இணைய விசிட்டிங்கார்டாகவும் இருக்கட்டுமே என்ற நினைப்பில் வலைப்பக்கத்தை ஆரம்பித்தேன். அதன் தொடர்ச்சியாகப் புதிய, புதிய வலைப்பக்கங்களை வாசிக்க வாய்ப்பு ஏற்பட்டது. நா.முத்து நிலவன் அவர்கள் கடந்த வாரம் ஆரம்பித்து வைத்த வலைப்பதிவர்கள் அறிமுகம் என்ற பதிவின் தொடர்ச்சியாக நான் வாசிக்கும் வலைப்பக்கங்கள் குறித்து பகிர்ந்து கொள்கிறேன். 

Thursday, 10 March 2016

தேவதைகளின் அட்டகாசம் - 2

ஊருக்கு வாரீங்களாம்?
ஆமாம்.
சீக்கிரம் வாங்க, நிறைய வேலை இருக்கு.
எனக்கென்ன வேலை இருக்கு?
எங்களோடு விளையாட, சண்டை போட, நாம எல்லாம் ஊர் சுத்த வேணாமா?


"நான் அழைத்தால் உங்க அப்பா உடனே போனை எடுத்துடுவாங்க. எனக்குன்னு எதையும் செய்யமாட்டாங்க. ஆனால், நீ அழைத்தால் உடனே எடுக்கமாட்டாங்க. உனக்கு மட்டும் எல்லாம் செய்றாங்க" என்று தன்னிடம் அம்மா சொன்னதைச் சோதித்துப் பார்ப்பதற்காக மகள் அழைத்திருக்கிறாள். இந்த விபரம் தெரியாமல் அன்று அந்த அலைபேசி அழைப்பை உடனடியாக நான் ஏற்றதும் இந்தத் தகவலைச் சொன்னவள், “அம்மா சொல்றது உண்மையா டாடி?” என்றாள்.

ஆமான்னு சொன்னா ஒரு ஆப்பு! இல்லைன்னு சொன்னா டபுள் ஆப்பு!! அதனால் மெளனத்தை மட்டுமே பதிலாய் அவளுக்குத் தர முடிந்தது. 


அழுதா உங்களுக்குப் பிடிக்காதுன்னு சொல்லி இருக்கீங்கள்ள?
ஆமாம். அப்புறம் ஏன் நேத்து நீ அழுதியாம்?
இலக்கியா பிள்ளை ஸ்கெட்ச் பென்சில் தரலைல.
அதுக்காக அழுவியா?
அதுவா வந்துருதுல...


நேத்து இருந்த கோபம் இப்ப போயிடுச்சா? இன்னும் மிச்சம் இருக்கா?
தெரியல.
தெரியலைன்னு சொன்னா நான் எப்படி எடுத்துக்கிறது? போயிருச்சுன்னு நினைக்கிறதா? இன்னும் இருக்குன்னு நினைக்கிறதா?
அது உங்க இஷ்டம். HAVE A NICE DAY DADDY. BYE. BYE.ஏன்டா அக்காவோட சண்டை போட்டுக்கிட்டே இருக்க? என மகனிடமும், அம்மாவுக்குக் கூடமாட உதவி செய்யக் கூடாதாம்மா? என மகளிடமும், ஏன்டி அம்மாவும், பிள்ளைகளுமா எப்பத் தான் உங்க பஞ்சாயத்தை நிறுத்துவீங்க? என மனைவியிடமும் கேட்காத ஒரு தினம் வேண்டும். இப்படியான வரம் கேட்டால் கடவு்ளுக்குக் கடுப்பு வராமல் இருக்குமா என்ன?!