Monday, 24 November 2014

வெற்றிக்கு ஐந்து காரணிகள்


கற்றுக்கொள்ளத் தயாராய் இருங்கள் :

எப்பவும், எதையும், எதிலிருந்தும் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால் மட்டுமே தடைகளைக் கடந்து சாதிக்கவும், வாழ்வை தன் வசப்படுத்தவும் முடியும். இதற்கென நீங்கள் அதிகமாக மெனக்கெடவோ, உங்கள் மூளையை கசக்கிப் பிழியவோ வேண்டியதில்லை. உங்களைச் சுற்றியிருக்கக் கூடியவைகளை, நிகழ்பவைகளை உற்று நோக்கினாலே போதும். ”மாணவன் தயாராய் இருக்கும் போது குரு தானே தோன்றுவார்” என்பது கற்றல் விசயத்தில் முற்றிலும் சரியல்ல. இந்த விசயத்தைப் பொறுத்தவரையில் வெவ்வேறு வடிவங்களில்., உருவங்களில், அஃறிணையாகவும், உயர்திணையாகவும் குருவானவர் உங்களைச் சுற்றிலும் இருந்து கற்பித்துக் கொண்டே இருக்கிறார். மாணவனாக நீங்கள் மாறி கற்றுக் கொள்ள வேண்டியது மட்டும் தான் பாக்கி. குழப்பமாக இருக்கிறதா? கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன்.

Sunday, 23 November 2014

புகைப்படம் - 7

சிங்கப்பூரின் தேசிய நூலக அதிகாரி புஷ்பலதா நாயுடு அவர்களிடமிருந்து பரிசு பெற்ற போது

Wednesday, 19 November 2014

”அவளு”க்கும் பெயர் இருக்கு!


நீண்ட நேரம் அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த மகனிடம் அம்மா எங்க? என்றேன். சமைக்க கறி வெட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றவனிடம்அவள்ட்ட கொடு என்றேன். ”அவள்னு ஏன் சொல்றீங்க. அம்மாவுக்கு பேர் இல்லையா? என்றான். எதிர்பாராத இந்தக் கேள்வி சற்றே தடுமாற்றத்தைத் தர சுதாரித்துக் கொண்டு அப்படிச் சொன்னா தான் அவளுக்குப் பிடிக்கும் என்றேன். அது எப்படி உங்களுக்குத் தெரியும்? என்றான். அவ எனக்கு பிரண்ட்(FRIEND). அதுனால தெரியும் என்றேன். பிரண்டுன்னா தெரியுமாக்கும். அவங்க சொன்னா தானே உங்களுக்குத் தெரியும். பிரண்டு கிட்ட கொடுன்னு சொல்லுங்க. ”அவகிட்டேன்னு சொல்லாதீங்க. இல்லைன்னா சங்கீதகலா (மனைவி பெயர்) கிட்ட கொடுன்னு சொல்லுங்க. சரியா? என்றான். சரி என சொன்னவுடன் அப்பா இனிமேல் அப்படி சொன்னா எனக்கிட்ட சொல்லுங்க என்ற படி மனைவியிடம் செல்போனை கொடுத்தான். மகனிடமிருந்து அலைபேசியை வாங்கிய மனைவி சற்றே நக்கலாக ”இன்னைக்கு செம பாடம் போலஎன்றாள். இன்று மகனிடமிருந்து வந்த இந்த எதிர்வினைஒருமையில் அழைப்பது நட்பு சார்ந்த விசயமில்லை. உரிமை சார்ந்த விசயம்” என்பதை உணர்த்தியது.

Tuesday, 18 November 2014

உல்லாசக்கப்பல் பயணம்


சுற்றுலா செல்வதற்கு ஒரு காலத்தில் சாத்தியமானதாக இருந்த கப்பல் பயணம் பொருளாதாரபலம், நேர விரய தவிர்ப்பு ஆகியவைகளால் ஆகாயவிமானங்களுக்கு மாறின. விமான பயணங்களின் மூலம் பார்க்க வேண்டிய இடங்களின் தூரங்கள் குறைந்தது போலவே அந்தப் பயணம் சார்ந்த நினைவுகளின் வாழ்நாளும் குறைந்து போயின. இந்த நிஜத்தை உணர்ந்த கப்பல் நிறுவனங்கள் தங்களுடைய உல்லாசக் கப்பல்கள் மூலம் ”க்ரூஸ்” எனப்படும் பயணங்களை அறிமுகம் செய்தன. இன்று பிரபலமான சுற்றுலா வகைகளுள் ஒன்றாக அது மாறிவிட்டது. விமான பயணச் சுற்றுலாக்கள் போல கப்பல் பயணச் சுற்றுலாக்கள் சட்டென அது சார்ந்த நினைவுகளை நீர்த்து போக வைப்பதில்லை. விரைவாக இன்னொரு மனநிலைக்கு நம்மை கடத்துவதில்லை. இன்னும் சொல்லப்போனால் பசுமரத்தாணியாய் மனதில் உறைந்து அவ்வப்போது அலைகளாய் எழுந்து கொண்டே இருக்கும். கப்பலின் பிரமாண்டம் போலவே அதில் கிடைக்கும் பிரமாண்ட வசதிகள், பல நாட்டவரோடு குறிப்பிட்ட சில தினங்கள் கலந்து குழுவாக இன்னும் சொல்லப்போனால் நவநாகரீக வசதி கொண்ட கிராமத்தில் வாழ்தல் போன்ற உணர்வு (கப்பல் சிப்பந்திகள், கலைஞர்கள் தவிர இந்த பயணநாவல் பேசும் கப்பல் பயணத்தில் 36 நாடுகளைச் சேர்ந்த 3624 பிரயாணிகள் பயணம் செய்துள்ளனர்) ஆகியவைகள் அதற்கு முக்கிய காரணம் எனலாம். இந்த காரணத்தை ஏற்க முகாந்திரம் கேட்பவர்களுக்கு அதற்கான எல்லா தரவுகளையும் தாராளமாய் அள்ளித் தருகிறது இந்த உல்லாசக் கப்பல் பயணம் நூல்.

Tuesday, 11 November 2014

இங்கிலீஸ்ல தெரியாதுல!


வேனில் தம்பி அவன் பிரண்ட்ஸ் கூட ஏதேதோ பேசிக்கிட்டே வந்தான். அவன் பிரண்ட்ஸ்களும் ஏதேதோ சொல்லிக்கிட்டு வந்தாங்க. முதல் சீட்டுல உட்கார்ந்திருந்த மேடம் (PRINCIPAL) “TALK TO ENGLISH” அப்படின்னு சொல்லவும் எதுவுமே பேசாமல் அமைதியா இருந்துட்டானுகஎன்றாள் பள்ளியில் இருந்து திரும்பிய மகள். உடனே மகனிடம் மேடம் அப்படிச் சொல்லவும் ஏன் பேசவில்லை? எனக் கேட்டேன். நாங்க பேசுற எல்லாத்துக்கும் இங்கிலீஸ்ல தெரியாதுல டாடி. தமிழ்ல தான் தெரியும். அதான் பேசல என்றான். பாடங்கள் சாராத விசயங்களைக் கூட தாய்மொழியில் பேசி மகிழ குழந்தைகளை அனுமதிக்க மறுக்கும் இத்தகைய சூழலில் தான் தாய்மொழி புழக்கத்திற்கான முன்னெடுப்புகளும் நிகழ்ந்து வருகிறது என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருந்தது. கூடவேகுழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள்என்ற கவிக்கோவின் வரிகளும், பள்ளிக்கூடத்தில் என்ன சொல்லித் தந்தார்கள்? எனக் கேட்ட தந்தையிடம் பேசாமல் இருக்கச் சொன்னார்கள் என அந்தக் குழந்தை சொன்னதாய்ஸ்கூல் - டேஞ்சர்என்ற புத்தகத்தில் படித்ததும் தான் நினைவுக்கு வந்தது.

Sunday, 9 November 2014

புகைப்படம் - 6

தங்கமீன் அமைப்பின் மாதாந்திர கலந்துரையாடல் அரங்கில்

நகைச்சுவை நானூறுஒரு மாலை நேரப் பொழுதில் நண்பராய் அறிமுகமான கீழை அ. கதிர்வேல் அவர்கள் தன்னுடைய நகைச்சுவை நானூறு நூலை என்னிடம் கொடுத்தார். நகைச்சுவையின் மூலம் வேலைப்பளுவின் அழுத்தங்களை அகற்றிக் கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கும் எனக்கு அது அற்புத பரிசாக இருந்தது. மனம் கொஞ்சம் குன்றும் போதெல்லாம் புத்துணர்வு கொடுத்துக் கொள்ள வசதியாக என் அலுவலகத்திலேயே எப்பொழுதும் வைத்திருக்கிறேன். நீங்களும் வாங்கி வைத்துக்கொள்ள பரிந்துரைக்கிறேன்.

நகைச்சுவை நானூறு என்ற பெயருக்கேற்ப நகை (புன்னகை) + சுவையால் நிரம்பி நிற்கும் இந்நூலின் எந்த ஒரு பக்கத்தில் இருந்தும் உங்களுக்கான சிரிப்பை பெற்றுக் கொள்ளமுடியும்.  நீண்ட பத்திரிக்கை அனுபவம் கொண்ட கதிர்வேல் அவர்கள் வாழ்வின் நெடிய நிகழ்வுகளை எல்லாம் நகைச்சுவையாக இந்நூலில் பிழிந்து தந்திருக்கிறார். நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு நிகழ்வும் இந்நூலில் நகைச்சுவையாய் நகர்கிறது. நம்மையும் நகர்த்துகிறது!

Monday, 3 November 2014

காரியம் சாதிக்கும் வித்தை!நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை விட செய்ததை வெற்றிகரமாக முடித்து விட்டீர்களா? என்பதில் தான் வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. இதற்கு வெறும் கல்வியறிவு இருந்தால் மட்டும் போதாது. உங்களுடைய இலட்சியத்தை நோக்கிய முயற்சியில் ஏற்படக்கூடிய சாதக, பாதக சூழ்நிலைகள், பிரச்சனைகள் போன்றவைகளை வெற்றிகரமாக கையாளக்கூடிய திறன்களும் வேண்டும். இந்த திறன்கள் எல்லாம் கல்விநிலையங்களில் கற்றுத்தரும் விசயமில்லை. அதனால் தான் அறிவாளிகளை சர்வசாதாரணமாக உருவாக்கித் தருகின்ற தலைசிறந்த கல்விநிலையங்களால் கூட ஒவ்வொரு முறையும் சில வெற்றியாளர்களைக் கூட உருவாக்கித் தர முடிவதில்லை!