Saturday 29 December 2012

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.

கடந்த ஓர் ஆண்டாக எனது மேஜையில் நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் புத்தகம் ஒன்று உண்டு. மு.கோபி சரபோஜி எழுதிய “கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி” என்ற அந்தப் புத்தகத்தை இதுவரை ஆறேழு தடவைகள் படித்தும் விட்டேன். வ.உ.சி.யின் கடைசி நாட்களை கோபி சரபோஜி அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார்.
மு.கோபி சரபோஜி ஒரு விசயத்தையும் விடவில்லை. எந்தவித தாக்கத்தாலும் பீடிக்கப்படாமல் உள்ளது உள்ளபடி வ.உ.சி..பற்றி பதிவு செய்திருக்கும் அவருக்கு எனது பாராட்டுகள். கோபி சரபோஜியின் புத்தகத்தைப் பள்ளியில் பாடமாக வைக்க வேண்டாம். குறைந்தபட்சம் தமிழுணர்வாளர்கள், தேசியவாதிகள் படிக்கவாவது வேண்டாமா? தங்கள் வீட்டுக் குழந்தைகள் படிக்கவாவது வாங்க வேண்டாமா?
 - தினமணி - கலாரசிகன்

   

Monday 24 December 2012

சாமார்த்திய சதி

பாசாங்குச் சொற்கள்
பரிசுப் பொருட்கள்
பக்குவ விளக்கங்கள்
பரம்பரைச் சாயங்கள்என
எந்நாளும்
உனக்கொரு கத்தி
கிடைத்து விடுகிறது.

என்
சிறகுகளின் வளர்ச்சியை
வெட்டி எறிய.

நன்றி : நிலாச்சாரல்

Friday 21 December 2012

வகுப்பறை முதல் தேர்வறை வரை

கல்வியாளர்கள், மனவியலாளர்கள், மாணவ பயிற்றுவிப்பாளர்களின் ஆலோசனைகளால் படிப்பின் மீதும், ஆசிரியர்கள் மீதும் மாணவர்களுக்கு இருந்து வந்த வெறுப்புணர்வு ஓரளவு விலகியுள்ள நிலையில் படித்தல்- மாணவர், தேர்வு-மாணவர் என்ற இரு நிலைகளில் இன்னும் சிறப்பான முன்னேற்றங்கள் ஏற்படவே இல்லை. அப்படியான முன்னேற்றம் நிகழாமைக்கு காரணமாக இருக்க கூடிய சில அடிப்படை நிலைகளில் நிகழும் தவறுகளின்  மீது வழுவான ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை
கயிற்றைப் பிடித்துக் கொண்டு சுவர் ஏறிக் குதிக்க முயலும் மாணவர்கள் இலகுவாக ஏறி வர ஏணிப்படிகளை அமைத்து கொள்ளவும், மீனைப் பிடித்து கையில் தராமல் தேவைப்படும் போது அவர்களே மீனைப் பிடித்துக் கொள்ளவும் வேண்டிய யுத்திகளை உள்ளடக்கிய தொகுப்பு.       

Sunday 9 December 2012

ஆத்மசோதனை

இலக்கணம் படித்து
இலக்கியம் படைக்க வா
என்றபோது 
இடித்துரைத்தோம்.

மரபுகளை கற்று
மரபை மீறு
என்றபோது 
மறுப்பு செய்தோம்.

புதுக்கவிதை செய்து
புது உலகம் படைக்க
புறப்பட்டவர்கள்
நாங்கள் – என்றோம்.

இறுக்கங்களை
இலகுவாக்கி
மறுப்புகளை
மரபாக்கியவர்களோடு சேர்ந்தோம்.
  
நம் கூட்டணியின்
கூட்டல்களில்
குயில்களின் கூவல்களை
கேட்க வைத்தோம்.

கால ஓட்டத்தில்…………

பாதை காட்டியவர்கள்
பயிராய் வளர
பாதசாரியாய் வந்த நாமோ
பதர்களாகி போனோம்.

அளவில்லா கற்பனையில்
அர்த்தமில்லா அனுமானத்தில்
அவரவர் இஷ்டத்திற்கு
எழுதிக் குவித்தோம்.  

காதலின் அவதானங்களை
கவிதைகளாக்கி
கவிதைக்கே
கல்லறை கட்டினோம்.

பாதிப்புகளின் 
பதிவுகளை
பெண்களின் பின்னழகில்
புதைத்து வைத்தோம்.

சமூக கொடுமைகளை
சாடுவதாய்
அற்ப விசயங்களுக்கு
ஆடி களைத்தோம்.

பெண்மையை
மேன்மைபடுத்துவதாய் சொல்லி
மெல்ல,மெல்ல
படுக்கை பொருளாக்கினோம்.

பெண்களின் அங்கங்களை
குறியீடுகளாக்குவதாய் சொல்லி
அடி முதல் நுனி வரை
நிர்வாணமாக்கினோம்.

கவிதையின்
கனபரிணாமங்களை கலைத்து
கவிதைக்கே
கையறுநிலை பாடினோம்.
  
நம்பிக்கையோடு வந்த வாசகனுக்கு
அக்கினி குஞ்சுகளுக்கு பதில்
அக்குள் சிரங்குகளை
அள்ளி கொடுத்தோம் – இப்படியாக…………..
  
நினைத்தது ஒன்றாய்
நடந்தது ஒன்றாய்
புதுக்கவிதையை
கோமாவாக்கியது போதும்.

இனி ஒரு
அறுவை சிகிச்சை செய்தேனும்
புதுக்கவிதைக்கு
பூரணம் செய்வோம்.

நமக்கு நாமே
ஆத்ம பரிசோதனைக்கு
தயாராவோம் – வாருங்கள்.

நாமெல்லாம்
சிலை செதுக்கும் சிற்பிகளா?இல்லை
அம்மி கொத்தும் கூட்டமா?என்று!

நன்றி : திண்ணை

Tuesday 4 December 2012

வல்லரசு கோஷம்



ஊழலை ஒழி என்கின்றோம்
ஓட்டுரிமையை செலுத்த
பணம் பெறுகின்றோம்.

சாதியை நீக்கு என்கின்றோம்
சாதிக்கென தனிஒதுக்கீடு கேட்கின்றோம்.

சட்டத்தை கடுமையாக்கு என்கின்றோம்
பாராளுமன்றத்தை தாக்கியவனுக்கு
பாவமன்னிப்பு கோருகின்றோம்.

ஆயுத பலம் பெறு என்கின்றோம்
அணு யுதங்கள்
வேண்டாமென சொல்கின்றோம்.

இலவசம் தராதே என்கின்றோம்
மானியம் கேட்டுப் போராடுன்கிறோம்.

இத்தனை குழப்பங்களுக்கு இடையிலும்
வெட்கமில்லாமல் பீற்றித்திரிகின்றோம்
வல்லரசை நோக்கி நாங்கள்என்று!

நன்றிவெற்றிநடை

Saturday 1 December 2012

அகப்படாத வித்தை

காலாரக் கிளம்பி
கருக்கல் மறைவில்
வயிற்றுக்கொரு கையறு பாடி
கையும், காலும்
அழம்பியே பழக்கப்பட்ட தாத்தாவிற்கு....

வருடம் போயும்
பிடிபடவில்லை
பத்துக்கு நாலு கழிப்பறையில்
பக்குவமாய் வயிறு கழுவி
புறம் வருதல்.

நன்றி : பதிவுகள்