Showing posts with label வாசிப்பு மராத்தான் 2021. Show all posts
Showing posts with label வாசிப்பு மராத்தான் 2021. Show all posts

Monday, 27 December 2021

எங்கே போனது என் அல்வாத் துண்டு? - சாரம் குறையாத சரக்கு!

நாற்பத்தெட்டு பக்கம். நான்கு கதாபாத்திரங்கள். அதில் இரண்டு எலி. அவைகளும் கதை முழுக்க வரவில்லை. விவேக், அச்சுபிச்சு என்ற மீதி இரண்டு கதாபாத்திரங்கள் நம் போன்ற மனிதர்கள். இருக்கும் நிலையில் இருந்து இன்னும் அதிகமாய் முன் நகர்வதற்கான மனநிலை கதை போக்கில் அவர்கள் நமக்குள் விதைக்கிறார்கள். K.R.மணி எழுதி அநுராகம் வெளியீடாக வந்திருக்கும் இந்நூலை மாற்றங்களுக்கான தூண்டல் என்றால் மிகச் சரியாக பொருந்தும் என நினைக்கிறேன்.

”அல்வாத்துண்டு” என்பதை அவரவருக்கான குறியீடாகக் கொண்டு அதைத் தேடி ஓடுவதையும், அந்தத் தேடலில் கண்டடைவதையும், கண்டடைந்தது கைதவறி போகும் போது மீண்டும் புதியன தேடி ஓடுவதையும் மனநிலையாகக் கொண்ட மனிதர்களையும், கிடைத்ததை இழந்த போதும் புதிய தேடலுக்கான ஓட்டத்தை துவங்காமல் தயங்கி நின்றபடி அதற்கான காரணங்களை தனக்குத் தானே அடுக்கிக் கொள்ளும் மனநிலை கொண்ட மனிதர்களையும் விவேக், அச்சு பிச்சு பாத்திரங்கள் பேசுகின்றன.

Thursday, 23 December 2021

மனைவி சொல்லே மந்திரம் - உற்றுநோக்கு!

"மேனேஜ்மெண்ட்" என்ற சொல்லை கெட்டிக்காரத்தனத்தின் அடையாளம் என நிர்வாகத் துறையில் இயங்கும் ஆண்களில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த மமதையை சொல்களில், செயல்களில் அவ்வப்போது வெளிப்படுத்துவதோடு, மேனேஜ்மெண்ட் சார்ந்த சிறப்பு வகுப்புகளில், பயிலரங்குகளில் கலந்து கொள்ள நிர்வாகம் தங்கள் செலவில் அனுப்பினால் அதை தனக்குத் தரப்பட்ட கெளரவத்தின் அடையாளமாகவே பிரதிநிலை படுத்திக் கொள்கிறோம். ஆனால், ஆண்களின் இத்தகைய அடாவடித்தனத்தை எல்லாம் "சும்மா", "பிதற்றல்" என பொட்டில் அடித்தாற் போல சொல்லிப் போகிறது “மனைவி சொல்லே மந்திரம்”! ஷாரு ரெங்கனேசர் ஆங்கிலத்தில் எழுதிய இந்நூலை வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் தமிழாக்கம் செய்திருக்கிறார். கற்பகம் புத்தகாலயம் வெளியீடு செய்திருக்கிறது.

நிர்வாகவியலில் கற்றுத் தரப்படும் அத்தனை வினாக்களுக்குமான சூத்திரம் அவரவர் வீட்டில் இருக்கும் பெண்களிடமே இருக்கிறது. அதை அவர்கள் சிறப்பாகக் கையாண்டு குடும்பத்தை நிர்வகிக்கிறார்கள். சிலநேரம், அதில் சிக்கல்கள் ஏற்படும் போது ஒரு தேர்ந்த நிர்வாகியின் திறனோடு அவைகளுக்கான மாற்று வழிகளையும் கைக்கொள்கிறார்கள். ஆனால், அதை அவர்கள் உணர்வதில்லை. காரணம், நம் கலாச்சார குழந்தை வளர்ப்பு முறையில் அவை அனிச்சையாய் அவர்களிடம் அப்பிக் கிடக்கிறது.

Wednesday, 15 December 2021

பாக். ஒரு புதிரின் சரிதம் - பால்ய உறவுகளின் நரக அவஸ்தை!

நாளிதழ்கள் வாசிக்கப் பழகிய காலந்தொட்டு அவைகளைத் திறக்கும் போதெல்லாம் சில வரிகளிலாவது பாகிஸ்தான் பற்றிய செய்தி இல்லாமல் இருக்காது. காலஓட்டத்தில் அந்த இடத்தை ஆப்கானிஸ்தான் பிடித்திருக்கிறது. நம் ஆதி பூமியின் அங்கமான இவ்விரு தேசங்களும், அங்கு தலைமையகம் அமைத்து இயங்கும் இன, தீவிரவாத குழுக்களும் எப்பொழுதுமே உலகிற்கு ஒரு புதிர் தான்! இந்த விசயத்தில் அறிதலுக்கும், புரிதலுக்கும் மூத்தவன் பாகிஸ்தான் என்பதால் அந்த தேசம் பற்றியும், அதன் அடிப்படை அரசியல் பற்றியும் தெரிந்து கொள்ள ஆவல் இருந்தது. நாடுகள் பற்றி எழுதப்பட்ட நூல்களின் வரிசையில் அதற்கு வழி இல்லாத நிலையில் அவைகளுக்கான தீனியாக நாளிதழ் செய்திகள் மட்டுமே அப்போதைய சூழலில் எனக்கு இருந்து வந்தது. அச்சமயத்தில் பாகிஸ்தான் பற்றிய வழமையான நூல் வகையில் இல்லாது முற்றிலும் அந்நாட்டு அரசியல் பற்றி மட்டுமே பேசும் இந்நூலை கிழக்கில் இருந்து வாங்கினேன்.

விரும்பி வாங்கி வாசித்த நூலை இரவல் வாங்கிய நண்பர் ஒருவழிப்பாதையாக்க மாட்டார் என்ற நம்பிக்கையோடு இருந்தேன். அப்படியே மாற்றினாலும் குடி முழுகிப் போய்விடாது என்றாலும் அப்போது இருந்த இந்நூலின் முகப்பு அட்டைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது (இப்போதைய பதிப்பில் முகப்பு அட்டை வேறு). சமீபத்திய பருவமழைக் காய்ச்சல் மீண்டும் படுக்கையறைக்கு என்னை ஒப்புக் கொடுக்க தயாரானபோது துணைக்கு நூல்களை வைத்துக் கொள்ள ஏதுவாக நூலகம் சென்றேன். எதிர்பாராதவிதமாக ஆன்மிகம் வரிசையில் இந்நூல் உட்கார்ந்திருந்தது. துணையிருப்புக்கு கொண்டு வந்து மறுவாசிப்பு செய்தேன்.  பாகிஸ்தான் போன்ற நாடுகள் என்றால் தேச அரசியல் சரித்திரம் என்பது எப்பொழுதும் சுவையாகத் தான் இருக்கும் என்பதை மீண்டும் உணர்ந்தேன்.

Monday, 6 December 2021

என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள் - விசிட்டிங்கார்டு!

சுமதிஸ்ரீ எழுதி விகடன் பிரசுர வெளியீடாக வந்திருக்கும் இத்தொகுப்பில் 13 கட்டுரைகள் உள்ளன. அவைகளை நிரப்பி நிற்கும் செய்திகள், தகவல்களில் இருந்து நூலாசிரியர் குறித்த பல்வேறு விசயங்களை வாசிக்க முடிகிறது.

இலக்கிய, ஆன்மிக, பட்டிமன்ற மேடைகளில் இன்று கோலோச்சிக் கொண்டிருக்கும் நூலாசிரியர் தான் கடந்து வந்த பாதையை எழுதப்படாத நாட்குறிப்பின் வாயிலாக திரும்பிப் பார்க்கிறார். தன் வாழ்வில் திருப்பம் தந்தவர்களை அசை போடுகிறார்.

பேட்டிகளாக வந்திருக்க வேண்டியவைகளையும், தனிப்பட்ட உரையாடல்களில் பகிர்ந்து கொள்ளக் கூடியவைகளையும் கட்டுரைகளாக்கி இருப்பதால் அவைகள் வெறும் செய்திகளாகவே இருக்கின்றன. கட்டுரைகளில் இடம்பெற்றிருக்கும் தகவல்களில் பல கதைகளுக்கான தன்மையைக் கொண்டிருக்கிறது. அவைகளை சிறுகதைகளாக நூலாசிரியர் எழுதி இருக்கலாம். அவைகள் செய்திகளாக இல்லாது போயிருந்திருக்கும். இந்நூலாசிரியர் ”கோடாரிக் காம்பில் பூக்கள்” என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதி இருக்கிறார்.