Friday 30 May 2014

மெளன அழுகை - 2

மெளன அழுகை கவிதை தொகுப்பிற்கு கவிஞரும், விமர்சகருமான திரு. ஸ்ரீரங்கம் செளரிராஜன் அவர்கள் அளித்துள்ள விமர்சனம்

மு.கோபி சரபோஜி அழகன்குளம்( இராமநாதபுரம் மாவட்டம்) என்ற ஊரில் பிறந்தவர். கவிதை, நாவல், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, ஆன்மிகம், தன்னம்பிக்கை என இதுவரை 21  நூல்கள் வந்துள்ளன. இது இவரது மூன்றாவது கவிதை தொகுப்பு.

இதில் 54 கவிதைகள் உள்ளன. எளிமை, தெளிவு, இழுத்துக்கட்டிய மொழி சார்ந்த வெளிப்பாடு இவரது கவிதை இயல்புகள்.

பரதேசி” – பணம் வேண்டி வாழ்வின் அற்புத தருணங்களை இழக்கும் ஒருவனை இக்கவிதையில் காட்டுகிறார் கோபி.

Sunday 18 May 2014

மெளன அழுகை - 1

(நந்தலாலா (இதழ் 17) இணைய இதழில் என்மெளன அழுகைகவிதைத் தொகுப்பிற்கு நண்பரும், கவிஞருமான இரா. பூபாலன் எழுதிய விமர்சனம்)


கதறியழத் திராணியுள்ள மனிதன் தன் ஆற்றாமையை அழுதழுது துடைத்துக் கொள்கிறான் அல்லது தளர்த்திக் கொள்கிறான். கதறியழுது கண்ணீரையெல்லாம் வற்றிவிடச்  செய்யாது, தனக்குள்ளேயே அழுது கண்ணீரை மறு சுழற்சி செய்துகொள்ளும் மெளன அழுகைக்காரன் கவிஞன்.

தனது வலிகளை, ஆற்றாமைக் கோபங்களை வார்த்தைகளாகக் கோர்த்து எறிகிறான் கவிதையாக. அவனின் அழுகையை கவிதை செய்கிறது. அதன் மெளன சாட்சியாக கவிஞன் நிற்கிறான். சமூகத்துக்காக மட்டுமே கவிஞன் அழுவதில்லை. தன்பாலும் அழ வேண்டிய தருணங்கள் கவிஞனுக்கு நிறையவே இருக்கின்றன. எப்படியாகினும் கவிஞனின் மெளன அழுகையே கவிதையாகிறது.

கோபி சரபோஜியின் தொகுப்பின் தலைப்பு மெளன அழுகையாக இருப்பதின் பொருட்டு, வெடித்துக் கதறக் காத்திருக்கும் கவிதைகளைக் கையிலெடுப்பதாக உருவகித்துக் கொண்டு வாசிக்கத் துவங்குகிறேன் இக்கண்ணீரை.

Thursday 1 May 2014

இன்னொரு புரட்சி


மேதைகளின் வழிகாட்டல்களில்
உழைப்பாளர்களாய் ஒன்றுபட்டோம்.
 
முதலாளித்துவத்தின் முகமூடிகளை
நம் தோள் வலிமை கொண்டு
கிழித்தெறிந்தோம்.
  
கண்ணீர் சிந்தியே
பழக்கப்பட்ட நாம்
செந்நீர் சிந்தி
ஜெயித்துக் காட்டினோம்.


வியர்வையின் விளைச்சலை
நாடுதோறும் நட்டு வைத்தோம்.

எல்லைகள் கடந்து
எதிரிகள் மறந்து
மே தினமாய் - நம்மை
அடையாளமிட்டுக் கொண்டோம்.

பல் வலியும், பாராசெட்டமாலும் (Paracetamol)

ஆடி விழவேண்டிய பல் என்பதால் அதற்கான தருணம் வந்ததும் மகனின் பல்லும் ஆட ஆரம்பித்திருந்தது

புது பல் முளைக்க போகுது என்று சொல்லி சந்தோசப்பட்டுக் கொண்டிருந்தான். நேற்று பள்ளியில் விளையாடும் போது அவன் நண்பனொருவன் தலையால் பல்லில் இடித்து விட அது வலி தரவே, பள்ளியிலிருந்து வந்ததும் அவன் அம்மாவிடம் சொல்லி இருக்கிறான்.

விழப்போற பல்லு தானே………லேசா வலிச்சிட்டு தானா விழுந்திடும்னு சொல்லிட்டு அப்படியே விட்டு விட்டாள். ஆனால், பல் வலி அவனை விட்ட பாடில்லை! இரவு சாப்பிடும் போது என் அப்பாவிடம், தாத்தா…. என் பிரெண்ட் தலையால இடிச்சிட்டான். அதுனால ஆடுன பல்லு வலிக்குதுன்னு சொல்லி இருக்கிறான். அவரோ பாதி பாராசெட்டமால் (Paracetamol) போட்டா சரியாயிடும். உன் அம்மாட்ட சொல்லி தர சொல்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

பாராசெட்டமால்  போட்டா வலி போயிடுமா தாத்தா? என கேட்டிருக்கிறான்.

அதற்கு அவர் வலிக்கத்தான் செய்யும்னு சொல்லவும், மாத்திரை போட்ட அப்புறமும் வலிக்கும்னா எதுக்கு தாத்தா மாத்திரையை போடனும்? போடாமையே இருந்துரலாமேன்னு சொன்னதும் அவர் பேசாமல் இருந்து விட்டார். பேரனுக்கு என்ன பதில் சொல்வது? என அவருக்கு யோசிக்க நேரம் தராமலே எனக்கு மாத்திரை வேணாம் என சொல்லி விட்டு இரவில் தூங்கி காலை எழும்பி பள்ளிக்கு கிளம்பி விட்டான்.