Monday, 27 October 2014

புகைப்படம் - 3

கவிமாலை அரங்கில் முனைவர் மன்னார்குடி ராஜகோபாலன் அவர்களிடமிருந்து பரிசு பெற்ற போது

Sunday, 26 October 2014

வாக்குறுதி

( சிங்கப்பூரில் இயங்கும் கவிமாலை என்ற அமைப்பு நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசுக்குத் தேர்வான கவிதை )

உச்சரிப்பதைப் போல இலகுவாய் இல்லை
பிறருக்குக் கொடுப்பதும்
கொடுத்ததை நிறைவேற்றுவதும்.

பல நேரங்களில்
நம்பிக்கையாகத் தரப்பட்டும்
அவநம்பிக்கையாய் நீர்த்து விடுகிறது.

ஏதோ ஒரு நிலையில்
பொய்யான காரணங்களுக்குள்
கரைந்து போய் விடுகிறது.

நிறைவேற்றித் தருவதற்காக
மெனக்கெடும் போதெல்லாம்
சில உபதேசங்களே மிஞ்சுகிறது.

கொடுத்த வாக்குறுதியைக் காக்க
கடவுள் கூட
சுனங்கி நிற்கும் யுகத்தில்

கொடுப்பதை விடவும் மறுக்கவே விழைகிறேன்
நிறைவேறும் வரை
நம்பிக்கையற்று நகரும் வாக்குறுதியை!

நன்றி : தமிழ்முரசு நாளிதழ்


Tuesday, 21 October 2014

புரிதலில் இருந்த தெளிவு!


மகனுக்கும், மகளுக்கும் நடந்த சண்டையில் அவளின் உதட்டில் குத்தி இரத்தம் வரவைத்து விட்டான் என்ற குற்றச்சாட்டோடு மனைவியிடமிருந்து அழைப்பு வந்தது. வழக்கம் போல ஆலமரம் இல்லா நாட்டாமையாய் பஞ்சாயத்தை நடத்துவதற்காக மகளை அழைத்து விசாரித்தேன். கழுத்தில் அணியும் பாசியில் தொடங்கி பள்ளிப் பேருந்தில் அமர்ந்து வரும் இருக்கை வரைக்கும் தனக்கும், தன் தம்பிக்கும் இருந்து வரும் பிரச்சனைகளை சொல்லி முடித்தாள். மகனை அழைத்தேன். அதெல்லாம் ஒன்னுமில்லை டாடி. அதுதான் என்னைய அடிச்சிக்கிட்டும், எனக்கிட்ட சேட்டை பண்ணிக்கிட்டும் இருக்கு. சேட்டை செஞ்சா அடிக்காம என்ன பன்னுவாங்களாம்? என சொல்லி முடித்தான். சேட்டை செஞ்சா அடிக்கனும் என்கின்ற தப்பான எண்ணம் எப்படி அவனுக்குள் வந்தது என்ற நினைப்பு ஒருபுறமிருந்தாலும், அவன் எண்ணப்படியே சொல்லிப் பார்ப்போமே என நினைத்துக்கொண்டு அக்காவை வேறு யாராவது அடிச்சா நீ திருப்பி அடிக்கலாம். நீயே அக்காவை அடிச்சா எப்படிடா? என்றேன். அதற்கு அப்படியெல்லாம் செய்ய முடியாது என்றவனிடம் ஏன்? என்றேன். நான் போய் அடிச்சு அந்த பையன் அவனுடைய அம்மாக்கிட்ட சொல்லி அவங்க நம்ம கூட சண்டைக்கு வந்தா என்ன செய்யிறது? அதுனால அப்படி எல்லாம் செய்ய முடியாது என்றான். இந்த தெளிவும். புரிதலும் இருந்தால் போதும். ஆயிரம் சண்டைகள் போட்டாலும் அசராமல் சமாதானம் செய்து வைக்கலாம் என நினைத்துக் கொண்டேன். குழந்தைகளின் இந்த மனநிலை வளர்ந்தவர்களுக்கும் வாய்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நினைக்க மட்டும் தான் முடிகிறது!

Friday, 17 October 2014

முயலாமையை முடக்குங்கள்


காரணம் சொல்பவர்கள் காரியம் செய்வதில்லை என்பது ஒரு வழக்குச்சொல் மட்டுமல்ல பொருள் பொதிந்த வாழ்வியல் சொல்லும் கூட! பள்ளிப் பருவத்தில் வீட்டுப்பாடம் செய்யாததற்கும், வேலைக்குச் சென்ற சமயங்களில் கூடுதல் விடுப்பு எடுப்பதற்கும் காரனங்களைச் சொல்லிச் சொல்லி பழகிவந்த நம்மில் பலருக்கும் அதிலிருந்து விடுபடுவது இயலாத காரியமாகி விட்டது. அதனால் தான் சிலர் மட்டும் சாதிக்கின்றனர். வெற்றியாளர்களாக உருவாகின்றனர்.

Thursday, 9 October 2014

கேட்டதும் - பெற்றதும்


மனைவி என்கின்ற ஒற்றை உறவில் என்னோடு பயணிக்கத் தொடங்கி சிநேகிதியாய், என் தவறுகளை பொறுத்துக் கொண்டு நெறிப்படுத்துபவளாய், சண்டைக்காரியாய், தளர்ந்த சமயங்களில் தோள் கொடுத்து உற்சாகப்படுத்தும் நம்பிக்கை கரங்களாய் பயணிப்பவளிடம் காலையில் பிறந்தநாள் வாழ்த்தைச் சொல்லிய பின் மகனை அழைத்து அம்மாவுக்கு பிறந்தநாள் பரிசாக என்ன கொடுத்தாய்? என்றேன். “ஒன்னும் கொடுக்கல. வாழ்த்து மட்டும் தான் சொன்னேன்” என்றான் வெறும் வாழ்த்துச் சொன்னா நல்லாவா இருக்கு? என்றதும் சட்டென நீங்கள் மட்டும் என்ன கொடுத்தீங்க? வாழ்த்து மட்டும் தானே சொன்னீங்க என்றான்.

கண்ணாடி வீட்டுல ஒக்காந்துகிட்டு கல்லை எறிஞ்சிட்டோமேன்னு தோண சமாளித்துக் கொண்டு நான் வெளியில இருக்கேன். நீ அம்மா பக்கத்துலயே இருக்கில என்றேன். ஏன் வெளியில் இருந்தா கொடுக்க முடியாதா? என் பிறந்தநாளைக்கு ஒரு கவிதை எழுதி இருந்தீங்களே அதுமாதிரி அம்மாவுக்கும் ஏதாவது எழுதி கொடுக்கலாம்ல என்று கூறினான். என்ன சொல்லி சமாளிப்பது? அம்மாவின் அடுத்த பிறந்தநாளுக்கு அப்படி ஏதாவது செய்கிறேன் என அவனிடம் உறுதி சொன்னேன். பெரியவர்களாகிய நாம் காரணங்கள் வழி தப்பிக்க பார்க்கிறோம். குழந்தைகளோ தவறைக்கூட காரணங்கள் வழி சரிக்கட்டுவதை விரும்புவதில்லை.

Wednesday, 8 October 2014

தனியே திரியும் துயரம்

ஆசைக்கொன்றும்
ஆஸ்திக்கொன்றுமாய்
தந்து போனதை
சொல்லித்திரியும் உறவுகளிடம்
எப்படிச் சொல்வேன்?

நீ விட்டுச் சென்ற நினைவில்
தனியே நீந்தித் திரியும் துயரத்தை!


Wednesday, 1 October 2014

மு.கோபி சரபோஜி கவிதைகள்

பெல் அடிக்கும் வரை
பேசக்கூடாது என்ற ஆசிரியரை 
சபித்தபடி
பேசிக் கொண்டு வந்தன 
குழந்தைகள்.

நன்றி : மலைகள்

மு.கோபி சரபோஜி கவிதைகள்

காமத்தின் கடைசிச் சொட்டை
இறக்கி வைக்கும் புள்ளியாய்
அங்க அவயங்களை அகழ்ந்தவனின்
விரல் வடுக்களால் 
வடிவிழந்து கிடக்கிறது.

செதுக்கியவனின் திறனை
துருத்தி தெரியும் பாகங்களில் 
காட்டி நின்றவளின்
அடர் கொங்கைகள்.

நன்றி : மலைகள்