Monday 31 August 2015

பெண்கள் சூழ் உலகில் இருந்து வரும் சிக்கல்கள்!

 

மகனைப் பற்றி பேசும் போதெல்லாம் மனைவியும், மகளும் அவனைப் பற்றிய குறையோடு தான் முடிப்பார்கள். எதிலும் அக்கறையில்லை. மெனக்கெடல் இல்லை. ஏனோதானோவென்று எதையும் செய்வதால் நல்ல ரிசல்ட்டை அவனால் தர முடியவில்லை எனச் சொல்லிச் சொல்லி அவர்களுக்கு அழுத்ததோ இல்லையோ எனக்குக் கேட்டு, கேட்டு அழுத்துப் போயிருந்த நிலையில் அவன் செவன்த் ரேங்க் வந்ததைப் பார்த்து எனக்கே அதிர்ச்சியாகி விட்டது என அவனுடைய கிளாஸ் மிஸ் மகளிடம் சொல்ல அது தான் ஹாட் டாப்பிக்காக சில நாட்களாய் ஓடிக் கொண்டிருந்தது. மூன்றாவது படிக்கிற பையன் தானேம்மா. இப்போதைக்கு எழுத்துக்களை அறிந்து சேர்த்து வாசிக்கக் கற்றுக் கொண்டால் போதும். ரேங்க் எடுக்க வைப்பதற்கெல்லாம் அப்புறமா அவனைத் தயார் செய்துக்கலாம் எனச் சொல்லி சமாளித்து வந்தேன்.

Friday 28 August 2015

மனுஷ்யபுத்திரனின் கவிதைகளைப் பள்ளியில் பாடமாக வைத்தால்!

பெரும்பாலான வார இறுதி நாட்கள் உள்ளங்கையில் வாரிய நீராய் நிரம்பி விரல் இடுக்குகளில் கசிந்து முற்றாய் தீர்ந்து போய்விடும். சில சமயங்களில் மட்டுமே குவளையில் அள்ளிய நீராய் என்னிடமே இருந்து என் விருப்பத்திற்கேற்பக் கரையும். அப்படிக் கரைந்த வார இறுதிநாளாய் நேற்றைய (23-08-2015) ஞாயிறுப்பொழுதும் அமைந்தது. வாசகர் வட்டத்தின் மாதாந்திர நிகழ்வு கடந்த மாத நிகழ்வின் தொடர்ச்சியாய் சங்க இலக்கியம் முதல் நவீனக் கவிதைகள் வரை என்ற தலைப்பில் நிகழ்ந்தது. நிகழ்வு நடைபெறும் அங்மோகியோ நூலகத்திற்கு வழக்கமாகச் செல்லும் பயணத்தடத்தில் இல்லாமல் ஒரு மாறுதலுக்காக வட்டப்பாதையில் நான் சென்றதைப் போல இம்மாத நிகழ்வும் வழக்கமாக நடைபெறும் தக்காளி அறையில் இல்லாமல் வேறு அறையில் நடந்தது. தவிர, வாசகர் வட்டம் ஒருங்கிணைத்திருந்த கவிஞர் இசாக் அவர்களின் இசைத் தொகுப்பின் முன்னோட்ட நிகழ்வும் இணை நிகழ்வாய் இருந்ததால் நிறைய புது முகங்களை நேர் சந்திப்பில் பார்க்க முடிந்தது.

அருவி காலாண்டிதழில்.....

காற்றின்

திசைக்கேற்ப பறக்கும்

நுணுக்கத்தையும்

வல்லூறுகளிடமிருந்து 

தப்பிக்கும் தந்திரத்தையும்

சொல்லித் தந்து

ஒரு பறவையாய் மாற்றியவர்

தட்சணையாய் கேட்டார்

சிறகுகளை.

 

நன்றி : அருவி காலாண்டிதழ்

Wednesday 26 August 2015

வாசிப்பையும், எழுத்தையும் விட முடியுமா?

 

இருக்கின்ற வேலையைத் தொடரும் சூழல் இருக்கிறதா? புதிய வேலைக்குச் செல்வதாக இருந்தால் அதற்கான தகுதியை கொண்டிருக்கிறாயா? உனது விருப்பம், ஆசை எனப் பல காலமாய் சொல்லித் திரியும் வேலைக்கான தகுதிக்குத் தயாராகி வருகிறாயா? குடுமபச் செலவினங்களுக்கான ஆறுமாதத் தொகையைச் சேமிப்பில் வைத்திருக்கிறாயா? என என் வளர்ச்சியில் அக்கறை கொண்டவரின் எந்தக் கேள்விக்கும் என்னால்ஆம்என பதில் சொல்ல முடியாமல் போனது, ”இல்லைஎன்ற என் பதிலைக் கேட்டவர் அது குறித்துத் தொடர்ந்து பேசவில்லை. வேறு விசயங்களுக்குத் தாவியவர் நான் விடைபெற எத்தனித்த சமயத்தில், ”வாழ்க்கையை வாழ்வதற்கான அடிப்படை விசயங்கள் ஒன்றில் கூட நீ தகுதியானவனாய் இல்லை. வாசிக்கிறேன், எழுதுகிறேன் என்பதெல்லாம் கேட்க நல்லா இருக்கும். சோறு போடாது. இன்னைக்கு இல்லைன்னா நாளைக்கு அதைச் செய்யலாம். ஆனா வாழ்க்கையை விட்டா எப்பவுமே நீ அந்தப் பக்கம் போக முடியாது. அதுனால இதையெல்லாம் தூக்கித் தூர வச்சிட்டு உருப்படுவதற்கான வழிகளைப் பாருஎன்றார். வாசிப்பு சார்ந்தும், எழுத்து சார்ந்தும் நல்லா இருக்குநல்லா இல்லைஇன்னும் நல்லா செய்ய முயலுஎனக் கேட்டுப் பழகி இருந்த நிலையில் இப்படி முகத்தில் அறைந்தாற்போல வந்து விழுந்த வார்த்தைகளும் அதில் இருந்த உண்மைகளும் சுடவே செய்தது.