Thursday, 30 July 2015

புரட்சித் தலைவி “ஒளவையார்”!

சிங்கப்பூர் தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகம் இவ்வாண்டு ஒளவையார் விழாவை நடத்தியது. கம்பன் விழா, கந்த சஷ்டி விழா, அண்டா, குண்டா அக்கப்போர்களுக்கு விழா எனப் பார்த்தே பழகி இருந்த எனக்கு முகநூலில் ”ஒளவையார் விழா 2015” என்ற அழைப்பிதழை பார்த்ததும் சற்றே ஆச்சர்யமாகத் தான் இருந்தது.


இதற்கு முன் இப்படியான விழாக்களுக்கு சென்றதில்லை என்பதால் இவ்விழாவில் என்ன மாதிரியான அங்கங்கள் இருக்கும் எனத் தெரிந்திராத நிலையில் இவ்விழாவிற்காக உருவாக்கப்பட்டிருந்த முகநூலின் சிறப்புப் பக்கத்தில் நான் அறிந்திருந்த நண்பர்களில் சிலர் அவர்களின் வருகையை உறுதி செய்திருந்ததாலும், நிகழ்வை ஏற்று நடத்தும் அமைப்பில் இருந்த தோழி அன்றைய தினம் மறு நினைவூட்டல் அழைப்பைக் கொடுத்திருந்ததாலும் நிகழ்விற்குச் செல்லும் துணிவு வந்தது.
அச்சரம் பிசகாது சொன்ன நேரத்திற்கு தொடங்கியிருந்த நிகழ்ச்சி அரங்கில் பள்ளிச் சீருடையிலும், சீருடை அணியாமலும் நிறைய குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் அமர்ந்திருப்பதைக் கண்டதும் ஒருவித ”கிலி”யோடு அரங்கின் கடைசி இருக்கைக்கு ஓடினேன். கடைசி இருக்கைகள் தங்களை என்னிடம் ஒப்புக் கொடுக்க எப்பொழுதும் தயங்கியதே இல்லை என்பது மீண்டும் நிருபணமானது. அரங்கத்தை முழுமையாக பார்க்கும் படியாக ஓர இருக்கையில் அமர்ந்து கொண்டேன்..

சம்பிரதாய நிகழ்வுகளுக்குப் பின் ஒளவையாரின் ஆத்திச்சூடி,, கொன்றை வேந்தன் ஆகியவைகளைக் கருப்பொருளாகக் கொண்டு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அமைப்புகளின் தலைவர்கள் தொடங்கி சிறப்பாளர்கள் வரை அக்குழந்தைகளின் உயரத்திற்கு ஏற்ப தங்களை வளைத்துக் கொண்டு வாழ்த்துகளை வழங்கி பரிசு கொடுத்து கெளரவித்தனர். கருப்பொருளுக்குத் தாங்கள் வடிவம் கொடுத்த விதத்தை அவர்கள் பார்வையாளர்களுக்குப் படைத்துக் காட்டியதைக் கணட போது சிங்கப்பூர் போன்ற பல்லின மக்கள் வாழும் நாடுகளில் “தமிழ் மெல்லத் தேயும்” என்ற சொல் தேய்வழக்காகி வருவதை உணர முடிந்தது. மொழியை அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்திச் செல்ல இது போன்ற போட்டிகளும், ஊக்குவிப்புகளுமே அஸ்திரம்..

ஒளவையார் விருதைப் பெற்ற உள்ளூர் பிரபலம் டாக்டர். உமாராஜன் தன் ஏற்புரையின் முடிவில் ”வாழைப்பழம்” என்ற சொல்லை மிகச் சரியாக உச்சரிக்க குழந்தைகளைப் பழக்குங்கள் என்று வந்திருந்த பெற்றோர்களிடம் வேண்டுகோள் வைத்தார். பலரின் உச்சரிப்பில் வாழைப்பழம் வாலைப்பழமாய் வழுக்கிக் கொண்டு இருக்கும் நிலையில் அந்த வேண்டுகோள் சாலப் பொருத்தம். “ழ”, “ள”, ”ல” கரங்கள் தான் உச்சரிப்பை உயிர்ப்பிக்கின்றன. சொல்லாடல்களுக்கு சொல்லின் மீதான உச்சரிப்பு முக்கியமில்லையா?.
தமிழகத்தில் இருந்து வந்திருந்த சிறப்புப் பேச்சாளர் முனைவர் ந.விஜய சுந்தரியின் உரை கானமும், கருத்துமாய் அரங்கை நிறைத்தது. கே.பி.சுந்தரம்பாளை ஒளவையாராக திரையில் காட்டியதைப் போல ஒளவையாரை ஒன்பது அவதாரங்களாய் மேடையில் தன் பேச்சின் மூலம் கொண்டு வந்து காட்டினார். ஒளவையார் நிகழ்த்திய புதுமைகளைச் சுட்டிக்காட்டி இவள் அல்லவா ”புரட்சித்தலைவி” என்ற போது அதன் பொருள் உணர்ந்த அரங்கம் சகஜமாக சில நிமிடங்களானது. கல்லூரியில் மொட்டை மனனம் செய்திருந்த ஒளவையின் பாடல்களுக்கு  நல்ல தொரு விளக்கம் அவர் பேச்சின் வழி எனக்குக் கிடைத்தது. அவரிடம் கற்றுக் கொள்பவர்கள் கொடுத்து வைத்த ஆத்மாக்கள். தமிழ் பாட வகுப்பு என்றாலே கல்லூரிக்கு எதிரில் இருக்கும் பெட்டிக்கடையில் அடைக்கலமாகி விடும் என் கல்லூரி கால வாழ்வியல் அவர் கற்றுத் தரும் கல்லூரியிலும் ஈரம் காயாமல் இருப்பதை ஆதங்கமாகவே குறிப்பிட்டார்.

அறிவுக்கு விருந்தாய், செவிக்கு உணவாய் அமையும் இப்படியான நல்ல நிகழ்வுகளில் செல்ஃபி எடுப்பது, வாங்கி வந்த வார, மாத இதழ்களை மேய்ந்து கொண்டிருப்பது, முகநூல் பக்கங்களில் உலாவித் திரிவது, நண்பரிடம் பேசும் சங்கதியை தனக்குச் சம்பந்தமில்லாதவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் உரக்கக் கதைப்பது என பார்வையாளர்கள் அரங்கேற்றும் சிறப்பு அங்கங்களுக்கும் அரங்கில் பஞ்சமில்லை.. இப்படியான மனநிலை மாற வேண்டும்.

ஆறு மணிக்குத் தொடங்கி கச்சிதமாக எட்டரை மணிக்கு நிகழ்ச்சி முடிய செவிக்கு விருந்து கிடைத்த மகிழ்வோடு ஏழரை ஏதுமில்லாமல் வயிற்றிற்கு உணவிட பத்தரை மணிக்கு விடுதிக்கு வந்து சேர்ந்தேன். 

Monday, 27 July 2015

புகைப்படம் – 15

எழுத்தாளர் ஷாநவாஸ் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் அவரிடமிருந்து நூலைப் பெற்றுக் கொண்ட போது.........
நன்றி : வாசகர் வட்டம். 

மக்கள் மனசு - 4

பாகிஸ்தான் விஷயத்தில் இந்தியா மெத்தனமாக நடந்துக்கொள்கிறது என்று ஒரு கருத்து எழுந்துள்ளது. இது குறித்து உங்கள் கருத்து......

அவசரப்பட்டு ராணுவ நடவடிக்கையை எடுப்பதில் உள்ள சிக்கல்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். முன்பு இருந்த நிலை இப்போது இல்லை. சீனா அதைத் தனக்குச் சாதகமாக மாற்றி விடக்கூடும். இலங்கையை மையமிட்டு சீனா இந்தியாவை உளவு பார்க்க முயலும் நிலையில் பாகிஸ்தான் ஊடாக அதற்கான வாயிலை நாமே திறந்து விட்டு விடக்கூடாது. எல்லை மீறாத வரை பொறுத்திருக்கும் அதே நேரம் இரானுவ பலத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம். 
நன்றி : பாக்யா வார இதழ்

Friday, 24 July 2015

மெளன அழுகை - 4

[சிங்கப்பூரில் வசிக்கும் எழுத்தாளரும், சிறந்த பேச்சாளருமான அழகுநிலா அவர்கள் என் "மெளன அழுகை" கவிதைத் தொகுப்பிற்குத் தந்திருக்கும் அறிமுகம்]

தமிழ் நிகழ்ச்சிகளில் இவரைச் சந்திப்பதுண்டு. மிகவும் அமைதியான,எளிமையான மனிதர். பதிப்பகங்கள் புத்தகம் போடச் சொல்லி இவரைக் கெஞ்சுவதாக (பொதுவாக எழுத்தாளர்கள் தான் பதிப்பகங்களை அணுகுவது வாடிக்கை) அறிந்த போது ஆச்சரியமாக இருந்தது. கிட்டத்தட்ட இருபத்தி மூன்று புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார் என்று அறிந்த போது ஆச்சரியமோ ஆச்சரியம்! தனது கவிதைப் புத்தகத்தை என்னிடம் தந்து விட்டு அவர் நகர்ந்த போதே கட்டாயம் அந்த நூலைப் படிக்க வேண்டுமென்று முடிவெடுத்து விட்டேன். அவரது கவிதைத் தொகுப்பின் பெயர் “மெளன அழுகை”. எளிமையான சொற்களால் யதார்த்த வாழ்வைக் கவிதைகளில் புனைந்துள்ளார். இந்த தொகுப்பில் சில கவிதைகள் பெண்மொழியைப் பேசுவது எனக்கு அதிக வியப்பை அளித்தது.
பாசாங்குச் சொற்கள்
பரிசுப் பொருட்கள்
பக்குவ விளக்கங்கள் 
பரம்பரைச் சாயங்கள் என 
எந்நாளும் உனக்கொரு கத்தி கிடைத்துவிடுகிறது
என் சிறகுகளின் வளர்ச்சியை வெட்டி எறிய
என்ற கவிதையில் சிறகுகள் வெட்டி எறியப்பட்ட பெண்மையின் வலியை உணரமுடிகிறது. பல நேரங்களில் கத்தி என்று தெரியாமலும் சில நேரங்களில் தெரிந்தும் சிறகை நீட்டுவதுதான் இன்றும் பெண்மையின் தலைவிதியாக உள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அடுக்களை ஒழித்து ஓய்வுக்காய் மற்றவர்களை 
அவரவர் அறையனுப்பி ஓய்ந்து கிடந்த தனிமையில்
தேங்கி நின்ற உடல் நசிவை 
சற்றே உலர்த்திப் போட உன் தோள் சாய்கையில் 
விருப்பமறியாமலே உன் தாக செதில்களை 
என் தேக மேடுகளில் உதிர்த்து எழுந்தாய்
களைப்பால் நசிந்த உடலோடு 
உன் நுழைப்பால் சிதைந்த மனமும் 
மௌனமாய் வெடித்தழுகிறது 
வடிந்தொழுகும் உன் வியர்வையில்
என்னை மிகவும் கவர்ந்த கவிதை இது. பெண் மனதின் உணர்வுகளைஏக்கங்களை, சொல்லமுடியாத சோகங்களை நுட்பமாக அவதானித்து இவர் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது.

கூந்தல் கருமேகம்
நெற்றி நிலா 
புருவம் பிறை
விழி மீன்
நாசி கிளி
வாய் கோவைப்பழம்
பல் முத்து
கழுத்து சங்கு
தனம் கவிழ்ந்த மலை
இடை கொடி
தொடை வாழை
இப்படியான உருவகங்களால்
ஊனமாகிப்போனது
உன்னையும்
தன்னைப் போன்றதொரு
சக மனுசியாய் மதிக்காத
என் ஆண்மைத்தனம்
என்ற கவிதையில் பெண்ணை உடல் சார்ந்த போகப்பொருளாக பார்க்கும் ஆண்மை உண்மையில் ஆண்மையில்லை அது ஊனமான ஒன்று என்று எழுதியிருப்பதன் மூலம் இவரது முற்போக்குச் சிந்தனை புலப்படுகிறது.
ஒரு ஆணின் பார்வையில் பெண் மனதைப் பற்றி எழுதுவது உண்மையில் மிகச் சவாலான பணி என்று தோன்றுகிறது. ஆனால் அந்த சவாலில் கவிஞர் நூறு சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறார். நிறைய கவிதைகளைப் உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் எல்லாவற்றையும் நானே சொல்லிவிட்டால் நீங்கள் அவரது புத்தகத்தை படிக்கமாட்டீர்கள் அல்லவா. அதனால் இந்த தொகுப்பில் எனக்கு மிக மிக பிடித்த கவிதையோடு முடித்துக்கொள்கிறேன். கட்டாயம் இந்த கவிதை தொகுப்பை படித்துப் பாருங்கள். உங்களுக்கும் கட்டாயம் பிடிக்கும்.
பாடம் :
"உன்னிப்பாய் உற்றுநோக்கியபடி
அமர்ந்திருந்தாள் இலக்கியா
என்னவென்று கேட்டேன் 
உஷ் என உதடு கூட்டி 
நேர்க்கோட்டில் ஊர்ந்து செல்லும்
எறும்புகளை காட்டினாள்
சலனமின்றிக் கடந்து சென்றேன்
அவ்விடத்தை விட்டு
"
------------------------------------------------------------------------------------------------------------------------------
பி.கு : முன் குறிப்பாய் இடம் பெற்றிருக்கும் சில வரிகள் பற்றி முகநூலில் நான் எழுதிய குறிப்பு - யாரோ நம்மளைப் பற்றி சிநேகிதியிடம் ஓவராகவே சொல்லி விட்டார்கள் போல....முதல் பத்தியைப் படித்து விட்டு என் பதிப்பாளர்கள் என் மீது கோபக் கனல் வீசாமல் இருக்கனும்டா சாமி..........

Wednesday, 22 July 2015

கடவுளிடம் வரம் வாங்கும் முன்

மன அழுத்தம் நிறைந்து நிற்கும் பொழுதெல்லாம் அதிலிருந்து விடுபட வாசிப்பின் பக்கம் சாய்வது வழக்கம். நேற்று அப்படியான மனநிலையில் நகைச்சுவை அதகளம் செய்யும் நடைக்குச் சொந்தக்காரரான க.சீ.சிவகுமாரின் கதைகளை இணையத்தில் வாசித்துக் கொண்டிருந்த போது அண்ணன் பாஸ்கர் சக்தி நினைவுக்கு வந்தார். அவரை இதற்கு முன் சந்தித்து கை குலுக்கிய தருணத்தின் காயாத ஈரம் கூட அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

தமிழ்மொழி விழா 2015 ன் ஒரு அங்கமாக ஏப்ரல் மாதம் தங்கமீன் வாசகர் வட்டம் நடத்திய கதை – திரைக்கதை – வசனம் பயிலரங்கை நடத்துவதற்காக பாஸ்கர் சக்தி வந்திருந்தார். இப்பயிலரங்கிற்கு முந்தைய அறிமுக நிகழ்வாக அங்மோகியோ நூலகத்தில் எழுத்தாளர் பாஸ்கர் சக்தியோடு ஒரு கோப்பைத் தேநீர் என்ற கலந்துரையாடல் நிகழ்வு நடை பெற்றது.
வகுப்பறைகளுக்கு காலதாமதமாக வரும் தொட்டில் பழக்கம் இன்னும் விடாமலே இருப்பதாலோ என்னவோ எப்படித் திட்டமிட்டுக் கிளம்பினாலும் நிகழ்வுகளுக்கு சரியான நேரத்திற்கு என்னால் செல்ல முடிந்ததில்லை.. இம்முறையாவது சரியான நேரத்திற்குச் சென்று விட வேண்டும் என முடிவு செய்து  சில முன்னேற்பாடுகளோடு கிளம்பி வந்து சேர்ந்தேன். அற்புதம் எல்லா நேரமும் நிகழாது என்பதைப் போலவே இருந்தது.

நிகழ்ச்சிக்கான அறையில் வழக்கத்திற்கு மாறாக பெரும்பாலான இருக்கைகள் வாசகர்களால் நிரம்பி இருந்தது. நிரப்பப்படாமல் இருந்த இருக்கைகள் ஆங்காங்கே நின்ற படி உரையாடிக் கொண்டிருந்த வாசகர்களுக்காகவும், வரப் போகும் வாசகர்களுக்காகவும் காத்துக் கொண்டிருந்தது. அந்திசாயும், பொழுதில் வயிற்றிற்கு இதமாய் மெதுவடை, கேசரி, டீ, காப்பி தயாராய் இருந்தது.

அரங்கத்திற்குள் நுழைந்த பாஸ்கர் சக்தி தன்னைச் சூழ்ந்த வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் தன் புன்னகையைப் பரிசாய் கொடுத்து  அவர்களைத் தனக்கு அந்நியோன்யமாக்கி கொண்டிருந்தார். அடடா நாமும் இந்தப் புன்னகையை வாங்காமல் விட்டு விடக்கூடாதே என்ற பதை பதைப்பில் வாயில் வைக்கப் போன மெதுவடையை தட்டிலேயே வைத்து விட்டு என் பெயரைச் சொல்லி அறிமுகம் செய்து கொண்டேன். வித்தியாசமான பெயராக இருக்கே? என்றவரிடம் பெயர்க்காரணம் ஏதுமில்லைண்ணே. வீட்டுல வச்சது என்றதும் தனக்கே உரிய அக்மார்க் புன்னகையை எனக்கும் கொடுத்தார்.

அவருடைய கதையை வாசகர் வட்டத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகள் விமர்சித்தனர். இளையோரை வாசிப்பின் பக்கம் ஈர்க்கும் இம்மாதிரியான முயற்சிகளுக்கு ஆதரவு தருவது அவசியம் என்றே நினைக்கிறேன். எந்த பந்தாவோ, பகட்டோ இல்லாமல் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தவர் அதன்பின் உரையாடுவதற்கு வசதியாக அங்கிருந்த தளமேடையின் விளிம்பில் அமர்ந்து கொண்டார். பத்திரிக்கையில் தொடங்கி சினிமா வரையிலான தன் எழுத்துப் பயணத்தில் நிகழ்ந்த பல சுவராசியமான நிகழ்வுகளை தனக்கே உரிய எள்ளல் மொழியில் பகிர்ந்து கொண்டார். அதன் பின் வாசகர்களின் கேள்வி பதில் நிகழ்வு தொடங்கியது, ஆக்கப்பூர்வமான கேள்விகளுக்கு விரிவான செறிவான பதில்களைக் கொடுத்தார். பெண் வாசகியர்களின் கேள்விகளில் பல அவர் வசனம் எழுதிய மெட்டி ஒலி உள்ளிட்ட நாடகங்களைச் சார்ந்தே இருந்தது. சீரியலின் தாக்கம் சிங்கப்பூரையும் விட்டு வைக்கவில்லை.

சில கேள்விகள் பதில்களை விட நீளமானதாக இருந்தது. வாசகர்கள் சிரமம் பராமல் கேள்விகளைத் தெளிவாகத் தயாரித்துக் கொண்டு வருவது உத்தமம். அப்படிச் செய்யும் போது சாதாரண கலந்துரையாடலைக் கூட சிறப்பான  நேர்காணலாக மாற்றி விட முடியும்.
பாஸ்கர் சக்தியோடு நான்

நீங்கள் பணிபுரியும் திரைப்பட, தொலைக்காட்சி ஊடகங்கள் தான் தமிழ் மொழி சிதைவிற்கு காரணம் என்ற குற்றச்சாட்டை நிகழ்விற்கு வந்திருந்த சில மொழிப் பற்றாளர்கள் அவர் முன் விடாப்பிடியாக நீட்டிய படியே இருக்க குளிரூட்டப்பட்ட அறை மெல்ல சூடாக ஆரம்பித்தது.  தமிழகத்தில் இருந்து வந்த ஒரு வெற்றிப்பட இயக்குனரும், பிரபல மூத்த எழுத்தாளர் ஒருவரும் இது போன்றதொரு கலந்துரையாடலில் நடந்து கொண்ட விதம் பற்றிப் படித்தது மின்னல் வெட்டாய் எனக்குள் வந்து போனது. அப்படி ஏதும் நடக்காமல் போனது அந்த சொரிமுத்து ஐயனாரின் அருள்!

மனதுக்கு இலக்கிய எழுத்து, சோத்துக்கு சினிமா எழுத்து என இயங்கும் நிலையிலும் தன்னாலான சில முயற்சிகளை செய்து கொண்டிருப்பதையும், மொழியின் வளர்ச்சிக்கு தமிழறிந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய விசயங்கள் குறித்தும் சொல்லி அந்த நெருடலை இயல்பான சூழலுக்குக் கொண்டு வந்தார். தமிழகத்திற்கு முதல்வரை திரைப்படத்துறை மட்டுமே தர வேண்டும் என நினைப்பதைப் போல தமிழை வளர்க்க திரைப்பட, தொலக்காட்சி ஊடகங்கள் மட்டுமே தீர்வு என நினைக்கும் தட்டையான மனநிலை மாற வேண்டும். பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டும் என்றால் என்ன செய்ய முடியும்?

நெடுநேரம் இருக்கையில் உட்கார்ந்திருப்பது அசெளகரியமாய் இருக்கக் கடைசி இருக்கைக்குப் பின்னால் சென்று வசதியாக நின்று கொண்டேன். படைப்பிலக்கியம், கதைக்கான மொழி, தன் கதைக்கான முடிவுகளை அவர் தீர்மானம் செய்யும் முறை என அவரிடம் கேட்பதற்கு என்னிடம் மூன்று கேள்விகள் இருந்தது. அதற்கு பாஸ்கர் சக்தியிடமிருந்து கிடைத்த பதில்கள் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்பலாம். திகட்டத் திகட்ட புகைப்படம் எடுத்துக் கொண்ட பின்னர் நாளைய நிகழ்வில் சந்திப்போம் என அவரவர் கூடு திரும்பினோம்.

பயிலரங்கிற்கு முன்பதிவு அவசியம் என்றிருந்த போதும் எப்படியும் ஒரு இருக்கையை இரவல் வாங்கி விடலாம் என நினைத்திருந்தேன். அதில் கலந்து கொள்வதற்காக கேட்டிருந்த அனுமதியை அப்ரூவல் செய்தது நான் வேலை செய்யும் நிறுவனம். கிடைத்த அப்ரூவலுக்கு ஆப்பு வைத்தது எனக்கு வேலை தரும் நிறுவனம். கடவுள் தந்த வரத்தைப் பூசாரி பறித்துக் கொண்டால் பக்தனால் என்ன செய்ய முடியும்? அடுத்த முறையாவது கடவுளிடமிருந்து வரம் வாங்கும் முன் பூசாரியைக் "கவனி"த்து விட வேண்டும் நினைத்துக் கொண்டேன்.  

நன்றி : தங்கமீன் வாசகர் வட்டம்