Thursday, 29 June 2017

தன் அனுபவமாக்குங்கள்இன்றே -  இப்பொழுதே - இக்கணமே என்பது வெற்றியாளர்களின் வேதவாக்கு, இதன் உட்பொருள் உங்களின் செயலைத் தாமதிக்காமல் ஆரம்பியுங்கள் என்பதாகும். இதைப் படித்ததும் நானும் உடனே ஆரம்பிக்க வேண்டும் எனக் கிளம்பினீர்களேயானால் சுவற்றில் அடித்த பந்தாகத் திரும்பி புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்து விடுவீர்கள். நடைமுறையில் உணர்ச்சி வயப்பட்டெல்லாம் எதையும் செய்து சினிமாக் கதாநாயகன் போல் ஒரே நாளில் வெற்றியைச் சுவிகரித்து விடமுடியாது. அதற்கு நிறைய முன் தயாரிப்புகள் தேவையாக இருக்கிறது. 

புதிதாக ஒரு தொழில் தொடங்கி நடத்த வேண்டும்  என்பது  உங்களின் இலக்கு என வைத்துக் கொள்வோம். அதைச் செயலாக்குவதற்கு முன் அந்தத் தொழில் பற்றிய அடிப்படை அறிவு (BASIC KNOWLEDGE)  உங்களுக்கு இருக்க வேண்டும்.

ஒரு இளைஞன் இரயில் தடங்களை மாற்றி விடும் வேலைக்குச் சேர்ந்திருந்தான். முதல் நாள் பயிற்சி ஆரம்பமானது. இரண்டு இரயில்கள் வந்து கொண்டிருந்தன. அதன் தடங்களை மாற்றி விட வேண்டியவனோ தலை தெறிக்க ஒரு பெயரை உரக்கச் சொல்லிய படியே ஓடினான். காரணம் புரியாமல் நின்ற அதிகாரிகள் அவனைப் பிடித்து வந்து விசாரித்தனர். அதற்கு அவன் இதுவரை என் அண்ணனும் இரண்டு இரயில்கள் நேருக்கு நேர் மோதிப் பார்த்ததில்லை சார். அதான் அவனையும் அழைத்து வர ஓடினேன் என்றானாம். அடிப்படை அறிவு இல்லாவிட்டால் என்னவாகும் என்பதற்கு இந்தக் கதையை நிர்வாக மேலாண்மை வகுப்புகளில் அடிக்கடிச் சொல்வார்கள். அடிப்படை அறிவு என்பது அனைத்திற்கும் முக்கியம். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே முன் அனுபவம் என்ற அதற்கு அடுத்த நிலைக்குச் செல்ல முடியும்.

Saturday, 24 June 2017

மனநிலையை மாற்றுங்கள்
எல்லோரும், எப்பொழுதும் நம்மை ஏற்றுக் கொள்ள வேண்டும். நம் செயல்களை அங்கிகாரம் செய்ய வேண்டும் என நினைப்பது மனித இயல்பு. உண்மையில் அப்படி எதுவும் நிகழ்வதில்லை. உறவுகளுக்கிடையேயான பெரும்பாலான  விரிசல்கள் இப்படியான நிராகரிப்புகளாலயே உருவாகின்றன. சாதாரண விசயங்களுக்கே இப்படியான நிலை என்கின்ற போது வெற்றி சார்ந்த முயற்சிகளுக்கு கேட்கவே வேண்டாம். ஆனால் இப்படியான மறுப்புகளைக் கடந்து வெற்றியை வசப்படுத்துவதில் தான் உங்களுடைய அடையாளம், தனித்தன்மை அடங்கி இருக்கிறது.

ஒருவர் தன்னுடைய அனுமானம், அபிமானம் அல்லது அவருக்கு அது சார்ந்து முன்னர் கிடைத்த அனுபவம் மூலமாக மட்டுமே உங்களையும்,  உங்கள் செயல்களைப் புறக்கணிக்கிறார். அவருக்குள் இருக்கும் சில முன் முடிபுகள் அப்படியான புறக்கணிப்புகள் உருவாகக் காரணமாக அமைகின்றன. இந்த எதார்த்த நிலையை உணராமல் உங்களின் செயல் அங்கீகரிக்கப்படவில்லை என்று சொல்லிக் கொண்டு அதைக் கைவிட்டு விட்டால் ஒருநாளும் உங்களால் வெற்றி பெற முடியாது. மற்றவர்களின் விருப்பத்திற்குத் தன்னை வளையக் கொடுப்பவர்களால் ஒருநாளும் சாதிக்க முடியாது.

Wednesday, 21 June 2017

கொஞ்சம் கவனியுங்கள் ஆசான்களே!விடுமுறை முடிந்து பள்ளிக்குத் திரும்பிய மகள் விடுமுறையில் செய்து வர வேண்டும் என பள்ளியில் சொல்லி அனுப்பி இருந்த "அசைன்மெண்ட்" களை செய்து முடித்து கத்தை கத்தையாக அடுக்கி வைத்திருந்தாள்.


"லீவுக்கு தந்த எல்லா அசைன்மெண்ட்டையும் முடிச்சிட்டேன் டாடி. இந்தி மட்டும் படிக்க முடியல. ஜி திட்டுவாங்க" என வருத்தத்தோடு சொல்லிக் கொண்டிருந்தாள்

லீவுன்னா படிக்கனுமா? ஜி கேட்டா ஊருக்கு போயிருந்தேன்னு சொல்லு" எனச் சொல்லி அனுப்பி இருந்தேன்.

"பள்ளியில் இருந்து திரும்பியவளிடம் முதல் நாள் வகுப்பு எப்படி? அசைன்மெண்டெல்லாம் .கே.யா? "என்றேன்.

அவளோ மிகுந்த சலிப்புடன்," அடப்போங்க டாடி. எல்லாமே வேஸ்ட்டாயிடுச்சு. மிஸ் எதுவுமே கேட்கவில்லை. அபி (அவள் தம்பி) சொன்ன மாதிரி மிஸ் மறந்துட்டாங்க போல" என்றபடி பள்ளிக்கு உற்சாகமாய் எடுத்துச் சென்ற அசைன்மெண்டுகளை தன் அலமாரியில் வைத்துக கொண்டிருந்தாள்.

ஆசான்களே......ஆசிரியப் பெருந்தகைகளே......விடுமுறைகளை பிள்ளைகள் முழுமையாகக் கொண்டாட விடுங்கள். அல்லது அந்த விடுமுறையில் பிள்ளைகளுக்குத் தந்த திட்டங்களை பெயரளவிற்காவது பார்த்து உற்சாகப் படுத்துங்கள். அதன் வழி அவர்கள் பெறும் சந்தோசம் இன்னும் சிறப்பாய் அவர்களை இயங்க வைக்கும்.

உங்களின் பாராமுகம் அவர்களின் இயல்பூக்கத்திற்கு தடையாக இருக்க வேண்டாமே


Tuesday, 20 June 2017

மூளைதனமும் – தொலைநோக்கும்!சில வருடங்களுக்கு முன் நான் பணிபுரிந்த நிறுவனம் நடத்திய மேம்பாட்டுத் திறன் சார்ந்த பயிலரங்கில் ஊழியர்களிடம் சில கேள்விகள் அடங்கிய தாள்கள் தரப்பட்டு ஒவ்வொருவரிடமிருந்தும் தனித்தனியாகப் பதில்கள் பெறப்பட்டன. அதில் ஒரு கேள்வி. வாழ்வில் முன்னேற என்ன தேவை? மூளைதனமா? மூலதனமா? நான் உள்பட பலரும் எழுதிக் கொடுத்திருந்த பதில் என்னவாக இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. பதில்கள் பெறப்பட்ட பின் பயிலரங்கை நடத்தியவர் மூலதனம் மட்டும் இருந்தால் வழ்க்கையை வெற்றி பெற்று விட முடியும் என நினைக்கிறீர்களா? என்ற போது கோரசாய் ஏன் முடியாது? என்று கேட்டோம். அப்படியானால் உங்கள் ஊரில் அல்லது உங்கள் உறவினர்களில், உங்களுக்குத் தெரிந்தவர்களில் பணக்காரர்களாக இருப்பவர்களில் எத்தனை பேர் வெற்றியாளர்களாக இருக்கிறார்கள்? என்று அவர் திருப்பிக் கேட்ட போது எங்களிடம் பதில் இல்லை.

அன்று வரை பணம் இருந்தால் போதும் வாழ்க்கையை ஜெயித்து விடலாம். செல்வச் செழிப்புகளோடு இருப்பவர்களே வாழ்க்கையில் வெல்கிறார்கள் என எல்லோரையும் போலவே நானும் நம்பிக் கொண்டு தான் இருந்தேன். உண்மையில் அது தவறான கருத்து. அப்படியான ஒன்றைத் தொடர்ந்து நாம் கேட்டுக் கேட்டு பழகி விட்டதால் அது நம் உள் மனங்களில் பதிந்து அது தான் நிஜம் என நம்ப வைத்துக் கொண்டிருக்கிறது. அம்பானியைவும், டாட்டாவையும், வாரன் பெப்பட்டையும், பில்கேட்சையும் வெறும் பணக்காரர்களாக மட்டுமே பார்த்து வருகிறோமேயொழிய அவர்களை நாம் ஒரு தொழில் விற்ப்பனர்களாக பார்க்கப் பழகவில்லை. முதலீடுகள் மட்டும் அவர்களை வெற்றியாளர்களாக மாற்றவில்லை. அவர்கள் தங்களின் மூளையை முதலாய் உருமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அது தான் அவர்களை வெற்றியாளர்களாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த மூளைதனம் இல்லாததால் தான் நம் ஊர் பணக்காரர்கள் அஞ்சுக்கும், பத்துக்கும் வட்டித் தொழில் செய்து அமைந்தக்கரையில் வீடு வாங்க முடியுமா? என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். 

Friday, 16 June 2017

பகிர்ந்து செய்யுங்கள்இலக்கு, திட்டமிடல் ஆகியவைகளில் நம்மில் பலருக்கும் இருக்கும் தெளிவு அது சார்ந்த செயல்களைச் செய்யும் போது இருப்பதில்லை. ஒரு வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்பதே இன்று பலருக்கும் தெரிவதில்லை. வேலையை முடிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது. அதை எப்படிச் செய்தால் முடிக்க முடியும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும். இந்தத் தெளிதலும், தெரிதலும் இருந்தால் போதும் வெற்றியை உங்கள் பக்கம் சாய்த்து விட முடியும், அதற்கு உங்களுடைய வேலைகளைப் பகிர்ந்து செய்ய வேண்டியது அவசியம்.  

எல்லா வேலைகளையும் நீங்களே செய்ய ஆரம்பிக்கும் போது உங்களுடைய வேலையைச் சிறப்பாகச் செய்ய முடியாது. உதாரணமாக குழுவாகச் செயல்படும் ஒரு பணியில் நீங்கள் அதன் தலைமைப் பொறுப்பை (TEAM LEADER) ஏற்றிருக்கிறீர்கள்  என வைத்துக் கொள்வோம். அங்கே உங்களின் பணி என்பது உங்களோடு   செயல்படுபவர்களில் தகுதியாவனர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குரிய வேலைகளைப் பகிர்ந்து கொடுப்பதும், அவர்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்துக் குறித்த காலத்தில் அந்த வேலையை முடிப்பதும் மட்டுமே!  ஆனால் அக்குழுவின் தலைவர் என்பதற்காக எல்லா வேலைகளிலும் நீங்களே முன் நிற்பதோ, அவைகளைச் செய்ய முனைவதோ குறித்த காலத்தில் அந்த வேலையை நிறைவு பெற வைக்காது என்பதோடு கருத்து வேறுபாடுகளையும் உருவாக்கி விடும். இந்தச் செயல்பாட்டு நடைமுறையை மிகச் சரியாகப் பின்பற்றிச் செயல்படும் குழு ”பெஸ்ட் டீம்” (BEST TEAM) என்ற அடையாளத்தைப் பெறுகிறது. 

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கான பயிற்சி வகுப்புகளில் ஒரு போதும் உங்களின் உதவியாளர் செய்ய வேண்டிய வேலையை நீங்கள் செய்ய முனையாதீர்கள் என்ற ஆலோசனை கட்டாயம் இருக்கும். நேர மேலாண்மைக்கு இது மிகவும் முக்கியம்.  வெற்றிக்கான முனைப்பில் இருப்பவர்கள் தங்களுக்குக் கிடைக்கிற ஒவ்வொரு மணித்துளியையும் இலக்கு நோக்கிச் செலுத்த வேண்டுமேயொழிய அதிலிருந்து விலகி நிற்கும் விசயங்களுக்குச் செலவழிக்க முனையக் கூடாது.

மனைவிக்கு ஒழுங்காகப் பொருட்கள் வாங்கத் தெரியாது என நேரத்தைச் செலவிட்டு காய்கறிக்கடைக்குச் சென்று வருவது, மகனுக்குப் பணம் செலுத்தத் தெரியாது என தவணைத் தொகைகளைக் கட்ட வங்கிக்குச் சென்று வரிசையில் காத்திருப்பது, மகளுக்கு உதவுகிறேன் எனச் சொல்லிக் கொண்டு அவர்களின் வேலைகளில் தங்களின் நேரத்தைச் செலவு செய்வது என அவசியமற்றவைகளுக்காக மதிப்பில்லா நேரங்களை விரயமாக்கிக் கொண்டிருக்காதீர்கள். அவர்களுக்குத் தெரியவில்லை என்றால் ஒருநாள் முழுக்கச் செலவிட்டேனும் அதைக் கற்றுக் கொடுத்து விடுங்கள். அதன்பின் உங்களின் பல மணி நேரம் மிச்சமாகும். எனக்கே எல்லாம் தெரியும் என்ற மனநிலையாலும்,  நானே செய்தால் தான் எனக்குத் திருப்தியாய் இருக்கும் என்ற பிடிவாதத்தாலும் சிறிய வேலைகளில் உங்களின் நேரத்தை கரைத்துக் கொள்ளாதீர்கள்.

உங்களுக்கான நேரத்தை ஆக்கப்பூர்வமான வகையில் செலவழியுங்கள்.  முறையான திட்டமிடலின் மூலம் அதைச் செய்ய முடியும் என்பதை எனக்கு மேலாளராக இருந்தவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன். அதை உங்களுக்கும் சொல்கிறேன். வருட ஆரம்பத்தில் டேபிள் காலண்டர் வந்ததும் அவர் செய்யும் முதல் வேலை அதில் கட்டாயமாக ஒவ்வொரு மாதமும் செய்ய வேண்டிய வேலைகள், வாரியங்களுக்குக் கட்டணங்கள் செலுத்த வேண்டிய தேதிகளை அடையாளப்படுத்திக் கொள்வார். இப்போது அந்த வருடத்தில் கட்டாயமாகச் செய்ய வேண்டிய வேலைகள் தெரிந்து விடும். அந்தக் காலண்டரைத் தன் எதிரில் படும் படி வைத்திருப்பார். 

தினமும் காலையில் அலுவலகம் வந்ததும் காலண்டரில் அன்றைய தேதியில் இருக்கும் வேலைகளையும், அன்று செய்ய வேண்டிய வேலைகளையும் வரிசைப்படுத்தி ஒரு குறிப்பேட்டில் எழுதிக் கொள்வார். முதலில் எந்த வேலையைச் செய்வது உள்பட எல்லாவற்றையும் திட்டமிட்ட பின்னரே வேலைகளைத் தொடங்குவார். ஒரு நேரத்தில் ஒரு வேலை என்பதில் உறுதியாக இருப்பதால் அந்த வேலை முடியும் வரை அதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டே இருப்பார் அந்த வேலை முடியாது போனால் அதற்கான காரணத்தைக் குறிப்பேட்டில் குறித்து வைத்து விட்டு அடுத்த வேலையை ஆரம்பிப்பார். அதே நேரம் ஒத்தி வைத்த வேலையை முடிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டே இருப்பார்.

ஒவ்வொரு நாளும் வேலை நேரம் முடிவதற்கு முன் நடைபெறும் ஊழியர் கூட்டத்திற்கு அந்தக் குறிப்பேட்டோடு ஆஜராகி விடுவார். அதில் அவர் குறித்திருக்கும் வேலைகள் பெரும்பாலும் முடிந்து விட்டதற்கு அடையாளமாக சிவப்பு மையால் கோடிடப் பட்டிருக்கும். அவரின் சொந்த வேலைகளைக் கூட அவ்வாறு பட்டியலிட்டு வைத்திருப்பதைப் பல நேரங்களில் பார்த்திருக்கிறேன். இது எப்படி எல்லா நேரமும் சாத்தியம்? என ஒருமுறை அவரிடம் கேட்டேன். 

இந்தக் குறிப்பேட்டில் வேலைக்கான இன்றைய இலக்கும், அதை அடைவதற்கான திட்டமிடலும் மட்டும் தான் இருக்கிறது. ஆனால் இதில் இருக்கும் எல்லா வேலைகளையும் நானே செய்வதில்லை, நான் மட்டுமே செய்ய வேண்டியவைகளைத் தவிர்த்து  மற்றவைகளை அதற்குரியவர்களிடம் கொடுத்து அது சரியாக நடைபெறுகிறதா? என்று மட்டும் கண்காணிக்கிறேன். வேலை செய்வதில் அவர்களும், கண்காணிப்பதில் நானும் முழு கவனம் செலுத்துவதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அன்றைய வேலைகளை முடித்து விட முடிகிறது. பத்தாண்டுகாலமாக இதைத் தான் நான் கடைப் பிடித்து வருகிறேன் என்றார். இப்பொழுது எனக்குப் போலவே உங்களுக்கும் புரிந்திருக்குமே வெற்றியாளர்கள் கடைப்பிடிக்கும் சூத்திரம்!

எந்த வேலையை நானே செய்ய வேண்டும்? எதைப் பிறரிடம் கொடுக்க வேண்டும்? பகிர்ந்து செய்ய வேண்டிய வேலைகள் எவை? என்ற பட்டியலைத் தயார் செய்து கொள்ளுங்கள். அதன் படி உங்களுடைய செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளுங்கள். அப்படிச் செய்யும் போது செயலின் மீது ஒருமித்த கவனத்தை உங்களால் செலுத்தமுடிவதோடு பல மணி நேரங்களைச் சேமிக்கவும் முடியும்,

ஒருமித்த கவனத்தோடும், போதிய அளவு நேரக் கையிருப்போடும் செய்யும் வேலைகளில் தொய்வு ஏற்படாது. அயர்ச்சி வராது. உற்சாகம் தானாகவே பற்றிக் கொள்ளும். உற்சாகத்தோடு உங்களுடைய வேலையைச் செய்வதை விடவும் வேறென்ன சந்தோசம் வேண்டும் உங்களுக்கு?

நன்றி : அச்சாரம் மாத இதழ்