Thursday, 28 March 2013

எதார்த்தம்

முகம் பார்த்தால்
பயணச்சீட்டொன்று
இரவலாகி விடுமோ? –என்ற
அகக் கணக்கில்
முகம் பார்த்தும்
பார்க்காத பாசாங்கில்
பயணப்பட பழகிவிட்டன
புறக்கண்கள்.
---------------------------------------------
கிளி ஜோசியத்திற்காக
நான் தரும் இரண்டு ரூபாய்க்கு
எனக்கு எப்படியோ
நெல் இரண்டுகொறிக்க
உத்திரவாதம்
எப்படியும் உண்டு கிளிக்கு.
---------------------------------------------

வாங்கிப் போட்டதோ
இருவர் தூங்க
இடவசதியுள்ள கட்டில்.
நித்தம் தூங்குவது என்னவோ
நீயோ-
நானோ - மட்டும் தான்

Friday, 22 March 2013

மாத்தியோசி!


நண்பனுக்கு கிப்ட் (GIFT) வாங்குவதற்காக கிப்ட் விற்பனை செய்யும் கடை ஒன்றிற்கு சென்றிருந்தேன். அச்சமயத்தில் அங்கு கிப்ட் வாங்க வந்தவர் கடையிலிருந்த பையனிடம் என் பிரண்டுக்கு பிறந்தநாள் பரிசு தரனும்.....நல்லதா கிப்ட் காட்டுங்கன்னு சொல்லிட்டு, கூடவே இதுவரையும் அப்படி ஒரு கிப்ட யாரும் அவனுக்கு தந்திருக்க கூடாது. அது மாதிரி காட்டுங்கன்னு சொன்னாரு.

கடையிலிருந்த பையன் சற்றும் யோசிக்காமல் அருகில் இருந்த சின்ன பிளாஸ்டிக் குப்பை வாளியைக் காட்டி சார்...... இதை பேக்கிங் பண்ணிடவா? உங்க பிரண்டுக்கு மட்டுமல்ல, யாருக்குமே இந்த கிப்ட் கிடைச்சிருக்காதுன்னு சொன்னான். இந்தச் சூழல் உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?  யோசித்த படியே தொடர்ந்து வாசியுங்கள்.

கடையிலிருந்த பையன்  அப்படி சொன்னதும் ஙொய்யால வம்ப வெலைக்கு வாங்கிட்டான்டான்னு பக்கத்துல நின்ன நாங்க நினைச்சோம்ஆனால் அங்கே ஒரு ஆச்சர்யம் நிகழ்ந்தது.

கிப்ட் கேட்ட அந்த நபர்  யே.......ஆமால - ன்னு சொல்லிட்டு.... அழகான சின்ன குப்பை வாளி ஒன்றை வாங்கினார். பின்னர் ஒரு வெள்ளை பேப்பர் கட்டு, ஒரு நல்ல விலையுள்ள பேனா, கடிதம் அனுப்பும் கவர், ஒரு சின்ன லட்டர் பேடு ஆகியவைகளை அந்த கடையிலிருந்தே வாங்கி அதையெல்லாம் அதனுள் போட்டார்.

ஒரு சின்ன பேப்பரில்.....உன் எண்ணங்கள் இந்த காகிதம் வழியே திசையெங்கும் பயணிக்கட்டும். அதன் பொருட்டு வரும் நிராகரிப்புகள் இந்த வாளியில் குப்பைகளாக போகட்டும் என குறிப்பு எழுதி அதனுள் வைத்து கிப்ட் பேப்பரில் பேக்கிங் செய்யச் சொன்னார்.

சுமார் அரைமணி நேரமாக நடந்தவைகளை பார்த்துக் கொண்டிருந்த நான் மற்றும் அங்கிருந்தவர்கள் அசந்து போனோம். அவரிடம் பேசிய போது தெரிந்தது. அவரின் நண்பர் கவிதை, கதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவராம். பையன் சொன்ன யோசனை சூப்பர் என்றார்.

என் சக நண்பர் ஒருவரிடம் இந்த நிகழ்வின் ஆரம்பத்தை மட்டும் சொல்லி இந்தச் சூழல் உனக்கு ஏற்பட்டிருந்தால் என்ன செய்திருப்பாய்? என்று கேட்டேன்.......அவன் சொன்ன பதில்! முடியல.......நம்ம பிரண்டு நம்மளைப் போல தானே இருப்பான்!

Friday, 15 March 2013

தனித்துவம்

தானே நதியை
நகர வைப்பதாய்
சொல்கிறான்  தலைவன்.

அந்த தலைவனுக்கு
தன்னுயிரும் கொடுப்பதாய்
முழங்குகிறான் தொண்டன்.

தலைவனின் தந்திரமும்
தொண்டனின் தரித்திரமும்

தன்னைத் தீண்டிடாத
தனித்துவத்தோடு
தன்போக்கில் நகர்கிறது நதி!

நன்றி : சிகரம்

Monday, 11 March 2013

கோபி சரபோஜி கவிதைகள்

நிராயுதபாணியான நான்
போர் தர்மங்களை உன்னிடம்
போதிப்பதில் நியாயமில்லை தான்.

ஆனாலும் -
தயவு செய்து நிறுத்து
என்னில் உன்னை
கூர் தீட்டிப் பார்க்கும் யுத்தத்தை.
---------------------------------
இறந்தவனுக்காக
இரங்கற்பா பாடுகின்றான்
இருப்பவனின்
இருட்டுக்கு வெளிச்சம் ஏற்றாதவன்.
---------------------------------
பல முனைகளிலிருந்தும்
நதிகளைப் போல நகர்ந்து போகின்றோம்
நாடிழந்தவர்கள் என்ற ஏளனச்சொல்லோடு.

நதிகள் சங்கமிக்கும் ஓர் தினத்தில்
மீட்டெடுக்க மீண்டு வருவோம்.
அடைமழையாய்....ஆழிப் பேரலையாய்!
-----------------------------------

நன்றி : தழல்

Sunday, 10 March 2013

காத்திருங்கள்

அச்சமின்றி
அமைதியாய்
பதட்டமின்றி
பொறுமையாய் இருங்கள்.

நீங்கள்
தேடுவது போல எதுவும்
காணாமல் போகவுமில்லை
கள்வாடப் போகவுமில்லை.

தேடுகின்ற போதிமரம்
அகிம்சை
அன்பு
வீரம்
விவேகம் - இவையெல்லாம்
களமிறங்கி இருக்கின்றன
கணக்கெடுப்பு பணிக்காக
நூறு கோடியில்
எத்தனை கோடி
புத்தனும்
காந்தியும்
தெராசாவும்
விவேகானந்தரும் - கிடைப்பார்கள் என
தெரிந்து கொள்ளும் ஆவலில்

இந்த தலைமுறையில்
இல்லாவிட்டாலும்
அடுத்த தலைமுறையிலாவது
கணக்கெடுப்பை முடித்துவிட்டு
அதனதன் இடத்திற்கு
அவைகள் திரும்பி விடும்.

அதுவரையிலும்காத்திருங்கள்
நூறு கோடியில்
சில கோடியில்லாவிட்டாலும்
ஒரு நூறூபேராவது
கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையோடு...!

நன்றி : திண்ணை

Friday, 1 March 2013

கடவுளுக்கு வந்த சோதனை

சும்மாயிருந்த கடவுளை
அணிகல அலங்காரத்தோடு
வீதி உலாவுக்கு
அழைத்து வந்தான் மனிதன்

வீதிக்கு வந்த கடவுளை
எந்த வழியில் அழைத்துப்போவது
என்பதில் தொடங்கியது பீதி

ஆளுக்கொரு சர்ச்சையில்
காணாமல் போனது கடவுளின் அர்ச்சனை

வாய்ச் சண்டை
கை சண்டையாகிக் கலவரமானது
கலவரத்துக்கான ஆள் சேர்ப்பு பணியில்
தனித்து விடப்பட்டான் கடவுள்

வீதி உலா போகவந்தவன்
வீதியிலேயே நின்றான்
விக்கித்துப் போய்

கடவுள் மட்டும் தான் சோதிப்பானா?
சமயங்களில்
மனிதனும் சோதிப்பான் கடவுளை!

நன்றி : வார்ப்பு