Tuesday 16 July 2013

கவிஞனும் கடவுளும்

வார்த்தைகள்
படைப்புகளாக மலர்ந்து
படைப்பாளியை பின் தள்ளியது.

வேண்டுதல்கள்
வரங்களாக இறங்கி
கடவுளை பின் தள்ளியது.

எனினும் -
தன்னை பின் நிறுத்திய
வார்த்தைகளுக்காகவும்
வேண்டுதல்களுக்காகவும்
யுகங்கள் தோறும்
காத்திருக்கின்றனர்

கவிஞனும்
கடவுளும்!

நன்றி : அதீதம்

Friday 12 July 2013

நாடகத்தந்தை ஜார்ஜ் பெர்னாட்ஷா 100


பெர்னாட்ஷாவுக்கும் சர்ச்சிலுக்கும் எப்பொழுதும் ஏழாம் பொருத்தமாகத்தான் இருக்கும். ஒருமுறை தனது நாடகத்திற்கு வரும்படி சர்ச்சிலுக்கு இரண்டு டிக்கட்டுகளை அனுப்பி வைத்த ஷா கூடவே, “ இன்று எங்கள் நாடகத்தின் முதல் காட்சி. நீங்கள் வரும் போது உங்கள்  நண்பர் ஒருவரையும் அழைத்து வரலாம். அப்படி ஒருவர் உங்களுக்கு இருந்தால்...” என்ற கிண்டலான குறிப்பையும் இணைத்திருந்தார். இப்படி தனக்கே உரித்தான நகைச்சுவை உணர்வுடன் வாழ்ந்து காலத்தால் அழியா நாடகங்களை படைத்து அதன் மூலம் பெரும் வருவாயை தான் வாழ்ந்த காலத்திலேயே ஈட்டிய ஷாவின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பு.

Thursday 11 July 2013

எழுந்து வருவோம் உன்னிலிருந்து

(உலகமே கண்டிக்கும் படி மனிதாபியமானமற்ற நிலையில் இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்றதை கண்டித்து எழுதிய கவிதை)

பாலச்சந்திரன்
உதிரம் கொடுத்து உயிர் துறந்து
உரிமைகள் காத்தவர்களின்
அரணில் பூத்த பூவே

தப்பிப்பதற்கான வாசல்களனைத்தும் தடைப்பட்டதால் 
சிங்கத்தின் குகைக்கு வந்தாயோ?

சிதறிக் கலைந்தவர்களிடமிருந்து
உன்னைச் சிங்கம் தூக்கி வந்தது
தன் கொட்டிலில் வைத்து சிதைத்து எறியவோ?

மனித மாமிசம் உண்ணும் 
சைவபட்சிகளிடம் சிக்கியும்
பயமறியா உன் கண்களால்
பாயும் புலிகளை தேடினாயோ?

பதுங்குஅரண் பலகையில்
மரணத்தின் விளிப்பிலும்
சிதறிக் களைந்தவர்கள்
சீறி வருவார்கள் என காத்திருந்தாயோ?

உன் தேடலும் காத்திருப்பும் பொய்த்துப் போக
எமன் தாக்கிய கதையில்
உன் கனவு கலைந்து போனதோ?

வெற்றுடம்பில் உன்னைத்  தூக்கி வந்தவர்கள்
வெறியர்களாகிப் போனார்களோ?

ஆலயத்திற்குள் வீட்டிற்குள்
புத்தனை வணங்கியவர்கள்
பித்தர்களாகிப் போனார்களோ?

அப்பன் அறுத்தது போல்
இவன் வளர்ந்து அழித்து விடுவான் என
பதறினார்களோ? பயந்தார்களோ?

அதனால் தான் 
பசிக்கு புசிக்கத் தந்தவர்கள்
பசியாறும் முன்பே பறித்தெறியத்  துணிந்தார்களோ?

மதிகெட்ட அரக்கர்களாய்
மருண்ட உன் பார்வையை
மிருகங்களாகி விழுங்கினார்களோ?

புறமுதுகு காட்டா புறநானூற்று தமிழன்
என அறிந்து மார்பில் சுட்டார்களோ?

அன்பின் இளவலே பாலசந்திரா
உன்னைத் துளைத்த ரவைகள்
பூமிக்குள் புதைந்திருக்கிறது

புதுப்புனலாய் எழுவதற்கு
நானும் விழுகிறேன் என
ஓர் விதையாய் விழுந்தாய்

உன் தலைசாய்த்து
பலர் தன்மானம் உயர்த்தினாய்
எங்கும் சூழ்கிறதடா எரிதழல்

உன் கடைசித் துளிக் குருதியை
உறிஞ்சிச் சென்ற காற்று
உலகெங்கும் தாண்டவமாடுகிறதடா

விசாரணை கேட்பவர்கள் கேட்கட்டும்
உன்னிலிருந்து எழுந்து வருவோம் நாங்கள்

சிங்கத்தின் மயிரை பிடுங்கி எறியவும்
புத்தனின் சவலைப் பிள்ளைகள் சங்கறுக்கவும்.

நன்றி : காற்றுவெளி

Wednesday 10 July 2013

சமாதான சுவாசம்


ஆயுதங்களால் ஆட்குறைப்பு
செய்து கொண்டவர்கள்
ஆயுதங்களின் சந்தைகளில்
மந்தைகளாகிப் போனவர்கள்
சமாதானத்தின் சன்னல்கள் மீது
கல்லெறிந்தவர்கள்
அமைதியின் குரல்வளையை
தன்னாளுமையால் நசுக்கி எறிந்தவர்கள்
தன் நாட்டு வலிமையை
எதிரி நாட்டு விதவைகளில் கணக்கிட்டவர்கள்
ஆண்மையற்ற இவர்களிடம்
கையேந்தி காத்துக்கிடக்கிறது
உலக சமாதானத்தின்
வாசமும்....சுவாசமும்!

நன்றி : கவிஞன்

Sunday 7 July 2013

துளிப்பாக்கள்

கடைசி பந்தமும்
கை கழுவியது.
உதிர்ந்து விழும் பழுத்த இலை.
------------------------
பறவைகளும் பழகிவிட்டன
மாற்றங்களுக்கு.
மின்கம்பத்தில் கூடு.
-----------------------
ஏந்தி செல்கிறது
நிர்வாணத்தை.
ஆடை
------------------------
உயிரற்ற சிலை
உயிர் பெறுகிறது.
கர்ப்பகிரகம்.
-----------------------
இழுக்க,இழுக்க
சுருங்குகிறது.
புகைப்பவனின் வாழ்வு.
-----------------------
உரிக்கும் வரை
பொக்கிஷம்.
சுரண்டல் பரிசுசீட்டு.
------------------------
வாய்ப்புகளே இல்லாத
விளையாட்டு.
திருமணம்.
---------------------------
நன்றி : தமிழ் முரசு

Wednesday 3 July 2013

கதைகள் கேட்டு வளர்ந்தவள்


சிறைப்பறவையான பின்பும்
வனத்தில் தவமிருந்த சீதை

பந்தயக்கட்டத்தில்
சூது பொருளாய் நின்ற பாஞ்சாலி

கொங்கையைக் கிள்ளி
நகரையே தீக்குள் வைத்த கண்ணகி

தலையில் தாங்கி
எமனிடம் எகிறிய சாவித்திரி

கணவனுக்காய் வாழ்ந்தவள்களின்
கதைகள் கேட்டே வளர்ந்தவள்
சுயமாய் செய்வதற்கு
ஏதுமற்ற சூன்யத்தில்
மனைவி என்ற முகமூடி தரித்து
துருத்தி நிற்கும் தசைகளை
கணவனுக்கு தின்னக் கொடுத்து விட்டு

புணர்தல் நிமித்தமாய்
புணர்ந்து அடங்கியவனின்
பொழுதுக்கு சாட்சியாய்
விழித்தெழுகிறாள் நித்தமும்.

நன்றி : கீற்று

Monday 1 July 2013

பேருந்துப் பயணம்

பேருந்துப் பயணங்களில்
இருக்கை கிடைத்ததும்
தூங்கும் பாவனையோடு
கண்கள் செருகிக் கொள்கின்றன.

கர்ப்பிணியோ
மாற்றுத் திறனாளியோ
மூத்த குடியோ
தன்னருகில் வந்துவிடக்கூடாதென்ற
வேண்டுதல்களோடு.

நன்றி : முத்துக்கமலம்