Saturday, 27 February 2016

அடுத்த கட்டம்

பாக்யா இதழில் அடுத்த வாரம் முதல் வெளிவரப்போகும் நீங்களும் வெற்றியாளராகலாம் என்ற என் தன்னம்பிக்கைத் தொடருக்கான விளம்பரம்.....

Wednesday, 24 February 2016

”பெண்டுல” மனசு

தவிர்த்திருக்கக் கூடிய
சாத்தியங்கள் இருந்தும்
தர்க்க ரீதியாய் ஏற்றுக் கொண்ட
சுவடுகளில் குதித்து ஓடுகிறது காலம்.

ஆண்டுகளைத் தின்று
செரித்துப் புதைந்த பாதத்தின்
ஆறாம் விரல்களின் வெற்றிடத்தை
மறைத்து நிற்கின்றன கரையோரப் புற்கள்.

குழுமைக்குள் விட்டு வந்தவைகளில்
மக்கி உளுத்தது போக
உள்ளங்கைகளில் உறைந்தவைகள்
காலத்திற்கு ஒவ்வாதவைகளாகின.

தன் வேரடியின் மீது
தடம் பதித்த பேருந்தின் கூரையில்
கிளை உதறிய மலராய்
இன்னொரு வேரடி தேடி நீள்கிறது பயணம்.

புலப்பட்டு பயணித்த புள்ளிக்கும்
கானலாகி எழும் புள்ளிக்கும் இடையே
முட்களின் முனங்களோடு நகரும்
பெண்டுலமாய் ஆடிக் கொண்டிருக்கிறது மனசு!

நன்றி : பதாகை.காம்

Monday, 22 February 2016

”பூச்சாண்டி” காட்டும் ஆசிரியப் பெருந்தகை(லை)கள்!

நண்பரின் மகள் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். ஒன்பதாம் வகுப்பெல்லாம் முக்கியமில்லை. பத்தாம் வகுப்பில் பலம் காட்டினால் தான் எங்களுக்கெல்லாம் கெளரவம் என இப்போதே அந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் பாடத்தை அக்கறையாய் நடத்தி வருகிறார்களாம். இந்நிலையில் தன் சித்தியின் வளைக்காப்பிற்காக விடுப்பு விண்ணப்பம் கொடுத்து வகுப்பாசிரியையின் முறையான அனுமதி பெற்றுச் சென்று விட்டு மறுநாள் பள்ளிக்கு வந்த நண்பரின் மகளை அப்பள்ளியின் தலைமையாசிரியர் தண்டனை என்ற பெயரில் வகுப்பறைக்கு வெளியில் நிறுத்தி வைத்திருக்கிறார். அந்த அவமானத்தால் அக்குழந்தை கண்ணீர் வடிய நின்ற போதும் அது பற்றிக் கவலைப் படாத அந்த ஆசிரியர் உனக்கு இன்னைக்கு இப்படி தண்டனை தந்தால் தான் மற்ற பிள்ளைகள் இனி லீவு எடுக்க மாட்டார்கள் என உபதேசம் வேறு செய்திருக்கிறார்.
வேறு ஒரு ஆசிரியையின் மூலம் தகவலறிந்து அக்குழந்தையின் அம்மா சென்று விசாரித்த போது கொஞ்சம் நீட்டி முழங்கிய அந்த ஆசிரிய அகராதி பத்தாம் வகுப்புக்கான பாடங்களை நடத்த ஆரம்பிச்சிட்டோம், இனி லீவு எடுத்தா பெயிலாக்கிடுவேன். டி.சி.யைக் கொடுத்துடுவேன் எனக் கொஞ்சம் பூச்சாண்டி காட்டியதோடு இனி மேல் இரவு எட்டு மணி வரைக்கும் கிளாஸ் இருக்கும். அதன் பிறகு தான் பிள்ளைகளை வீட்டிற்கு அனுப்பி வைப்போம். காலையில் வழக்கத்திற்கு மாறாக சீக்கிரம் கிளாஸ் ஆரம்பித்து விடும். குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து விட வேண்டும். காரணம் எல்லாம் சொல்லக் கூடாது எனச் சொல்லியனுப்பி இருக்கிறார்.
குழந்தையின் கல்வி என்பதால் பொறுமையாக அவர் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டு குழந்தையை வகுப்பறைக்குள் இருக்க அனுமதிக்கக் கோரியதை நீண்ட கெஞ்சலுக்குப் பின்பே அந்த ஆசிரிய கெளரவம் ஏற்று இருக்கிறது!.
வறுமையினால் பிள்ளைகள் வராமல் பாதியிலேயே பள்ளிப்படிப்பை முடித்துக் கொள்வது ஒரு புறமிருக்க இப்படியான ஆசிரிய வேக்காடுகளின் அக்கப்போருக்குப் பயந்தும் இப்பொழுதெல்லாம் பிள்ளைகள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்த ஆரம்பித்து விடுகின்றார்கள். கற்றுத் தரும் பணியில் இருப்பவர்கள் காசுக்கு மாரடிப்பவர்களாக மாறி வருவது வசதியற்ற குழந்தைகளின் எதிர்காலக் கல்வியை காவு வாங்கி விடும் போல் இருக்கிறது!
இன்றையக் கல்விக்கூடங்களைத் தாங்கிப் பிடிக்கத் தகடாய் தேயும் சில ஆசிரியர்களின் செயல்பாடுகளைப் பார்க்கும் போதெல்லாம், குழந்தைகளை விட அவர்களுக்குப் போதிக்கும் ஆசிரியர்களுக்குத் தான் உளவியல் கல்வி தேவையாய் இருக்கிறதோ? என்று தோன்றுகிறது!!
தகை சான்ற ஆசிரியப் பெருமக்கள் யாரேனும் முன் நின்று அதைத் தன் சமூகத்திற்கு, தங்களின் ஆசிரியச் சாதிக்குத் தந்தால் அவர்களுக்கு மட்டுமல்ல இந்தியாவின் எதிர்காலம் என நம்பப்படும் குழந்தைகளுக்கும் நல்லது!!

Friday, 19 February 2016

பதக்கங்களால் ஜொலித்த சிங்கப்பூர்!

தென் கிழக்காசிய விளையாட்டுகள் (SOUTH EAST ASIAN GAMES) என்பதன் ஆங்கில முதல் எழுத்தைச் சேர்த்துச் சுருக்கமாக “சீ விளையாட்டு” (SEA GAMES) என்றழைக்கப்படும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளை இதற்கு முன் சிங்கப்பூர் மூன்று தடவை (1973, 1983, 1993) ஏற்று நடத்தியிருந்த போதும் இம்முறை அது சிங்கப்பூரின்  பொன் விழாவைக் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாகவும் திகழ்ந்தது. இருபத்தெட்டாவது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளை ஜீன் மாதம் ஐந்தாம் தேதி தொடங்கி பதினாறாம் தேதி வரை நடத்தி கோலாகலப் படுத்திய சிங்கப்பூர் தன் மணி மகுடத்தில் மற்றுமொரு வைரத்தை சூட்டிக் கொண்டது.

தென்கிழக்குப்பிராயந்தில் இருக்கும் நாடுகளுக்கிடையேயான உறவுகளை ஊக்குவிக்கும் வகையில் தாய்லாந்து, பர்மா(மியான்மார்), மலாயா(மலேசியா), லாவோஸ், தென் வியட்நாம், கம்போடியா, (சிங்கப்பூர் பின்னர் இணைந்தது) ஆகிய நாடுகளை நிறுவன உறுப்பினர்களாக கொண்டு SEAP ( SOUTHEAST ASIAN PENINSULA GAMES) என்ற கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் முதல் விளையாட்டுப் போட்டிகள் தாய்லாந்தின் தலைநகரான பாங்காங்கில் தொடங்கியது. அதன்பின்  புரூணை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் அதில் இணைக்கப்பட்டதையடுத்து SEAP கூட்டமைப்பு 1977 ம் ஆண்டு தென் கிழக்காசிய விளையாட்டுகள் கூட்டமைப்பு ( SOUTH EAST ASIAN GAMES FEDERATION - SEAGF) என்று பெயர் மாற்றம் கண்டது. 2003 ஆம் ஆண்டு கிழக்கு தைமூர் கடைசியாக இவ்வமைப்பில் இணைந்தது.

Thursday, 18 February 2016

குறுக்குக் கோடு குணாவும், நாள்காட்டியும்

ஒரு விபத்து போலத் தான் அது நடந்தது என்று கேட்டும், வாசித்தும் அறிந்திருந்த குணா அதன் உள்ளார்ந்த பொருளை இப்போது உணரவும் தொடங்கி இருந்தான். தலையணையின் அருகில் வைத்திருக்கும் நாள்காட்டியில் வேலைக்குச் செல்லும் தினங்களைக் குறுக்குக் கோடிடுவது அவனின் வழக்கம். அதனாலயே ”குறுக்குக் கோடு குணா” என்ற பட்டப் பெயரில் அழைக்கப்பட்டான். கடந்த மூன்று நாட்களாக நாள்காட்டியில்  குறுக்குக் கோடிட முடியாமல் போனதை அவனின் துரதிருஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

பணிமனையில் கப்பலின் மேல் தளத்தில் அவனோடு வேலை செய்து கொண்டிருந்தவன் கால் இடறி கடலுக்குள் தவறி விழுந்தும் அவனைக் காப்பாற்றுவதற்காக இவனும் கடலுக்குள்  குதித்தான். அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளும், மீட்பு நடவடிக்கைகளுக்கான அதிகாரிகளும் அவ்விருவரையும் கரைக்குக் கொண்டு வந்தனர். முதலுதவிகள் முடிந்ததும் ”நண்பேண்டா” என மற்றவர்களின் பாராட்டுப் பூரிப்பில் நின்று கொண்டிருந்த குணாவிடம் பாதுகாப்பு அதிகாரி நாளை பணிமனைக்குச் செல்லாமல் என் அலுவலத்திற்கு வந்து விடு என்று சொன்ன போது தான் ஏதோ தவறாகி விட்டது என அவனுக்குத் தோன்றியது.

Wednesday, 17 February 2016

புகைப்பட ஆல்பம் - 21

சுப்ரஜா, கீழை அ. கதிர்வேல் , சீர்காழி செல்வராஜு,பெரியசாமி ஆகியோருடன்

Monday, 15 February 2016

அவர் சாகமாட்டார்

வைத்திலிங்கம் என்ற மனிதரின் இறப்பிற்குப் பின்னே மூழ்கிக் கிடக்கும் ஒரு உண்மையை அந்த இறப்பு வீட்டில் நடைபெறும் சம்பவ விவரிப்புகளால் மெல்லிய நகைச்சுவை இழையோடச் சொல்லும் கதை ”அவர் சாகமாட்டார்”. இக்கதையின் ஆசிரியர் சே.வெ.சண்முகம். அவரின் சிறுகதைத் தொகுப்பில் இக்கதை இடம் பெற்றுள்ளது.

”அவர் சாகமாட்டார்” என்றும், ”திருவாளர் வைத்திலிங்கம் காலமாகி விட்டார்” என்றும் அடுத்தடுத்துத் துவங்கும் வரிகளின் முரண் யுக்தி கதைக்குள் நம்மைத் தொடர்ந்து பயணிக்க வைக்கிறது. கதையின் முக்கியக் கதாபாத்திரத்தை முதலிலே சாகடித்து விடும் துணிச்சலான முயற்சியை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே ஆசிரியர் செய்து பார்த்திருப்பது வியப்பைத் தருகிறது,

இறப்பு வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் துல்லியமான காட்சிப் படுத்தல்கள் கதையின் பலம்.

Saturday, 13 February 2016

உந்துதல் தந்த உபதேசங்கள் - 4

உன்னை எங்கு, எப்படி, யாருக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்பதில் உன் நண்பன் கொண்டிருக்கும் தெளிவு முகமூடிக்குப் பின் இருக்கும் அவனின் சுய முகத்தை காட்டியே தீரும்.

இடம் பெயர்தல் என்பது கிளையிலிருந்து உதிரும் இலையைப் போல மட்டுமே நடக்கும் என நினைத்திருப்பது மிகப் பெரிய தவறு. சில நேரங்களில் அது மரத்திலிருந்து முறியும் கிளையைப் போலவும் நிகழலாம்!
கையில் குடத்தை வைத்திருந்தால் மட்டும் போதாது. அதை எப்படிக் குழாயடியில் வைக்க வேண்டும் என்பதையும் தெரிந்திருக்க வேண்டும். இலக்குகளை விட அதைக் கண்டடையும் வழிமுறைகள் அவசியம்.

விளக்கின் சுடரை நீ ஏற்றி வைத்தாய் என்பதற்காக அந்தச் சுடர் எழுந்தசையும் திசையை தீர்மானிக்க முயலாதே! அபத்தங்களின் வழி அற்புதங்களை ஒரு நாளும் நிகழ்த்திக் காட்ட முடியாது!!

அடையக் கூடிய விசயங்களை மட்டும் இலக்காக்கிக் கொள்வதற்குப் பதில் இலக்காக்கிக் கொள்ளும் விசயங்களை அடைவதற்கான முயற்சிகளைச் செய்து பார். அந்த முயற்சி உன்னையே உனக்கு அடையாளம் காட்டுவதற்கான வாய்ப்பாகவும் மாறலாம்.

Wednesday, 10 February 2016

சீனப் புத்தாண்டு விடுமுறையும், சந்திரிகையின் கதைத் தேடலும்!

குழந்தைகள் பாடம் படிக்கிறார்களோ இல்லையோ நம்மைப் படிக்க வைத்து விடுகிறார்கள். தமிழ் ஒர்க்ஷீட்டிற்காக பாரதியார் எழுதிய நூல்களின் பட்டியல் வேண்டும் என்றும் அதில் நான்கு எழுதி விட்டதாகவும் பாக்கி ஒன்று மட்டும் சொல்லுங்கள் என்றாள் மகள். நினைவில் இருந்தவைகளை அவள் முன்பே எழுதி விட்டதால் புதிதாகச் சொல்லலாம் எனச் சட்டென நெட்டைத் தட்டியதில்சந்திரிகையின் கதைஎன்ற ஒரு தலைப்புக் கிடைத்தது. சொன்னதும் குறித்துக் கொண்டவள் அதன் பின் தன்னுடைய குறுக்கு விசாரணையை ஆரம்பித்தாள். அந்தக்கதை என்னன்னு ஓரலாச் (ORAL) சொல்லுங்க என்றாள். குழந்தைகள் விசயத்தில் உணமையைச் சொல்வது அவசியம் என்பதால்எனக்கும் தெரியாதேஎன்றதும், ”சரி...தேடிப் படிச்சு வையுங்க, நான் சாயங்காலம் இல்லைன்னா நேரம் கிடைக்கும் போது கேட்டுக்கிறேன்” என்றாள். அவனவன் சீனப் புத்தாண்டு லீவுக்கு வீட்டுல தூங்கிக் கிடக்கானுக. ஊர் சுத்தக் கிளம்பிட்டானுக. நான் சந்திரிகையின் கதை தேடிக் கிட்டுக் கிடக்கேன். எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேனும்னு சும்மாவா சொல்லி வச்சாங்க!