Thursday 4 January 2024

வணிகத் தலைமைகொள் - வெற்றிக்கான சூட்சுமப் பெட்டகம்

வணிகத்தில் வெற்றிக்கொடி நாட்டியவர்கள் தாங்கள் ஜெயித்த கதைகளை எழுதி இருக்கிறார்கள். தொகுப்பாக்கி இருக்கிறார்கள். அவைகள் பெரும்பாலும் தன்னம்பிக்கை நூலின் சாயல் தரித்தே இருக்கும். அதில் இடம் பெற்றிருக்கும் கதைகள், உதாரணங்களில் பெரும்பகுதி மறு வாசிப்புக்குரியதாகவே அமைந்திருக்கும். தவிர, வணிகக் கனவை சுமந்து திரிபவர்களுக்கும், அதன் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கும் வணிகம் செய்வதன் பொருட்டு தங்களையும், ஆரம்பிக்க போகும் தொழிலையும் கட்டமைப்பதற்கான வழிகாட்டல்களை, செயல்படுத்தத் தகுந்த ஆலோசனைகளை தெளிந்த நீரோடையாகக் கொண்டிருக்காது. இத்தகைய குறைகள் இல்லாது ஒரு வழிகாட்டிக் கையேடு உங்களுக்கு வேண்டுமெனில் ராம் வசந்த் எழுதி விகடன் வெளியீடாக வந்திருக்கும் “வணிகத் தலைமைகொள்தொகுப்பை கையில் ஏந்திக் கொள்ளலாம்.

எந்தத் தொழிலை தொடங்குவது? என்பதை அவரவருக்குரியதாக ராம் வசந்த் விட்டு விட்டார். தொழிலைத் தொடங்கிய பின் அதில் முன்னேறிச் செல்வதற்கான அறி(ற)வுரைகளை தன் அனுபவங்கள் ஊடாக  தொகுப்பு முழுக்கச் சொல்லிச் செல்கிறார். நூலை வாசிக்க, வாசிக்க ஒரு நேரடி வகுப்பில் அமர்ந்து கேட்கும் உணர்வு ஏற்படுகிறது என்றால் அது மிகையில்லை. சந்தேகம் இருப்பின் வாங்கி வாசித்து நுகரலாம்.