Tuesday, 27 January 2015

செல்லக்கிளியின் தம்பி

நந்தன் ஸ்ரீதரனின் தாழி என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதை ”செல்லக்கிளியின் தம்பி”. எதிர்வினையாற்றாமல் ஏவல் வேலை செய்யும் சென்றாயன் ”மெண்டல்” (பைத்தியம்) என்ற பெயருக்குரியவனாய் மாறிப்போன வலியைச் சொல்லும் கதை. 

அந்த ஊர் நாட்டாமையின் ஒரே மகள் செல்லக்கிளி. திடீரென நாட்டாமை இறந்து போக அவரின் உடன் பிறந்தவர்களால் செல்லக்கிளியும், அவளுடைய அம்மாவும் ஒதுக்கப்படுகிறார்கள். சுய சிந்தனையின்றி செயல்படும் செல்லக்கிளியை திருமணமான மூவரோடு ஓய்வு பெறும் வயதுடைய ஒருவரும் சுவைத்து எறிய அவள் கருவுறுகிறாள். குடும்ப மானத்தைக் காக்க அவளை ஆற்று நீரில் மூழ்கடித்து கெளரவக் கொலை செய்ய முடிவு செய்து அவள் கண்முன்னாலயே உறவினர்கள் அதற்கான திட்டத்தையும் போடுகின்றனர்.

அதை நிறைவேற்ற வரும் இருவர் அவளை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தி விடக்கூடாது. என்பதற்காக அவளோடு அவளின் உடன்பிறவா தம்பி சென்றாயனை அனுப்பி வைக்கின்றனர். நடக்க இருப்பவைகளைத் தெரிந்திருந்த போதும் உடன் வரும் தம்பியோடு விளையாட்டு காட்டிக் கொண்டு வரும் செல்லக்கிளி திடுதிப்பென ”எப்புடிடா நான் செத்துப் போவேன்?” எனக் கேட்கும் போது அவனுக்கு வந்த அதே அதிர்வு நம்மையும் கவ்விக் கொள்கிறது.

Monday, 26 January 2015

ஓலைக்கிளி

நகரத்தில் வசிக்கும் மருத்துவரை சவட்டி என்ற பட்டப்பெயரில் அழைக்கப்படும் பரமன் பலவருடம் கழித்து வயது வந்த பெண்ணோடு சந்திக்க வருகிறான். தன் மகள் என அறிமுகப்படுத்தும் அவளைப் படிக்க வைப்பதற்காக பண உதவி கேட்டு இரண்டாயிரம் ரூபாய் வாங்கிச் செல்கிறான். அவரிடம் வாங்கியதைப் போலவே தெரிந்தவர்களிடம் எல்லாம் ஆளுக்கு இரண்டாயிரம் என வசூலிக்கும் சவட்டி அந்தப் பணத்தின் மூலம் ஒரு நல்ல காரியத்தைச் செய்து முடிக்கிறான். எளிதில் நம்மால் யூகிக்க முடியாத அதை சவட்டியின் குணங்களோடும், வாழ்வியல் முறைகளோடும் சொல்கிறது ”ஓலைக்கிளி” கதை. இக்கதை எஸ்.ராமகிருஷ்ணனின் ”மழைமான்” தொகுப்பில் உள்ளது.

”எம்மான் என் பேரை எல்லாம் ஞாபகம் வச்சிருக்கீங்க. அந்தப்பேரு எனக்கே மறந்து போச்சு” என்ற வரியின் வழி இட்டபெயர்களை பட்டப்பெயர்கள் மறக்கடித்து விடும் அவலத்தோடு மருத்துவரும், சவட்டியும் சந்திக்கும் கால இடைவெளியையும் -

ரசிக்க – சிந்திக்க -1

இக்கால தெருவிளக்கின் தந்தை, மின்னலுக்கும், மின்சாரத்திற்கும் ஒரே தன்மை இருப்பதைக் கண்டுபிடித்தவர், மூக்குக் கண்ணாடியின் தந்தை, சூட்டடுப்பை கண்டுபிடித்தவர், அசைந்தாடும் நாற்காலியை கண்டுபிடித்தவர் இப்படி பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரான அமெரிக்காவின் பெஞ்சமின் பிராங்கிளின் ஓர் இலக்கியக் கூட்டத்திற்காக பாரீஸ் நகருக்கு சென்றிருந்தார். அந்த கூட்டத்தில் வாசிக்கப்பட்ட தொடக்க உரையைக் கேட்டு மக்கள் அவ்வப்போது கைதட்டிய வண்ணமிருந்தனர். பிராங்கிளினுக்கு பிரெஞ்சு மொழி தெரியாததால் எந்த இடத்தில் கை தட்ட வேண்டும் என புரியவில்லை. அதேநேரம் எல்லோரும் கை தட்டும் போது தான் மட்டும் வெறுமனே உட்கார்ந்து கொண்டிருக்கவும் அவருக்கு விருப்பமில்லை. எனவே அவருக்குத் தெரிந்த பெளலர் என்கிற அம்மையாரைப் பார்த்து அவர் கைதட்டும் பொழுதெல்லாம் தானும் கைதட்டினார்.

Thursday, 22 January 2015

கடவுளின் நிலைக்கு உயர முடியுமா?


தன் அண்ணன் வாலியிடமிருந்து அமைச்சர்கள் சகிதம் தப்பிய சுக்ரீவன் எங்கு சென்று பதுங்கினாலும் தன்னை வாலி துப்புறுத்தாமல் விடமாட்டான் எனக் கவலைப்பட்டான். அதனால் அவனிடமிருந்து தப்ப தனக்கு ஒரு பாதுகாப்பான இடம் அவசியம் என்பதை உணர்ந்தவன் வாலி நுழைவதற்கு 144 தடையுத்தரவு நடப்பில் இருந்த ரிஷ்யமுக பர்வத மலைக்கு வந்து சேர்ந்தான். ஒருநாள் மலையின் உச்சிக்கு வந்த சுக்ரீவன் அங்கிருந்த பம்பா நதிக்கரையில் ஆயுதங்களுடன் ஆட்களின் நடமாட்டத்தைக் கண்டதும் பதறிப் போய் விட்டான். அவர்கள் யாரெனத் தெரியாத போதும் எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிந்தது. ஆனாலும் அவனுக்கு திருப்தி வரவில்லை. மரவுரி ஆடைகள் தரித்திருந்த அவர்களின் தோற்றமும், உடற்கட்டும் சுக்ரீவனை சந்தேகப்பார்வை கொள்ள வைத்தது. அண்ணன் வாலியின் உளவாளிகளாய் இருப்பார்களோ? என யோசித்தவன் தன்னிடம் அமைச்சராக இருக்கும் அனுமனை அழைத்து உடனடியாக மாறு வேடமிட்டுச் சென்று வந்திருப்பவர்கள் யார்? என அறிந்து வா என உத்தரவிட்டான்.

Wednesday, 21 January 2015

நேர்மை

உச்சரிப்பதைப் போல இலகுவாய் இல்லை
வாழ்க்கையில் கைக்கொள்வதும்
நித்தம் கடைப்பிடிப்பதும்.
பல நேரங்களில்
முகமாய் இல்லாமல்
முகமூடியாய் மாறி விடுகிறது.
ஏதோ ஒரு நிலையில்
எல்லா நாளும்
என்னிலிருந்து நழுவி நகர்கிறது.
மீட்டெடுத்து முகமாக்க
எத்தனிக்கும் போதெல்லாம்
பிழைக்கத்தெரியாதவன் என்ற வசையே மிஞ்சுகிறது.
ஆயினும் –
நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது
முகமூடியை முகமாக்குவதற்கான யுத்தம்!

நன்றி : சொல்வனம்.காம்

Sunday, 18 January 2015

”சுலைமானி” ஆபரேட்டர்உங்களுக்கென்னங்க?

வட்டி கட்டுறவனுக்குத் தான் தெரியும். வலியும், வேதனையும்.

பதினைந்து நாளுன்னு சொன்னீங்க. ஆனால் மூனு மாசமாச்சு. இப்ப இன்னும் பத்து நாளாகும்னு சொன்னா என்ன அர்த்தம்? தெண்டமா வட்டிக்காசு போகுது. அதைக்கூட கட்ட வழி இல்லாம சொந்தக்காரனுககிட்ட கை மாத்தா வாங்கிக் கட்டிக்கிட்டு இருக்கேன். தெரியுமா?

முடியும்னா செய்யுங்க. சொல்லுங்க. இல்லைன்னா பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுங்க. நான் வேற எடம் பார்த்துக்கிறேன். எனக்குப் பின்னாடி பணம் கட்டினவனெல்லாம் போய் சம்பளம் வாங்கி அனுப்பிட்டான். ஊருல பார்க்குற பய எல்லாம் எப்பப் போற? எப்பப் போற? ன்னு கேட்டே பாதி உசுர எடுக்குறானுக என மனனம் செய்து வந்ததைப் பள்ளியில் ஒப்பிக்கும் குழந்தையைப் போல பட படவென பொரிந்து தள்ளினான் முருகேசன். அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தவரோ எதுவும் பேசவில்லை. ஆனால், முருகேசனோடு வந்திருந்த அவன் மச்சான் பாண்டி, ”மாப்ள…….கொஞ்சம் பொறுமையா இரு. படபடன்னு பேசி என்ன ஆவப் போகுது? அதுவும் இவங்க வேலைக்கு இருக்குறவங்க. இவங்க கிட்ட சத்தம் போடுறதால என்ன பிரையோசனம்? சாத்தையா அண்ணன் வரவும் பேசிக்கிடலாம். அதுவரைக்கும் பேசாம அமைதியா உட்காரு” எனச் சொல்லிக் கொண்டு அருகில் இருந்த சோபாவில் அவனை உட்கார வைத்தான்.

Tuesday, 13 January 2015

மெளன அழுகை - 3

(திண்ணை இணைய இதழில் “மெளன அழுகை” கவிதை நூல் குறித்து கவிஞரும், கட்டுரையாளருமான தேனம்மை லெஷ்மணன் எழுதி உள்ள அறிமுக உரை)

கிட்டத்தட்ட 15 நூல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார் கோபி. அதில் ஒன்று "மௌன அழுகை" கவிதைத் தொகுதி. முன்னுரை வழங்கியவர் கல்கியின் தலைமைத் துணையாசிரியர் அமிர்தம் சூர்யா. அணிந்துரை ஈரோடு சம்பத்.
புலம் பெயர் வாழ்வின் துயரங்கள் அங்கங்கே கவிதையாகி இருக்கின்றன. ஈழத் தமிழரின் அவல வாழ்வும் பாலசந்திரனின் மரணமும் கவிதையாகி அவஸ்தைப்படுத்துகின்றன. "எழுந்து வருவோம் உன்னிலிருந்து" என்ற கவிதையில்

Monday, 12 January 2015

வின்ஸ்டன் சர்ச்சில் 100 - 1

(திண்ணை இணைய இதழில்வின்ஸ்டன் சர்ச்சில் 100நூல் குறித்து  கவிஞரும், கட்டுரையாளருமான தேனம்மை லெஷ்மணன் எழுதி உள்ள அறிமுக உரை)


வின்ஸ்டன் சர்ச்சில் பற்றிய தகவல்களைத் தொகுத்து தமிழில் வழங்கி இருக்கிறார் கோபி. மிக அரிய முயற்சி. இதில் நான் ஆச்சர்யப்பட்டது சர்ச்சிலின் மொழி வளம் பற்றி. மிகப் பெரும் அரசியல்வாதி என்பதைத் தவிர ஆற்றலுள்ள பேச்சாளரும் கூட என்பதையும் அரிய முடிந்தது. பலமுறை இறப்பின் விளிம்புகளைத் தொட்டவர். அரசியல் சதுரங்கத்தில் சில முறை வெற்றியடைந்தவர் என்று பல தகவல்களைப் பகிர்கிறார் கோபி. இரண்டாம் உலகப் போரைப் பற்றி மட்டுமே நமக்குத் தெரியும். அதன் முன் பின்னான அவரின் வாழ்வியல் பற்றி அருமையான விவரிப்பு இந்நூலில் உள்ளது. மிக அருமையான சுவாரசியமான தகவல் களஞ்சியம்.

நன்றி : திண்ணை.காம்

Saturday, 10 January 2015

காமராஜர் வாழ்வும், அரசியலும்

காமராஜர் அளவுக்கு மக்களை மெய்யான அக்கறையுடன் நேசித்த, மதித்த இன்னொரு தலைவர் இன்றுவரை இங்கே தோன்றவில்லை. சாதி, மதம், கட்சி அபிமானம் அனைத்தையும் கடந்து இன்றுவரை அவர் மக்கள் தலைவராக நீடிப்பதற்குக் காரணம் தமிழகத்து மக்கள் அவர்மீது கொண்டிருக்கும் அசைக்கமுடியாத நேசம்தான்.
இந்தப் புத்தகம் காமராஜரின் அசாத்தியமான வாழ்வையும் அவருடைய அரசியல் பங்களிப்பையும் எளிமையாக அறிமுகம் செய்துவைக்கிறது. காமராஜர் ஆட்சி எப்படி இருந்தது என்பதையும் மீண்டும் காமராஜர் ஆட்சியைக் கொண்டுவருவோம் என்று இன்றும் கட்சிகள் இங்கே முழங்கிக்கொண்டிருப்பது ஏன் என்பதையும் இதிலிருந்து ஒருவர் அறியமுடியும்.

சனியைப் பிடித்த சனி!

இப்ப அவனுக்கு நேரம் சரியில்ல. சனி பிடிச்சு ஆட்டுது. ஏழரைச் சனி நடக்குதாம். அதுனால எதைத் தொட்டாலும் ஏழரை தான்! ஒன்னுமே வெளங்க மாட்டேங்குது. துலங்க மாட்டேங்குது. சனிச் சுழி சும்மா இருக்குமா? அதான் அவனைப் போட்டு சுழட்டியடிக்குது. இப்படியான மிரட்டல்களையும், பயமுறுத்தல்களையும் தனக்கே உரிய அடையாளமாகக் கொண்டிருப்பவர் சனிபகவான். இந்தப் பகவானுக்குப் பலம் மிக்க பகவான்கள் பலர் பயந்து ஓடியிருக்கின்றனர். ஒளிந்திருக்கின்றனர். இப்படிப்பட்ட சனிபகவானையே ஓட,ஓட விரட்டியடித்த ஒருவர் இருக்கிறார். அவர் தான் அனுமன்!

சனிபகவான் அனுமனிடம் சிக்கி அவஸ்தைப்பட்டதற்கு ஒரு நெடுங்கதை உண்டு. அரக்கர்களின் அரசனான இராவணன் தன் பலத்தால் இறைவனையும் வெல்லும் வலிமை கொண்டிருந்தான். ஒவ்வொருவராக வீழ்த்தித் தன் வெற்றியை நிலை நாட்டி வந்த வேளையில் குபேரனை வென்று அவனுடைய நாடான இலங்கையையும் கைப்பற்றிக் கொண்டான். ஏழேழு உலகங்களையும் வெல்லும் ஆவல் கொண்டிருந்தவனுக்கு பம்பர் பரிசாய் குபேரனின் வாகனமான புஷ்பக விமானம் கிடைத்தது. ஆகாயத்தில் பறக்கும் சக்தி கொண்ட அவ்விமானம் மூலம் உலகம் முழுக்க வலம் வந்தான்.

Thursday, 8 January 2015

இராமனின் சந்தேகமும், அனுமனின் விளக்கமும்

எவரிடமாவது கொஞ்சம் முகம் கோண வசவு வாங்கினாலே வதங்கிப் போய்விடுவோம். இந்த வசவு, ஏச்சு, கோபம் எல்லாம் இந்தக்காலத்தில் தான். அந்தக்காலத்தில் எல்லாம் சாபம் தான்! கடுப்பேத்துறார் மை லார்ட் என்பது மாதிரி முனிவர்களும், அவர்கள் வழிபடும் கடவுளும் தனக்கு எதிராக யாராது குழிபறிக்கும் வேலைகளைச் செய்தாலோ, தனக்கு விரோதமாக நடந்து கொண்டாலோ உடனே சாபத்தை கொடுத்து ஒடுக்கி விடுவார்கள். வரம் கொடுக்கும் வாயாலயே சாபங்களும் கொடுக்கப்பட்டன. கூடவே அதற்கான பரிகாரங்களும் இலவச இணைப்பாய் வழங்கப்படுவதுண்டு. சில சமயங்களில் அதில் விதிவிலக்கும் இருக்கும்.

ஒரு கடவுள் இன்னொரு கடவுளுக்கே சாபம் கொடுத்து வந்த அந்தக்காலத்தில் முனிவர்களும், தேவர்களும் தங்களுக்கு விருப்பமான கடவுளை வேண்டி வரம் வாங்கி அதைச் சாபங்களாக மாற்றி தங்களுக்கு எதிரானவர்கள் மீது எறிந்து வந்தனர். அப்படி ஒரு முனிவரால் சாப அம்புக்கு உள்ளானவன் தான் நளன்!

Wednesday, 7 January 2015

விதி விலக்கு


அம்மாவின் குறை சொல்லல்
அப்பாவின் குற்றம் காணல்
சகோதரியின் சீண்டல்கள்
சகோதரனின் எதிர்வினைகள்
பிள்ளைகளின் உபத்திரங்கள்
உறவுகளுக்குரிய செய்முறைகள்
தவணைக்காக காத்திருக்கும் தேதிகள்
இவைகளோடு
இயலாமைகளின் ஆற்றாமையையும்
இல்லாளிடமிருந்து
நாள்தவறாது கடத்தி வரும்
அலைபேசியின் அதிர்வலைகள்
விதிவிலக்காய் ஏந்தி வருகிறது.
தூக்கம் செரிக்கா சில பின்னிரவுகளில்
அவளின் சப்தமில்லா மென் முத்தங்களையும்
காலத்தால் காயாதிருக்கும் சுக நினைவுகளையும்!

நன்றி : மகாகவி மாத இதழ்

Monday, 5 January 2015

மரண வேதனை

(ஏர் ஆசியா விமானம் 8501ல் உயிரிழந்தவர்களுக்கான  அஞ்சலி கவிதை )


நன்றி : தமிழ்முரசு நாளிதழ்

Sunday, 4 January 2015

குழந்தைகள் கற்றுத்தரும் பாடம்


நியூ இயர் கொண்டாட்டத்திற்காக வீட்டில் எல்லோரிடமும் காசு வசூலிக்கப் போகிறோம். உங்கள் பங்கு எவ்வளவு? என்றாள் மகள். இந்தப் புத்தாண்டிற்கான செலவை நானே மொத்தமாக ஏற்றுக் கொள்கிறேன். உன் லிஸ்டைச் சொல்லு என்றேன். மகளும், மகனும் சொன்னதைக் கேட்ட மாத்திரத்தில் அவ்வளவு எதற்கு? என ஒரு கேள்வியைக் கேட்டு விட்டு இருவரும் ஆளுக்கொரு கேக், பிஸ்கட், சாக்லெட் மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன். சட்டென மகள் கேட்டாள். டாடி……..வீட்டில் எல்லோரும் நியூ இயர் கொண்டாடுவதற்கு தான் நாங்கள் காசு வசூல் பண்ண நினைச்சோம். எங்களுக்கு மட்டும் வாங்கித் தந்தா மத்தவங்களுக்கு எப்படி கொடுப்பது? என்றாள். கூட்டுக்குடும்பமாக வாழும் வீட்டில் என் பிள்ளைகளை மட்டும் நான் கவனத்தில் கொண்டது அப்பொழுது தான் எனக்கு உரைத்தது. குற்ற உணர்வோடு உன் பிளானைச் சொல்லு என்றேன். நம்ம வீட்டுல மொத்தம் எட்டு பேர். ஆளுக்கொரு கேக் வருகிற மாதிரி ஒரு பெரிய கேக், ஆளுக்கொரு சாக்லெட், ஆளுக்கொரு பிஸ்கட் பாக்கெட் வாங்கி கொடுங்க. நானும், தம்பியும் அதை நியூ இயர் கிஃப்டா பேக் பண்ணி எல்லோருக்கும் கொடுத்து விஷ் பண்ணிடுறோம் என்றாள். கூட்டுக் குடும்பமாய் இருப்பதில் நாம் பெருமை கொண்டாலும் அதைச் சிதையாமல் நகர்த்திச் செல்வது எப்படி என்பதைப் பல நேரங்களில் குழந்தைகளே கற்றுத் தருகிறார்கள்.