Monday, 28 July 2014

ஆம்பளை பிள்ளையை அடிச்சி வளர்க்கனும்!?


ஏழு மணிக்கு தான் எழுந்திருக்கிறான்
ஹோம் ஒர்க் ஒழுங்கா பண்ணமாட்டேங்கிறான்
ஸ்கூல் வேனில் சீட்ல உட்காரம அங்க, இங்கன்னு ஓடிகிட்டிருக்கான்
பக்கத்துல போய் உட்கார்ந்து டி.வி. பார்க்கிறான்
பெரியப்பா கடையில போய் காசு கொடுக்காமல் ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வர்றான்
உன்னைய மாதிரி உன் தம்பி இல்லைன்னு மிஸ் சொல்ற படி நடந்துக்கிறான்
யூனிஃபார்ம் தச்சு வந்துடுச்சு. ஆனாலும் அதை போடாம கலர் ட்ரெஸ் போட்டுக்கிட்டு ஸ்கூலுக்கு வர்றான்.
சாப்பாட்டுல கொழம்பு ஊத்தி சாப்பிடமாட்டேங்கிறான்.

இப்படி மிகப்பெரிய குற்றப்பட்டியலை தன் தம்பி மீது மகள் வாசித்தாள். அம்மா எதுவும் சொல்லலையா? என்று கேட்டேன். அதற்கு அம்மா தினமும் தான் சொல்றாங்க டாடி…..கேட்க மாட்டேங்கிறான் என்றாள். அப்ப என்ன தான் செய்யலாம்? என்றேன். ஆம்பளைப் பயலை அடிச்சி வளர்க்கனும் டாடி…….அப்பதான் சொல் பேச்சு கேட்பான். வாயால சொன்னாலாம் கேட்கமாட்டான் என்றாள். கேட்ட ஒரு கணம் பகீரென்றாகி விட்டது. யாரும்மா ஆம்பளை பிள்ளைகளை அடிச்சி வளர்க்கனும்னு சொன்னான்னு கேட்டேன். எல்லோரும் அப்படி தான் டாடி சொல்றாங்க. அதுனால நீங்க அம்மாகிட்ட சொல்லி சேட்டை பண்ணும் போதெல்லாம் கம்பெடுத்து அவனை அடிக்க சொல்லுங்க என்றாள். அப்படியெல்லாம் செய்யக்கூடாது அது தப்பான வழிமுறை என சில விசயங்களை அவளுக்கு சொல்லி புரிய வைக்க முயற்சித்தேன். ஆனாலும், தப்பான வழிமுறைகளை எல்லாம் தவறாமல் அடுத்த தலைமுறைக்கு கடத்தி விடுகிறோமோ? என்ற அச்சமும், உறுத்தலும் இன்னும் இருக்கவே செய்கிறது 

Sunday, 27 July 2014

தானே விழுந்த விதை


இலக்கியா

விருந்தாளியாக செல்லும் போதெல்லாம் பார்த்து போயிட்டு வான்னு சொல்வதோடு நிறுத்தாமல் ஏதாவது வாங்கிட்டு போ என சொல்வது என் தந்தையின் வழக்கம். வெறுங்கையோடு போவதும் அங்கே போயிட்டு எதுவும் வாங்கிட்டு வரலையேன்னு சொல்லிட்டு குழந்தைகள் கையில் காசு கொடுத்துட்டு வருவதும் அவருக்கு பிடிக்காத ஒரு விசயம். ஆனால் பல நேரங்களில் அவரின் அறிவுறுத்தலை நான் பின்பற்றியதில்லை. எதுக்கு இங்கே வாங்கி தூக்கிட்டு போகணும். அங்கேயே போய் ஏதாவது ாங்கிக்கலாம் என்ற நினைப்பு பல நேரங்களில் அதற்கு காரணமாகிவிடும். இரு குழந்தைகளுக்கு தந்தையான பின்னும் இந்த பழக்கத்தை கையகப்படுத்த முடியாத நிலையில் ஒருநாள் குடும்பத்தோடு என் மனைவியின் தங்கை வீட்டில் இந்த வருட புது வரவாய், உறவாய் பிறந்திருந்த குட்டிச்செல்லங்களை பார்க்க கிளம்பினேன். அப்போது என் மகள், டாடி………தங்கச்சி பாப்பாவுக்கு நாங்க இன்னும் ஒன்னுமே வாங்கித் தரல. அதுனால ஒரு டிரஸ் வாங்கிட்டு போவோம்னு சொன்னாள். அதான் நானும், அம்மாவும் டிரஸ் வாங்கிட்டோமேனு நான் சொன்னேன். அதற்கு அவள் இது நீங்க வாங்கிக் கொடுக்குறது. நாங்க வாங்கி கொடுக்க வேணாமா? தங்கச்சி பாப்பாவை வெறும் கையோடு போயா பார்ப்பாங்க? என்று கேட்டாள். அந்த கேள்விக்காகவே முக்கால் மணிநேரம் காத்திருந்து ஜவுளிக்கடை திறந்ததும் டிரஸ் எடுக்க கடைக்குள் அழைத்துப் போனேன். அங்கிருந்த பணியாளர் எவ்வளவு ரூபாய்குள்ள டிரஸ் பார்க்கனும்? என்று கேட்டார். உடனே திரும்பி என்னை பார்த்த மகளிடம் உனக்கு பிடிச்சதை எடு. டிரஸ் விலையை விட சும்மா போகக் கூடாதுன்னு நீ நினைத்தது தான் முக்கியம் என்றேன். அதன் அர்த்தம் அவளுக்கு எந்த அளவுக்கு புரிந்திருக்கும் என தெரியாத போதும் விதைக்க தவறி தானே விழுந்து முளைக்க ஆரம்பித்திருக்கிற அந்த பழக்கத்தை அவளின் வாழ்நாள் முழுமைக்குமான பழக்கமாக்கி விட வேண்டும் என நினைத்துக் கொண்டேன். Saturday, 26 July 2014

கற்றுக்கொண்டால் குற்றமில்லை


மகளிடமிருந்து வந்த அழைப்பை எடுத்ததும் இனிமே நான் உங்க கூட பேச மாட்டேன் டாடி என்றாள். சற்றே பதறிப்போய் ஏம்மா? என்று கேட்டேன். எனக்கு எக்ஸாம் நடந்துக்கிட்டு இருக்குன்னு உங்களுக்கு தெரியும். என்னைக்காவது எனக்கு ஒரு விஷ் (WISH) பண்ணீங்களா? என்று கேட்டாள். அதான் நீ உனக்கு எக்ஸாம்னு சொன்ன முதல் நாளே விஷ் சொன்னனே? என்றேன். அதற்கு அவள் அது அன்னைக்கு எழுதப் போன எக்ஸாமுக்கு மட்டும் தானே. ஒவ்வொரு நாளும் வேற, வேற எக்ஸாம் நடக்குது. அதுனால நீங்க தினமும் காலையில நான் எக்ஸாமுக்கு போறதுக்கு முன்னாடி எனக்கு விஷ் சொல்லி இருக்கனும்ல? என்று கேட்டாள். நானோ வழக்கம்போல அந்த வேலை, இந்தவேலை என சில மொக்கை காரணங்களைச் சொல்லி சமாளிக்க முயன்றேன். அதற்கு அவள் விஷ் பண்ணுவதற்கு ஒரு செகண்ட் ஆகுமா? இன்னிக்கு எனக்கு கடைசி எக்ஸாம். அதுக்கும் கூட நீங்க இன்னும் விஷ் பண்ணவில்லை. நானா கேட்க வேண்டி இருக்கு என்றாள். ஒரு வழியாக வாழ்த்துS சொல்லி சமாதானம் சொன்னாலும் குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் இன்னும் தழும்பியபடியே இருப்பதாகவே தோன்றியது. மகளின் இந்த காலைநேர உரையாடல்கற்றுக்கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. கற்றுக்கொள்ளவாது செய்என என்னிடம் சொல்லாமல் சொல்வது போலிருந்தது.