Wednesday, 26 February 2014

விளைநிலம்

(சிங்கப்பூரில் இயங்கும் கவிமாலை என்ற அமைப்பு நடத்திய கவிதைப் போட்டியில் சிறப்பு பரிசுக்கு தேர்வான கவிதை )


விளைந்த நிலமாய் - விளையும் நிலமாய்
இருப்பவைகளை நாகரீக வாழ்வுக்காய்
விலை நிலமாய் மாற்றி அமைத்தோம்.

சர்ப்பத்தின் புணர்வுபோல
அடி பெருத்து நுனி சிறுத்த கல்மரத்தை
விளைநிலம் தோறும் நட்டு வைத்தோம்.

முப்போகம் விளைய வைத்து
உணவிட்டவனின் தற்கொலைக்கு
கணிணியில் கையறு நிலை பாடினோம்.

ஏட்டுப்படிப்பு போதுமென நினைத்த நாம்
ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது என்பதை
ஏன் மறந்து போனோம்?

கண்ணை விற்று சித்திரம் வாங்கும் உண்மையை
கையூட்டிற்காய் பணியை இழக்கும் அபாயத்தை
எப்பொழுது உணரப் போகின்றோம்?

கழனிப்பானையவும் களத்து மேட்டையும்
தொலைத்த அவலத்தை
கல்லையும் மண்ணையும் தின்றா போக்க முடியும்?

இனி ஒரு விதி செய்து மாற்ற முடியாவிட்டாலும்
இனி ஒரு விளை நிலத்தையும்
விலை நிலமாய் - மனை நிலமாய் மாற்றாதிருப்போமே!

நன்றி : வல்லமை

Monday, 24 February 2014

புகைப்படம் - 1

கவிமாலை அரங்கில் சிங்கப்பூரின் மூத்த படைப்பாளி ஏ.பி. ராமன் அவர்களிடமிருந்து பரிசு பெற்ற போது

Sunday, 23 February 2014

நானும்.....நானும்

தற்கொலை செய்து கொள்என்ற தலைப்பில் இக்கவிதை இன்மை இணைய இதழில் வெளிவந்தது.
நன்றி : தமிழ்முரசு நாளிதழ்
          இன்மை

Wednesday, 12 February 2014

பாராட்டின் பலம்
என் முதல் நூலை வெளியீடு செய்ததோடு மட்டுமில்லாமல் என்னை தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்தியவரும், வணிகரீதியில் என் முதல் பதிப்பாளருமான திரு.லேனா தமிழ்வாணன் அவர்களின் மணிவிழா சிறப்பிதழலில் அன்பின் அடையாளமாய் நான் எழுதிய கட்டுரை.

லேனா தமிழ்வாணன் சாரை முதன் முதலில் சந்தித்தது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம். ஒரே நேரத்தில் தொண்டையை அடைக்கும் துக்கமும், பீறிட்டு வெளிக் கிளம்பும் சந்தோசமும் கலந்து ஒரு காக்டெயிலாய் எனக்குள் அந்த சந்திப்பு ததும்பி நிற்கிறது. அதனால் தான் ஆண்டுகள் பலவாகியும் அதன் ஈரம் இன்னும் காயாமல் என்னுள் இருக்கிறது.

என்னுடைய நான்கு நூல்களை மணிமேகலைப்பிரசுரம் வெளியிட்டிருந்த சூழலில் துபாயில் தமிழ் அமைப்பு ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த லேனா சாரை சந்திக்கும் முதல் வாய்ப்பு கிடைத்தது. ரவி தமிழ்வாணன் சார் தான் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அதோடு, என்இஸ்லாம் கற்றுத்தரும் வாழ்வியல்என்ற நூலை லேனாசாரின் கரங்களால் விழா மேடையில் வெளியிட ஏற்பாடும் செய்திருந்தார். அப்பொழுது நான் துபாயில் இருந்து 150 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளஅல்- அய்ன்என்ற இடத்தில் பணி புரிந்து கொண்டிருந்தேன்.

விழா நாளன்று என் நண்பர்கள் சிலரை அழைத்துக் கொண்டு பெருமையோடு விழாவிற்குச் சென்றேன். மேடையில் என்நூல் வெளியீடு பற்றி அறிவிக்கப்பட்டது. என்னை மேடைக்கு வருமாறு அழைத்தார்கள். ஆனால், நான் மேடைக்கு செல்வதற்குள் மேடையில் ஒரு சலசலப்பு. அரங்கிற்கு வரவேண்டிய என் புத்தகப்பார்சலை விழாக்குழு நண்பர்கள் தவறுதலாக அறையிலேயே வைத்து விட்டு வந்துவிட்டார்கள். புத்தகம் இல்லாமல் நூல் வெளியீட்டை எப்படி செய்வது? நான் மிகுந்த ஏமாற்றத்தோடு மேடையை விட்டு இறங்கினேன்.விழா முடிந்ததும் லேனா சாரை சந்தித்தேன். என் தோள் தொட்டு பேசிய லேனா சார், “கவலை பட வேண்டாம். உங்களுக்கு நன்றாக எழுத வருகிறது. இதுவரை வெளிவந்த நூல்கள் மூன்றை முப்பதாக்குங்கள். அதற்காக தொடர்ந்து எழுதுங்கள் என்றார். அந்த நேரத்தில் அவர் தட்டிக் கொடுத்துச் சொன்ன இந்த வரிகள் சுற்றி நின்ற விழா அமைப்பாளர்கள், முக்கிய பிரமுகர்களின் பார்வையை என் மேல் விழ வைத்தது.

சக ஊழியனாய், என் நண்பர்களால் அறியப்பட்டிருந்த நான் அதன்பின் புத்தகங்கள் எழுதுபவனாய் அடையாளப்படுத்தப்பட்டேன். அந்தப் பணியையும், நாட்டையும் விட்டு வந்து எட்டு ஆண்டுகளாகியும் இன்றும் என் பெயர் அங்குள்ள நண்பர்களால் புத்தகம் எழுதுபவனாகத் தான் அடையாளப் படுத்தப்பட்டு வருகிறது!

அன்று லேனா சார் என்னை ஊற்சாகப்படுத்தும் விதமாய் சொன்ன வார்த்தைகள், அந்த வார்த்தைகளின் மூலம் கிடைக்கப்பெற்ற அடையாளம் என்னை தொடர்ந்து எழுத வைத்தது

இன்று இருபத்தி மூன்று நூல்களை தமிழகத்தின் முண்ணனி பதிப்பகங்கள் வழி என்னால் எழுதவும், தொடர்ந்து வெளியீட்டிற்காக பதிப்பகங்களுக்கு நூல்களைத் தரவும் முடிகிறதென்றால் அதற்கு லேனா சாரும், அவர் சொன்ன அந்த உற்சாக வார்த்தைகளும் தான் காரணம் என நினைக்கிறேன். அந்நாளின் இனிய நிகழ்வை இந்த மணிவிழா மலரில் பதிவு செய்து லேனா சாரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

நன்றி : நம்பிக்கை வாசல்.

Friday, 7 February 2014

அவஸ்தையிலிருந்து மீளல்

மகளோடிருந்த தினப்பொழுதொன்றில்
திருகல் படாமல் கிடந்த
கீறலற்ற வெள்ளை காகிதத்தை
நான்காய் மடித்து பந்தாக்கியும்
எட்டாய் மடித்து விமானமாக்கியும்
பத்தாய் மடித்து பறவையாக்கியும் காட்டினேன்.

சிதறாப் புன்னகையோடு
என் விரல்களுக்குள் இருந்து தன் விரல்களுக்குள்
காகிதத்தை மாற்றிய மகள்
மடிப்புகளை நீக்கி மென்மையாய் நீவி
தன் தம்பியிடம் தந்து
அப்புறமா எடுத்துக்கலாம்…….இப்ப வச்சுக்கோ என்றாள்.

அவஸ்தையினின்று மீண்ட காகிதம்
எந்த சலனமுமின்றி தயாரானது
இன்னொரு அறையப்படலுக்கும்
அதன் வழி உயிர்த்தெழலுக்கும்.

நன்றி : எதுவரை?

நினைவுகள் குழைந்த தருணம்

பெற்றோர்
மனைவி
பிள்ளைகள்
நண்பர்கள்என
எல்லோருக்கும் ஏதோ ஒரு
நினைவுகளை தருபவனாகவே
துயில் கொண்டிருந்தான்.

சடங்கேந்தி வந்த உறவினர்கள்
பொணத்த எப்ப தூக்குறாங்க? என
விசாரிக்கும் வரை.

நன்றி : எதுவரை?

Tuesday, 4 February 2014

துளிப்பாக்கள்

கர்ப்பகிரகத்திற்குள் இருப்பவனும் சாமி
கற்பூரம் காட்டுபவனும் சாமி.
முட்டாளாய் பக்தன்!
---------------------------------------------
யாருக்கு முதல் பரிவட்டம்
முட்டிக்கொண்ட பங்காளிகள்
இரசித்தபடி கடவுள்.
----------------------------------------------
தீயில் குளித்தாள்
தீயால் குளிக்க வைத்தாள்
கணவனின் கறை போக்க.
-----------------------------------------

நன்றி தீக்கதிர் - வண்ணக்கதிர்