Tuesday 20 April 2021

தமிழகப் பாளையங்களின் வரலாறு

[தினமணி கலாரசிகனில்  "தமிழகப் பாளையங்களின் வரலாறுநூலுக்கான  அறிமுகமும் - விமர்சனமும்]

தமிழக வரலாற்றில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாதது பாளையக்காரர்களின் வரலாறு. அவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களைப் போல அரசர்கள் அல்லர். நாயக்கர்களையும், மராட்டிய சரபோஜிகளையும் போல மன்னர்கள் அல்லர். மத வெறியால் நாடு பிடித்த நவாபுகளும் அல்லர். ஜமீந்தார்களை விட சற்று மேலான ஆளுமை உள்ள குறுநிலக்கிழார்கள். அவ்வளவே.

கிருஷ்ண தேவராயரின் விஜயநகரப் பேரரசால் உருவாக்கப்பட்டவர்கள் தான் பாளையக்காரர்கள். “பாலாறா” என்கிற தெலுங்கு சொல்லில் இருந்து “பாளையம்” என்கிற பெயர் உருவானது. “பாலாறா” என்றால் ராணுவ முகாம் என்று பொருள். அதை நிர்வாகம் செய்ய நியமிக்கப்பட்டவர்கள் பாளையக்காரர்கள் என்று அழைக்கப்பட்டனர். நாயக்கர் ஆட்சிக்கு முன்பே தமிழ்கத்தில் பாளையங்கள் சிற்றரசர்களுக்கு உரிய அதிகாரத்துடன் இருந்தன என்றும் சிலர் கூறுகிறார்கள்.

“ஈரோடு மாவட்ட வரலாறு” நூலில் இடம் பெற்றுள்ள  அம்மைய நாயக்கனூர் ஜமீந்தார் வம்சாவளி ஆவணப்பதிவு தரும் செய்தி இது – “தளவாய் அரியநாத முதலியார் அவர்களும், விசுவநாத நாயக்கரும் இருவருமாக மதுராபுரிக்கு வந்து பாண்டியன் முன்னர் போர் புரிந்த கோட்டையைச் சுற்றி விசாலமாய் 72 கொத்தளங்களைக் கோட்டை போட்டு 72 கொத்தளத்துக்கும் 72 பாளையக்காரர்களையும் நேர்முகம் செய்கிறது”.

அப்படி உருவானவை தான் 72 பாளையங்களும். ராமநாதபுரம், சிவகங்கை, பெரிய பாளையங்கள். ஏழாயிரம் பண்ணை, மணியாச்சி ஆகியவை சிறிய பாளையங்கள்.

நாயக்கர் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின் பாளையங்களுக்கு முழு சுதந்திரம் தானாகக் கிடைத்தது. ஆனால், அதை அவர்கள் அனுபவிக்க முடியாமல் நவாபுகள் உள்ளே நுழைந்தார்கள்.  மனம் போன போக்கில் வரிகளை உயர்த்தினர். பாளையக்காரர்கள் வரியை எதிர்க்க முற்பட்ட போது தான் ஆங்கிலேயர்கள் உள்ளே நுழைந்தார்கள்.

பாளையக்காரர்களிடமிருந்து வரிவசூல் செய்து தருவதற்கான ஒப்பந்தம் 1755 இல் நவாபுக்கும், கும்பெனியாருக்கும் இடையே ஏற்பட்டது.

அதற்குப் பிறகு நடந்த சுவராசியமான வரலாற்றின் பதிவு தான் மு. கோபி சரபோஜி எழுதியிருக்கும் “தமிழகப் பாளையங்களின் வரலாறு”.

பாளையக்காரர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்களுடைய ஆட்சி முறை எப்படி இருந்தது? வரி வசூலித்து, சட்டம் அளிக்கும் பொறுப்பில் இருந்த பாளையக்காரர்கள் வரிகட்ட மறுத்தது எப்படி? தமிழகப் பாளையங்கள் குறித்த விவரங்களை எல்லாம் திரட்டி, விறுவிறுப்பாக எழுதப்பட்டிருக்கும் புத்தகம் இது.

பாளையங்களின் உதயத்தில் தொடங்கி, பாளையங்களின் மறைவும் ஜமீன்களின் உதயத்துடன் முடிகிறது. “தமிழகப் பாளையங்களின் வரலாறு” இரண்டு நூற்றாண்டு தமிழக வரலாறு என்றும் சொல்லலாம்.

நன்றி - தினமணி

 

No comments:

Post a Comment