புதிதாக வீடு கட்டும் போது கட்டிட சாமான்களை போட்டு வைப்பதற்காக தற்காலிக குடிசை ஒன்றை வீடு கட்டும் இடத்திற்கு அருகில் உள்ள இடத்தில் அமைப்பது நம்முடைய வழக்கம். அப்படி அமைக்கும் போது அந்த இடத்திற்கு உரியவரிடம் அதற்கான அனுமதியை கேட்போம் இல்லையா? அதுபோல சீதையை மீட்க கடலின் மேல் பாலம் கட்ட முடிவு செய்த இராமர் கடலரசனிடம் கடல் அலைகலின் சீற்றத்தை குறைத்துக் கொள்ள வேண்டியும், அனுமதி கேட்டும் காத்திருந்தார். அவனுக்கென்ன வேலையோ? மூன்று நாட்களாக இராமரின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமலிருந்தான். இராமரோ அங்கிருந்த தர்ப்பையை ஆசனமாக கொண்டு சயனித்தபடியே காத்திருந்தார். அப்படி இராமர் சயனித்திருந்த தலம் ”திருப்புல்லணை” என அழைக்கப்பட்டது. நாளடைவில் அது மருவி ”திருப்புல்லாணி” என்று பேச்சு வழக்கானது. வடமொழியில் இவ்வூர் ”தர்ப்பசயனம்” என்றழைக்கப்படுகிறது. தர்ப்பம் – புல்; சயனம் – உறங்குதல்.
தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை செல்லும் வழியில் பத்து கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இத்தலத்தில் வீற்றிருப்பவர் ஆதி ஜெகன்னாத பெருமாள். பஞ்சதரிசன தலமான பூரியில் இடுப்பு உயர அளவில் மட்டுமே வீற்றிருந்து காட்சி தரும் ஜெகன்னாதர் இங்கு முழுமையாக காட்சி தருவதால் இத்தலம் ”தட்சிண ஜெகன்னாதம்” என்று அழைக்கப்படுகிறது.