Tuesday, 30 December 2014

கனவின் பயணம்

வேலைக்கான அனுமதி அட்டையை புதுப்பிப்புச் செய்ய விருப்பம் உள்ளவர்கள் சூப்பர்வைசரிடம் பெயரைக் கொடுக்கச் சொல்லும் அறிவிப்பு தகவல் பலகையில் ஒட்டப்படிருந்தது. இதைப் பார்த்த பார்த்திபன் இம்முறை நீட்டிப்பு கிடைத்தால் சிங்கப்பூருக்கு தான் வந்து எட்டு ஆண்டுகளாகி விடும் என நினைத்துக் கொண்டான்.

அவன் வந்த சமயத்தில் இருந்த சிங்கப்பூர் இப்போது பலவிதமாய் மாறி விட்டதைப் போலவே அவனும் மாறியிருந்தான். சுருட்டை முடியும், ஒட்டிய வயிறுமாய் வந்தவன் இப்போது சொட்டைத்தலையும், உப்பிய வயிறுமாய் உருமாறி இருந்தான். தான் வேலை பார்க்கும் கம்பெனிக்கு சில தினங்களுக்கு முன் ஊரிலிருந்து புதிதாய் வேலைக்கு வந்திருந்தவர்களில் சிலர் கூட்டம், கூட்டமாக அறைக்கு வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். வேலைக்குச் செல்லும் வரை இப்படித்தான் பழையவர்களுடன் ஒட்டாமல் இருப்பார்கள். அவனும் ஆரம்பத்தில் அப்படித் தான் இருந்தான்.

Sunday, 28 December 2014

பொய்க்காத நம்பிக்கை

எப்படியும் வந்து விடுவாள் என்ற தன் நம்பிக்கை பொய்த்து விடுமோ என்ற அகிலனின் பதற்றத்தை ஓடிக் கொண்டிருந்த கடிகார முள்ளின் டிக், டிக் சப்தம் அதிகமாக்கிக் கொண்டிருந்தது. மனமும் திக், திக் என்று தன் சுருதியைக் கூட்ட திறந்து கிடக்கும் வாசற்கதவை வெறித்த படியே பார்த்துக் கொண்டிருந்தவன் மனதில் அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது என்ற எண்ணம் மீண்டும், மீண்டும் அலையாய் வந்து போனது. லதா வந்தால் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு கட்டித்தழுவி அழ வேண்டும் போலிருந்தது

அகிலனின் காதல் மனைவி லதா. ஆனால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் அவர்களுடையது. தான் குடியிருக்கும் புளோக்கில் இருந்து சற்றுத் தள்ளி புதிதாக கட்டப்பட்டிருந்த புளோக்கிற்கு குடிவந்திருந்த லதாவின் தந்தையை அலுவல் நிமித்தம் சந்திக்கச் சென்றிருந்த போது தான் லதாவை அகிலன் முதல் முறையாகப் பார்த்தான். தேநீர் கலக்கிக் கொண்டு வந்து தந்தவளை அவளின் தந்தை அறிமுகம் செய்து வைத்தார். அவன் பணிபுரியும் அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் நிறுவனத்தில் ஊழியராய் இருப்பதாய் சொன்னவளிடம் ஒரு சிறு புன்னகையை மட்டும் பதிலாய் கொடுத்தான்.

Tuesday, 23 December 2014

”அலமாரி” – யில் வந்த விமர்சனம்

நாவல்என ஆசிரியர் குறிப்பிட்டிருந்தாலும் இதில் நாவலுக்கான இழை பூரணி, அருண், குமிகோ, லெனின், வாங்லி, யாசியன், திசைகள் மாறி வந்து ஒரு சேர கப்பலில் பயணிக்கும் நண்பர்கள் என கதாபாத்திரங்களால் வாழ்வியலுக்கான விசயங்களை தலையில் குட்டு வைப்பது போல சொல்லியும், எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய படியும், சுவராசியமாய் ஒரு மெல்லிய சரடாக மட்டுமே நகர்ந்து செல்கிறது. மற்றபடி நூல் ஒரு கப்பல் பயணத்தை மட்டுமே முழுமையாக தருகிறது.

சிங்கப்பூர்மலேசியாதாய்லாந்து  என மூன்று நாடுகள் ஐந்து நாட்கள் என சுற்றி வந்த இந்த கப்பல் பயணத்தை நூலாசிரியரே மேற்கொண்டு அனுபவித்து அதன் ஈரம் காயாமல் கொடுத்திருப்பதால் நேரடியாக நாமே பயணம் செய்த அனுபவத்தை உணர முடிகிறது. உணர்ந்தால் மட்டும் போதாது அனுபவிக்க வேண்டும் என்றால் பயணம் செய்து தான் ஆக வேண்டும். செலவு என்று பார்த்தால் கணவன், மனைவி, குழந்தை என மூவர் அடங்கிய குடும்பத்திற்கு 1,75,000 ரூபாயாம்! கப்பலில் தரப்படும் அறை உள்ளிட்ட சில வசதிகள் தவிர மற்ற வசதிகளுக்கு நாம் செய்யும் செலவு தனியாம்!! கப்பலில் ஏறும் போதே அடையாள அட்டையோடு (SEE PASS) கடன் அட்டையையும் (CREDIT CARD) இணைத்து விடுவார்களாம்!