Showing posts with label தமிழ்முரசு நாளிதழ். Show all posts
Showing posts with label தமிழ்முரசு நாளிதழ். Show all posts

Sunday, 8 September 2019

மெளனம்

முத்தையாவுக்கும், சுதாகருக்கும் ஒரே உணவகத்தில் வேலை. அவர்கள் தங்கியிருக்கும் அறை உணவகத்தின் மேலேயே இருந்தது. ஐம்பத்திரண்டு வயது முத்தையா அந்த உணவகத்தில் சமையலறை உதவியாளராய் வந்து இன்று காசாளராய் உயர்ந்திருப்பவர். இரவில் ஒரு குவார்ட்டர் இல்லாமல் அவரால் கண் அயர முடியாது. இப்போது ஆயிரங்களில் சம்பளம் வாங்கினாலும் குவார்ட்டர் என்ற அளவை அவர் மாற்றவில்லை. இது தவிர வாரத்தின் மூன்று நாட்களும் தலா பத்து வெள்ளிக்கு நான்கு நம்பர் பரிசுச் சீட்டு* எடுத்து விடுவார். சிங்கப்பூரைச் சூழும் புகை மூட்டம் போல அவ்வப்போது அதில் விழும் அதிர்ஷ்டப் பரிசும் ஐநூறு வெள்ளியைத் தாண்டியதே இல்லை. அதேபோல சம்பளத் தேதியின் மறுநாள் சூதாட்டக் கூடத்திற்குச் சென்று விடுவார். அங்கு சென்று திரும்பும் ஒவ்வொரு முறையும் அவரின் பணப்பை பிரசவத்திற்குப் பிந்தைய பிள்ளைத்தாச்சியாய் மாறிவிடும். ஆனாலும் அது பற்றி அவர் கவலைப்பட்டதே இல்லை. மகளுக்குத் திருமணம் செய்து விட்டதால் சேமிப்பு பற்றி அதிக அக்கறையின்றி ஊரில் இருக்கும் குடும்பத்திற்கு அவ்வப்போது சில நூறு வெள்ளிகளை ஏஜண்ட்* மூலம் அனுப்பி வைப்பார். சில மாதங்களில் அதுவும் கிடையாது. இத்தனை இருந்தும் வேலை விசயத்தில் முத்தையாவை அசைத்துப் பார்க்க முடியாது. தவிர்க்க முடியாத நிலையிலும் கூட வேலைக்கு வருவதைத் தவிர்க்கமாட்டார். வேலையின் மீது இருந்த அந்த மோகம் கடை முதலாளியிடம் அவரை எப்பொழுதும் செல்வாக்கு மிக்க ஊழியாராக வைத்திருந்தது.

Thursday, 18 February 2016

குறுக்குக் கோடு குணாவும், நாள்காட்டியும்

 
ஒரு விபத்து போலத் தான் அது நடந்தது என்று கேட்டும், வாசித்தும் அறிந்திருந்த குணா அதன் உள்ளார்ந்த பொருளை இப்போது உணரவும் தொடங்கி இருந்தான். தலையணையின் அருகில் வைத்திருக்கும் நாள்காட்டியில் வேலைக்குச் செல்லும் தினங்களைக் குறுக்குக் கோடிடுவது அவனின் வழக்கம். அதனாலயேகுறுக்குக் கோடு குணாஎன்ற பட்டப் பெயரில் அழைக்கப்பட்டான். கடந்த மூன்று நாட்களாக நாள்காட்டியில்  குறுக்குக் கோடிட முடியாமல் போனதை அவனின் துரதிருஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

பணிமனையில் கப்பலின் மேல் தளத்தில் அவனோடு வேலை செய்து கொண்டிருந்தவன் கால் இடறி கடலுக்குள் தவறி விழுந்தும் அவனைக் காப்பாற்றுவதற்காக இவனும் கடலுக்குள்  குதித்தான். அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளும், மீட்பு நடவடிக்கைகளுக்கான அதிகாரிகளும் அவ்விருவரையும் கரைக்குக் கொண்டு வந்தனர். முதலுதவிகள் முடிந்ததும்நண்பேண்டாஎன மற்றவர்களின் பாராட்டுப் பூரிப்பில் நின்று கொண்டிருந்த குணாவிடம் பாதுகாப்பு அதிகாரி நாளை பணிமனைக்குச் செல்லாமல் என் அலுவலத்திற்கு வந்து விடு என்று சொன்ன போது தான் ஏதோ தவறாகி விட்டது என அவனுக்குத் தோன்றியது.

Friday, 8 January 2016

ரசிக்க - சிந்திக்க - 15

தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்த ஒரு இளைஞனைக் கண்ட எழுத்தாளர் டால்ஸ்டாய் அவனை தடுத்து நிறுத்தி அதற்கான காரணத்தைக் கேட்டார். அதற்கு அந்த இளைஞன் ஐயா….நான் ஏதாவது தொழில் செய்து பிழைக்க நினைக்கிறேன். ஆனால் அதற்கான மூலதனம் என்னிடமில்லை. அதனால் தற்கொலை செய்து கொண்டு சாக முடிவெடுத்தேன் என்றான். உடனே டால்ஸ்டாய், நான் உனக்கு நூறு ரூபிள் (இரஷ்ய நாணயத்தின் பெயர்) தருகிறேன். அதற்கு பதிலாக உன் ஒரு விரலைத் தருகிறாயா? என்று கேட்டார். இளைஞன் முடியாது என வேகமாக மறுத்தான். சரி…..….விரல் வேண்டாம். இரண்டு கண்களில் ஒன்றைக் கொடு என்றார். அப்போதும் அந்த இளைஞன் மறுத்தான். நூறு ரூபிளுக்கு பதில் ஆயிரம் ரூபிள் தருகிறேன். அதற்கு பதிலாக உன் இரண்டு கால்களில் ஒன்றைக் கொடு என்று கேட்டார். அப்போதும் மறுத்த இளைஞனிடம் டால்ஸ்டாய் உன்னிடம் மதிப்பிட முடியாத உடல் உறுப்புகள் என்னும் மூலதனம் இருக்க எதுவுமில்லை என தற்கொலைக்கு முயன்று கொண்டிருக்கிறாயே? என்று கேட்டதும் அந்த இளைஞன் தன் முடிவை நினைத்து தலைகவிழ்ந்து நின்றான்.