மூக்காண்டி என்ற கிராமத்துச் சிறுவன் இந்தியாவின் அடையாளமாக - ஜீவானந்தமாக (ஜீவா) உருமாறிய வரலாற்றைச் சொல்லும் நூல் “அன்புள்ள ஜீவா”. கிழக்குப் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் இந்நூலின் ஆசிரியர் ஆர். முத்துக்குமார்.
காந்தியின் பால் கொண்ட ஈர்ப்பே தன் அடையாளத்தின் பிள்ளையார் சுழியாக இருந்த போதும், அவரின் பெயரில் ஆசிரமம் நடத்தி வந்த போதும் காந்தியின் கொள்கைகளை, செயல்பாடுகளை அப்படியே ஜீவா ஏற்றுக் கொள்ளவில்லை. அதை காந்தியிடமே நேரடியாக முன் வைத்தார். குறிப்பாக வர்ணாஸ்ரமம், தீண்டாமை ஒழிப்பு ஆகியவைகளில் காந்தியின் நிலைப்பாடு அவரின் பொக்கைவாயாகவே இருந்தது என்பதே உண்மை. “காந்தி பகுத்தறிவை நம்பவில்லை. வர்ணாஸ்ரமத்துக்கு வால் பிடிக்கிறார். பழமைவாதக் கொள்கைகளை ஆதரிக்கிறார். முதலாளித்துவத்தை ஒழிக்காமல் இருதரப்புக்கும் சமரசம் ஏற்படுத்த முயன்று வருகிறார்” இவைகளே காந்தியை எதிர்க்கக் காரணம் என ஜீவா கூறுவதை எவரும் மறுக்க முடியுமா?. ஜீவாவைப் போல் இல்லாமல் ”காந்திக்கு மறுப்பில்லை” என்ற நோக்கோடு அன்றைய தலைவர்களில் பலர் தலையாட்டியதாலயே இன்றைய இந்தியா இம்சை பட்டுக் கொண்டிருக்கிறது!
கொண்ட கொள்கையில் உறுதி, செயல்பாட்டில் நேர்த்தி, தன்னலம் கருதாத பொது நலம் உள்ளிட்ட அரசியல் தலைவனுக்குரிய அடையாளங்களில் எதையும் தன் வாழ்வில் இம்மியளவும் பிசகாதவராக ஜீவா வாழ்ந்தார். காந்தி, காங்கிரஸ், இராஜாஜி, பெரியார் என அனைவரையும் ஒரே நோக்கிலேயே அவர் பார்த்தார். அதனாலே எத்தனை பெரிய தலைவர்களையும் கொள்கையளவில் எதிர்க்கவும், எதன் பொருட்டும் சமரசம் செய்து கொள்ளாமல் இயங்கவும் ஜீவாவால் முடிந்திருக்கிறது. கொள்கையைக் கோவணமாக்கித் திரியும் இன்றைய தலைவர்களுக்கு மத்தியில் அன்றைய ஜீவா ஆச்சர்யமும், பிரமிப்பும் என்றால் அது மிகையாய் இராது!
பத்திரிக்கை ஒன்றை ஆரம்பிக்க நன்கொடை வசூலித்த பண மூட்டையோடு ஜீவாவும், இன்னொரு தோழரும் இரயிலடியில் காத்திருக்கின்றனர். பசி வயிற்றைக் கிள்ளுகிறது. சாப்பிடலாமா? என அந்தத் தோழர் கேட்ட போது, ”காசில்லையே” என்றாராம் ஜீவா. ”அதான் உங்கள் கையில் பணமூட்டை இருக்கிறதே” என தோழர் சொல்ல ”இது மக்கள் கொடுத்த பணம். அதிலிருந்து ஒரு பைசா எடுக்கக் கூடாது” என கோபமாக ஜீவா கூறினாராம். இதையெல்லாம் வாசிக்கையில் கணக்குக் கேட்டாலே கணக்குத் தீர்த்தும், கட்டம் கட்டியும் அனுப்பும் இன்றைய தலைமைகளுக்கு மத்தியில் அன்றைய ஜீவா ஆதர்சமாகவே தெரிகிறார்.
கருணாநிதியின் ”பராசக்தி’ ஜீவாவின் கதையைத் தழுவி எழுதியது என்ற தகவல் எனக்குப் புதிது. அந்தக் கதைக்கு உரிமை கோரி வழக்குத் தொடரச் சொல்லி ஜீவாவை தோழர்கள் வற்புறுத்திய போது அதற்கு அவர் சொன்ன பதிலே பராசக்தியைக் காப்பாற்றி இருக்கிறது!
ஜீவாவின் ஒவ்வொரு செயல்பாடுகளும் ஓரிரு வரிகளில் அறிந்து கடந்து செல்ல முடியாதவை. அவைகள் ஒவ்வொன்றைப் பற்றியும் தனித் தொகுதிகள் வாசிக்கக் கிடைக்கின்றன. இந்தச் சூழலில், காங்கிரஸ்காரராய் சிறை நுழைந்து கம்யூனிஸ்டாய் வெளியேறிய ஜீவா தொழிலாளர் நலச் சங்கங்களை ஆரம்பித்து அவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்ட நிகழ்வுகளைக் கோடிகாட்டியும், அவரின் பன்முகத் தன்மையை சிறு குறிப்புகளாய் பதியமிட்டும் செல்லும் இந்நூல் பிரமிப்பூட்டும் ஜீவா என்கின்ற தலைவனின் வாழ்வை அறிந்து கொள்வதற்கான அறிமுகமாக அமைந்திருக்கிறது.
No comments:
Post a Comment