Tuesday, 30 December 2014

கனவின் பயணம்


வேலைக்கான அனுமதி அட்டையை புதுப்பிப்புச் செய்ய விருப்பமுள்ளவர்கள் சூப்பர்வைசரிடம் பெயரைக் கொடுக்கச் சொல்லும் அறிவிப்பு தகவல் பலகையில் ஒட்டப்படிருந்தது. இதைப் பார்த்த பார்த்திபன் இம்முறை நீட்டிப்பு கிடைத்தால் சிங்கப்பூருக்கு தான் வந்து எட்டு ஆண்டுகளாகி விடும் என நினைத்துக் கொண்டான்.

அவன் வந்த சமயத்தில் இருந்த சிங்கப்பூர் இப்போது பலவிதமாய் மாறி விட்டதைப் போலவே அவனும் மாறியிருந்தான். சுருட்டை முடியும், ஒட்டிய வயிறுமாய் வந்தவன் இப்போது சொட்டைத்தலையும், உப்பிய வயிறுமாய் உருமாறி இருந்தான். தான் வேலை பார்க்கும் கம்பெனிக்கு சில தினங்களுக்கு முன் ஊரிலிருந்து புதிதாய் வேலைக்கு வந்திருந்தவர்களில் சிலர் கூட்டம், கூட்டமாக அறைக்கு வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். வேலைக்குச் செல்லும் வரை இப்படித்தான் பழையவர்களுடன் ஒட்டாமல் இருப்பார்கள். அவனும் ஆரம்பத்தில் அப்படித் தான் இருந்தான்.

பார்த்திபனுக்கு சொந்த ஊர் தமிழ்நாட்டின் தென்கோடியில் இருக்கும் இராமநாதபுரம். ஒரு அக்காவோடு கடைக்குட்டியாய் பிறந்தவன். உள்ளூரில் இருந்த ஐந்தாம் வகுப்புப் பள்ளியோடு அக்காவின் படிப்பை நிறுத்தி விட்ட அவன் அப்பா இவனை மட்டும் பக்கத்து ஊரில் இருந்த மேல்நிலைப்பள்ளியில் படிப்பதற்காக சேர்த்து விட்டார். எப்போதும் இவனின் தேவைக்கு முன்னுரிமை தருவார். அதற்கு அம்மாவும், அக்காவும் கூட ஆட்சேபிப்பதில்லை. ஒன்பதாவது படித்து முடித்ததும் படிக்க விருப்பமில்லை எனச் சொல்லி விட்டு நண்பர்களோடு சேர்ந்து திருப்பூரில் பனியன் கம்பெனிக்கு வேலைக்குச் சென்றான். ஆறு ஆண்டுகள் போனதே தெரியாமல் ஓடியது. வேலைகளை சீக்கிரமே கற்றுக் கொண்டதால் சம்பளமும் ஓரளவுக்கு கிடைத்தது.

துபாயில் இருந்து விடுமுறைக்காக இந்தியா வந்திருந்த அவனுடைய தாய்மாமா அவனைச் சந்திப்பதற்காக ஒருநாள் அங்கு வந்திருந்தார். அவரின் திடீர் வருகை சந்தோசம் தர எப்ப மாமா வந்தீங்க? அத்தை, இளவரசி எல்லாம் எப்படி இருக்காங்க? என சம்பிரதாயமாக கேட்டபடி அவரை அறைக்குள் அழைத்து வந்தான்.

பல விசயங்களையும் பேசிக்கொண்டிருந்தவர். ”இன்னும் எத்தனை நாளைக்கு இங்கேயே கிடக்கப்போறீங்க மாப்ள……… வீட்டுல இன்னும் ஒரு கொமரு இருக்கு. உங்களுக்கும் கல்யாணம் காட்சின்னு காலம் இருக்கு. இங்கே இருந்துலாம் சம்பாரிச்சு ஒன்னும் செய்ய முடியாது. நான் எனக்குத் தெரிஞ்ச ஒரு ஏஜெண்ட் மூலமா நீங்க சிங்கப்பூர் போக ஏற்பாடு செய்றேன். இங்கே கொட்டுற உழைப்பை அங்கே போய் கொட்டுனா நாலு காசாது மிஞ்சும். உங்களுக்கு விருப்பமிருந்தா சொல்லுங்க” என்றார்.

”அதுக்கில்ல மாமா. வெளிநாட்டுக்குப் போறதுன்னா இலட்சக்கணக்கில் பணம் கட்டனும். இப்ப இருக்கிற நிலமையில் அவ்வளவு பணத்துக்கு என்ன செய்யிறது?” என்றான்.


”நீங்க ஏன் அதைப் பத்தி எல்லாம் கவலைப்படுறீங்க. உங்களுக்கு விருப்பம் இருக்குல. மற்றதை எல்லாம் நான் பார்த்துக்கிறேன். துபாய்க்கு நான் திரும்பி போறதுக்குள்ள உங்களுக்கு ஏற்பாடு பண்ணிடுறேன். பாஸ்போர்ட் வீட்டுல தானே இருக்கு? இன்னைக்கே ஏஜண்டுக்கிட்ட பேசுறேன்” எனச் சொல்லிவிட்டு மதியச் சாப்பாட்டை முடித்த கையோடு கிளம்பி விட்டார்.

இரண்டு நாட்கள் கழிந்திருந்த நிலையில் அலைபேசியில் அழைத்த ஒருவர், ”தம்பி நீ சுந்தரலிங்கம் மருமகனா?” எனக் கேட்க

ஆமாம். நீங்க? என்றான்.

நான் திருச்சியில் இருந்து ஏஜண்ட் பேசுறேன். உங்க மாமா எல்லா விபரமும் சொன்னார். நாளைக்கு மெடிக்கல் இருக்கு. வரமுடியுமா? என்றார்.

சரி வருகிறேன் என்றவன் டிராவல்சின் முகவரியையும் வாங்கிக் கொண்டான்.

மறுநாள் திருச்சி பேருந்து நிலையத்திற்கு வந்திறங்கியவனை டிராவல் ஏஜண்டே வந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். பரிசோதணைகளை முடித்துவிட்டு பார்த்திபன் நேராக தன் வீட்டிற்கு வந்தான். அங்கு அவன் மாமாவும், அத்தையும் வந்திருந்தார்கள்.

என்ன மாப்ள……மெடிக்கல் எல்லாம் முடிஞ்சிடுச்சா? என்றவர் அவனிடமிருந்து பதிலைக் கூட எதிர்பார்க்காமல் “நல்ல கம்பெனியாம். கப்பல் கட்டுற இடத்துல பெயிண்ட் அடிக்கிற வேலையாம். ரொம்ப கஷ்டமிருக்காதாம். ஆறுமாசம் கழிச்சி அங்கேயே படிச்சிட்டு சூப்பர்வைசரா மாறிக்கிடலாங்கிறான். சம்பளம் நம்மூர் காசுக்கு நாற்பதாயிரம் கிடைக்கும். அது போக ஓவர்டைம் செஞ்சா தனிச் சம்பளம் கிடைக்குமாம். விசாவுக்கு தான் இரண்டு இலட்சம் ஆகுங்கிறான். நான் அதைப் பார்த்துக்கிறேன்” என்றார்.

சோழியன் குடுமி சும்மாவா ஆடும்? அவன் மாமா  இத்தனை பிரயாத்தனம் பட்டு அவனை வெளிநாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்வதற்கும் ஒரு காரணம் இருந்தது. அவரின் ஒரே மகளான இளவரசி பெயருக்கு ஏற்ப அவர்கள் வீட்டில் வலம் வருபவள். பத்தாம் வகுப்போடு பள்ளிக்கு முழுக்குப் போட்டு விட்டு வீட்டில் இருப்பவளுக்கு பார்த்திபனை மணமுடித்து வைப்பது தான் அவரின் திட்டம்.

விசா எப்ப வேணும்னாலும் வந்துடும். எதுக்கும் எல்லா ஏற்பாட்டோடும் இருங்கன்னு ஏஜண்ட் சொல்லி இருக்கான். அதுனால திருப்பூருக்கு போகாம கொஞ்ச நாளைக்கு வீட்டுலயே இருங்க மாப்ள…..….என மாமா சொன்னதை அப்படியே அப்பாவும், அம்மாவும் வழி மொழிந்தார்கள். அவர்கள் பேச்சைத் தட்ட முடியாததால் அவனும் வீட்டிலேயே இருந்தான்.

மாதம் பத்தாயிரம். பன்னிரெண்டு மணிநேர வேலை என இருந்த தன் வாழ்க்கை சிங்கபூர் போனதும் பிரமாதமாக மாறப்போகிறது என்ற கனவோடு இருந்தவனை அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களும், தெருக்காரர்களும் சிங்கப்பூர் வாசியாகவே பார்க்க ஆரம்பித்தனர். பார்க்கிற பத்து பேரில் ஐந்து பேராவது எப்ப பயணம்? என அவனிடம் கேட்டு விடுவார்கள். ஒரு மாசம் ஆகிவிட்டதால் மற்றவர்கள் அவனிடம் கேட்ட கேள்வியை ஏஜண்டிடம் இவன் கேட்க ஆரம்பித்தான். அவனும் ஒவ்வொரு முறையும் வார்த்தை மாறாமல் ”எல்லாம் கொடுத்தாச்சாம். சீக்கிரமே வந்துடும் தம்பி” எனச் சொல்லிய படியே இருந்தான்.

இப்படியே சில வாரங்கள் போயிருந்த சமயத்தில் தெருவில் இருந்த கோயில் அரசமரத்தில் அமர்ந்திருந்தவனை நோக்கி அவன் அக்கா வேகமாக ஓடிவந்தாள். மூச்சிரைத்த படியே ”பார்த்திபா….…உனக்கு விசா வந்துடுச்சாம். மாமா வந்திருக்காக. வேகமா வா” எனச் சொன்னாள்.

வீட்டுத் திண்ணையில் அப்பாவோடு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த மாமா இவனைக் கண்டதும், “மாப்ள……எல்லாம் ரெடியாயிடுச்சு. விசாவுக்கு ஒரு இலட்சத்து எண்பதாயிரம் எனப் பேசி முடிச்சு ஐம்பதாயிரம் ரூபாயைக் கொடுத்துட்டு வந்திருக்கேன். உங்க அத்தை நகையை அடகு வச்சு கொஞ்சம் புரட்டிக்கிடலாம். மீதிப் பணத்துக்கு செட்டியாருக்கிட்ட சொல்லி இருக்கேன். டிக்கெட் எல்லாம் ஏஜண்டே தந்துடுவான். இரண்டு, மூன்று நாளில் கிளம்பற மாதிரி இருக்குமாம். நான் போய் பணத்துக்கான ஏற்பாட்டைச் செய்றேன். நீங்க கிளம்பறதுக்கான ஏற்பாட்டைப் பண்ணிக்கிங்க” என சொல்லி விட்டுக் கிளம்பிச் சென்றார்.

ஒரு புதுக் கார் சொந்தமா வாங்கி ஓட்ட வேண்டும் என்பது பார்த்திபனின் பல வருட ஆசையாக இருந்தது. வாடகையாக வருமானமும் வரும் என்பதால் அது அவனின் கனவாகவே இருந்தது என்று கூடச் சொல்லலாம். அதற்காகவே டிரைவராக வேலை பார்த்துக் கொண்டிருந்த நண்பனுக்கு தன் சொந்தக் காசில் அவனுக்கு வேண்டியவைகளை வாங்கித்தந்தும், அவனுக்காக செலவு செய்தும் கார் ஓட்டக் கற்றுக்கொண்டு லைசென்சும் எடுத்து வைத்திருந்தான். அவனுக்குள் விதையாய் விழுந்து கிடந்த இந்தக்கனவு லேசாய் இப்போது துளிர்விட ஆரம்பித்தது. சிங்கப்பூருக்கு போயிட்டு வந்த கையோடு ஒரு காரை வாங்கி ஓட்டிக் கொண்டு இங்கேயே இருந்து விட வேண்டும் வேண்டும் என நினைத்துக் கொண்டவன் தன் சட்டைப்பையில் இருந்த லைசென்சை எடுத்து ஒருமுறை பார்த்துக் கொண்டான்.

மூன்று தினங்கள் கழித்து ஊருக்கு வந்த மாமா, ”மாப்ள……இது விசா காப்பி. நாளைக்கு இராத்திரி பிளைட். நாம சாயங்காலம் ஏர்போர்டுல இருக்கனும். அங்கே போனதும் செலவுக்கு கம்பெனியில் பணம் தருவாங்கலாம். இருந்தாலும் நான் கொஞ்சம் சிங்கப்பூர் டாலர் மாத்திக் கொண்டு வந்திருக்கேன். பத்திரமா வச்சுக்கங்க” என சொல்லி ஒரு கவரை அவன் கையில் கொடுத்தார். பணத்தை ஒருமுறை எடுத்துப் பார்த்துக் கொண்டான். ஐம்பது டாலர், பத்து டாலர் என இருந்தது. எவ்வளவு என்று எண்ணிப்பார்க்காமலே மீண்டும் கவருக்குள் வைத்துக் கொண்டான்.

அம்மாவின் கைப்பக்குவத்தில் செய்த திண்பண்டங்கள், அக்கா செய்த ஊறுகாய், அப்பா எடுத்து வந்து கொடுத்த புதுச் சட்டை என எல்லாவற்றையும் தன் வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த பெட்டியில் மாமாவே அடுக்கிக் கட்டினார். என்னடா பார்த்தி…….”உங்க அக்கா கல்யாணத்துக்கு சிங்கப்பூருல இருந்தே தங்கம் கொண்டு வந்துடுவியா?” எனக் கேட்டபடி தட்டில் ஐநூறு ரூபாய் வைத்துக் கொடுத்தாள் பக்கத்து வீட்டு பரிமளா அக்கா.

”மொதல்ல இந்த ஓட்டை மாத்திட்டு கல்லு வீடா ஆக்கின பின்னாடி தான் நான் கல்யாணம் செய்துக்கிருவேன்” என பதிலுக்கு அக்கா சொல்லிச் சிரித்தாள். ”உடம்பு நல்லா இருந்து ஆயுசு கிடந்தா எல்லாம் நல்லா நடக்கும்” என்றாள் அம்மா.

விடிந்ததும், விடியாததுமாய் தூக்கு வாளியோடு கிளம்பிய அவன் அப்பா ஆட்டு இறைச்சி வாங்கி வந்தார். சாப்பாட்டை முடித்து விட்டு வந்திருந்த காரில் திருச்சிக்கு தன் அப்பாவோடும், மாமாவோடும் கிளம்பினான். காரையும் அவன் மாமாவே ஏற்பாடு செய்திருந்தார். திருச்சி விமான நிலையத்தில் அத்தையும், இளவரசியும் இவர்களுக்கு முன்பே வந்து காத்திருந்தனர். ஒரு மணிநேரம் கழித்து வந்த ஏஜண்ட் பாஸ்போர்ட், டிக்கெட் எல்லாவற்றையும் கொடுத்து கவுண்டருக்கு போகச் சொன்னான். ஒருவழியாக சுங்கச் சோதனையைக் கடந்து விமானத்திற்குள் வந்தான். அவன் இருக்கைக்கு அருகில் இருந்தவனும் இவனைப் போலவே முதல் தடவையாக வேலைக்குச் சிங்கப்பூருக்கு செல்கிறவனாக இருந்தான். இருவரும் தாங்கள் செய்யப்போகும் வேலை, கிடைக்கப்போகும் சம்பளம் பற்றி பேசிக் கொண்டனர். ஒரே வேலை என்றாலும் அவனை விட தனக்குச் சம்பளம் கூடுதலாக இருப்பதை அறிந்ததும் மனதுக்குள் பார்த்திபனுக்கு ஒரு சந்தோசம்.

அதிகாலையில் விமானம் சிங்கப்பூரில் வந்திறங்கியது. விமான நிலையச் சோதனைகளை முடித்து விட்டு வெளியே வந்தான். வாசலின் முகப்பில் ஊரில் உள்ள இவனின் ஏஜண்ட் பெயரைச் சொல்லி அவர் ஆளா? என்று ஒருவர் அவனோடு வந்தவர்களை எல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தார். இவனைப் போலவே அந்த ஏஜண்ட் மூலம் இன்னும் சிலர் வந்திருப்பது அவனுக்கு அப்போது தான் தெரிந்தது. எல்லோரையும் மொத்தமாக ஒரு வண்டியில் ஏற்றிக் கொண்ட  அந்த நபர் பெரிய கடைத்தொகுதிக்கு அழைத்துச் சென்று சமையல் பாத்திரம், போர்வை, தலையணை உள்ளிட்ட சில பொருட்களை வாங்கி கொடுத்து தங்கும் விடுதியில் கொண்டு வந்து விட்டார். 

வேலைக்குச் செல்லத் தொடங்கியதும் தான் ஏஜண்ட் சொன்ன விசயங்களில் பாதி பொய் என அவனுக்குத் தெரிந்தது. ஓவர் டைம் சேர்த்து பார்த்தாலே மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் கிடைக்காது என உடன் வேலை செய்த பழைய ஆட்கள் சொன்னதைக் கேட்டு பார்த்திபனுக்கு பகீரென்றாகி விட்டது. ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாய் கட்டி வந்திருக்கிறோம். அதுவும் மாமா கடனில் என்ற நினைப்பு அவனுக்கு கவலையைத் தந்த போதும் அதை தன் வீட்டிற்கு காட்டிக் கொள்ளவில்லை. முதல் மாதச்சம்பளம் வாங்கியதும் கட்டி வந்த ரூபாயை எடுக்க இன்னும் எவ்வளவு மாதமாகும் என கணக்குப் போட்டுப் பார்த்தான். கணக்கோ இரண்டு வருசத்திற்கு மேலேயே ஆகும் எனக் காட்டியது. எவ்வளவு கஷ்டத்திலும் நாள் தவறாது வேலைக்குச் சென்று வந்தான்.

எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும் ஆர்வம் அவனுக்கு இயல்பான ஒன்றாக இருந்ததால் தான் செய்கின்ற வேலையில் இருக்கும் நெளிவு, சுழிவுகளை எளிதில் கற்றுக் கொண்டான். அதற்குள் இரண்டு ஆண்டுகள் முடிந்திருந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வேலை அனுமதிச் சீட்டை புதுப்பித்தவன் அதன் பின் ஆறு மாதம் கழித்தே சிங்கப்பூர் வருவதற்காக கட்டிய பணக்கடனை அடைத்து முடித்தான்.

இதற்கிடையில் கடனோடு கடனாக செய்திடனும் என்று சொல்லிக் கொண்டு வீட்டின் ஓட்டுக்கையை பிரித்துச் சிமெண்ட் கூரை போட உள்ளூர் மேஸ்திரி மூலம் வேலைகளை அவன் அப்பா தொடங்கியிருந்ததாலும், துபாயில் இருந்து அவன் மாமா பேசும் போதெல்லாம் சூப்பர்வைசரா ஆகிட்டு ஊருக்கு போங்க மாப்ள என சொல்லிக் கொண்டிருந்ததாலும், இடையில் ஊருக்குப் போகாமலே இருந்தான். உடனையே எதுவும் கேட்டு வைக்க வேண்டாம் என்பதால் அதுவரை கம்பெனியில் எதுவும் கேட்காமலிருந்தவன் மேலாளரை சந்தித்து தான் சூப்பர்வைசர் கோர்ஸ்க்கு போக விரும்புவதாய் சொன்னான். இப்போதைக்கு கம்பெனியில் இருந்து அனுப்ப முடியாது. வேண்டுமானால் நீயே சொந்தமாகப்  போய்க் கொள் என்றார்.

அந்தமட்டும் அனுமதியாது கொடுத்தாரே என நினைத்துக் கொண்டு நன்றி சொன்னவன் மாலையில் பயிற்சி தரும் நிறுவனத்திற்குச் சென்றான். அங்கு சொல்லப்பட்ட விபரங்களை கேட்டவனுக்குத் தலையில் இடி விழுந்தது போலிருந்தது. சூப்பர்வைசர் கோர்சில் சேர இந்தியாவில் குறைந்த பட்சம் பத்தாவது படித்து முடித்திருக்க வேண்டும். அதற்கான தகுதிச் சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே சேர்த்துக் கொள்ள முடியும் எனச் சொன்னார்கள். வாடிப்போன முகத்தோடு என்னிடம் ஊரில் ஏஜண்ட் அப்படி எதுவும் சொல்லவில்லையே? என்றான்.

அங்கிருந்தவரோ அசால்டாக, ”தம்பி…..நீ வந்து இரண்டு வருசமாச்சுன்னு சொல்ற. இதைப் பத்தியெல்லாம் விசாரிக்காமல் என்ன செய்துக்கிட்டு இருந்த? ஊருல பணத்துக்காக என்னத்தையாவது சொல்லி ஏத்தி விட்டுருவானுக. அவனுக்காக எல்லாம் சிங்கப்பூர் அரசாங்கம் விதிமுறையை மாத்தாது” என்றார்.

எப்ப இருந்து இந்த விதிமுறை இருக்கு? என்று கேட்டவனிடம் அது ஐந்து வருசமா நடப்பில் இருக்கே என்று அங்கிருந்தவர் சொன்னதும் கோபம் தலைக்கேற அங்கிருந்து வெளியேறினான். துபாயில் இருந்த மாமாவை அழைத்து விபரம் சொன்னான். என்ன மாப்ள செய்றது. அவன் உண்மையைத் தான் சொல்றான்னு நினைச்சேன். ஏமாத்திட்டானே என அவர் பங்குக்கு புலம்பி விட்டு கொஞ்சம் காசு சேர்க்கிற வரைக்குமாவது இருங்க மாப்ள என அறிவுரை சொல்ல ஆரம்பித்து விட்டார். அவரிடமிருந்து ஏஜண்ட் நம்பரை வாங்கிப் பேசிய போது தனக்கு அப்படி ஒரு விதிமுறை இருப்பது தெரியாது என தலையில் அடித்து சத்தியம் செய்யாத குறையாய் அவன் சொல்லி விட நொந்து போனான்.

சூப்பர்வைசராக போவதற்கு வேலைகளைப் பற்றி முழுமையாக தெரிந்திருக்க வேண்டும் என உடன் வேலை செய்பவர்கள் சொல்லி இருந்ததால் தான் பார்க்கும் வேலைக்கு நேரடி சம்பந்தமில்லாத விசயங்களைகளைக் கூட மெனக்கெட்டு கற்றுக் கொண்டிருந்தான். அது எல்லாம் பயனில்லாமல் போய்விட்ட வருத்தம் அவனுக்கு அதிகமானது. சூப்பர்வைசர் ஆகிவிட்டால் மாதச் சம்பளம் கிடைக்கும். இன்றைய நிலையில் இந்திய மதிப்பில் எழுபதாயிரம் வரும். வீட்டு வேலை முடிந்த கையோடு அக்காவுக்கும் கல்யாணத்திற்கு கொஞ்சம் நகை வாங்கி விடலாம் என நினைத்திருந்த அவன் கனவு கானல் நீராய் போனது. இப்போதைய சம்பளத்தில் வீட்டு வேலையை முடிக்க அவன் அப்பா சொல்லி இருந்த மூன்று இலட்சத்தை அடைக்கவே இன்னும் ஒரு வருடமாகி விடும். அதன்பின் அக்காவுக்கு நகை வாங்க வேண்டும். இன்னும் ஒரு முறை ரினிவெல் வாங்கினால் தான் சாத்தியமாகும் என்று நினைக்கும் போதே அவனுக்குத் தலை சுற்றுவது போலிருந்தது.

இந்த ரினிவலோடு என்ன பாடு பட்டாவது கார் வாங்க வேண்டும் என்ற தன் கனவு விதையை முளைக்க வைத்து விட வேண்டும் என நினைத்துக் கொண்டான். இந்தியாவில் இருந்து எடுத்து வந்த அந்தக் கனவு விதையை மீண்டும் கனவு விதையாகவே இந்தியாவிற்கு கொண்டு செல்லக் கூடாது என முடிவு செய்தான். ஊருக்குப் போகும் முடிவை ஒத்தி வைத்து விட்டு மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு பணிநீட்டிப்பு அனுமதிக்கு விண்ணப்பித்து வாங்கினான். இந்த இரண்டாண்டு சம்பாத்தியம் அக்காவுக்கு நகையும், தனக்கு காரும் வாங்க மட்டுமே என திட்டமிட்டுக் கொண்டான்.

ஊரில் இருக்கும் நண்பர்கள் மூலம் கார் வாங்குவதற்கான விபரங்கள், பிரிமியத்தொகை ஆகியவைகளைப் பெற்று அதற்கேற்ற படி திட்டமிட்டு சேமிக்க ஆரம்பித்தான். புதியதாக வாங்கிய வேலை நீட்டிப்பிற்கான தேதி காலாவதியாக ஆறு மாதமே இருந்த நிலையில் இரவு நேரத்தில் மட்டும் அழைக்கும் அவனின் அப்பா ஒருநாள் மதிய வேளையில் அழைத்திருந்தார். ”அக்காவுக்கு சொல்லி வைத்திருந்த இடத்தில் சம்பந்தம் கூடி வந்துள்ளதாகவும், அவர்கள் அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வைக்கச் சொல்வதாகவும், நமக்கிட்ட கொஞ்சம் அதிகம் எதிர்பார்க்கிற மாதிரி தெரியுது” என்றும் சொன்னார்.

அக்காவுக்கு பிடிச்சிருக்கா? என்றான்.

பையனுக்கும் அக்காவை பிடிச்சிருக்காம். நல்ல இடமா இருக்குடா பார்த்திபா. கொஞ்சம் முன்னப் பின்ன இருந்தாக் கூட கடன வாங்கியாச்சும் செய்துடலாம்யா” என்றாள் அவன் அம்மா.

”சரி. நகையெல்லாம் இங்கேயே நான் வாங்கிட்டு வந்துறேன். இந்த மாதக் கடைசியில நான் வந்துறேன். அடுத்த மாதம் முதல் முகூர்த்த தேதியில் கல்யாண தேதியை வையுங்கள்” எனச் சொன்னான்.

கம்பெனியில் பிடித்தமாக இருந்த தொகையோடு, கையிருப்பில் இருந்ததையும் சேர்த்து நகை எல்லாம் வாங்கியது போக கணிசமான தொகை வங்கி இருப்பில் இருந்தது. இந்திய வங்கியிலும் இலட்சத்தில் பணம் இருந்தது. இம்முறை கார் வாங்கி விட முடியும் என்ற நம்பிக்கை முதல் தடவையாக அவனுக்குள் வந்தது.

ஐந்தரை வருடங்கள் ஊரை விட்டுப் பிரிந்திருந்தவனை வரவேற்க விமான நிலையத்திற்கு அப்பா, அத்தை, நண்பர்கள் சிலரும் வந்திருந்தனர். இவனைப்போலவே ஊரும் மாறியிருந்தது. காலையில் இவனைப் பார்க்க வந்த தெருக்காரர்கள் சிலர் நல விசாரிப்போடு தைலம் இருந்தா கொடேன் எனக் கேட்டனர். ”டே பார்த்திபா………….இடை வாரு கொண்டு வந்திருந்தா ஒன்னு தாடா. பொடிமட்டை வைக்கிற வாரு கிழிஞ்சு போச்சு” என்றார் எதிர் வீட்டுத் தாத்தா.

வடிவம் மாறியிருந்த ஊரில்
மாறாமலே இருந்தது
கோடாரித் தைலமும்
பச்சைக் கலர் இடைவாரும்
இருந்தா கொடேன்
என்ற கோரிக்கைகள் மட்டும்!  -என்று சிங்கை தமிழ்முரசில் படித்திருந்த ஒரு கவிதை அவன் நினைவுக்கு வந்து போனது.

மாலையில் அம்மா அவனை அழைத்தாள். பார்த்தி உனக்கிட்ட கொஞ்சம் பேசனும் என்றாள்.

என்னம்மா? சொல்லு.

அக்காவை கட்டிக் கொடுக்கிற இடத்துல வீட்டடி இடம் கேட்கிறாங்க. உங்க அப்பாரும் தருகிறேன்னு வாக்குக் கொடுத்திருக்கிறார்.

அதைத் தான் போனிலே சொன்னியம்மா?


”அதுல ஒரு சிக்கல். அக்காவுக்கு நாம கொடுக்க நினைச்ச இடத்துல உன் சித்தப்பாவோட இரண்டாவது சம்சாரத்து பசங்க முன்னாடி போட்டிருந்த வழக்கை வாபஸ் வாங்குறோம்னு சொல்லிட்டு இப்ப முடியாதுன்னு சொல்லிட்டாங்க. பஞ்சாயத்துல வச்சுக் கேட்டதுக்கும் ஒத்துக்கிடல. ஆறு இலட்சம் தந்தா அந்தச் சொத்தை விட்டுக் கொடுக்குறதா சொல்லுறாங்க. இரண்டு இலட்சம் பெறுகிற சொத்தை வீம்புக்காக ஆறு இலட்சம்னு சொல்றானுக. கல்யாணத்துக்கு முதல் நாள் நிச்சயதார்த்தம் செய்யும் போது உங்க அக்கா பேர்ல இடத்தை கிரையம் பண்ணி பத்திரம் தருவதாக சபையில சொல்லியாச்சு. இப்ப இந்தக் காரணத்தை எல்லாம் சொன்னா தப்பாயிடும். அதுனால நம்ம வீட்டுக்கு மேற்கில் இருக்கிற இராசாங்கம்  அவன் வீட்டடி இடத்தை விற்கப் போறேன்னு சொல்றான். அதை வாங்கலாம்னு உங்க அப்பா சொல்றாரு. மாமாகிட்ட கேட்டதுக்கு அவனும் அப்படியே செய்யுங்கன்னு சொல்றான்” என்றாள்.

பார்த்திபனுக்கு மெல்ல விசயம் புரியத் தொடங்கியது. உடனே அவ்வளவு பணத்துக்கு எங்கம்மா போறது? என்றான்.

முதல்ல நான்கு இலட்சம் கொடுத்தா கிரையம் போட்டுத் தருவதாக இராசாங்கம் சொல்லியிருக்கான். பாக்கிப் பணத்தை ஆறு மாசத்துக்குள்ள தரச் சொல்றான் என்றாள் அம்மா.

ஒன்றும் சொல்லாமல் அம்மாவிடமிருந்து எழுந்து வீட்டிற்குள் வந்தவன் கதவருகில் அக்கா நின்று கொண்டிருப்பதைக் கண்டான். தன்னிடம் அம்மா சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டான். அவன் எதுவும் சொல்லாமல் எழுந்து வந்து விட்டதால் அவள் தலை கவிழ்ந்து நின்றாள். அவள் முகத்தில் ஏமாற்றம் இருந்தது.

ரூமிற்குள் வந்து படுக்கையில் கிடந்த பார்த்திபனின் மனதில் அவன் அக்காவின் முகம் வந்து, வந்து போனது. இன்னொரு அம்மாவாய் இருந்து பார்த்துக் கொண்டவள். பலநாட்கள் எனக்காக சாப்பிடாமல் காத்திருந்தவள். ஒருமுறை கார்காரன் ஒருவன் அடித்து ரோட்டில் சாய்த்ததில் கால் முறிவு ஏற்பட்டு படுக்கையில் கிடந்த போது ஒரு குழந்தை போல பார்த்துக் கொண்டதோடு. கொஞ்சமும் முகம் சுழிக்காமல் என்னுடைய சிறுநீர், மலம் எல்லாவற்றையும் சுமந்தவள். இத்தனை ஆண்டுகளில் தனக்காக எதுவும் கேட்காதவள். என்ன நகை உனக்கு வேண்டும் எனக் கேட்ட போது கூட நான் போட்டுக்க போறது என் தம்பி வீட்டுச் சீதனம். உனக்குப் பிடிச்சதையே வாங்கிக் கொடு எனச் சொன்னவள். பேசும் ஒவ்வொரு முறையும் தன்னை விட எனக்காகவே அதிகம் கவலைப்பட்டவள். அவளுக்குக் கிடைத்திருக்கும் ஒரு வாழ்க்கையை அவளுக்குப் பிடித்தவனோடு அமைத்துத் தருவது என் கடமையல்லவா? என்ற நினைப்பும், கார் வாங்க வேண்டும் என்று இத்தனை ஆண்டு காலத் தன் கனவு இந்த வருடம் தான் நிறைவேறுவதற்கு சாத்தியமாகி இருக்கிறது. இதற்குப் பின் முடியுமா? என்பது சந்தேகம் தான். இருக்கும் பணத்தை இடத்திற்குக் கொடுத்து விட்டால் தன் கனவு மனதில் விதையாய் கிடந்து விதையாகவே மக்கிப் போய்விடுமே என்ற நினைப்பும் மாறி, மாறி அவன் மனதில் ஓடிக்கொண்டிருக்க கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த அக்கா அவனருகில் அமர்ந்தாள்.

”பார்த்தி…….இந்தச் சம்பந்தம் இல்லைன்னா இன்னொரு சம்பந்தம். வெறும் வாய் பேச்சு மட்டும் தான் நடந்திருக்கு. இன்னும் தட்டுக் கூட மாத்தல. அம்மா சொன்னதைக் கேட்டு நீ மனசைக் குழப்பிக்காதே. வந்து சாப்பிட்டுட்டு தூங்கு” என்றாள்.

சாப்பாடு பரிமாறிய தன் அக்காவின் முகத்தை  ஒருமுறை உற்றுப்பார்த்தான். தன் முகத்தில் எந்தப் பாவணையையும் காட்டி விடக்கூடாது என்பது போல் அவள் இருப்பதாய் அவனுக்குத் தோன்றியது. சாப்பிட்டு விட்டு எழுந்தவன் திண்ணையில் அமர்ந்திருந்த அப்பாவிடம், ”நாளைக்கு இராசாங்கத்துக்கிட்ட நான்கு இலட்சம் கொடுத்து இடத்தை கிரையம் போட்டுடலாம். அவருக்குச் சொல்லி அனுப்பிடுங்க” எனச் சொல்லிவிட்டு வெளியில் கிளம்பிச் சென்றான்.

கார் விற்பனை முகவரைச் சந்திக்கச் செல்வதற்காக காத்திருந்த தன் நண்பனிடம் கார் இந்த முறை வாங்கவில்லை. அடுத்த தடவை வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்றான்.


ஏன்? என்னாச்சு? பணம் தான் வச்சிருக்கேன்னு சொன்னியே? என்ற நண்பனிடம், “இந்த வருசம் இல்லை என்றால் அடுத்து இரண்டு வருசத்துக்கு வேலை செஞ்சு கார் வாங்கிக்கலாம்டா. ஆனா  இப்ப விட்டுட்டா என் அக்கா நினைச்சதை, விரும்பியதை என்னால் செய்ய முடியாமல் போயிடும்” என்றான். 

கல்யாணக்கடனை அடைக்கவே இன்னும் ஒரு வருடம் ஆகிவிடும் என்ற நிலையில் தன் கனவு விதையை நிஜமாக்கிக் கொள்வதற்காக ஊரில் செட்டில் ஆகும் திட்டத்தை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க முடிவு செய்தான். தன் அக்கா கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடிந்த கையோடு விமானம் ஏறி மீண்டும் சிங்கப்பூருக்கு வந்து இறங்கினான்.


தகவல் பலகையில் அறிவிப்பை பார்த்த கையோடு தன் பெயரைச் சூப்பர்வைசரிடம் கொடுப்பதற்காக அவரின் அறையை நோக்கிச் சென்றவனின் காதில் இன்னும் இரண்டு வருசத்துல பெர்மிட்டை முடிச்சிட்டு ஊருக்கு போய் செட்டிலாகி விட வேண்டும் என்றும், ஆறுமாசம் முடிஞ்சிட்டா சூப்பர்வைசராக ஆகிடலாம்னு ஏஜண்ட் சொல்லி இருக்கான் என்றும் கம்பெனிக்கு புதிதாய் வேலைக்கு வந்திருந்தவர்கள் பேசிக் கொண்டிருந்தது காதில் விழ மெலிதாக சிரித்துக் கொண்டான். அவர்கள் கொண்டிருக்கும் எண்ணம் தவறாகி விடும் எனச் சொல்ல நினைத்தாலும் கனவுகளோடு இப்போது தான் வந்திருக்கும் அவர்களின் நம்பிக்கை விதைகளாவது துளிர்க்க வேண்டும் என இறைவனிடம் பிரார்தித்துக் கொண்டான். மற்றவர்களுக்காக பிரார்தித்துக் கொண்ட அவனின் கார் வாங்கும் கனவும், ஊரில் செட்டில் ஆகும் கனவும் இன்னும் விதையாகவே அடுத்த பயணத்திற்கு அவனைப் போலவே தயாரானது.

நன்றி : சொல்வனம்.காம்

Sunday, 28 December 2014

பொய்க்காத நம்பிக்கை

எப்படியும் வந்து விடுவாள் என்ற தன் நம்பிக்கை பொய்த்து விடுமோ என்ற அகிலனின் பதற்றத்தை ஓடிக் கொண்டிருந்த கடிகார முள்ளின் டிக், டிக் சப்தம் அதிகமாக்கிக் கொண்டிருந்தது. மனமும் திக், திக் என்று தன் சுருதியைக் கூட்ட திறந்து கிடக்கும் வாசற்கதவை வெறித்த படியே பார்த்துக் கொண்டிருந்தவன் மனதில் அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது என்ற எண்ணம் மீண்டும், மீண்டும் அலையாய் வந்து போனது. லதா வந்தால் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு கட்டித்தழுவி அழ வேண்டும் போலிருந்தது. 

அகிலனின் காதல் மனைவி லதா. ஆனால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் அவர்களுடையது. தான் குடியிருக்கும் புளோக்கில் இருந்து சற்றுத் தள்ளி புதிதாக கட்டப்பட்டிருந்த புளோக்கிற்கு குடிவந்திருந்த லதாவின் தந்தையை அலுவல் நிமித்தம் சந்திக்கச் சென்றிருந்த போது தான் லதாவை அகிலன் முதல் முறையாகப் பார்த்தான். தேநீர் கலக்கிக் கொண்டு வந்து தந்தவளை அவளின் தந்தை அறிமுகம் செய்து வைத்தார். அவன் பணிபுரியும் அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் நிறுவனத்தில் ஊழியராய் இருப்பதாய் சொன்னவளிடம் ஒரு சிறு புன்னகையை மட்டும் பதிலாய் கொடுத்தான்.

ஒருநாள் தன்னுடைய இரு சக்கர வாகனம் தன்னோடு வர சம்மதிக்காததால் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வதற்காக புளோக்கிற்கு அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு வந்த போது லதாவும் பேருந்திற்காக அங்கு காத்திருந்தாள். இருவரும் பரஸ்பர காலை வணக்கத்தைச் சொல்லிக் கொண்டனர். இந்த நிறுத்தத்தில் இருந்து தான் பேருந்து எடுப்பீர்களா? இதுவரை நான் உங்களை இங்கு பார்த்ததில்லையே? என்றவளிடம், இல்லை. வழக்கமாக என் இரு சக்கர வாகனத்தில் தான் அலுவலகத்திற்குச் செல்வேன். இன்று ஏனோ அது மக்கர் செய்து விட்டது என்று சொன்னான். அவர்களைத் தவிர பேருந்து நிறுத்தத்தில் இன்னும் சிலரும் இருந்தனர். காலை வகுப்புகளுக்கு செல்லும் பள்ளிக் குழந்தைகள் அதிகமாக இருந்தனர். சிலரின் கழுத்தில் அடையாள அட்டை போல பேருந்துக் கட்டண அட்டை தொங்கிக் கொண்டிருந்தது.

தொடர்ந்து அவளுடன் பேசுவதற்கு ஏதுமில்லாதவனாய் அங்கிருந்த பள்ளிக் குழந்தைகளை கவனித்துக் கொண்டிருந்த அகிலனை இருசக்கர வாகனத்தில் தினமும் போய் வருவது சிரமமாக இல்லையா? என்ற லதாவின் கேள்வி திருப்பியது. அப்படி அவள் கேட்டதற்கும் காரணம் இருந்தது. அவர்கள் தங்கியிருந்தது சிங்கப்பூரின் ஒரு கோடியில் இருக்கும் உட்லண்ஸ் வட்டாரத்தில். வேலை செய்யும் அலுவலகம் இருப்பதோ நகரின் இன்னொரு கோடியில் இருக்கும் சிராங்கூன் பகுதியில்!

போகிற வழியில் இருக்கும் என் சில கிளைண்டுகளை சந்தித்துப் பேச, புதிய கிளைண்டுகளைச் சந்திக்க இரு சக்கர வாகனம் தான் தனக்கு வசதி என அகிலன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் செல்வதற்கான பேருந்து வந்து நின்றது. காலைநேரம் என்பதால் பேருந்தில் நிறைய கூட்டமிருந்தது. உட்காருவதற்கு இருக்கைகள் கீழ் தளத்தில் இல்லாததால் பேருந்தின் மேல் தளத்திற்குச் சென்றனர். அங்கு நிரப்பப்படாத சில இருக்கைகள் இருந்தன. ஒரு இருக்கையில் அமர்ந்த லதா ஜன்னலோரம் நகர்ந்து கொண்டு பக்கத்து இருக்கையில் அகிலன் அமர இடம் கொடுத்தாள். உட்கார இங்கு இருக்கைகள் இருக்கும் போது பலரும் கீழ் தளத்தில் நின்று கொண்டு பயணித்துக் கொண்டு வருகிறார்களே ஏன்? என நினைத்துக் கொண்டவன் அந்தக் கேள்வியை லதாவிடம் கேட்டான்.

அவளோ, ”இது என்னங்க கேள்வி? காசு கட்டி வருகிறவன் உட்கார்ந்து வந்தா என்ன? நின்னுக்கிட்டு வந்தா என்ன?” என்றாள் சிரித்துக் கொண்டே.

தன் பதிலால் சட்டென அகிலனின் முகம் மாறுவதைக் கண்ட லதா சும்மா சொன்னேன் எனச் சொல்லிவிட்டு அவர்கள் பக்கத்தில் இருக்கும் நிறுத்தத்தில் இறங்குபவர்களாக இருப்பார்கள். அதனால் கூட அப்படி நின்று கொண்டு வருவார்கள் என்றாள். இப்படி ஒரு அபத்தமான கேள்வியைக் கேட்காமலே இருந்திருக்கலாம் என அகிலன் தனக்குத் தானே மனதிற்குள் சொல்லிக் கொண்டான். தனக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு சீனப்பெரியவரை பார்த்ததும் அவனுக்கு நினைவுகள் பின்னோக்கி ஓட ஆரம்பித்தது

அகிலனின் தந்தை சொந்தமாகத் தொழில் நிறுவனம் நடத்தியவர். ஓரளவு வசதியான குடும்பம். சொந்தமாக அவர்களுக்கென தரைவீடு இருந்தது. ஒற்றைப் பிள்ளை என்பதால் அவனைச் செல்லமாக வளர்த்தனர். கேட்டவைகளுக்கும் மேலாகவே அவனுக்குப் பிடித்த விசயங்கள் கிடைத்தது. வீட்டில் இரண்டு கார்கள் இருந்ததால் பள்ளிக்கூடத்திற்கு காரில் தான் போய் வருவான். அதன்பின் இலண்டன் கல்லூரியில் ஓராண்டு படிப்பிற்கு இடம் கிடைக்க அகிலன் அங்கு சென்றிருந்த சமயத்தில் தான் குடும்பத்தில் புயல் வீச ஆரம்பித்தது. அவனின் தந்தையோடு பங்குதாரர்களாக இருந்த இருவர் கூட்டாகச் சேர்ந்து பெரிய அளவில் நிதி மோசடிகளைச் செய்ததோடு மட்டுமில்லாமல் அதில் அவனின் தந்தையைத் திட்டமிட்டுச் சிக்க வைத்திருந்தனர். விசயம் அவருக்குத் தெரிய வந்த சமயத்தில் நிலைமை கை மீறிப் போயிருந்தது. அவரின் நிறுவனத்திற்காக உதிரிபாகங்களை சப்ளை செய்தவர்கள், பங்காளித்துவ கூட்டாளிகள் என எல்லோரும் ஒரே நேரத்தில் நெருக்க தன்னுடைய சொத்துக்கள், வீடு எல்லாவற்றையும் விற்று அவரவருக்குரிய பாக்கித் தொகைகளையும், முதலீட்டுத் தொகைகளையும் அடைத்தார். இழந்தவைகளை மீண்டும் சம்பாதித்து விடலாம் என்ற நம்பிக்கை அவருக்குள் இருந்த போதும் அது சாத்தியமாகும் சூழல் இல்லாமல் போனது. எல்லோருக்கும் பைசல் செய்தது போக எஞ்சியிருந்த தொகையில் உட்லண்ஸில் ஒரு புளோக் வீட்டை வாங்கிக் குடி வந்தார்.

இலண்டனில் இருந்த அகிலனுக்கு இந்த விசயங்கள் சொல்லாமல் மறைக்கப்பட்டது. தன் ஆசை மகனின் படிப்புக்குத் தடை வந்து விடக்கூடாது என நினைத்த அவனின் பெற்றோர் மாதா மாதாம் பணம் அனுப்பி வைத்து விடுவதால் அவனுக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை. அவன் அடிக்கடி பேசும் உறவினர்களிடமும், நெருங்கிய நண்பர்களிடமும் அவனிடம் இந்த விசயங்களைச் சொல்லக் கூடாது என அவனின் தந்தை கூறி வைத்திருந்தார்.

நம்பவைத்து ஏமாற்றி என் புருசனை முடக்கிப் போட்டு நோயாளி மாதிரி ஆக்கிட்டாங்களே. அவர்களைத் தண்டிக்கமாட்டாயா? என அகிலனின் அம்மா அவ்வப்போது தெய்வங்களிடம் முறையிட்டு சபித்துக் கொண்டாலும் கணவனின் முன் நம்பிக்கையுடன் இருப்பதைப் போல் காட்டிக் கொண்டாள். தானும் புலம்பிக் கொண்டிருந்தால் அவர் இன்னும் நிலை குழைந்து விடுவார் என்று நினைத்தாள்

ஏனோ அன்றிரவு, தான் ஏமாற்றப்பட்டதைப் பற்றி அதிகமாக புலம்பிய படி இருந்தவரிடம், ”ஏங்க இந்த வசதிகளோடவா நாம வாழ்க்கையை ஆரம்பிச்சோம். எல்லாம் நீங்க சம்பாதிச்சது தானே. இப்பவும் என்ன ஆயிடுச்சு? அகிலன் இலண்டனிலிருந்து வரவும் மீண்டும் ஒரு கம்பெனி ஆரம்பிச்சு சம்பாதிச்சிடலாங்க. நாம பார்க்காத பணமா? நீங்க செய்யாத உதவியா? நமக்குன்னு சிலர் உதவுவாங்க. எல்லாம் அவன் வரும் வரைக்கும் தான். இன்னும் ஏழு மாசத்துல படிப்பை முடிச்சிட்டு வந்துடுவான். அதுக்கப்புறம் எல்லாம் நல்லதே நடக்கும். மனசை போட்டு குழப்பிக்காமல் படுத்துத் தூங்குங்க” என சமாதானம் சொல்லி விட்டு அவரின் கால்களை மெல்ல அமுக்கி விட்டபடி உட்கார்ந்திருந்தவள் அப்படியே தூங்கிப் போனாள்.

விடிந்ததும் பஜாருக்கு போய் காய்கறிகள் வாங்கி விட்டு திரும்பியவள் இன்னும் கணவன் எழுந்திருக்காமல் படுத்திருப்பதைப் பார்த்ததும் உடம்பிற்கு ஏதும் சரியில்லையோ என நினைத்து அருகில் வந்து தொட்டுப் பார்த்தாள். உடம்பு சில்லென்று இருந்தது. பலமுறை அழைத்தும் எழும்பாதவரை மெல்லப் புரட்டினாள், நீர் கோர்த்த கண்களுடன் ஒரு பார்வை பார்த்தவர் எந்தச் சலனமுமின்றி மீண்டும் கண்களை மூடிக் கொண்டார்.

என்னாச்சுங்க? என்ன செய்யுது? என பலமுறை கேட்டும் எதுவும் பதில் சொல்லாமல் இருந்தவரைக் கண்டு விபரீதமாய் உணர்ந்தவள் வேகமாக ஓடி டைரியைப் புரட்டினாள். அவர்களின் குடும்ப நண்பரும், டாக்டருமான ராமதுரையை அழைத்து பதறியபடியே விபரம் சொன்னாள். நெஞ்சை லேசாக அமுக்கி விடுங்கள். கை, கால்களை அழுந்த தேய்த்து விடுங்கள் என சில விசயங்களை செய்யச் சொன்னவர் அடுத்த பத்து நிமிடத்தில் அங்கு வந்து விட்டார். பதறியபடியே அவரின் பின்னாள் அவள் நிற்க மூடியிருந்த கண்களை லேசாக விரல்களால் இழுத்துப் பார்த்தவரின் முகம் சற்றே மாறியது கண்டு அவளின் பதற்றம் இன்னும் அதிகமானது. நாடி பிடித்துப் பார்த்தவர் நம்மை விட்டு போயிட்டாரும்மா? என கலங்கிய படியே சொன்னார். பெருங்குரலெடுத்து அழுதவளை சமாதனம் செய்த ராமதுரை மற்ற உறவுகளுக்குத் தகவல் சொல்லி விட்டு அகிலனுக்கும் அலைபேசியில் தகவல் சொன்னார்.

கல்லூரியில் தகவல் சொல்லி விடுப்பு எடுத்துக் கொண்டு அன்றிரவே சிங்கப்பூருக்கு வந்திறங்கினான். விமானநிலையத்திற்கு அழைக்க வந்திருந்த நண்பர்கள் பட்டும், படாமலும் நிகழ்ந்தவைகளைச் சொல்லிக் கொண்டு வந்தார்கள். நண்பர்கள் வந்திருந்ததால் தன் வீட்டுக் கார் வராததைப் பற்றி அவன் யோசிக்க வில்லை. ஆனால், டாக்சி வழக்கத்திற்கு மாறான பாதையில் போனதைக் கண்டதும் நண்பர்களிடம் என்னாச்சு? ஏன் இங்கே போறோம்? என திருப்பி, திருப்பி கேட்டான். நண்பர்களோ முதலில் வீட்டுக்கு போய் பேசிக்கலாம் என சொல்லி ஆறுதல் படுத்திக் கொண்டே வந்தனர். புளோக்கின் கீழ் கண்ணாடிப் பெட்டியில் படுக்க வைக்கப்படிருந்த அப்பாவையும், அவரருகில் கண்ணீரோடு அமர்ந்திருந்த அம்மாவையும் பார்த்ததுமே கையிலிருந்த பெட்டியை அப்படியே போட்டு விட்டு கத்தியபடியே ஓடி வந்து தன் அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுதவனை உறவினர்கள் ஆறுதல் படுத்தினர்.


அப்பா இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்த மனநிலையில் அருகிலிருந்த தூணில் சரிந்த படி நின்றான். நான்கு மாதங்களுக்குள் தன் மொத்த குடும்பமும் சிதைந்து போய் விட்டதா? புளோக் வீட்டிற்கு ஏன் வந்தார்கள்? என்ற கேள்வியும் அலையாய் வந்து மோதிக் கொண்டிருக்க அப்பாவிற்கான இறுதிக் காரியங்களை முடித்தான். இரண்டொரு நாட்களில் உறவினர்கள் அவரவர் வேலைகளைக் காரணம் காட்டி சென்று விட ஓரளவு நடந்தவைகளை அகிலனால் புரிந்து கொள்ள முடிந்திருந்தது. ஒரு வாரம் ஆகியிருந்த நிலையில் நடந்தவைகளைக் கண்ணீர் மல்க அம்மா சொன்னதைக் கேட்டதும் அதிர்ந்து போனான். அப்பாவின் இருபதாண்டுகால நண்பர்கள், குடும்பத்தில் ஒருவராக பார்க்கப்பட்டவர்கள் இப்படி கழுத்தறுத்து விட்டார்கள் என அவன் அம்மா சொன்ன போது மனிதன் தன் கோரமுகத்தை எப்படியெல்லாம் வெளிப்படுத்துவான் என்பதை அவன் உணர்ந்தான்


இந்த நிலையில் அம்மாவை தனியே விட்டு விட்டு படிக்கச் செல்வது சரி எனப் படாததால் சிங்கப்பூரிலேயே இருக்க முடிவு செய்தான். தன் முடிவைச் சொன்ன போது அம்மாவும், நண்பர்களும் தடை சொல்லவில்லை. பகுதி நேரப் பணி செய்து கொண்டே சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதும் சில இடங்களில் பணி செய்து அனுபவம் பெற்ற பின் இப்போது பணி செய்யும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தான். கடைநிலை ஊழியராய் தொடங்கி கொஞ்சம், கொஞ்சமாக முன் நகர்ந்து கொண்டிருந்தான்.

யாரோ வேகமாக தன் தோளை உழுக்கியது போல் இருக்க தன் கடந்தகால நினைவுகளிலிருந்து திரும்பியவனிடம், ”என்னாச்சு? பயங்கர யோசனையா இருக்கிற மாதிரி இருக்கு? பெரிய கனவோ?” என முன் விழுந்த தன் கூந்தலை பின் தள்ளிய படியே லதா கேட்டாள்.

”ஒன்னுமில்லை” என சமாளித்தவன் பேச்சை மாற்றுவதற்காக அடுத்த நிறுத்தத்ததில் நாம் இறங்க வேண்டும். வாங்க கீழ் தளத்திற்கு போவோம் என சொல்லியபடி இருக்கையிலிருந்து எழுந்தான். லதாவும் அவனைப் பின் தொடர்ந்தாள்.

தங்களுக்குரிய நிறுத்தத்தில் இறங்கியதும் ”பை”, பை” என சொல்லிக் கையசைத்த படி இருவரும் அவரவர் அலுவலகம் நோக்கிப் போயினர். அதன்பின் அகிலனும், லதாவும் பேருந்தில் சந்தித்துக் கொள்ளாத போதும் அவ்வப்போது அலைபேசியில் பேசிக் கொண்டனர். மதிய உணவிற்காக இருவரும் கடைத் தொகுதிக்கு வரும் சமயங்களில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். பேசிக் கொண்டனர். வார இறுதிநாட்களில் எங்காவது கலாச்சார விழாக்கள் நடைபெற்றால் சேர்ந்து செல்லும் அளவுக்கு அவர்களின் நட்பு வளர்ந்திருந்தது. ஐந்து மாதங்கள் ஆகியிருந்த நிலையில் லதாவுடனான தன் நட்பு வேறு ஒரு நிலைக்கு தாவி வருவதை அகிலன் உணர்ந்தான். எப்படி அவளிடம் இதைச் சொல்வது? என்ற தயக்கமும், இதனால் தன்னுடனான நட்பை முறித்துக் கொள்வாளோ? என்ற பயமும் அவனுக்குள் இருந்தது.

ஒரு வார இறுதிநாளில் பறவைகள் பூங்காவிற்கு அவளுடன் சென்றிருந்த போது கொஞ்சம் தைரியத்தோடு ”நான் உன்னை விரும்புகிறேன் லதா” என மிடறு விழுங்கிய படி ஒருவாறு சொல்லி முடித்தான். ஆனால் அவன் பயந்தது போல் ஒன்றும் நடக்கவில்லை. அவனுடைய விருப்பத்தை அவள் எதார்த்தமாக எதிர் கொண்டாள். அவளின் பதிலற்ற மெளனம் அவளுக்கும் அதில் விருப்பம் என்பதாகவே அகிலனுக்கு பட்டது. அவர்களின் வழக்கமான சந்திப்புகள் தொடர்ந்தன. ஆனால் இப்போது இருவரும் காதலர்களாக மாறி இருந்தனர். சக நண்பர்களுக்கும் அது தெரியும் படியாகவே அவர்கள் பழகி வந்தனர். ஓராண்டுக்கு பின் இருவீட்டார் சம்மதத்தோடு அவர்களின் திருமணம் நடைபெற்றது.


கல்யாணமான மறு வருடமே லதா கருவுற்றாள். ஒருநாள் இரவில் கடுமையான வயிற்று வலி எனப் படுத்தவளுக்கு ஏற்பட்ட திடீர் இரத்தப்போக்கில் கருவும் கலைந்து வெளியேறியது. அதன்பின் மருத்துவரின் ஆலோசனைப்படி கவனமாய் இருந்தும் கரு உருக்கொள்வதும் பின் சில நாட்களிலே தங்காமல் கலைவதுமாக இருந்தது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாய் போக மருத்துவரோ இன்னும் சாத்தியமிருக்கிறது என நம்பிக்கை கொடுத்துக் கொண்டிருந்தார்.

அடிக்கடி ஏற்படும் இரத்தப்போக்கினால் லதாவின் உடலும் நசிவடையத் தொடங்கியதால் அம்மாவின் ஆலோசனைப் படி லதா வேலைக்குப் போவதை நிறுத்திக் கொண்டாள். அடுத்த இரண்டு வருடத்தில் புற்றுநோயின் தீவிரத்தால் அம்மா இறந்து போக வீட்டு வேலைகளோடு தண்ணி, கரண்ட், டெலிபோன் பில் கட்டுவது தொடங்கி எல்லா புற வேலைகளையும் லதாவே பார்த்துக் கொண்டாள். 

அவர்களுடைய பத்து வருட இல்லறத்தில் குழந்தை இல்லை என்ற ஒரு குறையைத் தவிர வேறு குறை இல்லை. குழந்தைக்கான ஏக்கம் தனக்குள் இருந்த போதும் அதை எந்த நிலையிலும் வெளிக்காட்டி விடக்கூடாது என்பதில் அகிலன் காட்டிய உறுதியைக் கண்டு பலசமயங்களில் லதா அதிசயித்திருக்கிறாள். குழந்தை தனக்குள் தங்காது போவது பற்றி அவள் வருத்தமாய் சொல்லும் போதெல்லாம் அந்த விசயத்தைத் தொடராதவாறு அவளின் பேச்சை வேறு விசயங்களுக்குள் திருப்பி விடுவான். சில வருடங்களுக்கு முன் ஒருநாள் அதிக விரக்தியில் இருந்த லதா என்னை டைவர்ஸ் செய்துட்டு வேறு யாரையாவது கட்டிக்கிட்டு குழந்தை பெத்துக்கங்க. நானே டைவர்சில் கையெழுத்து போட்டுத் தருகிறேன் என சொல்லப்போக முதல் முறையாக அவளை கை நீட்டி அறைந்தான். அதுதான் அவளை அவன் முதலும், கடைசியுமாய் கைநீட்டி அடித்தது. ஆனால் அவ்வப்போது பல விசயங்களில் இருவருக்கும் எல்லா குடும்பங்களிலும் நிகழ்வதைப் போல் வாய்ச்சண்டைகள் வரும்.

கோபப்பட்டு அவன் திட்டும் சமயத்தில் கோபித்துக் கொண்டு ஒரு கேரி பேக்கில் தன் துணிமணிகளை அள்ளி அமுக்கிக் கொண்டு தன் அம்மா வீட்டிற்குப் போய்விடுவாள். போனவள் அடுத்த வேளை சப்பாட்டிற்கு திரும்பி வந்து விடுவாள். இது வழக்கமான விசயம் என்பதால் லதா வீட்டிலும் சரி, அகிலனும் சரி அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அம்மா வீட்டிற்கு போய்விடுவேன் என்ற மனைவியின் பயமுறுத்தல்கள் லதாவைப் பொறுத்தவரை அகிலனிடம் பலிக்கவில்லை!

இன்னும் சில தினங்களில் அவர்களுடைய திருமண நாள் வர இருந்த நிலையில் புதிய மாடல் நெக்லஸ் உனக்கு வாங்கித் தரப்போகிறேன். உனக்கு வேண்டிய டிசைனை நீயே தேர்ந்தெடுத்து வை எனச் சொல்லி புதிய நகை மாடல்கள் அடங்கிய கேட்லாக் ஒன்றை அவளின் கையில் அகிலன் திணித்தான். நகை வாங்கித்தர விரும்பியதற்கு திருமணநாளோடு அவன் அலுவலகத்தில் நாளை வெளியிடப்பட இருக்கும் புதிய பதவி உயர்வு பட்டியலில் அவன் பெயர் இருந்ததும் ஒரு காரணமாக இருந்தது. சர்ப்பிரைஸ் ஆக இருக்கட்டும் என நினைத்து அந்த விசயத்தை லதாவிடம் அவன் சொல்லவில்லை.

மறுநாள் அலுவலகம் வந்தவனுக்கு பதிவி உயர்வு பட்டியலில் இருந்து தன் பெயர் நீக்கப்பட்டிருப்பதும், தான் மிகவும் எதிர்பார்த்திருந்த அந்தப்பதவி பொதுமேலாளரின் உறவினருக்குத் தரப்பட்டிருக்கும் செய்தியும் சொல்லப்பட்டது. தனக்கு முழுத்தகுதி, போதிய அனுபவம் இருந்தும் இரண்டு முறை தவறிப் போன வாய்ப்பு இம்முறையும் திட்டமிட்டு பறிக்கப்பட்டது அவனுக்குப் பெரிய மனக்குமுறலை உண்டாக்கியது. கடந்த மாதம் போனஸ் அறிவிக்கப்பட்ட போது தனக்கு இரண்டுமாத போன்ஸ் குறைக்கப்பட்டதற்கு இந்த பதவி உயர்வைத் தான் பொதுமேலாளர் காரணமாகச் சொல்லி இருந்தார். அதனால் அவரைச் சந்தித்து முறையிட்டவனிடம், “உனக்கென்ன பிள்ளையா, குட்டியா? போய் வேலையைப் பாருயா. அடுத்த வருச புரமோசன் லிஸ்ட்ல நிச்சயம் உன் பெயரை நானே பரிந்துரை செய்கிறேன்” என அவர் நக்கலாய் சொல்ல கலங்கிய கண்களோடு அவருடை அறையை விட்டு வெளியேறினான். தன் சுய மரியாதையின் மேல் வீசப்பட்ட அந்தப் பேச்சால் அவனிடம் ஆரம்பத்தில் இருந்த கோபம் இப்போது ஒரு ரணமாய், மனதில் வலியாய் நிறைய ஆரம்பித்தது. அன்று முழுவதும் வேலையில் மனம் ஒட்டவில்லை. நேரத்தைக் கடத்தியவன் வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமே வீட்டிற்குத் திரும்பினான்.

பதவி உயர்வு கிடைக்காத கோபம், அதை வெளிக்காட்ட வழியில்லாத படி தன் இல்லாமையின் இயலாமை மீது விழுந்த வார்த்தைகள் எல்லாம் ஒருசேர இருந்த நிலையில் ஆதங்கத்துடன் வீட்டிற்குள் நுழைந்தவனின் முகத்தில் இருந்த மாற்றத்தை லதா கவனிக்கத் தவறவில்லை. இன்று அலைச்சல் கூடுதலாக இருந்திருக்கும் என நினைத்தாள். உடை மாற்றிக் கொண்டு சோபாவில் அமர்ந்தவனிடம் காப்பிக் கோப்பையை  நீட்டியவள் “ஏங்க நகை மாடல் செலக்ட் பண்ணிட்டேன். நல்லா இருக்கான்னு நீங்களும் ஒருதரம் பார்த்திடுங்களேன்” எனச் சொல்லியபடி கேட்லாக்கை விரித்து நீட்டினாள்.

அதைக் கையில் கூட வாங்காமல் “ஆமாம். இது இப்ப ரெம்ப முக்கியம் பாரு. கல்யாணமாகி இத்தனை வருசத்துல ஒரு புள்ள குட்டிக்கு வழியில்ல. இருக்கிறதை அனுபவிக்கிறதுகே ஒன்னையும் காணோம். இதுல நகை தான் முக்கியமாக்கும். பேசாம போய்த் தொலைடி” என்று சீறினான். அவனின் இந்த பேச்சை அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. என்னவாயிற்று இவனுக்கு? என அவளால் யோசிக்கக் கூட முடியவில்லை. ”பேசாம போய்த் தொலைடி” என்ற வார்த்தைகள் மட்டும் மீண்டும், மீண்டும் அவளின் காதிற்குள் எதிரொலிப்பது போல் இருக்க தன்னையுமறியாமல் தாரை, தாரையாய் வழிந்த கண்னீரைத் துடைத்த படி போட்டிருந்த ஆடையைக் கூட மாற்றிக் கொள்ளாமல் செருப்பை அணிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள்.

சுய பிரங்கையற்று சோபாவில் அப்படியே கிடந்தவனை அவனுடைய அலைபேசியின் சப்தம் பிரங்கையுறச் செய்தது. எழுந்துவந்து அலைபேசியை எடுத்துப் பார்த்தான். மறுமுனையில் லதாவின் அம்மா இருந்தார்.

”சொல்லுங்க அத்தை” என்றான்.

என்னாச்சு இவளுக்கு? துணியெல்லாம் எடுத்துட்டு வராமல் சும்மா வந்திருக்கா? எப்பவும் சாப்பிட்ட உடனையே அங்கே வந்து விடுவா. இன்னைக்கு என்னன்னா சாப்பாடு வேணான்னு சொல்லிட்டு ரூமுக்குள்ளேயே உட்காந்திருக்கா. உங்களுக்குள் வேற எதுவும் பிரச்சனையா தம்பி? என்றாள்.

நிமிர்ந்து மணியைப் பார்த்தான். நள்ளிரவு பன்னிரெண்டு பத்தாகி இருந்தது. லதா வீட்டை விட்டுப் போய் ஐந்து மணிநேரத்திற்கும் மேலாகி விட்டதை அப்பொழுது தான் அகிலன் உணர்ந்தான்.

என்ன தம்பி பேச்சையே காணோம்? என மறுமுனையில் கொஞ்சம் பதட்டமாய் கேட்பது தெரிந்ததும், ”வழக்கம் போல தான். வேறு ஒன்றுமில்லை” எனச் சொல்லி சமாளித்து விட்டு அலைபேசியை வைத்தான்.

நடந்தவைகள் மெல்ல அவன் மனதில் மீண்டும் காட்சிகளாய் நகர ஆரம்பித்தது. அலுவலகத்தில் நிகழ்ந்தவைகள் முற்றாக விலகி அவன் மனம் முழுக்க லதா பற்றிய நினைப்பே இருந்தது. ”சே………என்ன ஒரு மடத்தனமான காரியம் செய்து விட்டேன். என்ன வார்த்தைகளைப் பேசிவிட்டேன். நான் பேசியதற்கும், அலுவலகத்தில் பொதுமேலாளர் பேசியதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? என் இயலாமையை சுட்டிக்காட்டியதற்காக வருத்தமும், வேதனையும் பட்ட நான் அதே தவறைச் செய்து அவளுக்கு வருத்தத்தையும், வேதனையையும் தந்து விட்டேனே. ஆறுதல்களால் மீட்க முடியாத வார்த்தை ரணத்தை அவளுக்குள் விசம் தோய்த்த அம்பாக செருகி விட்டேனே. என்னிடமிருந்து இப்படியான வார்த்தைகளா? என்று அவள் மனம் என்ன பாடு பட்டிருக்கும். அவளின் இயலாமையை, உடல்நிலைக் குறைபாட்டை நானே  கொச்சைப் படுத்தி விட்டேனே” என அவன் மனம் அவனிடம் பேச, பேச அவனுக்கே அவன் மேல் கோபம் வந்தது. கண்ணீர் கண்களிலிருந்து தானாகவே வடிய ஆரம்பித்தது.

பத்து ஆண்டுகளாக தன் சுகங்களைக் கூட பெரிதாக நினைக்காமல் என்னை ஒரு குழந்தையைப் போல கவனித்துக் கொண்டவளை கேவலம் ஒரு நகைக்காக இப்படி குதறிவிட்ட காயத்தை அவள் வாழ்நாளிலிருந்து எப்படி மறக்க வைப்பேன்? என நினைக்க, நினைக்க அவனுக்கு அங்கு இருக்க இருப்புக் கொள்ள் வில்லை. அவள் வீட்டிற்குப் போகலாம் என்றால் நடு இரவு தாண்டிய அகால நேரத்தில் அவள் வீட்டுக் கதவை தட்டினால் மாமனாரும், மாமியாரும் ஏதாவது நினைக்கக் கூடும் என்று நினைத்தான். இத்தனை வருடத்தில் அவள் கோபித்துக் கொண்டு போகும் போதெல்லாம் இவன் போய் அழைத்ததே இல்லை என்பதும் அவன் அப்படி நினைத்தற்கு காரணமாக இருந்தது. தவிர, லதாவின் அம்மா பேசியதில் இருந்து நடந்தவைகளை அவள் இன்னும் வீட்டில் சொல்ல வில்லை என்பதும் அங்கு தான் போகப் போய் நடந்தவைகளை அவர்கள் வீட்டில் சொல்லும் படியாகிவிடுமோ? என்ற நினைப்பும் தடையாக இருந்தது.

எப்போதும் இல்லாத தவிப்பாய் லதாவைப் பார்க்க வேண்டும் என்று மட்டும் மனம் அலைபாய்வதைப் போல் இருக்க வாசலுக்கும், வரவேற்பறைக்குமாக வீட்டிற்குள்ளேயே அலைந்து கொண்டிருந்தவன் வாசலை வந்து அடிக்கடி எட்டிப்பார்த்துக் கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் அப்படி வந்து பார்ப்பது அவதியாக இருக்கவே முழு வாசல் கதவையும் திறந்து வைத்து விட்டு வீட்டிற்குள்ளேயே அலைந்து கொண்டிருந்தான். அலைபேசியை அடிக்கொரு தடவை பார்த்துக் கொண்டான்.

வழக்கம் போலவே திரும்பவும் வந்து விடுவாள் என்ற நம்பிக்கை இருந்தாலும் இன்று நடந்தவைகள் அனைத்துமே வழக்கத்துக்கு மாறாக இருந்தது அவனுக்குள் பயத்தையும், பதற்றத்தையும் உருவாக்கிய படியே இருந்தது. அலைபேசியோடு சோபாவில் வந்து அமர்ந்தவன் அதில் தான் சேமித்து வைத்திருந்த லதாவின் புகைப்படங்களைத் திறந்து பார்த்தான். அவனின் கன்னத்தில் அழுத்தமாய் இரண்டு உதடுகளையும் குவித்து தன் பிறந்தநாளில் அவள் கொடுத்த முத்தப் புகைப்படத்தை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவனின் மனதில் இத்தனை அன்புள்ளவளை இப்படி இரணப்படுத்தி விட்டோமே என்ற குற்ற உணர்வு மின்னலாய் கீறிச் சென்றது.

உறக்கம் தூரத்து வானமாய் போய்விட இமைகள் இணைசேர மறுத்த நிலையில் அப்படியே சோபாவில் சரிந்து கிடந்தான். வெளியில் வானம் தன் துயிலை முடிப்பதற்கான தயாரிப்பில் இருந்தது. வாசலில் ஒரு நிழலும் கூடவே ஏதோ உராயும் சப்தமும் கேட்டது. அடிக்கொருதரம் பார்த்துச் சலித்ததில் எழுந்து போய் பார்க்க மனம் வரவில்லை. சட்டென மறைந்த நிழலின் நிஜமாய் லதா நின்றாள். காலணியை அதற்குரிய இடத்தில் வைத்து விட்டு சோபாவிற்கு அருகில் வந்தாள்.  காலில் விழுந்து கட்டிப்பிடித்து அழ வேண்டும் என அப்போது நினைத்த எண்ணம் இப்போது வரவில்லை. கன்ணீர் இன்னும் அதிகமாய் ஊற்றெடுக்க அவளை பார்த்தபடி சரிந்த நிலையிலேயே சோபாவில் கிடந்தான்.

எதுவும் பேசாமல் டீபாய் மேல் இருந்த நேற்று தான் கொடுத்த காப்பி கோப்பையை எடுத்துக் கொண்டு சமையலறையை நோக்கிப் போனாள். அருந்தப்படாமல் ஆடையோடு இருந்த அந்தக் காப்பி கோப்பையை கழுவி விட்டு புதியதாய் காப்பி கலந்து எடுத்து வந்தாள். சரிந்து கிடந்த அகிலனின் அருகில் அமர்ந்து அவனின் தலையைத் தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு முடியைக் கோதி விட்டபடி குமாரிடம் நேற்று இரவு பேசினேன் என்றாள்.

குமார் அகிலனின் பாலிய கால சிநேகிதன். அவன் குடும்பத்தில் ஒருவனாக மதிக்கப்படுபவன். இருவரும் ஒரே அலுவலகத்தில் வெவ்வேறு பிரிவில் பணி செய்தனர். அவனிடம் லதா பேசியிருக்கிறாள் என்றால் நிச்சயம் அலுவலகத்தில் நடந்தவைகளை, அதன்பின் பொதுமேலாளர் பேசிய விதம் குறித்து தான் வெளிக்காட்டிய மனக்குமுறலை அவன் சொல்லியிருப்பான் என அகிலன் நினைத்தான். மடியில் படுத்தவாறு அவளின் முகத்தை பார்த்து மன்னிச்சிரு என அவன் சொல்லி முடிப்பதற்குள்ளாக அவனின் உதட்டோரத்தில் தன் இதழ்களைப் பதித்தவள், அவனின் உள்ளங்கையை தன் கைக்குள் வைத்து மென்மையாய் அழுத்தியபடி இன்று விடுப்பு எடுத்து விட்டு கொஞ்சம் தூங்குங்கள் என்றாள். விடாமல் அவனின் உள்ளங்கையை தன் உள்ளங்கைக்குள் வைத்து மென்மையாய் அழுத்தியபடியே இருந்தாள். அது தன்னுடைய வலியை, துயரத்தை அவள் தனக்குள் வாங்கிக் கொள்வதை போல் இருப்பதாய் உணர்ந்த அகிலன் தன் முகத்தை அவளின் மடியில் புதைத்த படி பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தான். இப்போதைய மனநிலையில் அது அவனுக்கு அவசியம் என்பதை அவளும் உணர்ந்திருந்ததால் அவனை அழ விட்ட படியே தன்னுடைய நேசிப்பை, புரிதலை, அன்பை, காதலை அவனின் தலையைத் தன் விரல்களால் வருடிக் கொடுத்து அவனுக்குள் செலுத்திக் கொண்டிருந்தாள்.

நன்றி : தமிழ்முரசு நாளிதழ்

Tuesday, 23 December 2014

”அலமாரி” – யில் வந்த விமர்சனம்



”நாவல்” என ஆசிரியர் குறிப்பிட்டிருந்தாலும் இதில் நாவலுக்கான இழை பூரணி, அருண், குமிகோ, லெனின், வாங்லி, யாசியன், திசைகள் மாறி வந்து ஒரு சேர கப்பலில் பயணிக்கும் நண்பர்கள் என கதாபாத்திரங்களால் வாழ்வியலுக்கான விசயங்களை தலையில் குட்டு வைப்பது போல சொல்லியும், எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய படியும், சுவராசியமாய் ஒரு மெல்லிய சரடாக மட்டுமே நகர்ந்து செல்கிறது. மற்றபடி நூல் ஒரு கப்பல் பயணத்தை மட்டுமே முழுமையாக தருகிறது.

சிங்கப்பூர் – மலேசியா – தாய்லாந்து  என மூன்று நாடுகள் ஐந்து நாட்கள் என சுற்றி வந்த இந்த கப்பல் பயணத்தை நூலாசிரியரே மேற்கொண்டு அனுபவித்து அதன் ஈரம் காயாமல் கொடுத்திருப்பதால் நேரடியாக நாமே பயணம் செய்த அனுபவத்தை உணர முடிகிறது. உணர்ந்தால் மட்டும் போதாது அனுபவிக்க வேண்டும் என்றால் பயணம் செய்து தான் ஆக வேண்டும். செலவு என்று பார்த்தால் கணவன், மனைவி, குழந்தை என மூவர் அடங்கிய குடும்பத்திற்கு 1,75,000 ரூபாயாம்! கப்பலில் தரப்படும் அறை உள்ளிட்ட சில வசதிகள் தவிர மற்ற வசதிகளுக்கு நாம் செய்யும் செலவு தனியாம்!! கப்பலில் ஏறும் போதே அடையாள அட்டையோடு (SEE PASS) கடன் அட்டையையும் (CREDIT CARD) இணைத்து விடுவார்களாம்!!!

பயணத்தை தொடங்குவதற்கு முன் என்னென்ன செய்ய வேண்டும், அன்னியநாட்டில் நுழைவதற்கான நுழைவுச் சீட்டு (VISA) நடைமுறைகள், அந்தந்த நாடுகளின் துறைமுகத்திற்கு கப்பல் சென்ற பின் வெளியேறி சுற்றிப்பார்ப்பதற்கான நடைமுறைகள், அங்கு வாங்கக் கூடிய பொருட்கள் போன்ற தகவல்களை சொல்லி வரும் நூலாசிரியர் கட்டம் கட்டப்பட்ட அடையாளங்களுக்குள் பயணக்காப்புறுதி உள்ளிட்ட பயணங்களின் போது மறக்காமல் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயங்களையும் சுட்டிக் காட்டுகிறார்.

சரளமான தமிழ் நடையில் நூலாசிரியரின் எழுத்திலேயே சொல்ல வேண்டுமானால் ”குழிகள் இலாத விரைவுச்சாலையில் வழுக்கிக் கொண்டு சென்ற கார் பயணம் போல” வாசித்தலின் வழி ஒரு முழு கப்பல் பயணத்தை அதன் பிரமாண்டத்தோடும், அழகியலோடும் என்னை அனுபவிக்க வைத்தது இந்நூல்.நீங்களும் வாசியுங்கள். நிச்சயம் நீங்களும் உணர்வீர்கள். 

நன்றி ; அலமாரி மாத இதழ்

Monday, 22 December 2014

ஆன்மிக சாண்ட்விச் – 3

(திண்ணை இணைய இதழில் “ஆன்மிக சாண்ட்விச்” நூல் குறித்து  கவிஞரும், கட்டுரையாளருமான தேனம்மை லெஷ்மணன் எழுதி உள்ள அறிமுக உரை)


உலகமயமாக்கலில் ஆன்மீகத்தையும் இணைத்து கோபி தந்திருக்கும் கட்டுரைகளின் தொகுப்பே ஆன்மீக சாண்ட்விச். ஃபாஸ்ட்புட் கலாச்சாரத்தில் வாழும் நமக்கு பெரும்பாலான ஆன்மீக விஷயங்களும் புராண கதைகளுக்குமான தெளிவு கிடைப்பதில்லை.
பன் பட்டர் ஜாம், ப்ரெட் சாண்ட்விச் என்று கிடைத்ததை கையில் எடுத்துக்கொண்டு விரையும் அவசர உலகில் ஆன்மீகத்தையும் ஒரு சாண்விச் போல அழகாகச் சுற்றிக் கையில் கொடுத்திருக்கிறார் கோபி. சாண்ட்விச்சில் வைக்கப்படும் உணவுப் பொருட்கள் சக்தியைத் தருவது போல இந்த ஆன்மீக சாண்ட்விச்சுக்குள் வைக்கப்படும் பொருட்கள் நமக்கு மறைபொருளை உணர்த்தியும் அதன் சக்தி வீச்சை உணருமாறும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
கோபியின் மொழிவளமும் நகைச்சுவையான நடையும் இதை அனைவரும் படிக்கச் சரளமாக்குகிறது. வெளிநாட்டில் வசித்துவரும் ராமநாதபுரத்துக்காரரான இவர் தொடர்ந்து புத்தகங்கள் வெளியிட்டு பரவலாக எல்லாத் துறை பற்றியும் எழுதி சேவையாற்றி வருகிறார்.
அட்சய திரிதியை ( கிருதயுகத்தின் பிறப்பு), மார்கழியும் கோலமும் ( பூசணிப்பூ வைக்கும் காரணம் ), உடைக்கவேண்டியது மண்டைக்கனத்தை (சிதர்காய்), சிவபெருமானும் நந்திதேவரும் ( திருநடனம் ), அனுமனிஸம் ( பஞ்சமுகம் ), பகையாளிகளான பங்காளிகள் ( கருடன், பாம்பு), மழைக்கு மட்டுமா மாரியம்மா ( ரேணுகை ), இறப்பே திருவிழாவாய் ( தீபாவளி ) , ப்ரம்மாவுக்கு வந்த பயம் (சிருஷ்டி பீஜம் ), பிள்ளையார் ஸ்பெஷல்( வல்லாளன் கதை ), சனைச்சரருக்கு வாய்த்த சாபம் ( சனீஸ்வரர்) , படுக்கை தூங்குமா ( இலட்சுமணன்), பழத்தால் வந்த பஞ்சாயத்து ( பஞ்சாமிர்தம்), பக்தனால் கடுப்பான பார்வதி (அர்த்தநாரீசுவர வடிவம் ), தந்தைக்குப் பாடம் நடத்திய பிள்ளை ( பிரகலாதன் ), பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் (ஆயுத வழிபாடு), வழி தவறிவந்த பெருமாள் (ஸ்ரீரங்கம்) , போட்டுக்கொடுத்ததால் வந்த வினை கிரஹணம் பீடித்தல்), யானைக்குச் சறுக்கிய அடி (பிரம்மா ), வல்லவனுக்கு வல்லவன் (விநாயக பக்தர்கள் ). ஆகிய தலைப்புகளில் சுவாரசியமான புராண நிகழ்வுகளை காரண காரியங்களோடும் நடுவில் ஊடாடும் நகைச்சுவையோடும் கொடுத்துள்ளார்.
நாத்திகர்களின் கேள்விகளைக் கிண்டலடிப்பதும் இந்தக்கால நடைமுறைக்கு ஏற்ப கணினி இன்சூரன்ஸ் பத்ரிக்கைத் துறை போன்றவற்றை எடுத்துக்காட்டாக ஆசிரியர் பயன்படுத்தி இருப்பதும் சிறப்பு. கணவன் மனைவி உரையாடலையும் அங்கங்கே சுவாரசியமாகப் புகுத்து விளக்கமளிக்கிறார்
ஏன் எதற்கு எப்படி என்று கேள்வி கேட்கும் இளைய தலைமுறையினருக்கு இந்தப் புத்தகத்தைப் பரிசளிக்கலாம்மொத்தத்தில் மிக ருசியான சாண்ட்விச்தான் என்று படித்தவுடன் சொல்வீர்கள்
நன்றி : திண்ணை.காம்