தொடர் தோல்விகளால், இலக்கு நோக்கி நகர இயலா செயல்பாடுகளால் ஏற்படும் உள அயர்ச்சியில் இருந்து மீண்டு நம்மை நாமே புதுப்பித்துக் கொண்டு அடுத்த நிலைக்கு நகர வைப்பதில் நம்பிக்கை நூல்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அகத்தில் குறையும் நம்பிக்கையை புறத்தில் இருந்து தரும் பூஸ்டர்களாக அவைகள் இருக்கின்றன. அதனாலயே நம்பிக்கை நூல்கள் விற்பனையில் சக்கை போடு போடுகின்றன. ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் தேவையாக இருக்கின்ற நம்பிக்கையை நம் ஆன்மிகம் சார்ந்தும், அறவுரைகள் மூலமும் மனதில் அழுத்தமாய் பதிய தருவதில் சுகி. சிவம் அவர்களின் எழுத்தும், பேச்சும் எப்பொழுதும் முன்னேராய் நகர்பவை எனலாம். அந்த வாசக நம்பிக்கைக்கு இன்னொரு மகுடத்தை சூட்டும் வகையில் கவிதா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் சொல்வேந்தரின் நூல் ”கனவு மெய்ப்படும்”. இந்த தலைப்பே உள் நுழைவதற்கான ஆவலைத் தருகிறது.
Friday, 24 September 2021
Thursday, 23 September 2021
கபடவேடதாரி - விமர்சனப் போட்டி - 20
அத்தியாயம் - 20
(கனவுகளின் பொன்மணல்)
சூனியன் வெண்பலகையில் கொழுத்திப் போட்ட நெருப்புப் பொறி படர ஆரம்பிக்கிறது. நீலநகர வாசிகள் அந்த பொறி பதிவு குறித்து விவாதிக்க ஆரம்பிக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பதில் சொல்லி அழுத்துப் போன சாகரிகா வெண்பலகையிலும் தன்னிலை விளக்கம் தருகிறாள். சமீபத்தில் ஒரு பிரபல கவிஞருக்கு தர இருந்த விருது சார்ந்து அவருடைய கடந்தகால செயல்பாடுகள் குறித்து முகநூலில் நடந்த விவாத சாயல்கள் வெண்பலகையில் சாகரிகாவுக்கு நடக்கிறது! நீலநகரத்தின் கலாசாரத்துறை செயலாளர் அறிவுறுத்தும் அளவுக்கு நிலைமை முற்றி விடுகிறது.
செம்மொழிப்ரியாவாக வந்து பிள்ளையார் சுழி போட்ட பதிவின் தொடர்ச்சி இம்முறை பதினாறாம் நரகேசரி வடிவில் சாகரிகாவுக்கு அடுத்த அஸ்திரமாய் வந்து நிற்கிறது. அவன் எழுதிய பதிவு நீலநகரத்தில் அவள் வசிப்பதையே கேள்விக்குறியாக்கி விடும்படியாக அமைகிறது.
Wednesday, 22 September 2021
கபடவேடதாரி - விமர்சனப் போட்டி - 19
அத்தியாயம்-19
(தாரகையின் சந்தேகம்)
பூங்காவில் உறங்கிக் கிடக்கும் கோவிந்தசாமியை சூனியன் சந்திப்பது, அவன் படுத்திருக்கும் ஜிங்கோ பிலோபா மரம் பற்றிய தகவல், அதன் மருத்துவ குணம், அதுகுறித்து போகருக்கும், அவர் சீடர் புலிப்பாணிக்கும் நிகழ்ந்த விவாதம், ஜிங்கோ பிலோபா வளர்வதற்கான சூழல் என அத்தியாயம் நீண்டு திறக்கிறது.
தன் வீட்டு முற்றத்தில் புதைந்து கிடக்கும் புதையலை அறியாமல் அதை தேடித் திரிந்தவன் கதையாய் தான் படுத்திருந்த மரத்தின் இலைகளுக்கு இருக்கின்ற சக்தியை கோவிந்தசாமி அறியவில்லை. தின்பவனின் மட்டித்தனங்களை நீக்கும் சக்தி வந்த அவ்விலைகள் பற்றி சூனியனும் அவனுக்கு சொல்லவில்லை. சொல்லாததற்கும் காரணம் இருந்தது. தன் கட்டளைக்கு மறுக்காத அம்பைத் தானே எந்த வில்லாளியும் விரும்புவான். பா.ரா. வுடனான யுத்தத்திற்கு தனக்கான அம்பாய் கோவிந்தசாமியைத் தேர்வு செய்யும் சூனியன் தன்னை நம்பி வந்த அவன் நிழலை அம்போவென விட்டு விடுகிறான்.
Tuesday, 21 September 2021
கபடவேடதாரி - விமர்சனப் போட்டி - 18
அத்தியாயம் -18
(யுத்த அறிவிப்பு)
சாகரிகா சங்கப்பலகையில் எழுதுவது உள்ளிட்ட அனைத்தும் பா.ரா.வின் சூது என அறிந்து கொள்ளும் சூனியன் தன் எதிரியான பா.ரா வின் யோக்யதை குறித்து கிஞ்சித்தும் நமக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ”பூரண அயோக்கியன்” என்ற ஒற்றை வார்த்தையில் அவரின் குணாதிசதியத்தைச் சொல்லி விடுகிறான்.
கோவிந்தசாமியின் நினைவுகளை முழுமையாக அழித்தொழிக்க சாகரிகா பா.ரா.வின் உதவியை நாடுகிறாள். அவரும் அதற்கு ஒப்புக் கொள்கிறார். அவளை திராவிடத்தாரகையாக முடிசூட்டி புனைவுண்மை வழியாக மறுகட்டுமானம் செய்ய முடிவு செய்கிறார். இதையெல்லாம் அறிந்து கொள்ளும் சூனியன் பா.ரா.வுடன் நேரடியாக மோதத் தயாராகிறான். கோவிந்தசாமியை வீழ்த்தியேனும் பா.ரா.வை வெல்ல நினைக்கும் சூனியன் அந்த முடிவோடு சாகரிகா வீட்டில் இருந்து வெளியேறுகிறான். அவனின் அடுத்த மூவ் எப்படி இருக்கப்போகிறது? என்பதை அறிய ஆவல் மிகுகிறது.
Monday, 20 September 2021
திப்பு சுல்தான் - நிகரற்றவன்!
வேலூர் புரட்சிக்கான வித்தில் தொடங்கி அதற்குப் பிந்தைய நிகழ்வோடு கூடிய ஒரு தொகுப்பை எழுத வேண்டும் என்ற திட்டம் கடந்த வருட திட்டமிடலில் இருந்தது. அதன் பொருட்டு தரவுகளைச் சேகரிப்பதற்காக வாங்கிய நூல்களில் ஒன்று “திப்பு சுல்தான்”. கிழக்குப் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் இந்நூலின் ஆசிரியர் மருதன்.
ஹைதர் அலியின் அந்திம காலப் பகுதியிலிருந்தும், திப்பு சுல்தானின் பால்யத்தில் இருந்தும் நூல் ஆரம்பிக்கிறது. 17 வயது வரை தன் தந்தையோடும், அவரின் மறைவிற்குப் பின் தானே ஆட்சியை நிர்மாணிப்பவனாகவும் இருந்த திப்பு சுல்தானின் வீர வரலாறை மட்டுமே பெரும்பாலான நூல்கள் விரித்து வைக்கின்றன. அந்த பொதுத் தன்மையில் இருந்து விலகி இந்நூலில் ஆசிரியர் வாசிக்கத் தரும் திப்புவின் மதம் சார்ந்த பிரகடனம், மக்கள் வளர்ச்சியில் காட்டிய அக்கறை, மக்களோடு அரசாங்கம் ஒரு புள்ளியில் இணைவதற்கு இயற்றப் பட்ட சட்ட திட்டங்கள், ஆளும் தரப்பில் அதன் பொருட்டு எழுந்த எதிர்ப்புகள், மைசூரின் வளர்ச்சிக்காக மூன்று தொழில்களை நிர்மாணிப்பதில் காட்டிய அக்கறை, போர்க்களத்தில் கடைபிடிக்க வேண்டிய தர்மங்கள் குறித்து தன் தளபதிகளுக்கு கொடுத்த வழிகாட்டுதல்கள் ஆகியவைகளின் மூலம் திப்பு சுல்தான் என்கின்ற வீரனின் முழு பரிணாமத்தையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
Saturday, 18 September 2021
கபடவேடதாரி - விமர்சனப் போட்டி - 17
அத்தியாயம்-17
(காதலும், சுண்டலும்)
தன் கவிதையின் மீது கொடுக்கப்பட்ட தீர்ப்புக்காக கோவிந்தசாமி கலங்கிப் போகிறான். கவிஞனல்லாவா? மனம் அத்தனை இலகுவாக இருக்காதா என்ன? அதன் தொடர்ச்சியாக அவனுள் மலரும் பழைய நினைவுகள் நம்மையும் மலர்த்திப் போடுகிறது.
காதலர் தினத்துக்கு எதிராய் ஒரு தலைவர் விட்ட அறிக்கைக்கு ஆதரவாய் புரட்சிக்கவிதை(!) எழுத நினைத்த கோவிந்தசாமிக்கு தன் காதல் நிலைப்பாட்டோடு, கடவுள் கிருஷ்ணனும் தேக்கமாய் வந்து நிற்கிறார். ஒரு கவிதையைப் பிரசவித்தல் என்றால் சும்மாவா?
Friday, 17 September 2021
கிழக்கின் மகள் – அண்டை நாட்டின் அடையாளம்!
அண்டை நாடான பாகிஸ்தான் குறித்து வெளிவந்திருக்கும் நூல்கள் அளவுக்கு அந்நாட்டை ஆட்சி செய்தவர்களின் சரித்திரங்கள் தமிழில் வெளியாகவில்லை என்ற நிலையில் பாகிஸ்தானின் பிரதமராக இருந்த பெனாசிர் குறித்து வந்திருக்கும் நூல் ”கிழக்கின் மகள்”. ஆதனூர் சோழன் எழுதி நக்கீரன் பதிப்பாக வந்திருக்கும் இந்நூல் பாகிஸ்தானில் ஆட்சி கட்டிலுக்காக, அதிகார கைப்பற்றல்களுக்காக அரசியல்வாதிகள், இராணுவத்திற்கிடையே நிகழும் உள்ளடி வேலைகளை அறிந்து கொள்வதற்கான அறிமுகமாக அமைந்திருக்கிறது எனலாம்.
பழமை மதவாதம் ஊறித்திளைக்கும் முஸ்லிம் நாட்டில் ஒரு பெண் உயர் நிலையை எட்டிப் பிடிப்பது அத்தனை எளிய செயல் அல்ல. ஆனால், அதை சாதித்துக் காட்டியதன் மூலம் உலகின் பார்வையை தன் பக்கம் திருப்பிய பெனாசிர் அதற்காக மேற்கொண்ட ஆரம்ப முயற்சிகள் என்ன? அதன் விளைவுகள் அவரை எங்கு நகர்த்தி வந்தது? தான் வந்த இடத்தை அவரால் நிலையாக தக்க வைக்க முடிந்ததா? நாடு கடந்து ஆண்டுகணக்கில் வாழ காரணம் என்ன? வல்லரசு நாடுகளின் தலைவர்கள் அவரின் வளர்ச்சிக்கு எப்படி உதவினார்கள்? மீண்டும் பாகிஸ்தானுக்குள் வந்தவருக்கு என்ன கதி நேர்ந்தது? போன்ற அவரின் புகழ் பேசும் நிகழ்வுகளை பதிவு செய்திருக்கும் அதே நேரம், தன் சகோதரர்களுக்கும், கணவனுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாடுகளில் ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டது, தம்பியின் மரணத்துக்கு காரணமானவள் என குற்றம் சாட்டிய தம்பி மனைவியை சுயநலத்திற்காக பின்னாளில் பயன்படுத்த நினைத்தது, கணவரின் ஊழலைக் கண்டு கொள்ளாமல் இருந்தது, தன் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை முடக்காமல் இருக்க ஆட்சியாளர்களுடன் மறைமுக ஒப்பந்தம் செய்து கொண்டது போன்ற அவரின் செயல்பாடுகளின் வழி பெனாசிரின் இன்னொரு முகத்தையும் நூலில் பதிவு செய்திருக்கிறார்.
Thursday, 16 September 2021
பொய்க்காத நம்பிக்கை!
யூ டியூப் லிங்க் - பொய்க்காத நம்பிக்கை
Wednesday, 15 September 2021
கபடவேடதாரி - விமர்சனப்போட்டி - 16
அத்தியாயம்-16
(நான்காவது எதிரி)
சூனியன் கோவிந்தசாமியின் நிழலை தூங்கப் போட்டு விட்டு சென்று விட நிழல் தனியே செயல்படத் துவங்குகிறது. கோவிந்தசாமியின் நிழல் கோவிந்தசாமியாக நாமம் சூட்டிக் கொள்ள நினைக்கும் நேரத்தில் ஒரு திருப்பமாய் கோவிந்தசாமியை சந்திக்கிறது. அப்போதும் கூட சாப்பாடு பற்றி தான் கோவிந்தசாமி பேசுகிறான்!
சூனியனை மோசக்காரன் எனக் கூறி எகிறும் கோவிந்தசாமியிடம் நிகழ்ந்தவைகளையும், செய்தவைகளையும் கூறி சூனியனுக்காக நிழல் வாதாடுகிறது. அந்த விவாதம் முற்றிப் போய் சூனியனோடு சேர்ந்து நீயும் எனக்கு எதிராக சதி செய்கிறாய் என நிழல் மீதும் குற்றம் சுமத்த நிழல் பொங்கி எழுகிறது.
Tuesday, 14 September 2021
கபடவேடதாரி - விமர்சனப்போட்டி - 15
அத்தியாயம்-15
(ஒளடதம்)
கோவிந்தசாமிக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றிக் கொடுத்து விட்டு தன் இகட்சியம் நோக்கி நகர சூனியன் நினைக்கிறான். அதற்கு சாகரிகாவின் தலைக்குள் இறங்கி கோவிந்தசாமி பற்றி பதிவாகி இருக்கும் முழு தகவல்களையும் சேகரிக்க முடிவு செய்கிறான். சாகரிகாவை நெருங்க சூனியன் நம்பும் மூன்று பலவீனங்களும், அது பற்றிய விளக்கங்களும் அற்புதம்.
நீலநகரத்தை தன் சமஸ்தானமாக்கிக் கொள்ள தனக்கு இருக்கும் சாதகமான அம்சங்களைப் பற்றி நினைத்து பரவசப்பட்டுக் கொள்ளும் சூனியன் கோவிந்தசாமியிடம் சாகரிகாவை ஒப்படைப்பது அல்லது நிழலிடம் சேர்த்து வைப்பது இரண்டும் ஒத்துவராத போது தன் பட்டத்துராணியாக்கிக் கொள்வது என நினைக்கிறான். யாருக்குத் தான் சாகரிகா? பெண்ணால் சாம்ராஜ்யங்கள் சரிந்தது போல அவளால் சூனியனின் சமஸ்தான இலக்கு தடம் மாறுமா? என்பதை அறியும் எதிர்பார்ப்பு கூடுகிறது.
Monday, 13 September 2021
கபடவேடதாரி - விமர்சனப் போட்டி - 14
அத்தியாயம்-14
(நூற்றி இருபது வீரர்கள்)
பா.ரா.வோடு மீண்டும் சூனியனுக்கு பிணக்கு. ஆவேசத்தைக் கொட்டிவிட்டு அமைதிப்படும் சூனியன் போகிற போக்கில் ”எனது ஆனந்த தாண்டவத்தில் தரிசிப்பீர்கள்” என் சொல்லிச் செல்வதில் பின்னொரு விறுவிறுப்பு காத்திருப்பது தெரிகிறது.
கோவிந்தசாமி சுயமாக செயல்பட ஆரம்பித்து விட்டதை அவனுடைய நிழலுக்குச் சொல்லும் சூனியன் அவன் பதிந்திருந்த மூன்று புள்ளி ஒரு ஆச்சர்யக்குறி கவிதையை வாசித்துக் காட்டுகிறான். வாசிப்பவர்கள் எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் பேக் ஐ.டி.யை உருவாக்கி அதில் கவிதையை பதிவாக்கியிருப்பதிலும், கவிதையை ஜெய்ஸ்ரீராம் என முடித்திருப்பதிலும் கோவிந்தசாமி இன்னும் சங்கியாகவே நீடிக்கிறான்.
Sunday, 12 September 2021
உறுபசி – மானுட அவலத்தின் மிகுபசி!
சம்பத் என்கின்ற நண்பனின் இறப்பிற்குப் பிறகு அவனுடைய நண்பர்கள் தங்களின் நினைவடுக்குகளின் வழியே அவனை கண்டடையும் கதை உறுபசி நாவல். அவனுடைய வாழ்வின் ஊடாக தங்களுடைய இருப்பை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்கின்றனர். இந்த ஒப்பீடு மெல்ல சம்பத்திடமிருந்து விலகி அவர்களுக்குள் உறைந்து கிடக்கும் அல்லது அவர்கள் மறைத்து வைத்திருக்கும் எண்ணங்களை அதன் கோர முகங்களோடு வெளிக் கொண்டு வருகிறது. அது அவர்களை விலகி, விலகி சேர வைக்கிறது. சம்பத் இறந்த பிறகு தங்களுக்குப் பரிச்சயமில்லாத கானல் காட்டிற்கு மூன்று நண்பர்களும் பயணம் மேற்கொள்வதில் நாவல் ஆரம்பிக்கிறது. சம்பத் தான் நாவலின் மையம். அவனின் இயல்பு, செயல்பாடு, காதல், கடவுள் மறுப்பு, காமம், வீழ்ச்சி, வாழ்வியலோடு பொருந்த இயலா நிலை ஆகியவைகள் அவனில் இருந்தே பல்வேறு பக்கங்களாய் கிளை விரிக்கிறது.