Sunday 16 January 2022

NO 1 - சேல்ஸ்மேன் – விற்பனையாளருக்கான வழிகாட்டி

இதனை இவனிடம் விற்க முடியும் என்றாய்ந்து

   அதனை அவன் கண் விற்றல் –

என்பதே விற்பனையாளனாக இருக்கும் ஒருவரின் வெற்றி சூட்சுமம். இந்த சூட்சுமத்தில் சூரனாக இருப்பது என்பது அத்தனை எளிதல்ல. அதனால் தான் வெற்றிகரமான விற்பனையாளராக சிலரால் மட்டுமே இருக்க முடிகிறது. அப்படியென்றால், மற்றவர்களால் அப்படி ஆக முடியாதா? என்ற எதிர் கேள்விக்கான பதில் “முடியும்”. அதற்கான வழிகளை இந்நூலாசிரியர் சோம. வள்ளியப்பன் தன் அனுபவக் குறிப்புகளோடும், நடைமுறை நிகழ்வுகளோடும், வெற்றிகரமான விற்பனையாளர்களின் அணுகுமுறைகளோடும் விளக்கி இருக்கிறார்.

ஒரு விற்பனை பிரதிநிதி (சேல்ஸ்மேன்) வாடிக்கையாளரிடம் விற்பனையை ஆரம்பிப்பதற்கு முன் தன்னை எப்படி தயார் செய்து கொள்ள வேண்டும்? வாடிக்கையாளரை எவ்வாறு அணுக வேண்டும்? அவரை வாய்ப்புள்ள வாடிக்கையாளாரக எப்படி மாற்றலாம்? பொருளை வாங்க வைக்க எவ்வாறு தூண்ட வேண்டும்? தூண்டலுக்கான உரையாடலை எந்த நேரத்தில் துண்டித்துக் கொள்ள வேண்டும்? என்பன போன்ற அடிப்படையான விசயங்களை நூல் முழுக்கக் கற்றுத் தருகிறார்.

விற்பனை பிரதிநிதி வேலையில் இருக்கும் கட்டற்ற சுதந்திரத்தைச் சொல்லும் அதேநேரம் அதில் இருக்கும் சிரமங்களை, எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தங்களை, சவால்களை வாழைப்பழ ஊசியாய் சுட்டிக் காட்டுகிறார். அதேபோல, முடிதிருத்தும் நிலையத்தில் நகங்களை வெட்டி சுத்தப்படுத்துதலைச் செய்தல் போன்ற தகவல்கள் மூலம் துணைத் தொழிலாக புதிய வியாபார வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதற்கான தூண்டுதல்களையும் தருகிறார்.

வாடிக்கையாளருக்கும், பொருளுக்குமான சட்டகத்தை இணைக்கும் விற்பனையில் சோர்வுறும் போதெல்லாம் இத்தொகுப்பை வாசித்து தேவையான தூண்டல்களை பெற்று தொடரலாம்.

1 comment:

  1. சிறப்பான நூல் அறிமுகம்..வாங்கிப்படித்து விடுவேன்..

    ReplyDelete