Tuesday, 28 November 2023

”சண்டை போட்டுக்காதீங்க” என்ற ஒற்றை அறிவுரையோடு! – 20 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் -

19 ஆண்டு திருமண வாழ்வைக் கடந்து 20 ன் ஆரம்பத்தில் அடி எடுத்து வைத்து திரும்பிப் பார்க்கையில் அவரவர் இயல்புகளிலிருந்து ஏதோ ஒரு காரணங்களுக்காக எங்களை மாற்றிக் கொண்டே நகர்ந்திருக்கிறோம். நிறைய முரண்கள் என்பதை முட்கரண்டியாய் பார்க்காமல் உணவை உண்பதற்கான ஒரு உபகரணமாக மட்டுமே பார்த்துக் கொண்டோம். அதையே தோளுக்கு மேல் வளர்ந்த எங்கள் பிள்ளைகளுக்கும் உணர்த்தியிருந்தோம். அந்த உணர்தலை அவர்கள் அவ்வப்போது வார்த்தைகளில், இப்படியான தினங்களில், நிகழ்வுகளில் அன்பின் பொருட்டான பொருட்களாய் மாற்றி கைகளில் தந்து விடுவார்கள். கூடவே, ”சண்டை போட்டுக்காதீங்க” என்ற ஒற்றை அறிவுரையோடு!

இன்று திருமண நாள் என்ற பிரக்ஞை இன்றி விழித்தெழுந்ததும் மகளிடமிருந்து பின்னிரவு வேளையில் ”Happy anniversary dady.. 🤩🥰❤️❤️” என அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி கண்ணில் பட்டது. வீட்டில் இருந்த மகன் இரண்டு பைகளோடு வந்தான். ”திருமண நாள் வாழ்த்துகள் டாடி”. கிஃப்ட் இந்தாங்க. ஆனால், இப்ப ஓபன் செய்யாதீங்க, அம்மா வரவும் இரண்டு பேரும் சேர்ந்து இதை  பிரிங்க என்றான். மணமகளுக்காக  காத்திருக்கும் மணமகன் போல் காத்திருந்தேன். மாப்பிள்ளை தோழன் போல் மகன் என்னருகிலேயே அமர்ந்திருந்தான். வழக்கமான வேலைகளை முடித்து விட்டு மனைவி வந்தாள். பரிசுப்பொருட்களுக்குள் அவர்களின் அன்பை ஊடு பாவியும், எங்களை பதித்தும் கொடுத்திருந்தார்கள்.

Sunday, 30 January 2022

துரோகச் சுவடுகள் – வாழ்தலின் விழிப்பு

துரோகத்திற்கும், நம்பிக்கைக்குமான இடைவெளியில் நிற்கும் ஒருவன் எதன் பக்கம் சாய்கிறான் என்பதே அவனுடைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அந்த தீர்மானித்தல் துரோகம் என்ற நிலைப்பாட்டைக் கொள்ளும் போது அது எதிரில் இருப்பவர், பாதிக்கப்பட இருப்பவர் உள்ளிட்ட எவர் பற்றியும், எது குறித்தும் கவலை கொள்வதில்லை. துரோக எண்ணத்தில் தீவிரம் கொண்டு இயங்கும் ஒருவரின் செயலானது பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல வரலாற்றிலும் சுவடுகளாகப் பதிந்து விடுகிறது என்பதை விளக்கும் நூல் துரோகச் சுவடுகள். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வழியாக வந்திருக்கும் இந்நூலின் ஆசிரியர் வெ. இறையன்பு.

துரோகங்களின் வகைகள், அது எங்கிருந்து, யாரால், எப்பொழுது கட்டவிழ்க்கப்படுகிறது என்பதையெல்லாம் வாசிக்கும் போதே மெய்சிலிர்க்கிறது. குறிஞ்சி மலரைத் தேட வேண்டுமானால் பல நூறு நெறிஞ்சி மலர்களை நாம் கடக்க வேண்டியிருக்கிறது. வாழ்தலை அத்தனை ஐயப்பாடுகளால் நகர்த்த வேண்டிய காலத்தில் தான் கி.பி. தொடங்கி இன்று வரை இருந்து வருகிறோம் என்பதற்கு துரோகச் சுவடுகளே சாட்சியாய் இருக்கிறது.

Friday, 28 January 2022

சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு வாசகப் போட்டி

மீனாட்சி மிஷன் மருத்துவமனை நடத்திய சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு வாசகப் போட்டியில் மகள்இலக்கியா” - வின் பங்களிப்பு -


 

Wednesday, 26 January 2022

பிறந்தநாள் வாழ்த்துகள் வீடே........

நேற்றைய வழக்கமான உரையாடலின் போது, நம்ம வீடு பற்றி ஏதேனும் நினைவுகள் இருக்கா? என்று மகள் கேட்டாள்.

அந்த மாதிரியெல்லாம் ஏதும் இல்லையே என்றேன்.

எப்படி இல்லாமல் இருக்கும்? நம்ம குடியிருக்குற வீட்டைப் பற்றி ஏதாவது நினைவுகள் இருக்கனும் டாடி. யோசிச்சுப் பாருங்கஎன்றாள்.

நேற்றிரவு முழுக்க அது சார்ந்த நினைவோடைகளை புரட்டிக் கொண்டே இருந்தேன்.

ஒரு ஆசிரியராய் பணியாற்றிக் கொண்டு போதிய வருமானம் கொண்டிருந்த போதும் சொந்த வீடு குறித்து என் பெற்றோருக்கு எந்த விருப்பமும் எனக்கு நினைவு தெரிந்த வரையில் இருக்கவில்லை. குடியிருந்த வாடகை வீடுகள் பெரும்பாலும் வசதியாகவே இருந்தன. காலம் மெல்ல தன் தோலுரிக்க ஆரம்பித்தது. ஒரு பெரும் இழ(ற)ப்பு நிகழ்ந்த பின் உறவுகள் சார்ந்து வாழ்தல் மன நெருக்கடியைத் தவிர்க்கும் என நினைத்தாலும் அந்த உறவுகளை எங்களால் நெருங்க இயல வில்லை.