Wednesday, 31 May 2017

ஆதலால் விட்டுக் கொடுங்கள்!

வீட்டில் தனக்கு மதிப்பிருக்கிறதோ இல்லையோ தன் சொல்லுக்கு மதிப்பிருக்க வேண்டும் என நினைப்பவள் மனைவி. தான் சொல்வதைக் கணவன் காது கொடுத்துக் கேட்டாலே தனக்கு மதிப்பும், மரியாதையும் குடும்பத்தில் இருப்பதாக அவளுக்கு ஒரு நினைப்பு! மனைவியின் இந்த நினைப்பு பல வீடுகளில் நிறைவேறாமலே நீர்த்துப் போய்விடுகிறது. காரணம், மனைவி சொல்வதை, பேசுவதை எந்தக் கணவனும் காது கொடுத்துக் கேட்பதில்லை. இரசிப்பதில்லை. காதல் மனைவியாக இருந்தால் கூட திருமணத்திற்கு முன் கற்கண்டாய் இனிக்கும் அவள் பேச்சு திருமணத்திற்கு பின் பாகற்காயாய் கசக்கிறது கணவனுக்கு!  

மனைவி வந்து பேச ஆரம்பித்ததுமே, “ஏய்….சும்மா வாயை மூடிக்கிட்டு கொஞ்ச நேரம் இருடி. வீட்டுக்கு வந்தாலே தொண, தொணன்னு என்னத்தையாவது ஆரம்பிச்சுடுறே….….தலைவலிக்குதுஎன எரிந்து விழுவான். ஒவ்வொரு விசைக்கும் ஒரு எதிர்விசை உண்டல்லவா? தன் மேல்  கணவன் காட்டிய எரிச்சலை குழந்தைகளிடமோ, குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களிடமோ, சந்தர்ப்பம் கிடைத்தால் கணவனிடமே மனைவி திருப்பி காட்டுவாள். கணவன் மீதான கோபத்தை பிள்ளைகளின் மீதான குற்றச்சாட்டுகளாக வாசிப்பாள். முரண்டு பிடிக்கும் குழந்தையிடம், “சனியனே…….நான் சொல்றதைக் கொஞ்சமாவது கேட்கிறியா? எனக்குன்னு வந்து சேர்ந்ததெல்லாம் இப்படியா இருக்கணும். கட்டிக்கிட்டது என்ன, ஏதுன்னே காது கொடுத்துக் கேட்க மாட்டேங்குது. பெத்துக்கிட்டது என்ன சொன்னாலும் கேட்கமாட்டேங்குது. எல்லாம் என் தலை எழுத்துஎனப் பாய்வாள்

எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும்  மனைவி தன் வலியை, வெறுப்பை, வேதனையை, சந்தோசத்தை வெளிப்படுத்த விரும்பும் போது அதை மறுப்பது சரியல்ல. தன்னைப் போலவே தன் மனைவியின் உணர்வுகளை மதிப்பது நல்ல ஆண்மகனுக்கு அழகு! கணவனுக்கு அடையாளம்!! சன்டேயில் கூட தூங்க, தொலைக்காட்சி பார்க்க, நண்பர்களுடன் அரட்டை அடிக்க என நேரம் ஒதுக்கும் கணவன் தன் விருப்பங்களை, தேவைகளை கேட்பதற்கு நேரம் ஒதுக்குவதில்லை என்பது எல்லா குடும்பங்களிலும் கூறப்படும் பொதுவான குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டிலிருந்து கணவன்மார்கள் வெளிவர வேண்டும். கணவன், மனைவி மட்டுமல்ல கூட்டுக்குடும்பங்களில் கூட ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிக் கொள்வது இன்று அரிதான விசயமாகி விட்டது. நான் பாதி, நீ பாதி என கணவனும், மனைவியும் உணர்வுகளால் அர்த்த நாரீயாய் வாழ்ந்த காலம் போய் மணிரத்னம் பட வசனங்களைப் போல வார்த்தைகளில் கஞ்சத்தனம் செய்து கொண்டு உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ள முடியாத ஜடங்களாய் மன அழுத்தங்களோடு வாழப் பழகிவிட்டனர்.

ஏண்டா….நான் ஒருத்தன் இங்கே கிடந்து கத்திக்கிட்டிருக்கேன். உங்க அம்மா பாட்டுக்கு காதுல வாங்கிக்காம போறா. என்னய்ய என்ன முட்டாள்னு நெனைக்கிறாளான்னுஅப்பா மகனிடம் கேட்டார். கேள்விகளுக்கு விடை தேடுவதில் மகன் புலியாயிற்றே! நேராக அம்மாவிடம் ஓடிவந்தான். அம்மா நீ அப்பாவை முட்டாள்னு நினைக்கிறியான்னு கேட்கிறாரும்மா?ன்னு கேட்டான். கல்யாணமாகி பத்து வருசம் தான் ஆகுது. அதுனால இன்னும் ஒரு பத்து, பதினைந்து வருசம் போகவும் பார்த்துட்டு தெளிவா முடிவு  சொல்றேன்னு சொல்லு என சாமர்த்தியமாக மகனிடம் பதில் சொல்லி அனுப்பி வைத்தாள். இப்படிச் சாமர்த்தியமாக தங்களுக்கு மட்டுமே புரிகின்ற தொனியில் தன்னுடைய சின்ன, சின்ன ஆர்ப்பாட்டங்களை அடக்க மனைவிக்கு உரிமையும், சுதந்திரமும் கொடுக்கும் கணவன் இருந்தால் எந்தக் குடும்பத்திலாவது கருத்து வேறுபாடுகளும், சண்டை, சச்சரவுகளும் வர வாய்ப்புண்டா?

இன்னும் சொல்லப்போனால் தங்களுக்குள் இத்தகைய உரிமையையும், சுதந்திரத்தையும் கொண்டிருக்கின்ற கணவன், மனைவியால் மட்டும் தான் தங்களுடைய மறுப்புகளையும், எதிர்ப்புகளையும் ஒருவருக்கொருவர் மனம் நோகாத படி சொல்லிக் கொள்ள முடிகிறது. அட்சயதிரிதியை அன்று நகை வாங்க விரும்பிய மனைவி கணவனிடம், “ஏங்க இந்த அட்சயதிரிதியைக்கு ஒரு பவுன்ல தங்கக்காசு வாங்கனும்என்றாள். அவனுக்கென்ன முடையோ? இந்த தடவை முடியாது. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் வாங்கிக் கொள்ளலாம் என்றான். அவளோ விடுவதாய் இல்லை. “ஏங்க அட்சயதிரிதியை அன்னிக்கு வாங்கினா தான் வருசா வருசம் அதுமாதிரியே பொருள் சேருமாம்என்றாள். உடனே கணவன், “ஐயோ, இந்த விசயம் முன்னாடியே எனக்குத் தெரியாமல் போயிடுச்சே. தெரிஞ்சிருந்தா அட்சயதிரிதியை அன்று கல்யாணம் பண்ணியிருந்திருப்பேனேன்னு சொல்லிச் சிரித்தான்”. பொருள் புரிந்து கொண்ட மனைவி தன் சீற்றத்தை, “ஆமாம்…..ஒன்னுக்கே கேட்டதை வாங்கித் தரமுடியல. இதுல ஒன்பதுக்கு ஆசையாம்என வெளிக்காட்டி முறைத்தாள். இது அல்லவா ஆனந்தம். சந்தோசம். இப்படி வெளிக்காட்டிக் கொள்ளும் கணவனும், மனைவியும் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

இப்படியெல்லாம் வாழ்க்கையை அனுபவித்து இரசித்து குடும்பத்தோடு இயைந்து வாழ முடியாமல் போவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது குறை காணும் மனம். குறை காணும் மனமுடைய கணவன், மனைவி ஆகியோரிடம்தான்என்ற அகந்தையும், ”தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும்என்ற எண்ணமும் இயல்பாகவே இருக்கும். இவர்களால் தன் துணையின் நிறைகளைப் பார்க்கவே முடியாது. இதனால் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் வேகமாக வளர்ந்து வீடு எப்பொழுதும் ஓயாத யுத்த சத்தங்களால் நிரம்பிக் கொண்டேயிருக்கும்.

குறைகளற்ற கணவன், மனைவியாக உங்களால் வாழ முடியாது. உங்களால் மட்டுமல்ல எவராலும் முடியாது! ஆனால், குறைகளை குறைவாக மட்டுமே பார்ப்பவர்களாக வாழ முடியும். இது சத்திய சாத்தியம். அப்படிக் குறைகளை குறைவாகக் காணவேண்டுமானால் அதற்குத் தேவை புரிதலுணர்வு. புரிதலுணர்வு இருக்குமிடத்தில் அகந்தை, அகங்காரம், அடக்கி ஆளுதல் இருக்காது. கண்களுக்குப் பதிலாக காதுகள் மட்டுமே அங்கு பெரும்பாலும் திறந்திருக்கும்காண்பது குறைவாகவும், கேட்பது அதிகமாகவும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மிகச் சரியான புரிதலுணர்வுக்கு அவசியம். ஆதாரம். முழுமையான புரிதலுணர்வோடு குடும்பம் என்ற கூட்டுறவை நடத்த வேண்டுமானால் அதற்குப் பல நேரங்களில் கண்களை மூடி காதுகளை திறந்து வைத்திருக்கப் பழக வேண்டும்.பக்குவப் பட வேண்டும்.

ஒருவர் சொல்லும் கருத்தை இன்னொருவர் காது கொடுத்துக் கேட்கும் பொழுது அது மனம் என்ற கண்ணாடியில் பட்டு கருத்துப் பூக்களாய் மலரும். கருத்துப் பூக்கள் மலரும் குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையில் கருத்துச் சுதந்திரமும், கேலியும், கிண்டலும், ஒருவரை ஒருவர் சமமாக நடத்தும் மனப்பக்குவமும் இருக்கும். இது இருந்தால் போதும். சின்னச் சின்ன சீண்டல்கள் கூடச் சிணுங்களாக மாறிவிடும்.

நன்றி : பாவையர்மலர்



4 comments:

  1. அருமை நண்பரே இன்றைய இளைய தலைமுறைகளுக்கு வேண்டிய விடயங்கள்.

    ReplyDelete